ஓட்டு வீடு
காசி வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தார். அந்தச் செங்கல் சுவர், பெயிண்ட் எல்லாம் இறுக்குவது போல இருந்தது. வீட்டின் வாசல் நோக்கி நடந்தார். மனைவி சுபா புரிந்தது போல ஒரு குவளை தண்ணீரைக் கையில் ஏந்தியபடி அவரைத் தொடர்ந்தார். அந்த வீட்டின் வாசலில் உள்ள சிறிய வராந்தாவில் அமர்ந்தார். வெளிக் காற்று, ஏதோ இறுக்கத்தைக் குறைத்தது போல இருந்தது. ஆனாலும் முழு அமைதி இல்லை.
“சுபா .. மனசுக்கு கஷ்டம் குறையல.. அம்மா திடீர்னு இப்படி போவான்னு எதிர்பாக்கல”.
“பத்து நாளாச்சுத் தூங்கி. கொஞ்சம் தூங்க முயற்சி பண்ணுங்க”
ஒரு பெரு மூச்சை மட்டுமே தந்தாள் சுபா.
காசி வராந்தாவின் சுவரின் சாய்ந்தார் . மேலே பார்த்தார் . வீட்டின் மேல் சுவர் தான் தெரிந்தது. கொஞ்சம் ஒருக்களித்து வெளிப் பக்கம் தெரிவது போல நகர்ந்து உட்கார்ந்து சாய்ந்தார். தண்ணீரை அருகில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார் சுபா. மேலே வானம் பார்த்த படி அமர்ந்த பொழுது ஏதோ கொஞ்சம் அமைதி பிறந்தது.
நட்சத்திரங்கள் மினுக்கியது. இரவின் குளுமை பரப்பிய படி நிலவு. கண்களை மெல்ல மூடினார் காசி.
மனதிற்கு மட்டும் “Time machine ” போல சக்தி உண்டு பின் நோக்கி செல்ல. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு ஓடியது. ஏழு வயது காசி வீட்டிற்கு முன் இருந்த சின்ன ஓடையில் குதித்து கொண்டு இருந்தான்.
அவர்கள் வீடு உலகத்திலேயே மிக சந்தோஷமான வீடு.
ஒரு பத்துக்குப் பத்துக்கு இடத்தில உலகத்தின் அத்தனை மகிழ்வும் கிடைக்கும் . சின்ன ஓடுகள் அடுக்கி கட்டிய வீடு. இடையிடையே சிறு சிறு ஓட்டைகளில் கூரைகளை வைத்து குளுமை யாக கட்டி இருந்தார் அப்பா. வீட்டின் உள்ளே ஒரு சிறிய தடுப்பு போல வைத்து அதில் ஓரமாக ஒரு அடுப்பு இருந்தது. பக்கத்தில் சிறிய மர அலமாரி . அதில் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைத்திருந்தார் அம்மா. இன்னொரு பக்கம் பாயை மடித்து வைத்திருந்தார். அது தான் படுக்கும் பக்கம்.
அவ்வளவு தான் வீடு. வெளியில் ஒரு கயத்து கட்டில். அப்பா தன் கையால் கட்டிய கட்டில். இரவு தினமும் அப்பாவும் காசியும் அந்தக் கட்டிலில் படுத்து, மேலே வானம் பார்த்து, கதை பேசியபடி தூங்குவார்கள்.
அவர்கள் வீடு இருக்கும் இடத்தைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தன.
காலையில் குயில்களும் குருவிகளும் கதை சொல்லி அவனை எழுப்பும். அந்த ஓடையில் குதித்து விளையாடி குளித்து விட்டு பள்ளிக்குக் கிளம்புவான் காசி. அம்மா வைத்திருக்கும் காலை உணவு எது என்று நினைவு இருக்காது ஆனால் சுவை நாவில் மட்டும் இருக்கும்.
அவன் அப்பா தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்று அன்பைப் பொழிவான் சிறிய காசி லிங்கம்
.
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியாத வயசு.ஆனால் கடின உழைப்பாளி என்று புரியும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் பொழுது சில சமயம் கால்கள் வலிக்கிறது என்று அவர் தோள்களில் உட்காருவான். இன்னமும் அந்த வலிமையான தோள்கள் நினைவில் இருந்தது.
அவர்கள் வீடு, ஊரை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி இருந்தது. தினம் நடந்து தான் படிக்கப் போவான். ஆனால் எதுவுமே அவனுக்கு கஷ்டம் இல்லை. அம்மா, அப்பா, வீடு இது தான் சொர்க்கம். மரம் ஏறுவதும் , ஊஞ்சல் ஆடுவதும், ஓடையில் குதிப்பதும் என, சிறுவன் காசிக்கு எல்லாமே வீடும், அதன் சுற்றமும் தான்.
கண்ணைத் திறந்தார் காசி .. ஒரு ஓரமாக கசிந்திருந்த கண்ணீரைத் துடைத்தார். வீட்டின் இறுக்கமும், மனமும் எங்கோ பறந்து சென்று விட்டது.
“நேரம் ஆச்சு உள்ள வந்து படுங்க.. நாளைக்கு வேலைக்குப் போகணும்”. சுபா குரலில் வாஞ்சையோடு நினைவுறுத்த.. அந்த வாஞ்சையில் உருகி உள்ளே வந்து படுத்தார்.
சுபாவிற்காக உள்ளே வந்து படுத்தாலும் மனம் மட்டும் மீண்டும் பின் நோக்கி ஓடியது. மனதை அடக்க வழி மட்டும் தெரிந்திருந்தால்
எவ்வளவு நல்லதாக இருக்கும்.
பள்ளிப் பருவம் முதல் இதம் தந்த வீடு அங்கு படுத்தால் மட்டுமே தன்னை மறந்த தூக்கம் என்பது காசிக்கு வரும்.
நாட்கள் ஓடியது சுற்றி உள்ள மரங்கள் குறைந்தது .. அவன் வீட்டைச் சுற்றி நிறைய குடியிருப்புகள் வரத் தொடங்கின .. பெரிய பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு நடுவில் அவர்களது சிறு வீடு
கம்பீரமாக நின்றது போல தோன்றும் காசிக்கு. ஓடை அவர்களுக்கு அருகில் ஓடியதால், அவர்கள் ஓட்டு வீட்டின் அடுத்து கட்டிடங்கள் குறைவாகத் தான் இருந்தன.
ஆனாலும் அந்த இடத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தாமல் தான் வீடு நின்றது. காசி கல்லூரி படிக்கும் பொழுது, அவன் அப்பா தவறினார்.
அதே வீட்டில் இருந்து தான் தன் காலமும் பிரியும் என கடைசி வரை அங்கிருந்து உயிரை விட்டார். அம்மா திடமானவர். அந்த ஓடையைச் சுற்றி இருந்த இவர்களது சிறிய நிலத்தில் காய்கறிகள் பயிர் செய்து, அதில் வந்த வருமானத்தைக் கொண்டு இருவரின் வாழ்க்கையும் நடத்தினாள். காசி நன்குப் படித்தான். படிப்பு முடித்த பின், ஒரு பெரிய பணியில் சேர்ந்தான்.
வேலை நிமித்தமாக நகரிலேயே தங்க நேர்ந்த போதிலும், அவனிடம் வந்து தங்க வில்லை அவன் அம்மா. அவனும் எங்கே எந்தப் பணிக்கு சென்றாலும், வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்து அதே கயத்து கட்டிலில் தான் தூங்கினான்.
குடியிருப்புகள் பெருகியது. ஓடையில் குடியிருப்புகளின் கழிவுகள் கலக்கத் தொடங்கியது. வீட்டின் மிக அருகிலேயே ஒரு பேருந்து நிலையம் வந்தது. ஆனாலும் அம்மா அந்த இடத்தையும், நிலத்தையும் விட்டு நகராமல் அங்கேயே இருந்தார்.
காசிக்குத் திருமணம் ஆகி குடும்பம் ஆன பிறகும், வேலைக்கு வசதியாக நகரத்தில் வீடு ஒன்று இருந்தாலும், அங்கு வீட்டைச் சுற்றி, மரங்கள் நிறைய இருக்கும் படி பார்த்து கொண்டு , குருவிகளை, குயில்களை ரசித்தாலும், அந்த ஓட்டு வீடிற்கு இணை உலகில் எங்கும் இல்லை .
ஒவ்வொரு வாரக் கடைசியிலும் ஒரு முறையாவது வந்து அம்மாவுடன் பேசி, வீட்டில் படுத்தால் தான் நிம்மதியாகத் தூங்கியதாக உணர்வார்.
அம்மா போன வாரம் திடீரென மறைந்தார். காசிக்கு உயிர் பிரிந்தது போல ஒரு துக்கம்.
“ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை ” என்று புரிந்தாலும், வீடும், தூக்கமும் போனது காசிக்கு. புரண்டு புரண்டு படுத்தார் மீண்டும். வெளியே சூரியன் எழுந்து விட்டான். ஏதோ ஒன்று தோன்றியது. அவசரமாக தொலை பேசி எடுத்து யாரிடமோ பேசினார் காசி.
சுபாவும் , அவர் மகனும் புரியாமல் அவரைப் பார்க்க ஒரு புதிய உத்வேகத்துடன் வெளியில் சென்றார்,
இரவு அவர்கள் வீட்டுக்கு முன் ஒரு டெம்போ வந்தது . டெம்போவினைத் திறந்த பொழுது, உள்ளே ஒரு பெரிய ஆச்சர்யமே இருந்தது.
வீட்டின் மொட்டை மாடியில் அதை ஏற்றினார் காசி.
பெரிய மொட்டை மாடியில் ஒரு ஓரமாக, ஏற்கனவே மரங்களைச் சுற்றி அமையும் படி இருக்கும் அவர்கள் வீட்டின் எழிலோடு அதை இணைத்தார் காசி.
சுபா ஆச்சர்யமாக பார்க்க. வீட்டின் மொட்டை மாடியில் அழகாக வைக்கப்பட்ட அவரது ஓட்டு வீட்டினுள் சென்று கயத்து கட்டிலில் சுகமாகப் படுத்துக் கொண்டார் காசி. பத்து நாட்களாக தூங்காதவர் குழந்தை போல தூங்கினார் அன்று.
நகரத்து அத்தனைக் களேபரத்திலும் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் கம்பீரமாக நின்றது காசியின் ஓட்டு வீடு .
-லட்சுமி சுப்பு
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று!
மறந்து வாழ ஒன்று!!’
படித்து முடித்தவுடன் தோன்றியது கண்ணதாசனின் வரிகள் தான் !
காதலுக்காக பாடிய வரியாக இருந்தாலும் மனதைப் பற்றியது. இங்கு காசி
“மறந்து வாழ ஒன்று” என்பதற்கு பதிலாக
“நினைவில் ‘வாழ’ ஒன்றாக” மனதைக் கேட்டிருக்கிறார். வாழவும் செய்கிறார். அருமை!