ஆசையில் ஒரு கடிதம்
வேகமாக வண்டியைத் திருப்பி வீடு நோக்கிச் செலுத்தினாள் கயல். வண்டியின் கைச் சக்கரத்திற்கு பின் மணி ஆறு எனக் காட்டியது . சாலையில் கூட்ட நெரிசல். ஏதோ கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருப்பதால் இரு பகுதிகள் ஒன்றாக ஆக்கப்பட்டு இருந்தன. மெல்ல ஊர்ந்த வண்டிகளுக்குள் கயலும் தன் வண்டியைச் செலுத்தினாள்.
பாட்டு கேட்பதற்கு மனம் செல்லவில்லை. பரபரவென்ற வாழ்க்கை வெறுப்பாக இருந்தது. சின்னக் குருவி, பசுமையான தோட்டம், அம்மா கைகள், அழகிய மருதாணி, கருவேப்பிலைச் செடிகள், புதிதாகப் பறித்த கருவேப்பிலை இலைகளில் கொஞ்சம் புளி, தேங்காய் வைத்து, அரைத்த துவையல். சுத்தமான பசு நெய், வெண்மையான சாதத்தில் , நெய், துவையல் , வண்டி ஓட்டுவதை மறந்து ஒரு கணம் கண் மூடி விட்டாள். மனம் எங்கோ பறந்தது.
பின்னே வண்டியில் “பீப் பீப் ” என்று சத்தம்.
” ஹப்பா ஏதோ தலை போகிற அவசரம் போல. ஒரே ஒரு அங்குலம் நகர வில்லை என்று பீப் அடிக்க வேண்டுமோ?”. பின்னல் நின்ற வண்டியை மனதிற்குள் திட்டிய படி மெல்ல நகர்ந்தாள்.
வீட்டுக்குப் போனதும் செய்ய வேண்டிய வேலைகள் மனதில் வந்து போனது . அதுவும் கோடை விடுமுறை வேறு. பதிமூன்று வயது அபினவ் நாள் முழுவதும் என்ன செய்தானோ?. ராஜிவ் வேறு “வர்க் ப்ரம் ஹோம்”(Work from home), காலையிலேயே எழுந்து செய்த மதிய உணவை உண்டார்களா ? இல்லை வேறு ஏதாவது செய்தார்களா ? காலை முழுவதும் அவளுக்கு இருந்த வேலை பளுவுடன், வீட்டிற்குச் சென்றவுடன் செய்ய வேண்டிய வேலை பளு மலை போல தெரிந்தது.
ஒரு மாதிரியாக வண்டியை ஒட்டி, வீட்டின் சின்ன தெருவிற்க்குள் வந்து வாசலில் வண்டியைத் திருப்பினாள். காலையில் வைத்து விட்டு போன குப்பைத் தொட்டிகள் இரண்டும் வண்டியை ஏற்ற விடாமல் நடுவில் நின்றது.
‘ஹ்ம்ம்’ என்ற ஒரு பெருமூச்சு விட்டபடி வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று குப்பைத் தொட்டிகளை இழுத்து, வீட்டின் கராஜ் பகுதியில் வைத்து விட்டு, வண்டியை உள்ளே கொண்டு சென்றாள்.
வீட்டின் உள்ளறைக்கு வரும் பொழுதே பீட்சா மணம் வந்தது . ஒரு பக்கம் சமையல் அறை, இன்னொரு பக்கம் பெரிய நீண்ட லிவிங் ரூம். அதற்கு அருகில் உள்ள ஒரு சிறிய அலுவலக அறையில் ராஜிவ் வேலை செய்து கொண்டிருந்தான். அபினவ் நடு அறையில் “போர்ட் நைட்” விளையாடிக் கொண்டிருந்தான். சமையல் அறையில் ஒரே களேபரம். காலையில் செய்து வைத்து விட்டுப் போன சமையல் பாத்திரங்கள் உணவோடு ஒரு பக்கம், வாங்கி வைத்த பீட்சா மற்றோரு பக்கம் திறந்த படி கிடந்தது. கழுவ வேண்டிய பாத்திரங்கள் ஒரு பக்கம் குவிந்து கிடந்தன. டிஷ்வாஷரில் பாத்திரங்கள் வேறு. அபினவ் பந்து, லெகோ , புத்தகங்கள் என அறை முழுவதும் வீசி எறிந்திருந்தான்.
கோபம், அழுகை இரண்டும் மாறி மாறி வந்தது கயலுக்கு. நாள் முழுக்க வீட்டிலிருந்த ராஜீவ் கொஞ்சம் எடுத்து வைத்து இருக்க கூடாதா என்று கோபம் பொங்கியது. உள்ளே இருந்து செய்கை மூலம் கை காட்டி, அலுவலக அழைப்பிலிருப்பதைக் குறிப்பாகச் சொன்னான் ராஜீவ்.
கோபம் இன்னும் கிளறியது .
“எப்பப் பாரு கால் “.”என்னடா வாழ்க்கை இது?” எனத் தோன்றியது.
அம்மாவின் ஞாபகம் வந்தது. நாங்கள் நான்கு பேர். எப்படி எங்களை வளர்த்தாய்? அப்பொழுது கூட்டு குடும்பம் கூட. எப்பொழுதும் சமையல், வந்து போகும் சொந்தங்கள், அத்தனையும் எந்தவித முகச் சிணுங்கலும் இன்றி, எப்படித் தான் சமாளித்தாயோ? அதிலேயும் தோட்டம், தையல் என்று எப்பொழுதும் ஏதோ செய்து கொண்டே இருப்பாய்.
அம்மாவின் நினைவு தெம்பையும், அழுகையும் ஒரு சேரக் கொடுத்தது. எந்த ஒரு வேலையும் செய்யாமல் மாடி அறைக்குச் சென்றாள். உள்ளே குடைந்து ஒரு பழைய டயரியைத் தேடி எடுத்தாள். அம்மா கைப்பட எழுதிய சமையல் குறிப்புகள். பாட்டியின் கைப் பக்குவக் குறிப்புகள்.
ஒரு சில மாலை வேளைகளில் வீட்டின் பின் பக்கம், சிமெண்ட் தளத்தில் பாட்டி சொல்லச் சொல்ல அம்மா எழுதுவதும், சில முறை பாட்டியே எழுதி வைக்கும் சமையல் குறிப்புகள்.
அம்மா தலையைப் பின்னும் பொழுது கூட பாட்டி ஒரு முறை எழுதிக் கொண்டு இருந்தார்.
“உனக்கு தான் நல்லா சமைக்க தெரியுமே பாட்டி. அப்புறம் யாருக்கு எழுதி வைக்கறே?”
“உனக்கு, இல்ல உங்கக்காக்கு, இல்ல உங்க அண்ணனுங்க ரெண்டு பேரையும் கட்டிக்க போற பொண்ணுங்களுக்கு “.
“அதென்ன சமையல், குறிப்பு எல்லாம் பெண்களுக்குன்னு எழுதி வைக்கறது . அண்ணன்களுக்கு இல்லையா? . நாளைக்கு அவங்க ரெண்டு பேரும் சமைக்கக் கூடாதா ?”
வாயாடும் இவளிடம், ” சரி அவங்க சமைச்சா அவங்களுக்கு” எனச் சிரித்து விட்டுத் தருவாள்.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்டி இறந்த பின், பாட்டியின் அலமாரியில் இருந்து எடுத்த டயரி மற்றும் பாட்டியின் சேலை இரண்டையும் இவளோடு கொண்டு வந்திருந்தாள்.
மெல்ல டயரியை முகர்ந்து பார்த்தாள். பழைய புத்தக வாடை ஏதோ ஒரு வித ஆறுதல் தந்தது. உலகத்தின் ஒரு கோடிக்கு வந்த பிறகும், பாட்டியினுடைய கையெழுத்தைப் பார்க்கும் பொழுது ரத்தமும் சதையுமாக பாட்டியையும் , அம்மாவையும் அணைத்தாற் போல தோன்றியது.
அலமாரியிலிருந்து அடியில் இருந்த சேலையை எடுத்தாள். சேலையில் ஈரம் விழுந்த பொழுது தான் அழுது கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது.
தொழில் நுட்பத்தால் உலகம் சுருங்கினாலும், சிந்தனைகளும், கவனங்களும் என்னவோ சிதறிப் போயின . ஒரே சமயத்தில் பல பணிகள் செய்யும் பழக்கம் பெருகிப் போக, நிதானித்து ஒரு நிமிடம் நிற்பது தவறு போலவோ, ஆக்கமற்றதாகவோ பார்க்கப்படுகிறது.
விரல் நுனியில் இன்று அம்மாவிடம் பேசி விட முடியும் தான் ஆனாலும் கைகளால் எழுதி வைத்த எத்தனையோ விஷயங்கள் மனதில் நின்று நிலைக்கின்றன . ஆங்கிலத்தில் “மஸ்சில் மெமரி ” என்று சொல்லப்படும் சதைக்கே உரிய ஒரு நினைவு. படிப்பிற்காகட்டும் , உணர்விற்காகட்டும், கையெழுத்து செய்யும் தாக்கம், கீ போர்டோ , டெஸ்ட்டிங்கோ செய்வது இல்லை.
“ஒரு வேளை நான் தான் பழைய பஞ்சாங்கமோ என்னவோ.?”
நிறைய கண்ணீர் துளிகள் சேலையை வெகுவாக நனைத்திருக்கவே , அதை வெளியில் சிறிது நேரம் காய வைக்கத் தொங்கவிட்டாள். மீண்டும் குறிப்புப் புத்தகம் கையில் வைத்து பாட்டியின், அம்மாவின், எழுத்துகளைத் தடவினாள். வீட்டிற்கு உள்ளே வரும் பொழுது இருந்த கோபங்களும் , ஆற்றாமைகளும் விலகிப் போய்க் கொண்டிருந்தது.
உலகம் ஆயிரம் மாறினாலும், சில தாக்கங்கள் மாறாது தான். ஒரு சிறிய அலமாரியில் இருந்தபடி, பூனைக்கு டயரியில் எழுதிய “Anne Frank” எவ்வளவு பெரிய தூண்டுதல்?
சிறையில் இருந்தபடி நேரு, இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான் எத்துணை உத்வேகம் தருபவை.
கடிதங்களும், கையெழுத்தும் ஒரு வித இனம்புரியாத நெருக்கத்தைத் தருகின்றன. அதை எந்த ஒரு தொழில் நுட்பமோ நிச்சயம் வெல்ல முடியாது. ஒரு தலைமுறைக்கு அல்ல பல தலைமுறைகளுக்கும் சிந்தனைக்கும் வித்தாக இருக்கக் கூடியவை.
மெல்ல புத்தகக் குறிப்பை மூடி விட்டு, கீழே சென்று அபினவை அணைத்து, அவனுடைய நாளை பற்றி விசாரித்து, ஒரு புது தெம்போடு வீட்டைச் சுத்தம் செய்தாள். இரவு படுக்கச் செல்லும் முன் ஒரு புத்தகத்தை எடுத்தபடி எழுதத் தொடங்கினாள்
“அன்புள்ள அம்மாவிற்கு ஆசையில் ஒரு கடிதம்.”
ராஜீவ் அருகில் “ஹே என்ன பண்ற ? இந்த காலத்தில யாரு லெட்டர் எழுதறாங்க. பேசாம ஃபோன்ல கூப்பிட்டு பேசேன்“
“வெறும் கடிதம் இல்ல ராஜிவ். அடுத்த தலைமுறைக்கு என் சிந்தனைச் சொத்து.”
-லட்சுமி சுப்பு
Very nice. Realistic.
Very nicely constructed.
Awesome story line, the author brings value to the small actions which mostly are regarded as silly great job bringing it in a short story format!