அடச்சே என்ன வாழ்க்கை இது
காலை மணி ஐந்து. பக்கத்தில் இருந்த அலாரம் அடித்தது. முதல் நாள் இரவு offshore call லேட்டா தான் படுத்திருந்தாள். உடல் எழுந்திருக்க மறுத்தது. திரும்பி படுக்கத் தோன்றிய மனதை அடக்கி எழுந்தாள் அகல்யா.
காலை கடன்களை முடித்து விட்டு சமையல் அறைக்கு உயிர் கொடுத்தாள். குழந்தைகளின் மதிய உணவை வேகமாக தயார் செய்தாள். கடிகாரம் மீது ஒரு கண்ணை வைத்தபடி, மூத்தவன் அதர்வா பையிலும், சின்னவள் ஆதிரை பையிலும் மதிய டப்பாக்களை அடைத்தாள்.
மணி 6.15. மாடிக்கு ஒரு குரல் கொடுத்தாள்.
“பட்டு அதர்வா நேரம் ஆச்சு கண்ணா எழுந்திரு”
தனக்கும், கணவன் அஷோக்கிற்கும் சூடாக காபியை கலந்தபடி இன்னொரு குரல் கொடுத்தாள்.
இம்முறை பலமாக,
“கண்ணா!! நேரம் ஆச்சு எழுந்திரு. 7.40 க்கு பஸ் வந்திடும்.
மாடி படுக்கை அறையில் அதர்வா எழுந்திருக்கும் சத்தம் கேட்டது.
“சரி எழுந்து விட்டார்கள்” என்று கையில் இருந்த தொலை பேசியை இணைத்தாள்.
முன்னெல்லாம் காலையில் எழுந்தால் சுப்ரபாதம் ஒலிக்கும், அப்புறம் SPB குரலில் லிங்காஷ்டகம் , அப்புறம் டி.எம்.ஸோ இல்லை சீர்காழியோ கணீர் என்ற குரலில் எழுப்புவார்கள்.
ஆனால் இப்பொழுது எல்லாம் காலையில் முதலில் வாட்ஸ் ஆப் தான். அதில் யாராவது அனுப்பிய forward.
எக்கச் செக்க குரூப் களில் இருந்த அலெர்ட்களை ரொம்பவே கடமையாக அகல்யா அலசினாள். நேரம் ஓடியது.
கண்ணை தூக்கி நேரம் பார்த்த பொழுது மணி 6.50..
“அய்யய்யோ.”. என தொலை பேசியை கீழே வைத்து விட்டு மாடிக்கு வேகமாக ஏறினாள்.
அதர்வா குளியலறையில் இருந்தான்.
“அப்பாடி” என படுக்கை அறைக்கு கண்ணை செலுத்தினாள்.
குட்டி ஆதிரை இன்னும் எழுந்திருக்க வில்லை. திரும்பிப் படுத்து விரிப்பை இழுத்து மூடிக் கொண்டாள்.
“ஆது கண்ணா, பட்டு எழுந்திரு”
ரூமில் காலில் குத்திய பொம்மைகளை, தலையணையை அப்புறப்படுத்திய படி
“பட்டு நேரம் ஆச்சு எழுந்திரு ” என குழைந்தாள்.
“பஸ் வந்துடும் எழுந்திரு”
படுக்கைக்கு அருகில் சென்று, விரிப்பை தூக்கி மீண்டும் எழுப்பினாள்.
எதுக்கும் அசரவில்லை ஆதிரை.
அதற்குள் அதர்வா குளித்து விட்டு கிளம்பத் தொடங்கினான்.
“சமத்து கண்ணா நீ!! ” என்று ஆதவனை தட்டி கொடுத்தாள். பின் ஆதிரை பக்கம் திரும்ப, சுர்ரென்று கோபத்துடன் ஆதிரை திரும்பிப் படுத்தாள்.
“ஆய்யோ.. நீயும் சமத்து தான் எழுந்திரு. இன்னிக்கு என்ன டிரஸ் போட்டுக்கலாம்” என மெதுவாக ஆசை காட்ட,
“இந்த குரலுக்கு மெதுவாக அசைந்து திரும்பினாள் ஆதிரை. இப்பொழுது ஒரு கண்ணை மட்டுமே திறந்தாள்.
அதர்வா வை கீழே சென்று bread எடுத்து சாப்பிட சொல்லி விட்டு, அகல்யா கோபமாக ஆதிரையை எழுப்பத் தொடங்கினாள்.
மணியை அவசரமாக பார்த்த பொழுது 7.05 என காட்டியது. கோபம் எல்லை மீறத் தொடங்கியது அகல்யாவிற்கு.
எல்லாவற்றிற்கும் சண்டி செய்தபடி கிளம்பத் தொடங்கினாள் ஆதிரை. பல் தேய்க்க ஒரு சண்டை, அப்புறம் இந்த பாண்ட் வேண்டாம். அந்த சட்டை வேண்டாம்ன்னு ஒரே பிடிவாதமாகப் படுத்தினாள்.
“நம்ம ஊரு மாதிரி இங்கெல்லாம் யூனிபார்ம்ன்னு ஒரு விஷயம் இருந்தா எவ்வளோ தேவலாம். குழந்தைகள் 6 வயசுலயே கெட்டு போகுது. நான் எல்லாம் என் கல்யாண பட்டு புடவைக் கூட நான் செலக்ட் பண்ணல… சரியாக எனக்கு வந்த மாமியார் ” என கோபம் கொப்பளிக்க திட்டத் தொடங்கி னாள்.
உள்ளே இருந்து அசோக் சின்ன கமறல் சத்தம் குடுக்க,
“முழிச்சாச்சா… எப்படி இவ்வளவு சண்டையிலும் அமைதியாக உங்களால இருக்க முடியுது ”
இவள் கோபமான குரல் கேட்டவுடன் குட்டி பெண் ஆதிரை கோபமாக மீண்டும் குளியலறை கதவை மூடிக் கொண்டாள்.
“ஐயோ கடவுளே ” என பெருமூச்சை விட்டு மீண்டும் சரணாகதியாகி ,
“ஆதிரைக் குட்டி பஸ் வந்துடும் நீ சாப்பிடணும் வேற. ப்ளீஸ் .. என கெஞ்ச
மனசு வந்து அந்த சின்ன குட்டி சிரித்தபடி வெளியில் வந்து கிளம்பினாள்.
ஒரு மாதிரியாக டிரஸ் செலக்சன் முடிந்து, அவள் இஷ்டப்பட்ட உடையே அணிய வைத்து, கிளப்பி கீழே வந்தாள்.
மணி 7.15 .
பத்து நிமிஷத்தில ஏதோ பெரிய சாதனை செய்தது போல களைத்துப் போனாள் அகல்யா.
“அடச்சே என்ன வாழக்கை இது“
கீழே வந்து சமையல் அறையில் பெரியவன் ஆதவன் சமத்தாக ப்ரெட்டில் வெண்ணை தடவி தயாராக வைத்து இருந்தான்.
“பாரு ஆது, அண்ணா உனக்காக சமத்தா எல்லாம் பண்ணி வெச்சிருக்கான். ஒரு thank you சொல்லு”.
ஆதவன் மெல்ல ஏதோ சொல்ல வர .. அவனை கவனிக்க முடியாமல் இவளுக்கு ஊட்டுவதிலேயே கவனம் செலுத்த வேண்டி இருந்தது அகல்யாவிற்கு.
மனம் ரொம்ப சோர்ந்து போனது. தினம் ஏன் இவளோடு இந்த ரகளை என்று அழுகையாக வந்தது.
இவ்வளவு சண்டை நடக்கும் பொழுதும் அங்கே ஒரு பக்கம் அமைதியாக “எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தொலைபேசியிலும், லேப்டாப் இலும் வேலை பார்க்கும் கணவன் மீது கோபம் பொங்கியது“.
“நீ எப்பப்பாரு சண்டை அம்மா. அப்பா is very sweet” என்று கொஞ்சியபடி குழந்தைகள் கிளம்பியது.
“நானும் ராத்திரி பூரா வேலை பண்ணறேன். அப்புறம் குழந்தைகளை பார்த்துக்கறேன், கண்டிச்சா நான் கெட்டவளா ? நீங்க ஸ்வீட்ஆ ?” அழுகை வரும் போல குரல் கம்மத் தொடங்கியது
“அடச்சே என்ன வாழக்கை இது?“
கீழே படிக்கு சென்று அங்கு ஒரு பக்கம் எந்த செருப்பு அணிவது என்று மீண்டும் selection process க்கு ஆதிரை செல்ல, இவள் எதுவும் சொல்லாமல் அவள் இஷ்டத்திற்க்கே விட்டாள்.
இவர்கள் வீட்டின் அருகில் இருந்த சிறிய culdesac ஐ சுற்றி பள்ளி பேருந்து வலம் வரத் தொடங்கியது. ஆதவன் மீண்டும் பொறுப்பாக “நான் போய் பஸ் வெயிட் பண்ண சொல்றேன். நீ போட்டுண்டு வா என்று சொல்லி விட்டு முன்னே ஓட,
அவ்வளவு நேரம் இழுத்து பிடித்த பொறுமை போக அகல்யா ஆதிரையிடம் கத்த தொடங்கினாள்.
இவர்கள் வீட்டு கதவு திறந்திருப்பதை மறந்து கத்த , அழுகை முட்டிய கண்களுடன், கையில் கிடைத்த ஷூ வை மாட்டிக் கொண்டு ஓடினாள்.
பின்னாடியே ஓடிய அகல்யாவின் கண்களில் அப்பொழுது தான் புதிதாக அடுத்த வீட்டில் குடியேறியிருந்த இன்னொரு தமிழ் குடும்பம் தெரிந்தார்கள்.
ரொம்பவே நொந்து போனாள். “ அடச்சே என்ன வாழ்க்கை இது?“.
“காலைலேந்து அத்தனை வேலையும் நான் செய்தென், இவ்வளவு பொறுமைக்கும் இப்போ கெட்ட பேர் தான் தான் மிச்சமா? புதிதாக வந்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்னை பத்தி? ” என மனம் நொந்து போனாள்.
அழுதபடி வேகமாக ஓடிய ஆதிரை பின் கால் எட்டு வைத்து பஸ் நோக்கி செல்ல, அழுகையோடு வகுப்பில் சென்று தன்னை பத்தி வத்தி வைக்க போகிறாள் மேலும் மானம் போக போகிறது ..” மனம் நொந்தபடி பஸ்ஸின் இடது பக்கம் எட்டி பார்த்தாள்
கிளம்பத் துடைங்கிய பஸ்ஸின் கீழ் பகுதியில் ஆதவனின் கால்கள் இன்னும் தெரிந்தது அதிரையை ஏற்றி விட்டு அவன் ஏறிய பொறுப்பு மனதை நெகிழ்த்தியது.
இப்பொழுதேல்லாம் ஆதவனை கவனிப்பது கூட இல்லை என்ற குற்ற உணர்வு சிறிது உறுத்த, ஜன்னலுக்கு இந்த பக்கம் இவர்கள் தலை தேடிக் கொண்டு இருக்கையில்,
மீண்டும் பஸ்சுக்கு கீழே ஆதிரை யின் கூட்டி ஷூ தெரிந்தது.
“இப்போ என்ன மறந்தா இவ?” என்ற எரிச்சலுடன் அவளை நோக்கி நடக்க,
இவள் அருகில் ஓடி வந்த ஆதிரை ” I love you amma, You are the best” எனக் கட்டிப் பிடித்து முத்தம் குடுத்து, “இது தான் வாழ்க்கை ” என உணர்த்தினாள்.
-லக்ஷ்மி
Very nice. You bring the story in front of our eyes in a very simple way.