\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கார்ப்பரேட் கனவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2017 17 Comments

“ரேணு. நேத்து ஒரு வரன் ப்ரோபைல் சொன்னேனே   அதைப் பார்த்தியா? பிடிச்சிருக்கா?”

“ “

“என்னடி பதிலையே காணோம்?”

“அம்மா. நீங்க முழுமையா பாருங்க எனக்கு எது ஒத்துவரும். வராது என்று நீங்க ஒரு ஐடியா வச்சிருப்பீங்க. இல்லையா? அதற்கெல்லாம் ஓகே என்றால் எனக்குச் சொல்லுங்க.. அப்புறம் நான் என் ஒபினியனைச் சொல்கிறேன்”

“இப்படிப் பொத்தாம் பொதுவாப் பேசினா எப்படிடி? உனக்குப் பொருத்தமான வரன் என்று பார்த்து 100 சதவீதம் நாங்க திருப்தியானப்பறம் தான் உனக்குச் சொல்றோம். ஆனால் நீ காரணமே சொல்லாமல் பல வரன்களை தட்டிக் கழிச்சிக்கிட்ட வர்றே.  அதுதான் எனக்குப் புரியவில்லை”

“இதோ பாரும்மா..சிலதெல்லாம் சொல்ல முடியாது.  ஆனால் நிச்சயமாக அதற்குப் பின்னால் சரியான காரணம் இருக்கும்… போதுமா?”

இப்பவும் ரேணு பேசுவது ராதிகாவுக்குப் புரியவில்லை. 25 வயதாகும் மகளுக்குத் திருமணத்திற்கு வரன் பார்ப்பது  மிக மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது. ஆம் அவள் ஒரு ஐ.டி. புரொஃபெஷனல் அதே புரொஃபெஷனில் இருக்கும் வரன்தான் சரியாக வரும்.  ஆனால் ரேணு எதற்கும் பிடிகொடுத்துப் பேசமாட்டேன் என்கிறாள்.  காதல். கீதல் என்று இருக்குமோ என்று அதையும் கேட்டுவிட்டேன்.

“அம்மா…… அதெல்லாம் இருந்தா உன்னை நான் ஏன் வரன் பார்க்கச் சொல்லப்போறேன். டோன்ட் வொரி… அப்படியெல்லாம் எதுவுமில்லை.”

இரண்டு நாட்கள் கழிந்தன. தரகர் வந்து ஒரு பையன் புகைப்படமும் ஜாதகமும்  அந்தப் பையனுடைய குடும்பப் பின்னணி பற்றியும் கூறிச் சென்றார்.  ஆனால் ரேணு என்ன சொல்வாள் என்று ராதிகாவால் ஊகிக்க முடியவில்லை.

“ரேணு …தரகர் கொடுத்த வரன் விவரம் இந்தக் கவருக்குள்ளே இருக்கு… நீ பார்த்து விட்டு சொல்.”

“ஓ.கேம்மா   நான் சாயந்திரம் சொல்றேன்” என்று கவரைத் தன் கைப் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டாள்.

ராதிகாவிற்கு  நம்பிக்கையில்லை. ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக.  “அம்மா இந்த வரன் எனக்கு ஓ.கே.  உங்களுக்கும் பிடித்திருந்தால் மேற்கொண்டு  தீர்மானிக்கலாம்.”

ராதிகா ஆச்சர்யத்தின் உச்சிக்குச் சென்று விட்டாள். அவளுக்குப் பேசவும் நா எழவில்லை. தயங்கித் தயங்கிப் பேசினாள்…..

“ரேணு. இந்த வரன் உனக்குப் பிடித்திருக்கிறதா என்ன? பையன் கல்லூரியில் உதவிப்பேராசிரியர்….”

“ம்….ம்….” புன்னகையோடு பதில் வந்தது ரேணுவிடமிருந்து…பார்த்தேன்

“ஏண்டி உன் படிப்பும் தொழிலும் வேறு… அந்தப் பையனின் படிப்பும் தொழிலும் வேறு…பையனை விட நீ கூடுதலாகச் சம்பளமும் வாங்குகிறாய்.. எப்படி ஒத்துப்போகும்?  யோசித்தாயா?”

“ஏன் நீங்கள் பார்த்துவிட்டுத்தானே என்னிடம் காட்டினாய்? பின்பு நீயே இந்தக் கேள்வியைக் கேட்டால்?… கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

“ஆமாம்.. இதுவரை வந்த எல்லா ஐ.டி. வரன்களையும் நீ வேண்டாம் என்று எந்த ஒரு காரணமும் சொல்லாமலே நிராகரித்து விட்டாய்.  அதனால்தான் இதை உன்னிடம் காட்டலாம் என்று முடிவு செய்தேன்..  நீயும் பார்க்கலாம் என்று சொல்கிறாய்… சரிதான்… ஆனால் அவர்களது குடும்பப் பின்னணி என்னவென்று பார்த்தாயா? பையனின் அப்பா ஏதோ ஒரு சாதாரணக் கம்பெனியில் மேனேஜர்.  அம்மா பள்ளி ஆசிரியை. கல்யாணமான அக்கா தையல் கடை வைத்திருக்கிறாள்.  அவள் கணவன் விற்பனைப் பிரதிநிதி. ஒரு வீட்டைத்  தவிர சொத்துபத்து எதுவும் இல்லை. அவர்களுக்கு உன்னைப் பிடித்திருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. வசதிகளோடு படித்த, வேலைக்குச் செல்லும் பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது…… ஆனால் நமக்கு எப்….”

முடிக்கும் முன் ரேணு குறுக்கிட்டாள்.  “அம்மா இன்னும் ஒருவர் குடும்பத்தை மற்றொருவர் பார்க்கவில்லை. பேசவில்லை. அதற்குள் ஏனம்மா முடிவெடுக்கிறாய்….”

“அதில்லையம்மா…எப்படி உன்னால் இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் சென்று வாழ முடியும்? அவர்கள் டேஸ்ட் நிச்சயமாக நம்மோடு ஒத்துப் போகாதே!” கவலையின் ரேகைகள் ராதிகாவின் முகத்தில்….

“அம்..மா.. நாம் என்ன உடனேவா முடிவெடுக்கப் போகிறோம்? பார்ப்போம். பேசுவோம். பிறகு யோசிக்கலாம் என்ன? அப்பாவிடமும் சொல்லிவிடு.. இன்று அவர் பூனாவில்தானே இருக்கிறார்.  நாளை மறுநாள்தானே வருகிறார். இந்த வார இறுதியில் நாம் சந்திக்கலாம் என்ன? தரகரிடமும் சொல்லிவிடு…” பதிலுக்குக் காத்திராமல் தகவலாகச் சொல்லிவிட்டுப் போகும் மகளை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள் ராதிகா…..

பேசியபடியே அந்த வார இறுதியில் அருகிலுள்ள பூங்காவில் சந்திப்பதென ஏற்பாடாகியது.பையனுக்கு வேறு ஒரு அவசர வேலை வந்து விட்டதால் அவரால் வரஇயலவில்லை. அந்தத் தகவலைக் கூறி பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு பையனின் அப்பா சிவசண்முகம் பேசத் தொடங்கினார்.

“சார்…தப்பாக நினைக்கவேண்டாம். எனக்குச் சில விஷயங்கள் குழப்பமாக இருக்கின்றன.  அதை நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா?” தயங்கித் தயங்கிக் கேட்டார்.

“என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். அதைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார் ரேணுவின் அப்பா ராமநாதன்.

எல்லோருக்கும் வருகின்ற  சந்தேகம்தான். நீங்கள் இருக்கும் உயரத்திற்கு எங்களைப் போலொரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் மருமகன் எடுக்க என்ன காரணம்?  என் உறவுக்காரர்கள் பலபேர் பலவிதமாகப் பேசுகிறார்கள்.  நாங்கள் எந்தவொரு விஷயத்தையும் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் செய்வதில்லை. அதுதான்…”

“உங்களின் ஒளிவு மறைவில்லாத பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் என் பெண் ரேணுவே பதில் கூறுவாள்.  காரணம் நானும் என் மனைவியும் இந்த இடம் நமக்குச் சரிப்பட்டு வராது என்றுதான் கூறினோம்.  எனவே ஓவர் டு ரேணு… என்றார் புன்னகையுடன்….”

“முதலில் ஒரு விஷயத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  மண வாழ்க்கை என்பது வெறும் கணவன் மனைவி என்கிற சிறிய எல்லைக்கோட்டிற்குள் வாழுகின்ற வாழ்க்கை என்று இக்காலத்தில் எல்லோரும் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. தெளிந்த நீரோடை போல. நதியாக ஓடி சமூகம் என்னும் பெருங்கடலில் கலந்து ஒன்றாவதுதான். எனக்கு எனது பெற்றோரைத் தவிர வேறு எந்த உறவுகளோடும் அதிகமான தொடர்புகள் கிடையாது. காரணம் என் தந்தை ஒரு தொழிலதிபர். வருடத்தில் பாதி மாதங்கள் வெளிநாட்டிலும் மீதி மாதங்கள் வெளியூரிலும்தான். அம்மாவும் அவருக்கு உதவியாக அவருடனே இருந்தார். அதனால் நான் கல்லூரி வரை விடுதியில் தங்கித்தான் படித்தேன்.  என்னுடைய சங்கடங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு சில தோழிகளே இருந்தனர்.  எனவே நான் அப்போதே தீர்மானித்து விட்டேன். என்னிடம் இருப்பதை விட இல்லாததைத் தேட வேண்டும் என்று. வாழ்வில் படிப்பு வேலைக்கு அடுத்ததாக வருவது மணவாழ்க்கைதான்.  அதில் எனக்கென்று நிறைய உறவுகளும் அவர்களோடு புரிதல்களுமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று  முடிவு செய்தேன்.  எனக்குத் தனிக் குடித்தனத்தில் விருப்பம் இல்லை. காரணம் கணவன் மனைவி பிரச்சனைகளைத் தீர்க்க வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கான இடைவெளி அதிகமாகும். அது விரைவில் வாழ்க்கையில் சலிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி பிரிவுக்கு வழி வகுக்கும். அத்தை மாமா என்கிற உறவுகள் பிரிவுகளின் விரிசல்களை மிக மிக எளிமையாத் தீர்த்து வைக்கும்.”

எல்லோரும் அவள் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறாள் என்று வியப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அடுத்தாக. என் வேலை பற்றி. நான் ஒரு மென்பொறியாளர். இந்த வேலை வெளிநாட்டில் இருக்கும் முதலாளிகளுக்காக இந்தியத் தொழிலாளிகள் செய்வது.  சம்பளம் அதிகம் என்கிற பிரமிப்பும் கூடவே வருகிற வசதி வாய்ப்புகளும் பார்ப்பவர்களுக்கு அடிவயிற்றில் எரிச்சலும் பொறாமையும் ஏற்படுத்தும். ஆனால் எங்களை யாரும் தொழிலாளியாகப் பார்ப்பதில்லை. எங்களை “ரிசோர்ஸ்”அதாவது “கருவி’ ஆகத்தான் பார்க்கிறார்கள். வேலையில் ஒரு சிறு தவறு நேர்ந்து பிடிக்கவில்லை என்றாலும் உடனே கழட்டி விட்டு விடுவார்கள். இங்கே வேலையில் பதவி உயர்வு என்பது தகுதி. திறமை அடிப்படையில் கிடையாது. அவரவர்களுடைய தனித்திறமை  மேலதிகாரிகளின் செல்வாக்கு. அதிர்ஷ்டம் இவற்றைப்  பொறுத்தது.  நாங்கள் எல்லோரும் ரேஸில் ஓடும் பந்தயக் குதிரைகள் மாதிரிதான்.  ஒருத்தரை ஒருத்தர் தள்ளிவிட்டு தான் முன்னேறப் பார்ப்பார்கள். அதுவும் நமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களே நமக்குக் குழியைத் தோண்டிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் டென்ஷன்தான். அதனால்தான் என்னைப்போலொரு  மென்பொறியாளர் என் வாழ்க்கைத் துணையாக வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் உங்கள் வரன் வந்தது.”

சிவசண்முகம் வியப்பும் குழப்பமும் மேலிட தன் மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பினார். அவரது முகத்திலும் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள்..

எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக்கொண்டே ரேணு ஒரு கீற்றுப் புன்னகையுடன் தொடர்ந்தாள்…

“மிஸ்டர். ராமச்சந்திரன் ஒரு உளவியல் பேராசிரியர்.  கண்டிப்பாக என் வேலைக்கும் அவரது ஆசிரியப் பணிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால் அவரின் அனுபவங்கள் எனக்கு வழிகாட்டுதல்களாகவும். என் அனுபவங்கள் அவருக்குப் புதியதோர் உலகத்தைப் பற்றிய அறிமுகமாகவும் இருக்கும்.  ஏன் வழிகாட்டுதல் என்று சொன்னேன் என்றால் இவரைப் போல உளவியல் பேராசிரியர்களைக் கொண்டு எங்களைப் போல உள்ள மென்பொறியாளர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார்கள்.  எதற்குத் தெரியுமா? எங்களுக்கு வேலையினால் உண்டாகும் மன உளைச்சல்களையும். மன அழுத்தங்களையும் நீக்குவதற்காகத்தான். இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லட்டுமா?  கடந்த வாரம் மிஸ்டர்.ராமச்சந்திரன்தான் எங்கள் கம்பெனிக்குப் புத்துணர்வு வழிகாட்டி வகுப்புகள் எடுக்க வந்திருந்தார்.  அப்பொழுதே நான் முடிவு செய்துவிட்டேன்.  அலுவலக உளைச்சல்களுக்கே இவ்வளவு அழகாக தீர்வைச் சொல்கிறவர் வாழ்க்கைப் பிரச்சனைகளை இதை விட அற்புதமாகவும் ஆழமாகவும் சிந்தித்து சரி செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.  என்னைப் பொறுத்த வரை எனக்குப் பரிபூர்ண சம்மதம். மீதியைப் பெரியவர்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே போல் உங்கள் பையனையும் கேட்டு விட்டு முடிவைச் சொல்லுங்கள்…”

“   “

“ஏன் யாரும் எதுவுமே சொல்லவில்லை? என் பேச்சு உங்களுக்கு நாடகத்தனமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் குடும்பம் பற்றிய என் கனவுகள் உறவுகளின் சங்கமத்தோடு. இதயத்தின் புரிதல்களோடு. சின்னச் சின்ன ஊடல்களோடு. ஆளுமைகள் இல்லா அன்போடு இந்தியக் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் போற்றிக் காப்பதாக இருக்க வேண்டும்.”

ரேணுவின் பேச்சைக் கேட்ட எல்லோருக்குமே ஒன்று மட்டும் தெள்ளத்; தெளிவாகப் புரிந்து விட்டது.  வாழ்க்கை வேறு தொழில் வேறு என்ற தத்துவத்தை ஒவ்வொரு பெண்ணும் ரேணுவைப் போல மிகச் சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் மண வாழ்க்கை என்னும் ஓடம் எந்த விதமான மழைக்கும். புயலுக்கும் ஈடு கொடுத்து நீந்திக் கரையேறி விடும்..; ஆம்….கார்ப்பரேட் மனிதர்களின் கனவுகள் அலாதியானவைதான்………..

-சாய் சுப்பலக்ஷ்மி

Comments (17)

Trackback URL | Comments RSS Feed

  1. Nathan says:

    Super story, Keep it up

  2. Srikumar Balasubramanian says:

    Very nice story needed for this hour. Go ahesd and shine

  3. Anusha V says:

    Beautifully written, appropriate to the present scenario!!! Author, way to go!!!!

  4. Jothi says:

    Very interesting.Renuis a very mature girl she is very clear about what she wants.it is really an eye-opener to girls and boys in marriageable age.congrats to my dear student I feel proud

  5. Balaji SK says:

    Really super story… what a thinking of Renu character… good story

  6. padma Narayanan says:

    Good story. now a days girls think differently. that has been treated effectively. good guidance. require more such stories

  7. Radhika Jayaraman says:

    Nicely narrated.

  8. Udaya says:

    A very beautiful message conveyed through this story….there is always more to life than what we see

  9. Hafiz Jaffar says:

    Nice story with important lesson for practical life. Got the scenario in the tip of your pen. Fabulous Imagination. Story Differentiates what we wish and what actually we need. Hope you write more which we save in our hearts with the help of panippookkal.

  10. Saisubbulakshmi says:

    Thanks Jaffer ji
    For your wonderful feedback
    Will try to do more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad