கந்துவட்டி
அசல் பெற்ற
பிள்ளையா?
அசலின் நகலா?
வட்டி!
தனிவட்டி
கூட்டுவட்டி
தெரியாதவனுக்கு
கந்துவட்டிக் கணக்கு
யார் சொல்லிக் கொடுத்தது?
கந்துவட்டி எண்ணெயில்
கொப்பளிக்கிறது
ஏழைகளின் உடல்கள்!
வட்டியில்
பிழைப்பவர்களே!
நீங்கள் சம்பாதிப்பது
பணத்தையல்ல…
பாவத்தை!
பல ஏழைகளின்
உடல்களை
எரித்துத்
தின்கிறது
உங்கள் குடல்கள்!
வட்டிமேலே
வட்டி போட்டு
கழுத்தை இறுக்கும்
கந்துவட்டிக் கயிறு…
பல தாலிகளைத்
திரித்து உருவான
கயிறு!
மஞ்சள் கயிறு
நிறம்மாறிப்
போகுது!
ஏழைகளின் அழுகையைக்
குடித்துக் குடித்து
தினம் வாழுது!
ஏதுமில்லா
ஏழை அடுப்பங்கரையில்
உட்கார்ந்து
சாப்பிடுது!
ஓட்டைக் குடிசையில்
மேலிருந்து
மிரட்டுது!
வெந்து வெந்து
நொந்து நொந்து
கட்டுறான்
கந்து வட்டி!
இன்று
இலாபம் அதிகம்
பார்க்கும் உடல்…
நாளை
நட்டம் அதிகமாய்ப்
பெறும்!
ஏழையின் உழைப்பில்
உட்கார்ந்து தின்னும் உடல்
எழ முடியாமல்
படுக்கையிலேயே விழும்!
இது
செய்த பாவத்திற்கு
ஆண்டவன்
தரும் கந்துவட்டி!
செய்யும் குற்றத்திற்கு
நாளை உன்
பிள்ளைகளை
பாவ மூட்டை
சுமக்க விடாதே!
– சா. கா. பாரதி ராஜா
மிகச்சிறந்த கவிவரிகள்
வாழ்த்துக்கள்