ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை
பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் என்னை விட வயதில் சிறியவனாக இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் எனக்கு அவன், தனது பொறுமை மற்றும் அமைதியின் மூலம், ஒரு தூண்டுதலாக, வழிகாட்டியாகவே இருந்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட உடன் பிறந்தவனைக் கொண்டிருப்பதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். அவன் என்ன செய்வான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாததால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சாகசத்தைச் சுமந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் இவை சமாளிக்க இயலாத நிலைக்குச் சென்றுவிடும் என்றாலும், மகிழ்ச்சியான, அக்கறை மிகுந்த குடும்பமாதலால் எதனையும் சமாளித்து விடலாம் என்று தோன்றும். நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் என் தம்பியைப் பார்த்துப் பரிதாபப்படுகையில் எனக்குச் சற்று அசௌகரியமாக இருக்கும். சில சமயங்களில் கோபம் வரத்துவங்கும். அவன் குறைபாடற்றவனாக இல்லை என்பது உண்மை, ஆனால் இந்த மண்ணில் எவர்தான் முழுவதுமாகக் குறைபாடற்றவராக இருக்கின்றனர்? மற்றவர்களிடம் அவ்வளவாக வெளியில் தெரியாமல் புதைந்திருக்கும் குறைபாடுகள் இவனிடம் சற்று வெளிப்படையாகத் தெரிவதாய் இருக்கலாம், அதனால் எதற்காக அவனை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்.
என் தம்பியுடன் ஒவ்வொரு நாளும் எப்படிப் போகுமென்று விளக்குகிறேன். அவன் பொதுவாக அதிகாலையில் எழும் பழக்கமுள்ளவன். பொதுவாக ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் எழுந்து விடும் அவன் சில தினங்களில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவான். எழுந்தவுடன் என் பெற்றோர்களும் எழுந்து கொள்ள வேண்டும், அவர்கள் எழும்வரை விட மாட்டான். அவனுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, யூட்யூப் மூலமாக ஐ-பேட் இல் எழுந்ததும் எழாததுமாகப் பார்ப்பது அவனுக்கு அலாதிப் பிரியம். அதன் பிறகு காலைச் சிற்றுண்டி துவங்கும். வார நாட்களில் வாஃபில் போன்ற தின் பண்டங்களும், வார இறுதியில் இந்திய உணவுப்பண்டங்களான தோசை, இட்லி என்பதும் வழக்கம். தோசை என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.
எனது பெற்றோர் அவனுக்குப் பல விஷயங்களையும் பொறுமையாய்க் கற்றுக் கொடுப்பதில் கை தேர்ந்தவர்களாக ஆகி விட்டனர். கணக்குச் சொல்லிக் கொடுப்பதில் ஆரம்பித்து, எழுதச் சொல்லிக் கொடுப்பது, எண்கள், விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுப்பர். எனது பெற்றோர் இந்த உலகத்திலேயே மிகவும் பொறுமையானவர்கள், எங்களிருவரிடமும் அன்பானவர்கள். இதுபோன்ற பெற்றோர் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று எப்பொழுதும் நினைத்துக் கொள்வேன்.
எனது குடும்பத்தில் அனைவரும் இசைப் பிரியர்கள். இந்தியாவிற்குச் செல்லும்பொழுது, உறவினர்கள் வீட்டில் ஒன்றாகக் கூடி, பாட்டுக்கள் பாடி, நடனம் ஆடுவது எங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இதுபோன்ற நிகழ்வுகள், தினமும் தொடரும் சாதாரண நிகழ்ச்சிகளை மறந்து மனதிற்கு மகிழ்வைத் தருவன. சஞ்சித் இது போன்ற கூட்டங்களை மிகவும் அனுபவித்து மகிழ்வான். அவன் இசைப் பயிற்சிக்காக பள்ளிக்குச் செல்கிறான். குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடுவதைப் பயிற்சி பெறுவதுடன், கீ-போர்ட் வாசிக்கவும் பழகுகிறான். தொடக்க நிலைப் பயிற்சியிலேயே, மிகவும் திறமையைக் காட்டுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் கீ-போர்ட் வாசிப்பதைப் பார்ப்பதே ஒரு அலாதியான காட்சி.
சஞ்சித் எழுத்துக்களைக் கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவான். இது குழந்தைப் பருவத்திலிருந்தே, அதாவது மூன்று-நான்கு வயதிலிருந்தே தொடங்கி விட்டது. எழுத்துக்கள் இருக்கும் விளையாட்டுப் பொருட்களைக் கைகளில் எடுத்துக் கொண்டே வீடு முழுவதும் வலம் வருவான். நாங்களனைவரும் அவனை விடாது ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தோம். பிறரின் உதவியின்றி அவானகவே ஒரு எழுத்தை எழுதுவது என்பது மிகவும் கடினமான காரியம், அவன் முதன் முதலாக “A” என்ற ஆங்கில எழுத்தைச் சொந்த முயற்சியில் எழுதிய பொழுது எங்கள் குடும்பம் கண்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி செய்யும் வித்தையை நான் புரிந்து கொண்ட நாள் என்று கூடச் சொல்லலாம்.
வருடங்கள் உருண்டோட, சஞ்சித் அனைத்து ஆங்கில எழுத்துக்களையும் எழுதக் கற்றுக் கொண்டான். எழுத்துக்களிலிருந்து வார்த்தைகளாகி, இப்பொழுது வாக்கியங்களையே எழுதும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். தவிர, எண்கள் அனைத்தையும் எழுதவும் கற்றுக் கொண்டான். அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான “வீல் ஆஃப் ஃபார்ச்சூன்” (Wheel of Fortune) நிகழ்ச்சியைத் தனது ஆறு-ஏழு வயதிலிருந்தே மிகவும் ஆர்வமாகப் பார்ப்பான். பெரியவர்களை இலக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சியை, இன்றுவரை சஞ்சித் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தை அளிக்கும்.
மூலம்: சஹானா சுரேஷ்.
தமிழாக்கம்: வெ. மதுசூதனன்.