காணாத அழகு
அவளின் உதட்டுச் சிவப்பைக் கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம் எழுதாமல்
சிவப்பதிகாரம் எழுதியிருப்பாரோ ?
அவளின் குரலைக் கேட்டிருந்தால்
வள்ளுவன் குறளை எழுத மறந்து
குரலை ஆராய்ந்து எழுதியிருப்பாரோ?
அவளின் சிற்றிடையைக் கண்டிருந்தால்
தமிழில் சிற்றிலக்கியங்கள் தோன்றாமல்
சிற்றிடை இலக்கணங்கள் தோன்றியிருக்குமோ?
அவளின் கூந்தல் நறுமணத்தைக் கண்டிருந்தால்
தமிழில் குறுந்தொகை தோன்றாமல்
கூந்தல் தொகை எழுதப்பட்டிருக்குமோ?
அவளின் அழகைக் கவிஞர்கள் கண்டிருந்தால்
காவியங்கள் படைக்காமல் அவளின் வனப்பில்
தம்மை மறந்து நிலைதடுமாறிப் போயிருப்பரோ?
நல்லவேளை ஆன்றோரும் ,சான்றோரும்
காணவில்லை அவளை …! அவள் அழகை !
அவளைக் கண்டவர்கள் சொன்னதுண்டோ?
இந்த உண்மையை …!!
உமையாள்