வேர்வையின்றி வெற்றியில்லை….. பைபிள் கதை
மனிதனாகப் பிறந்த நமக்கு, கடவுள் பல்வேறு வரங்களைக் கொடையாகத் தந்திருக்கிறார். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது.
இதை அழகாக கிறிஸ்துவ மறையின் புனித நூலான திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதர் மக்களுக்கு ஒரு உவமையின் மூலமாக எடுத்துரைப்பதை இங்கு காணலாம்.
ஒருநாள் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
தாலந்து என்பது அந்த கால பணத்தோட அளவு.
ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.
அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.
ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.
ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர், இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்‘ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்‘ என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்‘ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்‘ என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது‘ என்றார்.
அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்‘ என்று கூறினார்.
‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்‘ என்று அவர் கூறினார்.
இந்த உவமை நமக்குப் பல்வேறு உண்மைகளை எடுத்துக் கூறுவதாக இருக்கிறது. முதலாவதாக கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதாகும்.
சிலர் சொல்லலாம், “கடவுள் எனக்கு ஒரு திறமையும் கொடுக்கவில்லை, நான் திறமையற்றவன், ஒன்றுக்கும் இலாயக்கற்றவன்” என்று. இது உண்மையல்ல. கடவுள் கொடுத்த திறமையை அறியாத மனிதர் வேண்டுமானால் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் திறமையில்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது.
நம்முடைய கையில் இருக்கும் ஒருவிரல் இன்னொரு விரலைப் போன்று இல்லை. அப்பிடியிருக்கும்போது நம்மோடு வாழும் மனிதர்கள் எல்லாரும் ஒரே திறமையோடு இருக்க வேண்டும் என்று சிந்திப்பது மடமையாகும். மனிதர்கள் யாவரும் தனித்தனியானவர்கள் என்பதே ஐந்து, இரண்டு, ஒரு தாலந்து குறித்துக்காட்டுகிறது.
நிறைவாக கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமையை, வாய்ப்பு வசதிகளை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வு இருக்கிறது என்பதை இந்த உவமை அழகுற எடுத்துக் கூறுகிறது. ஐந்து தாலந்து பெற்றவர் தன்னுடைய கடின உழைப்பினால் மேலும் ஐந்து தாலந்தைக் கொண்டுவந்தார். இரண்டு தாலந்து பெற்றவரோ தன்னுடைய கடின உழைப்பால் மேலும் இரண்டு தாலந்து ஈட்டிவந்தார். அதனால் அவர்கள் இருவரும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவரோ அதனைச் சரியாகப் பயன்படுத்தாததால் தலைவரின் சினத்திற்கு ஆளாகின்றார்.
எனவே நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை, வாய்ப்பு வசதிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவோம். அப்போதுதான் நம்மால் கடவுளின் ஆசிர்வாதத்தைப் பெற முடியும். நாம் நமது வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைய வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது நமது கடின உழைப்புதான் .
ஒருமுறை டால்ஸ்டாய் என்ற அறிஞர் இவ்வாறு குறிப்பிட்டார், “தூக்கம் வரவில்லையா? கடுமையாக உழையுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி இல்லையா? மிகமிகக் கடுமையாக உழையுங்கள் என்று. இது நம்முடைய வாழ்வு முன்னேற்றத்திற்கும் பொருந்தும். ஆகவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை, வாய்ப்பு வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
மண்ணுலக வாழ்விற்கு உழைப்பது போல விண்ணுலக வாழ்விற்காகவும் உழைக்கக் கடவுள் நம்மிடம் ஆவலாய் எதிர்பார்க்கிறார். அதற்கான தாலந்துகளையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவோம்.
நம் கண்களை, காதுகளை, நாவை, கைகளை, கால்களைக் கடவுள் நமக்குத் தந்த நல்ல கருவிகளாக அவருக்காக பயன்படுத்துவோம். இரட்டிப்பான பலன் தருவதற்கு கடவுள் வல்லவராயும் நல்லவராயும் உண்மையுள்ளவராயும் இருக்கிறார்.
அந்த ஊரில் இருந்த துறவியைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவன் வந்தான்.
அவன் துறவியிடத்தில் வந்து, “என்னிடம் உழைக்கும் எண்ணமெல்லாம் இருக்கிறது. ஆனால் தொழில் தொடங்கு வதற்குப் போதிய மூலதனம் /பணம் மட்டும்தான் இல்லை” என்று குறைபட்டுக் கொண்டான்.
அப்போது துறவி அவனிடத்தில், “உனக்கு நான் நூறு ரூபாய் தருகிறேன், அதற்கு ஈடாக நீ எனக்கு உன்னுடைய சுண்டு விரலைத் தருவாயா? என்று கேட்க, அவன், “நூறு ரூபாய்க்குச் சுண்டுவிரலா? என்றான்.
அவர் அவனிடத்தில், “உனக்கு நான் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன், அதற்கு பதிலாக நீ எனக்கு உன்னுடைய வலக்கையைத் தரமுடியுமா? என்று கேட்டார்.
அவனோ அவரிடத்தில், “வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு என்னுடைய வலக்கையா?” என்று ஆச்சரியம் பொங்க அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
தொடர்ந்து அவர் அவனிடத்தில், “உனக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். அதற்கு பதிலாக உன்னுடைய இரண்டு கண்களையும் தா?” என்றார்.
“என்னது, வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு என்னுடைய இரண்டு கண்களுமா? அதுவெல்லாம் முடியவே முடியாது” என்றான்.
உடனே துறவி அவனிடத்தில், “பார்த்தாயா, உன்னிடத்தில் தொழில் தொடங்கப் போதிய மூலதனம் இல்லை என்று சொன்னாய்? ஆனால் இப்போது உன்னுடைய உடல் விலை மதிப்பில்லாதது என்று சொல்கிறாய். அப்படியானால் நீ தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் உன்னிடத்தில்தான் இருக்கிறது. நீதான் அதனைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்” என்றார். இதைக் கேட்டதும் அந்த இளைஞன் புது ஒளிபெற்று, தன்னையும், தன்னுடைய உழைப்பையும் மட்டுமே நம்பித் தொழில் தொடங்கினான்.
மனிதனாகப் பிறந்த நாம், கடவுள் கொடுத்த பல்வேறு வரங்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வாழ்வு அடங்கியிருக் கிறது.
அ. சேசுராஜ்