சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…
சென்ற சனிக்கிழமை, ஏப்ரல் 13 ஆம் திகதி, தமிழ்ப் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டங்கள், மேப்பிள் குரோவ் (Maple Grove) நகரிலுள்ள இந்து ஆலயத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ”பனிப்பூக்கள்” இதழை உள்ளூரில் வாழும் தமிழர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த அதன் ஆசிரியர் குழுவின் அனுபவம் பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சிக் குறிப்பு;
மேப்பிள் குரோவ் கோயிலுக்கு சென்றவர்களுக்குத் தெரியும்; முதன்மை வாசலில் நுழைந்தவுடன் வலது புறம் திரும்பினால் கோயிலுக்கான பகுதிகளும், இடது புறம் திரும்பினால் சமூகக் கூட்டங்களுக்கு உரித்தான பகுதிகளும் இருக்குமென்பது. இடது புறத்தில் நடந்து சென்றால் ஒரு நீளமான நடைபாதை, அதன் இடது புறம் ஒரு முன்னூறு பேர் அமருமளவுக்கு வசதியுள்ள அரங்கம், வலது புறம் ஒரு நூறு பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளுமளவு இடமுள்ள அடுக்களையுடன் கூடிய சாப்பாட்டு அறை.
அனைவரும் வசதியாக அமர்ந்து அரங்க நிகழ்ச்சியைக் கண்டு களிப்பதற்காக, அரங்கத்திற்கும் நடைபாதைக்கும் இடையிலான சுவர் மற்றும் நடைபாதைக்கும் சாப்பாட்டு அறைக்கும் இடையிலான சுவர் இரண்டையும் எடுத்து விட்டு எல்லாவற்றையும் ஒன்றாக்கியிருந்தார்கள். வேண்டுமென்கிற பொழுது அப்புறப் படுத்தும் வசதியுடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட சுவர்கள் அவை. மிகப் பெரிய கூட்டமென்பது தெளிவாக விளங்கிற்று. நிகழ்ச்சியின் வசூலான அனைத்துத் தொகையும் கோயிலின் நல நிதிக்காக அளிப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முன் கூட்டியே அறிவித்திருந்தனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட தினமன்று பனிப்பூக்கள் சார்பாக கோயிலில் ஒரு கடை விரிக்க எண்ணமுற்று கோயில் நிர்வாகிகளை அணுகினோம். அவர்களும் மிகவும் கனிவுடனும், மரியாதையுடனும் எங்களுக்குத் தேவையான வசதிகளனத்தையும் செய்து தந்திருந்தனர்.
பல வியாபாரிகளும் எங்களைச் சுற்றிக் கடையமைத்திருந்தனர். எங்களின் ஒரு பக்கம் பெண்களுக்கான இந்திய உடை வியாபாரமும் மற்றொரு பக்கம் அணிகலன்கள் வியாபாரமும் மிகவும் விமர்சையாக நடந்து கொண்டிருந்தன. எங்களைக் கடந்து செல்பவர்களனைவரும், இவர்கள் என்ன விற்கிறார்கள் என்ற குழப்பத்தில் நடந்து செல்வது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அவர்களனைவரிடமும், நாங்கள் வர்த்தக நோக்கில் அங்கு வரவில்லை என்பதை விளக்குவது எங்களின் முதல் கடமையாக இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களாகவே இந்த தினத்திற்காக எங்கள் குழு பல்வேறு வேலைகளைச் செய்திருந்தது. வண்ணப் படங்களுடன் படிப்பவர்களைக் கவரும் எழுத்துகளுடன் பல விளம்பரங்களை அச்சடித்திருந்தோம்.
வீட்டின் குளிர்ப்பதனப் பெட்டியில் ஒட்டி வைத்துக் கொள்ள பனிப்பூக்களின் இணையதள முகவரி மற்றும் தொடர்புக்குத் தேவையான அனைத்து விவரங்களும் உள்ளடக்கிய சிறு வணிக அட்டைகளை (Business Card) வடிவமைத்திருந்தோம் . இவை தவிர, தமிழ்க் கலாச்சாரத்தையொட்டிய சித்திரங்கள் பலவற்றை சிறுவர் சிறுமியர் வண்ணம் தீட்டுவதற்காக வைத்திருந்தோம். எல்லாவற்றிலும் பனிப்பூக்கள் சஞ்சிகையின் அடையாள ஊதா நிறம்..
ஏறக்குறைய ஒரு ஐந்து மணி நேரம். நூற்றுக்கணக்கானவர்கள் எங்களைக் கடந்து சென்றனர். பலரும் நின்று என்ன விவரமென்று விசாரித்துச் சென்றனர். பலர் எங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் வழங்கினர். சிலர் தங்களின் பங்களிப்புகளையும் படைப்புகளையும் தருவதாகக் கூறினர். கவனமாகவும், ஆர்வத்துடனும் எங்களின் சஞ்சிகை குறித்துக் கேட்டறிந்து கொண்டனர். பொதுவாகவே இது போன்ற எங்களின் முயற்சிக்கு ஒரு நல்ல வரவேற்பு இருப்பதாகவே மனதிற்குப் பட்டது.
குழந்தைகள் மிகவும் குதூகலமாக வந்த வண்ணமிருந்தனர். மேசை மீதிருந்த குழந்தைகளின் கலைப் பசிக்குத் தீனியிடும் வண்ணம் தீட்டுவதற்காக வைக்கப்பட்ட படங்கள் மற்றும் ருசி நாளங்களுக்குத் தீனியிடும் இனிப்புகளும் அவர்களைக் வெகுவாகக் கவர்ந்தனசிறப்பாக வண்ணம் தீட்டிய குழந்தைகளுக்குப் பரிசு உண்டு என்றும் அறிவித்திருந்தோம். பரிசு பெற்ற படைப்புக்களையும் இதே இதழில் அறிவித்துள்ளோம்.
எங்களின் ஆசிரியர் குழுவுக்கு இது மிகவும் வித்தியாசமான சுவையான அனுபவம். பலரைச் சந்தித்துப் பேச முடிந்தது எங்களுக்கு நிறைவு தந்த அனுபவம். வழங்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களும், யோசனைகளும் எங்களின் குழுவினால் ஆலோசிக்கப்படும். பொருத்தமாகவும், செயல் படுத்த முடியுமாகவும் இருக்கும் நிலையில் அவற்றைக் கட்டாயமாகச் செயல் படுத்த முயற்சிப்போம்.
தமிழ் மொழியை படித்துப், பேசி அதன் சுவையை நம் தலைமுறையினர் மட்டுமின்றி அடுத்து வரும் தலைமுறையினரும் பாராட்ட வேண்டும் என்பது மட்டுமே எங்களது சஞ்சிகையின் குறிக்கோள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்து எங்கெல்லாம் தமிழினம் கூடுகிறதோ அங்கெல்லாம் சென்று இந்த சஞ்சிகை குறித்துப் பேசுவதும், வாசகர்கள் மற்றும் பொது மக்களின் கருத்தறிந்து அதற்கொப்ப எங்களை வழி நடத்திச் செல்வதுமே எங்களின் குறிக்கோள், ஆசை மற்றும் திட்டம்.
நன்றி.
மது வெங்கடராஜன்.
மென்மேலும் தங்களின் சேவைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் பல…
நன்றி…