துணுக்குத் தொகுப்பு
வட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது.
ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. கிரேக்க மொழியில் இப்பெயருக்கு, சிறிய பறவை என்று பொருள். ஆம், ரீங்காரச் சிட்டு பொதுவாக மூன்று முதல் ஐந்து அங்குல நீளமுடையவை. கியூபா நாட்டில் காணப்படும் தேனீ ரீங்காரச் சிட்டு இரண்டு அங்குல நீளமும் இரண்டு கிராம் எடையும் மட்டுமே கொண்டது.
மற்ற பறவைகளுக்கு இல்லாத திறனாக ரீங்காரச் சிட்டு, இடம் வலது, நேர்குத்தாக மேல் கீழ் என அனைத்துத் திசைகளிலும் பறக்கக் கூடியது. குறிப்பாக பின்னுக்குப் பறக்கக்கூடியத் திறன் கொண்ட ஒரே பறவை ரீங்காரச்சிட்டு தான். அதுமட்டுமல்லாது பூக்களில் தேனை உண்ணும்பொழுது கூட பறந்துகொண்டே இருக்குமாம் இப்பறவை. எதையாவது பற்றிக்கொள்ள மட்டுமே கால்களைப் பயன்படுத்தும் இச்சிட்டு கால்களால் நடப்பதில்லை.
கூர்மையான, நீளமான அலகுடையது ரீங்காரச் சிட்டு. மனிதர்கள் ‘ஸ்ட்ரா’ எனும் உறிஞ்சு குழலைப் பயன்படுத்துவது போல தனது நாக்கை நீட்டி விரித்து பூவுக்குள் செலுத்தித் தேனை உறிஞ்சுகிறது. பறந்து கொண்டேயிருப்பதால் செலவாகும் எரிசக்திக்காக தனது உடல் எடையை விட அதிக அளவில் உண்ணும் வழக்கமுடையது. தேன், சிறு பூச்சிகள், தாவரச் சாறு ஆகியவை ரீங்காரச் சிட்டின் முதன்மை உணவுகள்.
குளிர்காலங்களில். தென் அமெரிக்காவுக்குப் பறந்து செல்லும் ரீங்காரப் பறவைகள், மார்ச் மாத துவக்கத்தில் வடக்கு நோக்கி வருகின்றன. நூற்றுக்கும் அதிகமான ரீங்காரச் சிட்டு வகைகள் இருந்தாலும், பத்து பனிரெண்டு வகைச் சிட்டுகள் மட்டுமே அமெரிக்காவின் வட பகுதியிலும், கனடாவிலும் வந்து வாழ்கின்றன.
தங்களது இனம், பிரதேசம் என எல்லைகள் வகுத்து வாழும் ரீங்காரச் சிட்டுகள், இந்த எல்லைக்குள் வேறுவகை பறவைகளை அண்ட விடுவதில்லை. பருந்து, கழுகு போன்ற பெரிய பறவைகளைக் கூட விரட்டியடித்து விடும் குணம் கொண்டவை இச்சிட்டுகள்.
ஒரு காலத்தில் இறகுகளுக்காகக் கொல்லப்பட்டு வந்த ரீங்காரச் சிட்டுகள் தற்போதைய புவிவெப்ப மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், வாழ்விடமின்றித் திணறி வருகின்றன. இச்சிட்டுக்களைப் பாதுகாக்க, பல தன்னார்வல அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவது ஆறுதல் அளிக்கக்கூடியச் செய்தி.
– சாந்தா சம்பத்
அருமை இதுவரை நான் அறிந்திராத தகவல். நன்றி