\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிலுவையின் காதல் கடிதம்

Filed in கதை, வார வெளியீடு by on April 8, 2018 1 Comment

அன்புள்ள நித்ரா,

என்றும் உன் நலன் விரும்பும் சிலுவை எழுதுவது. நலமாக இருப்பாய் என நம்புகிறேன்.  இந்தக் காலத்தில் கடிதம் எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். இப்போது கூட நீ இதை ஒரு சின்ன சிரிப்போடு தான் படித்துக்கொண்டிருப்பாய். இதை படித்து முடிக்கும் போது உன் கருத்து மாற வாய்ப்பிருக்கிறது புகைப்படம் போல கடிதமும் காலத்தின் ஆவணம். அன்பின் வார்த்தைகளை, பிரியங்களை, அக்கறை கலந்த கண்டிப்புகளைத்  தாங்கி வரும் கடிதங்கள் எந்தக் காலத்திலும் தொலையப்போவதில்லை இல்லையா?  நமக்கு மிகப் பிடித்தமானவர்களைக் கடிதம் மூலமாக எப்போதும் சுமந்து அலைவது ஒரு சுகம் தான். நாங்கள் எங்கள் கிராமத்திலிருந்து வேறு ஊருக்கு நிரந்தமாகக் குடி மாறி போகையில் நாங்கள் சேகரித்து வைத்த கடிதங்களைத் தான் முதலில் பத்திரப்படுத்தி எடுத்து வைத்தோம். அதில் என் தாத்தாவின் ஆசீர்வாதங்கள் இருந்தன, என் அத்தையின் பொருளாதாரத் தேவைகளும், புகுந்த வீட்டின் கஷ்டங்களும் இருந்தன, பிரிந்துவிட்ட உறவின் மன்னிப்பு இருந்தது. விடுமுறைக்காக அழைப்பு இருந்தது, சின்ன சின்ன பாராட்டுகள் இருந்தன, பொங்கல் வாழ்த்துக்களும், தீபாவளிக்கான சீர்வரிசை பணம் அனுப்பிய நகலும்  இருந்தது. இன்னும் என்ன என்னவோ..? இந்த கடிதமும் நீ படிக்கும் போதெல்லாம் ஒரு புன்னகையை, மனதிற்கு நெகிழ்ச்சியை, அன்பின் மிகுதியில் வரும் ஒரு துளி கண்ணீரை உனக்கு தரும் என நம்புகிறேன். நான் பார்த்த மனிதர்களில் மிகவும் அன்பான ஒரு உயிர் நீ. உன் அன்பிலும் அக்கரையிலும் ஒரு நேர்மை இருக்கிறது. நீ யாருக்காகவும் நடிக்கவில்லை. யாரையும் வெறுக்கவும் இல்லை. உன்னால் அது முடியாது என நினைக்கிறேன். இந்த நல்ல குணங்களுக்காவே உனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய நான் இறைவனைப் பிராத்திக்கிறேன். எனினும்  உனக்குச் சொல்ல என்னிடம் ஒன்று உண்டு. மரித்துவிட்ட உன் காதலுக்காக நீ அழுதுகொண்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது நித்ரா.  உன்னை வேண்டாம் எனச் சொல்லி சென்ற ஒரு துர்பாக்கியசாலிக்காக இன்னும் நீ அழுது கொண்டிருப்பது நீ உனக்கு செய்யும் பிழை என உனக்கு தோன்றவில்லையா.?

     ஒரு பாழ் வீட்டின் கதவை இன்னும் எத்தனை நாள் தட்டி கொண்டிருப்பாய் நித்ரா.?அந்த வீட்டில்  இருந்த ஒரே ஒரு வௌவாலும் நேற்றே வெளியேறிவிட்டது. இறந்த காலத்தின் ஒட்டடைகள் அந்த வீடு முழுவதும் பரவி இருக்கிறது. நீ வளர்த்த ரோஜா செடிகள் கருகி பல நாட்கள் ஆகின்றன. அங்கு மீதம் இருப்பது,  நீரற்ற மீன் தொட்டியில் இரண்டு கூடுகள். உலர்ந்துவிட்ட உன் அன்பின் வார்த்தைகள் இங்கு யார் செவியிலும் சென்று சேரவில்லை. இத்தனை சத்தமாய் நீ அழுவதைக் கேட்க அந்த வீட்டுக்குள் யாரும் இருக்கவில்லை. கேட்க யாருமற்ற இந்த வெளியில் உன் காதலைத் தனியே சொல்லிப் புலம்பியபடி இருக்கிறாய் ஒரு பைத்தியக்காரியைப் போல. உன் துயர ஓலம் கேட்டு நான் இறங்கி வந்திருக்கிறேன். நன்றாக ஆராய்ந்து விட்டேன். பல ஆண்டுகள் ஓடியதால் இன்னும் காயாமல் இருக்கும் புழக்கடை நீரில் நெளியும் ஒரு புழுவையும், கதவு திறக்க வேண்டி காத்திருக்கும் உன்னையும் தவிர இங்கு யாரும் இல்லை.

அன்பு, காதல், நட்பு எல்லாம் நம் வாழ்வின் அன்றாடத் தேவைகள். அது இல்லாமல்  வாழவே  முடியாது. எதோ ஒரு வடிவில் அது  திரும்பத் திரும்ப நம்மிடம் வந்துகொண்டேயிருக்கும்.  அன்பும் காதலும் தான் முக்கியமே தவிர அதைச் சுமந்து வரும் உருவம் இல்லை. எந்த அலையும் கரையில் மோதி சாகவில்லை, அது மீண்டும் மீண்டும் எதோ ஒன்றாகத் திரும்பத் திரும்ப வருகிறது.

பௌர்ணமியில் நனைய பயந்தோடியவனைப் பற்றி நிலவுக்கு என்ன கவலை.?! இது உன் வெளிச்சம், உன் குளிர்ச்சி, உன் கருணை, உன் காதல், கொடுப்பது தான் உன் குணம்.  உனக்கான காதல் என்பது  வெளியில் இல்லை உனக்குள் தான் இருக்கிறது. நீ கொடுக்கும் அளவை விட அதிகமாகத் திரும்பப் பெறுவாய். கவலை கொள்ளாதே. எல்லோரையும் பார்த்து சிரிக்கும் குழந்தை தன்னைப் பார்த்துப் பதிலுக்குச் சிரிக்காதவர்களை நினைத்து கவலையாபடுகிறது? சிரிப்பவர்களுக்கு இன்னொரு சிரிப்பைப் பரிசளிக்கிறது. அந்த நிமிடத்தை அவர்களுக்கு  இன்னும் அழகாக்குகிறது.., இல்லையா..? உனக்கான காதல் தொலைவில் இல்லை. அது உனக்கு மிக அருகில் இருக்கிறது. சில சமயங்களில், தூரத்தில் தெரியும் கானல் நீருக்காகக் கனவு காணும் நேரத்தில், நம் முதுகுக்குப் பின்னால் இருக்கும் ஒரு அன்பின் ஊற்றைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.  

      வா… என்னோடு நட. . நீ முன்பொரு நாள் நட்ட செடி ஒன்று, மரமாகிவிட்டது. நீ ஆட வசதியாக உனக்கென ஒரு ஊஞ்சல் கட்டிக்கொள். நான் உனக்குப் புது ரோஜா செடிகளைத் தருகிறேன். உனக்கே உனக்கென ஒரு நந்தவனம் உருவாக்கு. அதில் பூக்கும் ரோஜாக்களில்  தெரியும் உன் காதலின் வண்ணங்கள். நீ அன்பின் வழி செல்லும் தடங்களில் எல்லாம் பூக்கட்டும் ஆயிரமாயிரம் ரோஜாக்கள்.

      புரிகிறது.. நான் யார் ?என்று தானே கேட்கிறாய். என் தீரா அன்பின் பக்கங்களை எழுதி எழுதி தீர்பவன். எனக்கு இன்னதென்று பெயரில்லை. அவரவர்க்கு என்ன விருப்பமோ அதுவாகவே இருந்துவிடுவேன். கவிஞனாக, கடவுளாக, மனிதனாக, எதிரியாக , பெரும்பாலும் பைத்தியக்காரனாக.

அவர்கள் கல் என்றார்கள்.

நான் சிலை என்றேன்.

அவர்கள் மூங்கில் காடு என்றார்கள்.

நான் புல்லாங்குழல் தோட்டம் என்றேன்.

அவர்கள் புயல் காற்று என்றார்கள்.

நான் கட்டற்ற இசை என்றேன்.

அவர்கள் பேரழிவு என்றார்கள்.

நான் புதிய தொடக்கம் என்றேன்.

நீரூற்றுவதை நிறுத்துங்கள், மைல் கல் வளராது என்றேன்.

எங்கள் உழைப்பைத் திருடப் பார்க்கிறாய், ஓடி விடு என்றார்கள்.

அவர்கள் பாவம் என மனதுக்குள் அழுதேன்.

நான் பைத்தியக்காரன் என சத்தமாகச் சிரித்தார்கள்.

அதை விடு. அது பிழையாக எழுதப்பட்ட பெருங்கதை. நான் இங்கு வந்தது,  நடக்க பயப்படும் உனக்கு சிறகுகள் கட்டி விடுவதற்காக. இந்த அடர்ந்த இருளில் வழிதேடும் உனக்காகத் தருகிறேன் என் மின்மினிப் பூச்சிகளை. நீ வானேறி வரும் நாளில் உன்னை எழுத நான் காத்திருப்பேன். இதோ தீராத மை நிரப்பி வான் பார்த்து அமர்ந்திருக்கிறேன். நிலவாக இல்லையென்றாலும் ஒரு நட்சத்திரமாகவேணும் வந்துவிடு நித்ரா!!

                                                                                                                                                                         பிரியங்களுடன்,

                                                                                                                                                                         சிலுவை

பின்குறிப்பு: நீ மகிழ்ந்திருக்கும் நாளில் இந்தக் கடிதம் படிக்க வேண்டிய  அவசியம் இருக்காது. நீ உடைந்து விடும் நாளொன்றிலோ, தளர்ந்துவிடும் தருணத்திலோ, பேரன்பின் கைகளில் முகம் புதைத்து உறங்க ஏங்கும் நாளிலோ இதை மறக்காமல் படி, ஏதோவொரு நொடியில் என் இருப்பை, அருகாமையை நீ உணர்வாய். எனினும் அப்படி ஒரு தருணம் உனக்கு வாய்க்காமல் இருப்பதற்காக என் பிரார்த்தனைகள்.

*****

மேற்கண்ட உனக்கான என் கடிதத்தை நீ பெரிதும் விரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது நித்ரா. இதை படித்து விட்டு ஒரு குழந்தையைப் போல நீ குதூகலித்தது எனக்கொரு பரவசத்தைத் தந்தது. இருப்பினும், மனது நீ  ஒரு கோழையென சத்தமாக என்னைப் பார்த்துச் சிரிப்பது என்னைத் தூங்க விடவில்லை நித்ரா. நான் உனக்கு எழுத நினைத்த கடிதம் இன்னும் முடியவில்லை. சொல்லப்போனால் இனிதான் தொடங்குகிறது. என் வாழ்வின் முதல் காதல் கடிதம் இப்படியாக அமைந்ததில்  பெருவருத்தம் எனக்கு. உனக்கான கடிதத்தில் உள்ள வாக்கியங்களை விட, நீக்கிய வாக்கியங்கள் தான் அதிகம். நாம் பழகிய இத்தனை நாட்களில், உன் மீது எத்தனையோ முறை சுடு சொற்களை வீசியிருக்கிறேன். நீ அறியாமல் செய்த பிழைகளுக்காக உன்னைக் கடுமையாகத்  திட்டியிருக்கிறேன். ஒரு பெண்ணைத் திட்டும் போது இல்லாத தயக்கமும் , கூச்சமும், அவள் மீதான அன்பை வெளிப்படுத்தும் போது வருவது எனக்கு மட்டும் தானா? உன்னைத் திட்டும் போது நான் தவறு செய்கிறேன் எனத் தோன்றவில்லை. ஆனால் உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது எனச் சொல்ல ஏன் அவ்வளவு பயமாகயிருந்தது எனத் தெரியவில்லை. அன்பு செய்வதோ, காதலிப்பதோ, பெருங்குற்றம் என என் மூளையில் எழுதியது யார் ?  எனக்குத் தெரிந்த காதல் என்பது உன் துயரங்களைக் கழுவுவது. எந்தத் தகுதியின்மைக்காக உன் முதல் காதல் முறிந்ததோ , எது ஒன்றை நீ அடையவே முடியாது என நீ அழுது தீர்த்தாயோ அதை உனக்கு கொடுப்பது. நீ மிதித்து மேலேறும் ஏணியின் படிகளில் என் இதயம் துடிப்பதை ஒரு முறை கூட நீ உணரவில்லையா.?

          நான் தான் சொல்லி இருக்க வேண்டும் நித்ரா. ஆனால் உன் முதல்  காதலின் முறிவுக்குக் காரணம், அவன் எதிர்பார்த்த தகுதி உன்னிடம் இல்லாதது என நீ புலம்பியது என்னைக் குழப்பி விட்டது. உன்னை காதலிப்பதற்கும் ஏதேனும் ஒரு தகுதியை நீ எதிர்பார்க்கலாம் என நினைத்து விட்டேன். அந்தத் தகுதி  இல்லாத பட்சத்தில் நீ என் காதலை நிராகரிக்கலாம். அந்த நிராகரிப்பை தாங்கிக்கொள்ள நான் ஒருநாளும் தயாராக இருப்பேனா எனத் தெரியவில்லை. பத்து வயதில் பள்ளிக்குள் நுழைந்த பாம்பை விரட்டி சென்று அடித்த போது என்னை வீரன் எனச்  சொன்னார்கள், நான் நம்பிவிட்டேன். கல்லூரி காலத்தில் நண்பனின் காதலியிடம் சென்று அவன் காதலை எடுத்து சொல்லி ஒரு துவக்கம் கொடுத்தேன். ‘செம தில்லு டா உனக்கு’ என்றான். பெருமையாகயிருந்தது . பின்பொரு நாள் ஒரு காதல் ஜோடியைச்  சேர்த்து வைத்து முடித்தபின் செம அடி வாங்கியபோதும் , நண்பர்கள் சொன்னார்கள் , ‘நீ வீரன் மச்சி’ என்று. வலியையும் தாண்டி அந்த வார்த்தை ஆழமாக மனதில் பதிந்தது. ஆனால் காதலைக் கண்களில் தேக்கி ஒரு நொடி கூட உன் கண்களைச் சந்திக்க முடியாமல் போன கணம், என் வீரத்திற்கான வரையறையை மாற்றியது. எத்தனையோ முறை நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறு எதையோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன்.   இதெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் நீ உயர்வாக நினைத்தவர்கள் உன்னிடம் காதல் மொழி பேசியதால் உண்டான உன் மனதின் காயத்தைத் திறந்து காட்டியது என் தயக்கத்தை இன்னும் அதிகமாக்கியது. ஒரு நாளும் நான் இன்னொரு தழும்பாக மாறி விடக்கூடாது என கவனமாக இருக்கிறேன். அதனால் இந்த வலியை, நானே சுமக்கிறேன். உனக்கான என் கடிதத்தைப் படித்துவிட்டு, என்னை உன் ஏசுநாதராக பார்ப்பதாகச் சொன்னது, என் தோளில் நிஜமாகவே ஒரு சிலுவையை ஏற்றிவிட்டுருப்பதின் வலியை நீ அறிவாயா..? மீண்டும் உயிர்த்தெழ முடியாத உன் ஏசுவாகிய இந்தச் சிலுவை இறப்பதற்கு முன்  யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் உன் மீதான என் காதலை, மாசில்லா அன்பை. ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன் நித்ரா.!!

 

-மனோ அழகன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Mca Fareed says:

    அருமையான கற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad