ஆறப்போட்ட தோசைக்கல்
’சூடாகிய தோசைக் கல்லை ஆறவிடக்கூடாது’ என்று சொன்னவர் விஜி, மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி. மருத்துவர் ஜானகிராமனும் மருத்துவர் சம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கையை வெற்றிகரமாக நிறுவியது எல்லோரும் அறிந்ததே. உலக மக்களிடையே ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஏற்படுத்திய எழுச்சியை நேரில் கண்ட விஜி சொன்னார், ’இந்த எழுச்சி அலை இருக்கும்போதே ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையைத் தொடங்கிவிடவேண்டும்.’
அதன்படியே ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினர் கனடா தமிழ் பேரவையுடன் இணைந்து ரொறொன்ரோ தமிழ் இருக்கையை 25 யூன் 2018 அன்று தொடக்கிவைத்தனர். மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து ரொறொன்ரோவுக்கு வருகை தந்து நன்கொடை நல்கி விழாவைச் சிறப்பித்தனர். இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன்; நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம்.
கனடிய தேசிய கீதத்தை ’செந்தூரா’ பாடல் புகழ் லக்ஷ்மி பாட, அதைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தை இசைத்தார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனவிருந்து அளித்த பின்னர், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ் பற்றாளர்கள் மேடையிலே தங்கள் நன்கொடைகளைப் பல்கலைக்கழகத்திடம் கையளித்ததைத் தொடர்ந்து விருந்துபசாரம் நடைபெற்றது. ஏறக்குறைய 600,000 கனடிய டொலர்கள் (இந்திய ரூ 3.12 கோடி) சேர்ந்தது அமைப்பாளர்களே எதிர்பார்க்காத ஒன்று. பல்கலைக்கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் பேசியபோது ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 600,000 கனடிய டொலர்கள் திரட்டியது கனடிய வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை என மக்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே கூறினார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி தோசைக்கல் ஆறவில்லை என்பதை நிரூபித்தது. தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.
அ.முத்துலிங்கம்
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்