\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்கள்

En_thamizh_520x457இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை “உலகத் தாய்மொழி தினம்” என்று ஒன்று கொண்டாடப்படுகிறது என்பது நானறிந்திராத ஒரு செய்தி. தமிழன்பர் ஒருவர் இந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல, இதன் மீது ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. வழக்கமாக எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் இணைய தளத்தைப் புரட்டத் துவங்கினேன்.

வழக்கமாக இணைய தளத்தில் கிடைக்கும் உண்மை மற்றும் அவரவர்களின் சொந்த அபிப்பிராயமென பல விபரங்கள் அறியப் பெற்றேன். அவற்றையெல்லாம் அறிவுக் கொள்முதலாக வைத்துக் கொண்டு, நம்மைச் சுற்றி, நம்மூரில் என்ன நடக்கிறதென்று கவனிக்க ஆரம்பித்த பொழுது, மினசோட்டா தமிழ்ச்சங்கமும், தமிழ்ப் பள்ளியும் இணைந்து இந்த விழாவைச் சிறப்பாக நடத்தவிருப்பதாக அறியப் பெற்றேன். நாடு முழுவதும் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப் பட்டாலும், நம் கிராமத்துப் பள்ளியில் கொண்டாடப்படும் விழாவிற்குச் சென்று, கொடியேற்றுவதைப் பார்த்து, குழந்தைகளின் பங்கேற்பை ரசித்து அங்கு வழங்கப்படும் இனிப்பைச் சாப்பிடுவது போல் ஒரு இன்பம் வருமா? அதேபோல், நம்மூரில் நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் புறப்பட்டுச் சென்றேன்.

Thaaimolithinam_1_520x369நிகழ்ச்சி குறித்து எழுதுவதற்கு முன்னால் இந்த தினத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. தாய்மொழி மீது உணர்வு பூர்வமாக ஈடுபாடு இருக்கும், தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் நன்கறிந்து நேசிக்கும் என் நண்பர்களில் சிலருக்குக் கூட இந்த தினத்தைப் பற்றிய தகவல் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் நிலையும் அஃதே. உலகின் மொழிகளைக் காப்பதற்கும், மொழிகளின் உணர்வு பூர்வமான அவசியத்தை உணர்த்துவதற்கும் ஐக்கிய நாடுகளின் சபையின் பிரிவான யுனெஸ்கோ (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization) கடந்த 1999 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 21 ஆம் திகதியை “உலகத் தாய்மொழி தினம்” என அறிவித்ததாம். இந்த தினம் குறித்த பல விவரங்களையும் இந்த இணையதளத்தின் “கட்டுரை” பகுதியில் ”உலகத் தாய்மொழி தினம்” என்ற தலைப்பில் வெளியாகிவுள்ள கட்டுரையில் படித்தறியலாம்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இது தமிழ் மொழி குறித்த தனித் தினமில்லை, உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்குமான பொதுவான ஒருதினம். ஜெர்மானியர்கள் இந்த தினத்தில் ஜெர்மானிய மொழியையும், ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியையும் மற்றும் அனைத்து தேச மக்களும் அவரவர்களின் தாய்மொழியையும் கொண்டாடுவதற்கான தினமிது. மற்றவர்கள் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்களா என்பதை நானறியேன், ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை நேரில் பார்த்து ரசித்தவனென்ற முறையில், இதனை மிகவும் விமரிசையாகக் கொண்டாடிய சக தமிழர்களின் சாதனை குறித்து எழுதலாமென்பது எனது நோக்கம்.

ஃபிப்ரவரி 23 ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணி வரை, ஹாப்கின்ஸ் ஐசன்ஹவர் பள்ளியில், ஒரு நூறு பேர் அமருமளவுள்ள ஒரு அறையில் இந்த விழா இனிதே நடந்தேறியது. தமிழ்ப் பள்ளியின் வகுப்புகள் இதே வளாகத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும், தமிழ்ப் பள்ளியும் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக இந்த நிகழ்ச்சியைப் பல முறைகளில் விளம்பரப்படுத்தி தமிழ் மக்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தனர். சங்கம் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களின் உழைப்பு அன்றைய தின நிகழ்ச்சியில் மிக அழகாக வெளிப்பட்டது.

Thaaimolithinam_2_520x312இந்தக் கொண்டாட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சி நிரல் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் பெரியவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள். அனைத்துப் போட்டிகளுக்குமான தலைப்பு ஒன்றே: “நாம் ஏன் தமிழ் மொழியைக் கற்க வேண்டும், எழுத வேண்டும் பேச வேண்டும்” என்பதே அந்தத் தலைப்பு. அயல் நாட்டில் வாழும், ஆங்கில மொழியிலேயே சிந்தித்துப் பேசிப் பழகும் நமது அடுத்த சந்ததியினருக்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமான ஒன்று.

பெரியவர்கள் தங்களது கட்டுரைகளையும், கவிதைகளையும் முன் கூட்டியே தேர்வுக்குழுவுக்கு அனுப்பியிருந்தனர். பல அலுவல்களுக்கிடையே இதற்காக நேரமொதுக்கி, ஆவலுடன் பெரியவர்கள் கலந்து கொண்டது சற்று வியக்கும் வண்ணமிருந்தது என்றால் மிகையில்லை. தமிழ் நாட்டிலேயே நடுத்தர வயதுடையவர்களிடம் இந்த அளவு ஆர்வமிருக்கிறதா என்பது ஒரு கேள்விக் குறியே! நடுவர்கள் படைப்புக்களனைத்தையும் முன்கூட்டியே ஆய்வு செய்து வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்திருந்தனர். வெற்றி பெற்ற கவிதை, கட்டுரைகளை நடுவர்கள் இந்த நிகழ்ச்சியினிறுதியில் அறிவித்தனர். வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புக்களை அனைவருக்கும் வாசித்துக் காட்டியது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியை உட்கார்ந்து ரசித்தது ஒரு அழகான அனுபவம். மழலை வகுப்பு தொடங்கி மூன்றாவது வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் ஒரு பிரிவாகவும், நான்காம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்பவர்கள் இரண்டாவது பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் பதினைந்துக்கும்  மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு மிகவும் அழகாகப் பேசினர்.

”குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தோர்”

பொய்யாமொழிப் புலவன் பகன்ற கூற்றைப் பொய்யில்லையென மறுபடி உணர்த்தினர் தமிழ்ச் சிறார்கள். ஒரு குழந்தையின் பேச்சிலும் ஒரு பிறமொழிச் சொல்லில்லை, தயக்கமில்லை, மறக்கவில்லை. ஆணித்தரமான பேச்சுக்கள், ஆதாரபூர்வமான கருத்துக்கள். பெற்றோர் எழுதிக் கொடுத்திருந்தாலும் அவர்களின் எழுத்துக்கு உயிரூட்டினர் அந்தச் சிறுவர் சிறுமியர். பலரின் பேச்சுகளிலும் வெளிப்பட்ட பொதுப்படையான கருத்து தன் தாத்தா பாட்டிகளிடம் உரையாடிட தான் தமிழ் மொழி கற்றிட வேண்டுமென்பதே. இது காலங்காலமாக நம்மில் வேரூன்றியிருக்கும் உறவுகளின் பலத்தைப் புலப்படுத்துவதாக அமைந்தது.

Thaaimolithinam_3_520x369தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பெருமையெனவும், தமிழில் பேசுவது தரக்குறைவு எனவும் நினைக்கும் தமிழர் பலர் வாழ்வது நாமறிந்ததே. இந்தக் குழந்தைகள் அயல் நாட்டில் பிறந்து, ஆங்கிலம் மட்டுமே பேசிப் படித்து, வாரத்தில் சொற்ப மணி நேரங்கள் மட்டுமே தமிழ் பயிலும் சிறார்கள். இவர்களின் தமிழ்ப் பேசும் ஆர்வமும், தமிழ்ப் பேசும் திறமையும் மெய்யாகவே நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

இந்தத் தமிழ்க் குழந்தைகளனைவரும் தங்களின் அனைத்துக் கல்விகளுடனும் தமிழையும் தொடர்ந்து கற்றுத் தேர்வுற வேண்டுமென வாழ்த்துகிறோம். திரைப்படப் பாடல்கள் மற்றும் அதிலுள்ள நடனங்கள் நோக்கி உலகமே சென்று கொண்டிருக்கையில், இது போன்ற நல்ல விழாக்களையும், கொண்டாட்டங்களையும் நம்பிக்கையோடு நடத்திடும் மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் தொண்டு மிகவும் அரியது. அவர்களின் தமிழ்ப் பணி சிறந்து தொடர எங்களின் வாழ்த்துக்கள்!!!

விழா முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், லேசாகிப் போன நம்மனம், குழந்தைகளின் அழகுத் தமிழை அமைதியாய் அசை போட்டுக் கொண்டிருக்கையில்…..

“மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்”

என்று ஒரு பேதையுரைத்ததாகப் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதி, அன்று அங்கு வந்தமர்ந்து இந்த மழலைகளின் அமிழ்தினுமினிய தமிழ் மொழிப் பேச்சைக் கேட்டிருந்தானெனில், அதே பேதை மனம் மாறி,

“மெல்ல மெல்லத் தமிழினி ஓங்கும் – அந்த
மேற்கு மொழிகள் புறங்காட்டி ஓடும்”

என்று கூறியதாக எழுதியிருப்பானென்ற அழுத்தமான நம்பிக்கை நம்முள் மலர்ந்தது!!

– மது வெங்கடராஜன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    இது போல் உள்ளுர் நடப்புகளை எழுதுவது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad