கவிதைக்காக கவிதை
பரவசத்தில் தோன்றுமதைப்
பற்பல எண்ணங்களோடு
பக்குவமாய் ஒப்பிட்டு
இயல்பாகவெழுதுவதே கவிதை!
கவிதையென நினைத்து
கனவில் தோன்றுவதையெலாம்
யாருக்கும் புரியாமல்
பாருக்குமொழிவதல்ல கவிதை..!
முழுதும் படித்தாலும்
முடிந்தவரை முயன்றாலும்-‑_
புரியாத கருத்தைப்பலர்
அறியாதசந்தமென எழுதுகின்றார்..!
அடுக்கான வார்த்தைகளை
மிடுக்காக ஒன்றருகிலொன்றாக
அள்ளியடுக்கி வைத்ததினாலன்றி
அருங் கவிதையாகிவிடுமா?..
உலகிலில் அனைத்துக்குமோர்
உருவமுண்டு…அதுபோல
அகரமுதல எழுத்தனைத்துக்கும்
அழகான கவிதைவடிவமுண்டு
எதுகைமோனை நயத்தோடிசைபோல
எளிதாய்விளங்கும் பொருளோடு
சிந்தனைஊற்றில் பெருக்கெடுத்து
சிறப்பாயெழுவதே கவிதையாகும்
இயல்பாகவெழும் சிந்தனையோடு
இறையருள் கொண்ட
எழுத்தின் எழுச்சியேயொரு
செந்தமிழ்க்கவிதையின் சிறப்பாகும்!
-பெருவை பார்த்தசாரதி
A poem springs from the Heart. We don’t “write” it. We give the spring a word form, that’s all!