நினைவின் மொழி
“மனோ, நியூ இயர் அன்னைக்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு. அவசியம் வந்துரணும், கடைசி நேரத்துல வேற எதுவும் காரணம் சொல்ல கூடாது”
“சேச்சே.. கண்டிப்பா வரேன், நண்பா. நமக்கு சோறு தான் முக்கியம்.”
அன்பான உபசரிப்பும், ருசியான உணவும் கொண்ட விருந்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருதோம். அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், புளோரிடா, நெவாடா, லாஸ் வேகாஸ், நியூ யார்க் என ஒட்டியிருந்த காந்த பட்டைகளைப் பற்றி விசாரித்தேன். இது எல்லாம் அந்தந்த ஊருக்கு சென்று வருகையில் அதன் ஞாபகமாக வாங்கி வந்தது.. இன்னும் நெறைய ஊர் பாக்கி இருக்கு, எல்லாத்துக்கும் ஒரு விசிட் அடிச்சிட்டு இந்தக் கதவு முழுவதும், காந்தப் பட்டைகளால் நிரப்ப வேண்டும் எனச் சொன்னார்.
‘அதுவும் இல்லாம இதைப் பார்க்கும் போது அந்த ஊரின் நினைவுகள் ஒரு கணம் மனதில் பசுமையாய் வந்து போகும்’ என்றார். உண்மை தான். சில பல ஆண்டுகளுக்கு முன், ஒரு புத்தகத்தின் நடுவில் மயிலிறகு வைத்திருந்த தோழியைப் பார்த்து, ‘என்ன இது?’ என்றேன். ‘பார்த்தா தெரியலையா..? மயிலிறகு’ என்றாள். என் பிரியத்தின் பக்கங்களை நிரப்புகிறேன், பேர்வழி என்று, காதலுடன், அவளின் கண்களை மிக அருகில் பார்த்துக்கொண்டிருந்த ஓரிரு வினாடிகளில், என் மனதின் செய்தி அவளின் மூளைக்குக் கடத்தப்பட்டு, அதன் காரணமாக லேசான புன்னகையையை சிந்தி கொண்டே கேட்டாள்.., என்னடா .? அந்த சொற்களில் உள்ள குழைவினால் திடீரென கழுத்து வரை நிரம்பிவிட்ட காதலின் அமிலம் தந்த முனைப்பில், ஒரு பழைய கேள்வியை அவளிடம் கேட்டேன். ‘இது குட்டி போட்டா எனக்கும் தருகிறாயா?’
சட்டென, எங்கள் கண்களுக்கு இடையேயான மாய இழையை கருணையே இல்லாமல் அறுத்தெறிந்துவிட்டு கேட்டாள், ‘மயிலிறகு எங்கயாவது குட்டி போடுமா, முட்டாளா நீ?’
அமிலம் எல்லாம் ஆவியாகி காது வழியாக, புகையாக போய்க்கொண்டிருந்தது. ‘எப்ப பார்த்தாலும் லாஜிக்கோட தான் பேசுவியா? அந்த அறிவை ஆஃப் பண்ணிட்டு பேசலாம்ல..?’ என கடுப்பில் குரலை உயர்த்தினேன். இப்போது அமிலம் இடம் மாறியிருந்தது அவள் கண்களில் தெரிந்தது. உடனடியாக என் கன்னத்தைக் கிள்ளி, “கோச்சிக்காதடா” என்றவள், அவளே தொடர்ந்தாள், ‘எங்க சொந்த ஊர்ல எங்க வீட்டுக்குப் பின்னாடி வெறும் வயல் வெளி தான். அங்க, அப்பபோ மயிலெல்லாம் வரும். ஒருநாள் நானும் என் அப்பாவும் எங்க வயலுக்கு போயிட்டு, மழை வர்ற மாதிரி இருக்குனு திரும்ப வீட்டுக்கு வந்துட்டு இருந்தோம். வர்ற வழியில மயில் ஒண்ணு தோகையை விரிச்சி அழகா ஆடிட்டு இருந்தது. நானும் அப்பாவும் அதை பார்த்துட்டு வீட்டுக்கு வரதுக்குள்ள சடசடனு மழை ஆரம்பிச்சிட்டுது. எங்க அப்பா என்ன துண்டு போட்டு போத்தி தோள்ல தூக்கி போட்டுட்டு ஓட்டம் ஓட்டம்னு வீடு வந்து சேர்த்துட்டார். இந்த மயிலிறகைப் பாக்கும்போதெல்லாம் அந்த மயிலும், என் அப்பாவும், மழையும் மண்ணும் காதல் கொண்ட அந்த தருணத்தின் வாசமும் என் நினைவில் நிழலாடும்’ எனச் சொல்லி முடித்த கணத்தில் என் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் பார்வையில் ஒரு மயிலின் நடனமும், பெருமழையும் தெரியும் இந்த அற்புதக் கணத்தில், பெருகி வரும் என் காதலை ஒரு முத்தத்தின் மூலம் அவளுக்குக் கடத்திவிடலாம் என யோசித்தேன். அவள் நினைவில் அந்த மழை ஈரம் கொண்ட அந்தி இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் என, அமைதியாய் இருந்துவிட்டேன். சமயத்தில் கொடுக்கப்படாத முத்தம் கூட காதலின் வெளிப்பாடுதான்.
‘ஹலோ பாஸ்.!! என்ன அமைதியாயிட்டீங்க..?’ என்ற நண்பரிடம், ‘செம சாப்பாடு தோழர், நல்ல தூக்கம் வருது, அழைப்புக்கு நன்றி!’ எனக் கூறிவிட்டு வீடு வந்தவிட்டேன். நண்பரின் அன்பும், நல்ல உணவும், ஊரின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் அந்தக் காந்தப் பட்டையும் என் மனதில் ஒட்டிக்கொண்டன. இதுபோல எத்தனையோ நினைவுகள் எங்கள் வீட்டிலும் இருந்திருக்கின்றன. வேளாங்கண்ணி போய் வந்த போது வாங்கி வந்த மேரி மாதா படம் ரொம்ப நாள் எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டியிருந்தது. எதோ ஒரு பொங்கலுக்கு சுவரில் சுண்ணாம்பு அடிக்கும் போது கழற்றி, சுருட்டி பரணில் போட்டோம். பூம்புகாரில் இருந்து வாங்கி வந்த சங்கு மற்றும் கிளிஞ்சல்களால் ஆன மாலையை எங்கள் வீட்டின் அருகாலில் வெகு காலம் மாட்டி வைத்திருந்தோம். பின்பு, சிறு குளவிகள் கூடி கட்டி அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அதைக் கழட்டி வீசிவிட்டோம். இப்படியே பழைய ஞாபகங்களில் மூழ்கியிருந்த போது கண்கள் சுழலத் தொடங்கியது. மதிய நேரத்தில் தூங்க மனமில்லாமல், டிவி யைப் போட்டேன். சமீபத்திய அரசியல் அதிர்ச்சியினைத் தாங்க முடியாமல் எல்லா செய்தி சேனலிலும் கதறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றாக மாத்தி கொண்டே வந்து கடைசியில் மதுரை பஸ் ஸ்டாண்டில் வந்து லேண்ட் ஆனேன்.. அங்கே விஷால் ஒரு கும்பலிடம் “நானும் மதுரைக்காரன் தாண்டா என மதுரை மொழியின் கலப்பே இல்லாமல் சுத்தமான தமிழில் கத்திக்கொண்டிருந்தான். இவன விட என் நண்பன் கண்ணன் நல்ல மதுரை பாஷை பேசுவான் என வேறு ஒரு சேனலுக்கு தாவிய கணத்தில் தோன்றியது நாம் செல்லும் ஊர்களின் நினைவாகப் பொருட்களுடன் சேர்த்து அந்த ஊரின் மொழியையும் எடுத்து வந்து நம் ஊர் எங்கும் பரப்பி விட்டிருக்கிறோம் என்று. கண்ணன், எங்கள் ஊர் தான். வேலை நிமித்தமாக மதுரை சென்ற பிறகு, எங்களிடம் பேசியதெல்லாம் மதுரை மொழிதான்.
எங்கள் ஊரில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற சொற்ப பேர்களில் எங்கள் எதிர்த்த வீட்டு மாமாவும் ஒருவர். அவர் விடுமுறைக்கு வந்தபோது, வலிக்கு தடவும், நல்ல வாசனை கொண்ட, பச்சை நிற தைலம் நிரம்பிய ஒரு சிறிய குப்பியைப் பரிசளித்தார். ‘இத வலிச்சா தான் தடவணும், சும்மாலாம் தடவக்கூடாது’ என அப்பா அதை வாங்கி பெட்டியில் வைத்துவிட்டார். ஒரு தலைவலியோ, உடல் வலியோ, ஜலதோஷமோ எப்போ வந்து தொலைக்கும் என தேவுடு காக்கத் தொடங்கினோம். துபாய் மாமா, கைலியைக் கணுக்காலுக்கு மேல் ஏற்றிக்கட்டி, வெள்ளை நிறத்தில் மிக மெல்லிய, நீண்ட சட்டை அணிந்து அவர் நடந்து சென்ற பின்னும் இரண்டு நிமிடத்துக்கு சென்ட் வாசனை அந்த தெருவெங்கும் வீசும். யாரிடமும் அதிகம் பேசாத அவர், தெருவில் செல்லும் முஸ்லீம் நண்பர்களைப் பார்த்து “ஸலாம் அலைக்கும்” என ஆரம்பித்து வம்படியாக உருதுவில் பேசுவார். பேசி முடித்து, முஸ்லீம் நண்பர் சென்ற பின் அருகில் இருக்கும் யாரையாவது பார்த்துச் சொல்லுவார், ‘பாய்க்கு அவ்வளவா உருது வரல., சும்மா நம்ம ஊரு உருதுல பேசறாப்ல.. நான் பேசினது பாதி புரியல அவருக்கு’ எனப் பெருமை அடிப்பார். இதைக் கேட்டு கொண்டிருக்கும் அந்த நபரும் ‘ஆமா.. ஆமா.. துபாய்ல பேசுறதெல்லாம் சுத்தமான உருதுல்ல..!! இங்க யாருக்கு அது தெரியும்!!’ எனப் பஞ்சாயத்து யூனியனில் விதை உளுந்து வாங்கப்போன மாதிரி, சுத்தத்துக்கு சர்ட்டிஃபிகேட் கொடுப்பார். இந்த சீன் முடியும் போது முகத்தில் அவ்வளவு பெருமிதத்துடன் துபாய் நாட்டு அரசர் போல போல நடந்து செல்வார் மாமா. அது அவர் அங்கிருந்து எடுத்து வந்த மொழி தந்த பெருமிதம்.
சக்திமான் நாடகத்திலிருந்து ஷகிலா படத்துக்கு அசுர வேகத்தில் ஓடி விட்ட காலத்தின் பயணத்தில் நாங்கள் எல்லோரும் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வயதில் இருந்தோம். என் சில நணபர்கள் ஏற்கனவே வேலைக்கு வெளியூர் சென்றிருந்தார்கள். அதில் என் பள்ளி தோழன் அருண் திருநெல்வேலி, தூத்துக்குடி என மாறி மாறி வேலை செய்துவிட்டு ஒரு வருடம் கழித்து ஊருக்கு வந்தவன், பெட்டிக்கடை நடத்திவந்த குமார் அண்ணனிடம் கோல்ட் பில்டர் வாங்கிவிட்டு, ‘என்ன அண்ணாச்சி..!! சொகமா இருக்கீயளா..?’ என்றான். இவன் எதோ, அவரைக் கிண்டல் செய்கிறான் என நினைத்து அவர் பதில் ஏதும் சொல்லலாமல் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ‘உம்.. உம் ..’ என்றார். ‘அட.. ஏன் கோவிக்கிறிய.? பாசமா தானே கேட்டேன்..’ எனச் சொல்லிவிட்டு அவன் அதே மொழி நடையில் தொடர்ந்து பேச ஆரம்பித்த பிறகுதான், அவனது ஒரு வருட வரலாற்றைக் கேட்டறிந்தார். அதன் பிறகு நாங்களும் அவனை அண்ணாச்சி என கூப்பிட ஆரம்பித்தோம்.. அவன் இல்லாத நேரத்திலும் அவனைப் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அந்த மொழி நடையிலேயே பேசிக்கொண்டோம். அந்த மொழி அவனது அடையாளம் ஆகிப்போனது. நண்பன் காளிதாஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையின் மருந்தகத்தில், மருந்தாளுநராக வேலைக்கு சேர்த்திருந்தான். அவன் விடுப்பில் ஊருக்கு வந்த நாட்களில் பேசும்போது எக்கச்சக்க “ங்” குகளை போட்டு தாளித்தான். இதில் கடுப்பான நான், ‘ஏன்டா அந்த ஊருக்குப் போய் நம்ம ஊரு பாஷலாம் பேச மாட்டியா? ஓவர் படமா இருக்கு..?!!!’ என்றேன். ‘நம்ம ஊர் பாஷ தான.., நல்லா பேசலாம். பேசிட்டு ஒரு தெருவைக் கூட தாண்ட முடியாது. அடி பொளந்துடுவானோ..!!’ என்றான். என்ன இருந்தாலும் அவனது மரியாதையான பேச்சைக் கேட்க நன்றாகத்தான் இருந்தது.
இப்படியாகப் பல மொழி நடையின் பரிச்சயம் கிடைத்து, எங்களின் பேச்சுமொழியே எல்லாம் கலந்த ஒரு தினுசான மொழி நடைக்கு டியூன் ஆகி இருந்தது . அது ஒரு மாதிரி ஜாலியாகத்தான் இருந்தது, எதுவரை என்றால்..? தொலைத்தொடர்பில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக, அதிகரித்துவிட்ட செல்போன் பயன்பாட்டை ஈடு செய்யும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்ட நோக்கியா தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து இப்போது விடுமுறைக்கு வீடு திரும்பிருக்கும், எங்கள் பள்ளி தோழனும், சமீபத்தில் அதிக பழக்கமில்லாத, சென்னைவாசியாகிவிட்ட, பாலமுருகன், மணி அண்ணன் டீ கடையில் நின்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து தூரத்தில் இருந்து கையசைத்து, நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்க்கும் பரவசத்தில் இருந்த எங்கள் அருகில் வந்து, ‘ஓ**… எல்லாரும் எப்படிடா இருக்கீங்க..? ஓ**’ என கேக்கும் வரை.
மூன்றே வார்த்தைகள் கொண்ட ஒரு வாக்கியத்தில், முன்னொட்டும், பின்னொட்டுமாக இரண்டு ஓ**களை சேர்த்து ஐந்து வார்த்தைகள் கொண்ட வாக்கியமாக மாற்றிய மிகப் பெரிய சாதனையின் அதீதப் பெருமிதம் அவன் முகத்தில் மின்னியது. எங்கள் ஊரில் எத்தனையோ கெட்ட வார்த்தைகள் இருந்தது. ஆனால் இதை கேட்கும் போது கொஞ்சம் வலுவான கெட்ட வார்த்தை போல இருந்தது. சொன்னவனுக்கு ஒரு திருப்தியையும், கேட்டவனுக்குப் பெரிய அவமானத்தையும் சட்டென பரிசளிக்கக்கூடிய இந்த வார்த்தையின் ஒலியின் அளவு சிறிய மாத்திரை தான் என்றாலும் ஏப்பம் விடும் போதெல்லாம் இம்சிக்கக்கூடிய ஒரு கொடும் நாற்றம் கொண்ட கசப்பு மாத்திரையாக இருந்தது. அருகில் நின்ற குமாரின் வாயிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு இழுப்பு இழுத்தவன், ‘ஓ**.. இன்னும் கோல்ட் பில்டர் தான் குடிக்கிறியா..? ஓ**.., போய் ஒரு கிங்ஸ் வாங்கிட்டு வாடா.., காசு நான் தரேன்’ என ஐம்பது ருபாய் நோட்டை எடுத்து நீட்டும் போது முறைத்த குமாரிடம், முபாரக் லேசாகக் கண்ணைக் காட்டினானான்.
கிங்ஸ் உடன் டீயும் குடித்து முடித்து அவன் பேசிக்கொண்டிருந்த அரை மணிநேரமும் ஆயிரத்தி சொச்சம் ஓ** போட்டு ஒரு லிம்கா சாதனையே படைத்திருந்தான். கடைசியாக, ‘ஓ** இன்னும் மூணு நாள் ஊர்லதான் இருப்பேன். எங்கப் போனாலும் போன் அடிங்க மச்சான்’, என்று சொல்லிவிட்டு பாதி தூரம் சென்றவன் திரும்ப வந்து, ‘ஓ** உங்கள நம்ப முடியாது, எல்லார் போன் நம்பரும் குடுங்க என கேட்டு வாங்கிக்கொண்டு, நான் போன் பண்ணி ப்ரோக்ராம் சொல்றேன், எல்லாரும் சேர்ந்து செமயா என்ஜாய் பண்றோம். ஓ** எவனாவது போன் எடுக்கல, ஓ** காண்டாயிடுவேன்’ எனச் சொல்லிவிட்டு சென்றான். அதை அவன் செய்திருக்க வேண்டாம். செய்துவிட்டான். என்ன செய்வது..? அடுத்த ரெண்டாவது நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என அவனுக்கு மட்டுமல்ல, யாருக்குத்தான் தெரியும்..?
காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி. எல்லா புது படங்களும் இரண்டு மாதத்திற்குள் எங்கள் ஊரின் திரையரங்கத்திற்கு வந்துவிடும் அளவிற்கு ரொம்பவும் பின்தங்கிய ஊராகவும் இல்லாமல் அதே சமயம் நகரமும் அல்லாத ஒரு நடுத்தரமான ஊர். இங்கேயே வளர்ந்து, படித்து, ஊரை விட்டுப் போக மனமில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டிருந்த புதிய தலைமுறை இளவட்டங்களில் நானும் ஒருவன். காசு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்ளும், இல்லையென்றால் அதைப்பற்றி கேட்காத, மணி அண்ணன் டீக்கடை தான் நாங்கள் கூடும் இடம். வெளி ஊரில் வேலை பார்க்கும் எங்கள் நண்பர்கள் ஊருக்கு வரும் சமயம் அவர்களிடம எங்களுக்கும் எதாவது வேலை பார்த்து தரும் படி மிகுந்த அக்கறையுடன் சிபாரிசு செய்துகொண்டிருக்கும் போதே ஒரு ஐந்நூறு ரூபாயை எடுத்து நீட்டி ‘அவனுங்க பாக்கியையும் எடுத்துக்கங்க அண்ணே’ என்பான் நண்பன்.. ‘நல்லது தம்பி, ஆனா நான் இதுக்காக சொல்லல, ஊருக்குள்ளே இருந்தா தேவை இல்லாத பிரச்னைலாம் வரும், அதுவும் இல்லாம இதான சம்பாரிக்கிற வயசு’ என்று சந்தோஷமாகச் சில்லறை பாக்கியைக் கொடுத்து அந்தக் கணக்கை முடிப்பார். ‘மாப்ள அண்ணன் சொன்ன மாதிரி எங்களுக்கும் உன் கம்பெனி லேயே ஒரு வேலை பாரேன்’ எனக் கேட்டால், ‘ஏன்,..? நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா,’ என்றவுடன் லேசாக மாறும் என் முகத்தைக் கண்டு , ‘அதெல்லாம் உனக்குச் சரியாய் வராது மாப்ள.., கஷ்டம். அதுக்காகச் சொல்றேன் எனச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்யும் போது சொல்வான், ‘டீ குடிக்கறதைக் கொறைங்கடா.!!’
இப்படியாக நெருங்கிய நண்பர்களே சர்வ ஜாக்கிரதையா டீல் செய்யும் எங்களிடம் புதிதாக நெருக்கமாகி இருந்தான் நண்பன் பாலமுருகன்.. அதாவது ஓ** பாலமுருகன். சென்னையின் மொழியையும், நாகரீகத்தையும் வம்படியாக எங்கள் ஊரின் தெருக்களில் சிதறவிட்டு கொண்டிருந்தான். அதீத வெள்ளை நிறத்தில் இருக்கும் அவன், ஒரு கை வைக்காத டைட்டான ஒரு பனியனும் அரைக்கால் டௌசரும் போட்டு கொண்டு கவாஸாகி பாக்ஸர் இல் சினிமா ஹீரோ போல் (அப்படி நினைத்துக் கொண்டு!!) வந்து மணி அண்ணன் டீ கடைக்கு வந்து இறங்கினான்.
எங்களுடன் இருந்த அரை மணி நேரமும் ஓ** மழையில் எங்களைக் குளிப்பாட்டி முடித்துவிட்டு போகும் போது, ‘மாப்ள இன்னைக்குச் சாயங்காலம் லால்பேட்டை போயி பரோட்டா சாப்பிடலாமா’ என்றவனிடம், ‘நீ காசு கொடுத்தா சிதம்பரம் போயி கூட சாப்பிடலாம்’ என்றோம். ‘ஓ** திருந்தவே மாட்டீங்கடா . சரி என் ட்ரீட் இன்னைக்கு. போறோம்..,’ எனச் சொல்லிவிட்டு சென்றான். சாயங்காலம் வந்தது. நான், முபாரக், நடராஜ், கிளி, ஊரில் இருந்த வந்திருந்த என் மச்சான் மற்றும் பாலமுருகன் ஆறு பெரும், மொழி ஒரு வலிமையான ஆயுதம் என எங்களுக்கு நிருபித்த அந்த முன்னிரவில் லால்பேட்டை தாவூஸ் ஹோட்டலில் அமர்ந்திருந்தோம்.
ஓசியில் சாப்பிடும் உற்சாகத்தில் சகலவித அயிட்டங்களையும் ஆர்டர் செய்துவிட்டு பேசத் தொடங்கியிருந்தோம். ஒவ்வொரு ஐட்டமாக வர, சாப்பிட்டு கொண்டே பேச்சு தொடர்ந்தது. முபாரக்கும் நட்ராஜும், ஒரு பழைய கொடுக்கல் வாங்கலில் அவர்களை ஏமாற்றியிருந்த செல்போன் கடை வைத்திருக்கும் சரவணனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில், பரோட்டாவைப் பிய்க்கும் போது தெரித்துவிட்ட சால்னாவுக்கு ஒரு ஒ**வையும், லாவகமாக வாயில் போடத்தெரியாமல், மஞ்சள் கரு உடைந்துவிட்ட ஒரு ஆப் பாயிலுக்கு ஒரு ஒ**வையும் வாரி வழங்கி கொண்டிருந்த போது, எங்களுக்குப் பின்னால் முரட்டு போதையில் உட்கார்ந்திருந்த சரவணன் காதில் எக்குத்தப்பாக எதோ விழ, எழுந்து வந்தவன் கொலைவெறியுடன் பொளேர் என விட்டான். நண்பர் ஓ** பாலமுருகனின் வெள்ளை நிற கன்னங்களில் நான்கு விரல்கள் தெரிந்தன. ஒட்டு மொத்த கடையும் அமைதியானது. முபாரக், இவன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தானா என்பது போல் பார்த்தான். அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களை யூகித்து கொண்ட நான் விறு விறு என ஒன்சைடு ஆம்லெட்டைத் தின்ன ஆரம்பித்தேன். பரோட்டா போடுபவர் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்துவிட்டு, பரோட்டாவைத் திருப்பிப் போடத் தொடங்கினார். இதெல்லாம் பார்த்து பழக்கமில்லாத என் மச்சான் மட்டும் விருட்டென எழுந்து சுவற்றோடு சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத பாலமுருகன் அனிச்சை செயலாக உதிர்த்த இன்னொரு ஓ**வை அடுத்தடுத்து அவனது கன்னங்களில் அறையாக இறங்கியது. அவ்வளவுதான், முபாரக், நடராஜும் எழுந்து சரவணனை அடிக்க, ஒரு குட்டி கலவரம் தொடங்கியது. முன்னனுபவம் இல்லாத என் மச்சான் எதற்கென்றே தெரியாமல் கடைக்கு வெளியே கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, நான் இன்னமும் எதோ சாப்பிட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு திரும்ப ஓடி வந்தான். இதற்கு நடுவில், ‘காடை யார் கேட்டது ?’ என சர்வர் கேட்க, ‘பாய் இங்கதான்..,’ எனச் சொன்ன கிளி, ‘மச்சான் எனக்கு கொஞ்சம் மீதி வை’ என்றான். இப்போது கடைக்கு வெளியில் சண்டை மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது. ‘மச்சான் நம்ம பசங்களப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான், நீ என்னடா தின்னுட்டு இருக்க?’ எனப் பதட்டமாகக் கேட்டான். ‘மச்சான். இதெல்லாம் உனக்குப் புதுசு, பேசாம உக்காந்து சாப்பிடு’ என்ற என்னைக் கேவலமாகப் பார்த்துவிட்டுச் சண்டையை விலக்கி விடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தான். நானும் காடையைத் தின்ன தொடங்கியிருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் பின் மண்டையில் விழுந்தது ஒரு அடி. மச்சான் மிகுந்த கோபத்தில் நின்றிருந்தான். ‘அங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்னடா இன்னும் தின்னுட்டு இருக்க கம்னாட்டி’ என்றான்.
இவனைக் கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு என நினைத்துக் கொண்டேன், இருந்தாலும், எல்லா சண்டையிலும் ஆன் தி ஸ்பாட் இல் ஐடியா கொடுக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டபடியால் சண்டை நடக்கும் கடைக்கு வெளியில் வந்தேன். கொஞ்ச நேரம் கூர்ந்து கவனித்து, அந்த சண்டையின் வியூகம் தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் எக்குத் தப்பாக உதை வாங்கி கிட்டத்தட்ட கீழே விழப்போன முபாரக்கைத் தாங்கிப் பிடித்து அந்த ரகசியத்தை அவனிடம் சொன்னேன், “மச்சான் அவன் போதையில சும்மா காட்டுத்தனமா சுத்துறான். நீங்க தான் குறுக்க போயி தேவையில்லாம அடிவாங்கிட்டு வரீங்க”. ‘என்னடா சொல்ற.? அப்ப நான் இங்கயே நிக்குறேன்’ என்றான் மூச்சிரைக்க. அப்படியே நட்ராஜுக்கும் சைகை காட்டினான் முபாரக். சும்மாவே சுத்திக்கொண்டிருந்த சரவணன் கால் தடுமாறி கீழே விழுந்தான் அதே சமயம் , என் மச்சான், முபாரக், நட்ராஜ் இருவரையும் தள்ளிக் கொண்டு வண்டியை நோக்கி ஓடி கொண்டே சொன்னான், ‘மச்சான் இவனுங்கள விட்டுட்டு வந்து உங்களக் கூட்டிட்டு போறேன்.’ ஒரு வழியாகச் சண்டை முடிவுக்கு வந்தது. திரும்ப வந்த என் மச்சான் மற்ற எல்லாரையும் அழைத்துப் போனான். ஊரை அடைந்து எல்லாரும் நடந்து கொண்டே, எப்படி அடித்திருக்க வேண்டும், எப்படி தடுத்திருக்க வேண்டும் என பேசிக் கொண்டே சென்றுகொண்டிருந்த போது பாலமுருகன் சொன்னான், ‘ஓ** 300 ரூவா செலவு பண்ணி ஒழுங்கா சாப்பிட கூட இல்ல.. செம அடி வாங்கிட்டு வந்துட்டோம்.’
‘என்னது காசு குடுத்தியா..?’ என்றான் முபாரக். ‘ஓ** நீங்கலாம் சாப்டா காசு தர மாட்டிங்களா?’ என நக்கலாகக் கேட்ட அவனை இன்னொரு அறை விட்டான் முபாரக். எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி. ‘ஏன்டா அவனை அடிச்ச..?’ என்ற எங்களைப் பார்த்து ‘அடிக்கிறதா..? சாவடிக்கணும் அவனை. நாம எவ்ளோ கஷ்டப்பட்டு அடி வாங்குறோம் இது தான் சாக்கு னு எஸ்கேப் ஆகாம அவன்கிட்ட போய் காசு குடுத்துட்டு வந்திருக்கான். ஏன் மச்சான் நாம எத்தனை எடத்துல இதே மாதிரி அடி வாங்கி இருக்கோம், எங்கயாவது காசு குடுத்துருக்கோமா..?’ என எங்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே ஒரு குத்து விட்டான். அந்த குத்தையும் வாங்கி கொண்டு, ‘என்னது..? அப்ப எல்லா இடத்துலயும் அடி வாங்கிட்டு தான் வாரீங்களா..? அப்ப நானா தான் வந்து மாட்டிகிட்டனா..?’ என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது முபாரக்கோடு நட்ராஜும் சேர்ந்து கொண்டான். ‘சும்மா இருந்தவனை “ஓ**” ன்னு சொல்லி கடுப்பு ஏத்தி எங்களுக்கு அடி வாங்கி குடுத்துட்டு, எங்களைக் கிண்டல் வேற பண்றியா..?’ என அவன் பங்குக்கு ரெண்டு விட்டான். முபாரக் திட்டவட்டமாக சொன்னான். ‘மச்சான் எனக்கு தெரியாது, இவன் அந்த 300 ரூபாயை நாளைக்கு எனக்குத் தரணும். இல்லனா இவன் திரும்பி சென்னைக்கு போக மாட்டான். நீதான் பொறுப்பு’ என மிகவும் சீரியஸாகச் சொன்னான். இது என்னடா புது பஞ்சாயத்தா இருக்கு என கேட்க வாய் வர வந்துவிட்டது. ரொம்ப கோவமா இருக்கான், வேணாம் என விட்டுவிட்டேன்.
ஒரு வழியாக எல்லா கலவரத்தையும் முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தோம். மறுநாள் காலை என் மச்சானை பஸ் ஏத்திவிட சென்றிருந்த போது, சென்னை பஸ் ஏற பாலமுருகன் வந்திருந்தான். என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்தவன், ‘மச்சான் காலைல சரவணனைப் பார்த்துக் கேட்டேன். நான் ஓ** சொன்னதுனால தான் அவனுக்குக் கோபம் வந்து அடிச்சேன் னு சொன்னான். அத சொன்ன கோவமா வருது.?’ என்றான். ‘ஆமாம் மச்சான்..’, என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துட்டு 300 ரூபாயை எடுத்து என் சட்டை பையில் வைத்து விட்டு சொன்னான் ‘அவன்கிட்ட குடுத்திடு, இது அவன் மிரட்டுனதுக்கு இல்ல.., என்னாலதான எல்லாரும் அடி வாங்கினீங்க.. அதுக்குத்தான்…’, என அவன் சொன்ன அதே வினாடியில் எதேச்சையாக கேட்டேன் ‘அடுத்து எப்போ மச்சான் வருவ..? வந்தா மறக்காம போன் பண்ணு.’ என்றேன். கொஞ்சம்கூட யோசிக்காமல் கோபமாக சொன்னான், ‘போடாங்கோ…!!’ என ஆரம்பித்து சற்று நிதானித்து எங்கள் ஊரில் நாங்கள் காலம் காலமாக புழங்கும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னான். இந்தி திணிப்புக்கு எதிராக மீம் போட்டு லைக் வாங்கிய முகநூல் போராளி போல் பெருமையாக இருந்தது. ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. இந்தி திணிப்புக்கு எதிராக நாம் பொங்குவது எல்லாம் யாரும் தூண்டி விட்டு வருவது இல்லை. அது இயல்பாகவே நம்முள் இருக்கிறது. மொழி வலியது. நாம் பொருளின் வழி மட்டுமல்ல, மொழியின் வழியும் நினைவுகளைக் கடத்துகிறோம்.
- மனோ அழகன்
அருமை வாழ்த்துக்கள்