\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கடவுளை அன்பு செய்வதைப்போல் உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

அன்புசெய்” என்பதே கிறிஸ்துவ மறையின் அடிப்படை. அன்புசெய்வதில் நம் இதயம், மனம் மற்றும் ஆன்மா இந்த மூன்றும் ஒருமித்தால்தான் எந்த ஒரு மனிதனும் முழுமனிதனாக முடியும். இந்த நியதியைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார்.

“முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கடவுளை அன்புசெய்” (மத்தேயு 22:37) என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். மேலும், “கடவுளை அன்பு செய்வதைப் போல உங்களுடைய அயலாரையும் அன்புசெய்யுங்கள்” (மத்தேயு 22:39) என்று சொன்னார்.

இது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அன்பு. திருவிவிலியத்தில் (பைபில்) உள்ள பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணப்படும் எல்லா கட்டளைகளிலும் மிகச் சிறந்ததாகக் கூறப்படும் கட்டளையும் இதுவே.

ஒவ்வொரு மனிதனும் “கடவுளை நேசிக்க வேண்டும் – கடவுள்மீதான அன்பு முழுமையானதாக இருக்க வேண்டும்” என்றார் இயேசு. நாம் மற்றவரை அன்புசெய்ய கடவுளின் கிருபை நமக்கு வேண்டும்.

கடவுள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். கடவுளுடைய அந்த மகத்தான, நிபந்தனையற்ற அன்புக்கு ஈடாக நாமும் மற்றவரை அன்புசெய்யவேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் முழுமைபெறும். “பிறரன்பு பணியே பரலோகத்திற்கு ஏணி” என்பதுபோல, அயலவரின்மேல் தன்னலமற்று அன்பு செய்தால் மட்டுமே நித்திய வாழ்வைப் பெறமுடியும்.

இயேசுவின் “நல்ல சமாரியன்” உவமை நம்மை “அயலானிடம் அன்புகூறுங்கள்” என்று விளக்குகிறது.

எருசலேமிலிருந்து ஜெரிக்கோவுக்குப் ஒரு மனிதன் பயணம்செய்தார். அப்போது, கொள்ளையர்கள் அவரைக் கொடூரமாக தாக்கி அவருடைய உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, அவரைக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு சென்றார்கள்.

அந்த வழியாக வந்த ஒரு சந்நியாசி உயிருக்காகப் போராடும் அந்த மனிதனைப் பார்த்துவிட்டு விலகிச்சென்றார். ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்தபோது, உயிருக்காகப் போராடும் அந்த மனிதனைப் பார்த்துவிட்டு வேறுவழியாக விலகிச்சென்றார்.

கடைசியாக ஒரு சமாரியன் அந்த இடத்திற்கு வந்தார். அந்த அடிபட்ட மனிதனைக் கண்டு அவர்மேல் மனதுருகினார்.

உடனே அந்த மனிதனின் காயங்களைத் துடைத்து, மருந்து வைத்து காயங்களுக்குக் கட்டுகட்டினார். பிறகு தன்னுடைய கழுதையின்மேல் அமர்த்தி அவரை அருகில் உள்ள சத்திரத்தில் சேர்த்தார். இரண்டு வெள்ளி நாணயங்களை எடுத்து அங்குள்ள காவலாளியிடம் கொடுத்து “அந்த அடிபட்ட மனிதரைக் கவனித்துக்கொள்ளுங்கள். நான் திரும்பி வரும்போது உங்களிடம் கூடுதல் செலவாயிருந்தால் அதை நான் கொடுப்பேன். (லூக்காஸ் 10: 30-35)” என்று கூறிவிட்டு சென்றார்.

இயேசுவினுடைய இந்த உவமை இனம், மதம், மற்றயெல்லா எல்லைகளையும் கடந்து எல்லோருக்கும் பொதுவானது. மனிதம் வளர அன்பு மற்றும் இரக்கம் தேவை.

வெறும் இரக்கம் மட்டும் பயன் தராது. மற்றவர்கள் மேல் அன்புகாட்டி உதவுதல் வேண்டும்.

காயமுற்றவரைக் கண்டு சந்நியாசியும், லேவியனும் இரக்கப்பட்டார்கள். ஆனால் உதவவில்லை. இரக்கம் உள்ளவர்கள் உதவும் மனப்பான்மையைக் கொள்ளவேண்டும். (லூக்காஸ் 18:9-14, 15:25-32, மத்தேயு 18:23-35)

“நம்மை நாம் அன்பு செய்வதைப்போல மற்றவரையும் அன்புசெய்யவேண்டும்” (மத்தேயு 22:39) என்று இயேசு குறிப்பிடுகிறார்.

இறைவன் நம்மைப் படைத்தார். நமக்கு மேன்மையான வாழ்வைத் தந்தார். அதை உணர்ந்தவர்களாக நம்மை நாம் புரிந்துகொள்ளவேண்டும், நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்போதுதான், நாம் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியும்.

“இது என்னுடைய கட்டளை. நான் உங்களை நேசித்ததுபோல நீங்களும் ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 15:12);

“இது என் கட்டளை. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 15: 1)

“நான் உங்களுக்குக் தருகிற புதிய கற்பினை, நீங்கள் ஒருவரையொருவர் அன்புசெய்யுங்கள். அப்போதுதான், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் (யோவான் 13: 34).

இவையெல்லாம் அனைவரையும் நேசிப்பதற்கான வெளிப்படையான இயேசுவின் போதனைகள் ஆகும்.

அயலவர்மேல் அன்பு செய்யவேண்டும் என்பது கடவுளின் கட்டளைமட்டுமல்ல,

அது கடவுளின் அன்பிற்குரிய சீடர்களின் அடையாளமுமாகும்.

கடவுள் உண்மையானவர் அவர் கற்பிக்கிற பாடங்கள் இயற்கை நியதிக்கு உட்பட்டது. இந்த விசுவாசத்தின் முலம் கிறிஸ்துவமானது நம்மில் மனிதத்தை உணர்த்தி, நம்மை முழு மனிதனாக மாற்றுகிறது.

புனிதர் சவுல் எனப்படும் பவுலின் மனமாற்றத்தில் மற்றவர்களை அன்புசெய்வதன் மேன்மையைக் காணலாம். கிறிஸ்தவர்கள் மேல் வெறுப்பு கொண்டவர் பவுல். ஒருநாள் பவுல், குதிரைமேல் ஏறி தமாஸ்கு நகரத்திற்குச் செல்லும்போது திடீரென்று ஒரு ஒளி பவுல் முகத்தில் தாக்கியது, அந்த அதிர்ச்சியில் பவுலும் தரையில் விழுந்தார். அப்போது அவர் பார்வையையும் இழந்தார்.

“சவுல் என்னை ஏன் நீ துன்புறுத்துகிறாய்? சவுல் என்னை ஏன் நீ துன்புறுத்துகிறாய்?” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

அதற்கு சவுல் “நீங்கள் யார்? நீங்கள் யார் ?” என்று கேட்டார்.

அதற்கு “நீ துன்புறுத்துகிற இயேசு கிறிஸ்து நானே” என்றார்.

“ஏன் என் மக்களை துன்புறுத்துகிறாய்?” என்று இயேசு சொல்லவில்லை. காரணம் இயேசு தன்னை, நம்மை சுற்றியுள்ள சக மனிதர்கள் மூலமாக அடையாளம் காட்டுகிறார். (அப்போஸ்தலர் 9:1-5)

உன் அயலானை அன்புசெய். உன்னருகில் உன்னோடு வாழ்பவர்களிடம் அன்புசெய். ஏனென்றால் கடவுள் எல்லோரையும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத் தான் படைத்துள்ளார்.

நாம் மற்றவர்களின் மேல் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுபோலவே கடவுளும் நம்மேல் நடந்துகொள்வார் என்பதுவே உண்மை .

கடவுள், ”நீங்கள் தருகிற நியாயத்தீர்ப்புகளின்படியே நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறுவீர்கள்” (மத்தேயு 7:2)

நீங்கள் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னித்தால் கடவுள் உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பார். நீங்கள் இரக்கம் காட்டவில்லை என்றால், இரக்கமற்ற ஒரு தீர்ப்புதான் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் யாரையும் குற்றம் சுமத்தவோ, தண்டிக்கவோ கூடாது. (லூக்காஸ் 6 – 37)

“நீங்கள் உங்கள் மீது கருணைகாட்டிக்கொள்ள விரும்பினால், உங்களுடைய சகோதரர்கள் மீது முதலில் கருணை காட்டுங்கள்.”

“மற்றவர்களுக்குக் கொடுங்கள் அப்போதுதான் உங்களுக்கும் கொடுக்கப்படும்” என்று கூறினார் இயேசு.

மறு உலகில் மரித்தோர் உயிர்த்தெழும்போது இயேசு மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார். அப்போது அனைவரும் அவர் முன் அழைத்துவரப்படுவார்கள். பூவுலகில் நன்மை செய்தோர் வலப்பக்கத்திலும், தீமை செய்தோர் இடப்பக்கத்திலும் நிறுத்தப்படுவார்கள்.

“என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகத்தில் உங்களை ஆயத்தப்படுத்தியதால் இந்தப் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களுக்கு இடம் உண்டு. காரணம் “நான் பசியாயிருந்தேன். நீ எனக்குச் சாப்பிட உணவு தந்தாய். தாகமாயிருந்தேன், நீ எனக்குக் குடிக்க கொடுத்தாய். நான் அந்நியராயிருந்தேன், நீ என்னைக் கவனித்துக்கொண்டாய். நான் நிர்வணமாயிருந்தேன், நீ என்னை உடுத்தினாய். நான் வியாதியாயிருந்தேன், நீ என்னைக் கவனித்துக்கொண்டாய். நான் சிறையிலிருந்தேன், நீ என்னைப் பார்க்க வந்தாய்” (மத்தேயு. 25: 31-36).

“இந்த நிலையில் இயேசுவை நாம் கண்டதில்லையே! “ என்று யோசித்தார்கள்.

அப்போது இயேசு அவர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் இதையெல்லாம் எளியவர்களுக்குச் செய்யும்போது எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்” என்றார்.

எனவே, இயேசுவின் வாயிலிருந்தே, நம்முடைய இறுதிகால விதியைத் ‘தீர்மானிக்கும் தீர்ப்பு நம் சகோதரர்களிடமும், இயேசு கிறிஸ்துவின் மீதும் வைத்திருக்கும் நம் அன்பின் அடிப்படையிலும்தான் தீர்மானிக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.

என்னுடைய சொந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.,,,,,

நான் ஒருநாள் அந்நியனாக இருந்தபோது …..

கடந்த ஏழு ஆண்டுகளாக, நான் அமெரிக்காவில் வாழ்கிறேன். நானும் என் குடும்பமும் ஒக்லகாமா மாகாணத்தில் உள்ள டெல்சா என்ற நகரத்தில் “ஸ்டோன் ப்ரூக்” என்றழைக்கப்படும் அழகான பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதிக்கு வர பெரிய இரண்டு வாயில்கள் உள்ளன. எங்கள் வீட்டிலிருந்து வாயில் 2 மைல் தொலைவில் உள்ளது.

ஒருநாள். நான் அஞ்சல் அனுப்ப UPS கடைக்குச் செல்ல புறப்பட்டேன். அந்த UPS கடை, வாயிலிலிருந்து 3 மைல் தொலைவில் அமைந்துள்ளது. எனக்கு எந்த வாகனமும் இல்லை. நான் நடந்தே செல்ல திட்டமிட்டிருந்தேன். நான் என் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது என் அண்டை வீட்டிலிருந்து ஒரு கார் வந்தது. நானும் கையை நீட்டினேன். காரை ஓட்டிவந்த பெண்மணி காரை நிறுத்தினார். அவரிடம் என்னை நுழைவாயிலில் விட முடியுமா என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

வழியில் நான் எங்கே போகிறேன் என்று என்னிடம் கேட்டார். நானும் UPS கடைக்குப் போகிறேன் என்று சொன்னேன். 2 மைல்கள் கடந்து நாங்கள் பெரிய நுழைவாயில் வந்தடைந்தபோது, நான் இறங்கிக் கொள்கிறேன், என்றேன். அவரோ என்னை UPS கடையிலேயே இறக்கிவிடுவதாகச் சொன்னார்.

நாங்கள் UPS கடையை அடைந்தபோது அவருக்கு நன்றி சொல்லிவிட்டு UPS கடைக்குள் சென்றேன்.

சிறிது நேரம் கழித்து, நான் UPS கடையிலிருந்து வெளியே வந்தபோது…. என்ன ஆச்சிரியம்…! அவர் எனக்காக காரில் காத்திருந்தார். என்னை “வாருங்கள் உங்களை காரிலேயே வந்து இறக்கிவிடுகிறேன்” என்றார். நான் அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் ஒரு பேச்சு சிகிச்சை நிபுணர் என்று அறிந்தேன். “ஒரு நோயாளியைப் பார்க்க போய்கொண்டிருகிறேன். அந்த நோயாளி சற்று தாமதமாக வருவதாக அறிந்தேன்,

அந்த நேரத்தில் உங்களுக்கு உதவ ஆசைப்பட்டேன்” என்றார்.

நாங்கள் நுழைவாயிலை வந்து அடைந்தபோது, அவர் வேலைக்குச் செல்பவர் என்பதால், “நான் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன்” என்றேன்.

அவரோ “இல்லை இல்லை, உங்களுடைய வீட்டில் வந்து இறக்கிவிடுகிறேன்” என்றார்.

அன்று மிகவும் மோசமான உச்சிவெயில்…. அனல் காற்று…. அவர் என்னை 10 மைல் தூரமும் சூடான வெயிலிருந்து காப்பாற்றினார்.

அன்று முதல் முறையாக, நான் சந்தித்த அந்நியர் அவர்… எனக்காக எவ்வளவு அன்புள்ளத்தோடு உதவிசெய்தார் என்று வியந்தேன். தினமும் அவர் வீட்டின் முன்பு நான் நடந்து செல்லும்போது என்னைப் பார்த்திருக்கிறார்.

திருவிவிலியத்தில் (பைபில்) சொல்லப்பட்ட ஒரு நல்ல சமாரியனைப்போல (லுக்காஸ் 10:25-37), என்மேல் இரக்கம்கொண்டு, என் தேவை அறிந்து, என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவருடைய விலைமதிப்பில்லாத நேரத்தையும் ஒதுக்கி அன்போடு உதவிசெய்தார்.

இங்கு இயேசுவின் போதனையை நினைவு கூறுகிறேன். இயேசு, “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரும்படி கேட்டால், அவனுடன் இரண்டு மைல் தூரம் (மத்தேயு 5:41) செல்லுங்கள்” என்று கூறினார். அன்று அந்த நபரிடம் வீட்டிலிருந்து 2 மைல் தூரம் உள்ள நுழைவாயிலுக்குச் செல்ல உதவுமாறு கேட்டேன். அவர் என்னை வீட்டிலிருந்து 5 மைல் தொலைவில் உள்ள UPS கடைக்கு அழைத்து சென்று, எனக்காகக் காத்திருந்து மீண்டும் என்னை வீட்டில் வந்து இறக்கிவிட்டார். என் மனதில் நிரந்தர இடம் கொண்டிருக்கும் அவருடைய நற்குணம் கொண்ட கிறிஸ்துவ மனப்பான்மையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

நான் ஒரு அந்நியரை சந்தித்தபோது……..

ஒருநாள், எங்கள் வீட்டின் வாசல் மணி அடித்தது. நான் கதவைத் திறந்தபோது, எங்கள் பகுதிக்கான தபால்காரர் நின்றுகொண்டிருந்தார். அவர் சீனா நாட்டிலிருந்து வந்தவர். அவருடைய கண்களில் கண்ணீரோடு சோகமான முகத்தைக் கண்டேன். அப்போது அவர் என்னிடம், ஒரு காகிதத்தைக் காட்டினார். அதில் இந்தியாவில் உள்ள எனது உறவினர் பெயர் மற்றும் முகவரி இருந்தது.

அவர் என்னிடம், “உங்களுக்கு ஒரு Speed post வந்தது. அது என்னுடைய வாகனத்திலிருந்து திடீர் காற்றினால் எதிர்பாராதவிதமாக பறந்து சென்றுவிட்டது. என்னால் அதை பிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்” என்றார்.

மேலும், “அதை எங்கள் போஸ்ட்மாஸ்டரிடம் சொன்னேன். அவர் மிகவும் கோபமுற்று, உங்களிடம் அந்தக் கடிதம் எவ்வளவு முக்கியமானது என்று கேட்கச் சொன்னார்” என்றார்.

அந்தக் கடிதம் முக்கியம் என்று நான் சொன்னால், அதையே காரணம்காட்டி அவருடைய 15 வருட தபால்துறை வேலையை இழக்க நேரிட்டிருக்கும் .

அதனால், நான் அவரிடம் “கவலைப்பட வேண்டாம்” என்று ஆறுதல் சொன்னேன். மேலும் அவருடைய போஸ்ட்மாஸ்டரிடம் தொலைபேசியில் அழைத்து காணாமல் போனது ஒரு முக்கிய கடிதம்தான், இருந்தாலும் அதன் மற்றொரு நகலை நான் பெறமுடியும். அதனால் அந்த தபால்காரரை மன்னிக்கவும்” என்று கேட்டுக்கொண்டேன்.

அடுத்தநாள் காலையில் எங்கள் வீட்டு வாசற்படியில் அந்தத் தபால்காரர் நின்றுகொண்டிருந்தார். நான் கதவை திறந்தபோது அவருடைய சிரித்த முகத்தைக் கண்டேன். அவர் எனக்கு நன்றி சொன்னார். எனக்கு ஒரு பாக்கெட் சாக்லேட்டும் கொடுத்தார்.

அந்த நொடிப்பொழுது இயேசுவின் போதனைகள் என் ஞாபகத்திற்கு வந்தன. கடவுளுடைய மகத்தான அன்பிற்கு நம்முடைய பதில் “அயலாரை அன்பு செய்யவும்”.

மற்றவர்கள் மேல் இரக்கம் வைப்பது மிக எளிது. நம்முடைய அன்பின் மற்றும் இரக்கத்தின் வாயிலாக நாம் மற்றவர்களுக்கு அவர்கள்மேல் உள்ள கடவுளின் அன்பைப் புரிய செய்யவேண்டும்.

இயேசு கூறியதாவது, “என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்.” (யோவான் 13:20). நாம் மற்றவர்களை உண்மையாகவும் சுயநலமற்றவர்களாகவும் நேசிக்க முடிந்தால், கடவுளுடைய இதயத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

இயேசு மனித குலத்திற்காகத் தன்னையே சிலுவையில் பலிதந்து, மனிதகுலத்தின்மேல் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு கூறியதாவது, “யாராவது தன் நண்பருக்காக தன் உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை” (யோவான் 15: 13-14 )

அன்பான உறவுகளால்தான் மத நெறிகள் இருப்பதாக இயேசு வலியுறுத்துகிறார். புறக்கணிக்கப்பட்டவர்கள் மேல் இயேசு அதிகம் அன்புகாட்டினார்.

நம்மைத் தவிர, நம்மைச் சுற்றியுள்ள அனைவருமே நம் அயலாரே.

கடவுளை அன்புசெய்வதைப்போல் நம் அயலாரையும் அன்பு செய்வோம்……..!

– Dr. அந்தோனி தாமஸ்

Tags: , , , ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Saruna says:

    Thank you for sharing your personal experiences. It is very touching. If every one of us appreciate the help we get everyday , the world will be a better place.

  2. Bishop Kennedy says:

    Yes
    We have to love each other’s without no expectations
    Because Our Master has showed us to follow Him

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad