எசப்பாட்டு
எசப்பாட்டு என்பது ஒரு கருத்தினை விவாதிப்பது போல இரு தரப்பினர் பாடும் பாடல் வடிவம். மிகப் பழமையான பாடல் முறைகளில் இதுவும் ஒன்று. கிராமப்புறங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும், கடுமையான வேலை செய்பவர்களும் உடல் அசதி தெரியாமல் இருக்க இவ்வகை பாடல்களைப் பாடுவார்கள்.
ஒருவர் பாடலின் ஒரு பகுதியைப் பாடியதும், அதற்குப் பதிலளிப்பது போல ஏளனம் செய்தோ, பதில் கொடுக்கும் வகையிலோ மற்றவர்கள் பாடுவார்கள். லாவணி பாடல் என்பதும் எசப்பாட்டின் ஒரு வகை.
திரைப்பாடல்களிலும் இது கையாளப்பட்டிருக்கிறது. ’கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’, ‘பூங்காற்று திரும்புமா’, ‘என்னம்மா கண்ணு செளக்கியமா’ போன்ற பாடல்களை எடுத்துக் காட்டாக சொல்லலாம்.
காதல் என்னும் உணர்வு அனைவருக்கும் பொதுவான ஒன்று. நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் இந்த உணர்விற்கு ஆட்பட்டிருக்கிறோம். அந்த உணர்வினை வெளிப்படுத்துவதற்கு காலங்காலமாக தமிழ்க் கவிதைகள் சிறந்த ஒரு ஊடகமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன; இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; இனியும் செயல்படும். தமிழ் மொழியின் தனித்துவங்களில் இதுவும் ஒன்று. மனதில் உண்டாகும் அந்த அனுபவத்தை உரைக்கத் தமிழ் மொழியை விட வேறொரு மொழி இவ்வளவு சிறப்பாகத் துணை நிற்காது என்றே கூறலாம்.
அத்தகைய மனிதகுலத்துக்குப் பொதுவான ஒரு உணர்வினை வெளிப்படுத்தி, இங்கே நம் வாசகர்களுக்காக ‘காதல்’ என்னும் தலைப்பில் இருவர் எசப்பாட்டு எழுதியுள்ளார்கள். இந்தத் தலைப்பு நம் வாசகர்களாகிய உங்களைக் கவரும் அதே நேரத்தில் உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளை எசப்பாட்டாக பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். உங்கள் பார்வையில் காதலின் புரிதலை, உணர்வினை எழுதுங்கள்.
இலக்கண வரைமுறைகள், கட்டுப்பாடுகள் போன்ற எல்லைகளைக் கடந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். கவிதை புனைய இந்த வாய்ப்பு சிறந்த படிக்கல்லாக அமையும்.
எண்ணங்களை எழுத்தாக வடிப்பீர் ; எழில்மிகு எசப்பாட்டாக வழங்குவீர்!
– ஆசிரியர்.
காதல்
மது :
கன்னக் குழியையும் கண்ணின் ஒளியையும்
கன்னல் மொழியையும் கண்ணி வீச்சையும்
கருணைப் பார்வையும் கழுத்துக் கோட்டையும்
கருத்துத் தெளிவையும் கழுகுக் கவனமும்
கணக்காய்க் கண்டு கருத்தில் கொண்டதும்
கன்னி அவளில் கலந்தேன் இரண்டற!!!
ரவி :
கன்னக் கதுப்பில் கவிழ்க்கும் குழிபறித்து
கருணைப் பார்வையெனச் சுரணைதனை யிழந்து
கருத்து பரிமாற்றமது கடுகாய்ச் சிறுக்க
கணக்காய்க் கொண்டது பிணக்காய்ச் சிணுங்க
கன்னிப் போவதந்த கனத்த உறவு!
மது :
கன்னியைக் கண்டதும் காதலில் விழுந்தேன்
காதலில் தேர்ந்ததும் கனவினில் நுழைந்தேன்
கனவினில் நனைந்ததும் கருத்தினில் கலந்தேன்
கருத்தினில் இணைந்ததும் கல்யாணம் விழைந்தேன்
கல்யாணம் மறுத்ததும் கவலையில் தோய்ந்தேன்
கவலைகள் பிறந்ததும் கன்னியை மாற்றினேன்
கன்னியைக் கண்டதும் காதலில் விழுந்தேன்
ரவி :
கன்னியைக் கண்டதும் காதலில் விழுந்தாயோ?
காதலது துவண்டதும் கண்ணியம் மறந்தாயோ?
கண்ணியம் மாண்டதும் கருவண்டெனப் பறந்தாயோ?
கருவண்டாய் ஆனதும் களித்தேன் குடித்தாயோ?
களித்தேன் தீர்ந்ததும் கடிமலர் துறந்தாயோ?
கடிமலர் கசந்ததும் கள்ளிப்பூ நுகர்ந்தாயோ?
கள்ளிப்பூ காய்ந்ததும் கண்டதில் அமர்ந்தாயோ?
கண்டதை ரசித்தாயோ! கொண்டதைச் சுவைத்தாயோ?
மது :
கண்டதை ரசிப்பதும் கொண்டதை ருசிப்பதும்
காதலில் கலந்திட்ட காண்கிலாப் பேரின்பம்
கள்ளிப்பூ காய்ந்திடிலாம், கருத்த சிகையிட்ட
காகிதப்பூ கருகுவதுண்டோ? – கன்னியவள் களைகண்டு
கண்ணியம் மறப்பது கட்டிளங்காளை இலக்கணம்
கருத்தாய் விளங்கிடக் காதல் போற்றும்
கவிமிகு நெஞ்சங்களைக் கேட்டுக் களிப்புறலாம்.
விதிமுறையற்ற காதல் எல்லாம்
விவேகமற்றது மட்டுமின்றி
வினை முடிந்ததும் வேதனை
விரையும் தவறின்றி
காளைக்கு அழகு உண்மை
காதல் அதுவன்றி
காமம் கொண்ட காதல்
கறைபடியும் தவறின்றி
விதிமுறை என்பது விவகாரமானது
விருப்பத்திற் கேற்ப விவரிப்பதானது
பகர்ந்த காதலது உண்மையானது
படர்ந்து விரிகையில் மென்மையானது
கன்னியின் களையுருவம் கவர்ச்சியானது
சொன்னதால் காதலது காமமாகாது
சந்தர்ப்பம் முடித்தால் சாதலாகாது
வந்ததை வரிப்பது அல்லதாகாது!!!
ராமன் புகட்டியது மறந்தனை
மனது சொன்னதை மறைத்தனை
உருக்கண்டு தடம்மாறித் தவித்தனை
தவறினால் கிடைக்கும் தண்டனை
சொர்க்கத்தில் நிச்சயித்தவள் உன்நங்கை
களிப்புற இன்புறுவாள் நன்மங்கை
மற்றவ ரெல்லாம் உன்தங்கை
உனக்கு வேண்டாம் சிவகங்கை!!
சிவனின் கங்கையும் அவனின் மங்கையும்
சீவன் முடிந்ததும் செல்லும் சொர்க்கமும்
புவனம் முழுதும் புழங்கும் மனிதனை
கவனம் குன்றாமற் காத்திட்ட கற்பனை!!
பலதார மணத்தைச் சரியெனப் பகன்றிலை
பலமான காதலது தடம்மாறிப் போனதெனில்
நிலைமாறி அழிந்திடும் நிதானமற்ற இளைஞனிடம்
நிறைவான வாழ்வுண்டென்ற நிதர்சனமுணர்த்தும் மறுகாதல்!!!
கவிதையாய்க் காதலிப்போரைத் துதிக்கிறேன்!
காதலுக்காகக் கவிபுனைவோரை எதிர்க்கிறேன்!
காதலித்துக் கரைகண்டோரை மதிக்கிறேன்!
கண்டதும் காதலிப்போரைச் சபிக்கிறேன்!
கட்டழகு இல்லாக் கறுப்பழகியை காதலி!
கண்ணழகு இல்லாக் கருத்தழகியை காதலி!
கருங்கூந்தல் இல்லாக் கட்டைகுழலியை காதலி!
கவர்ச்சி இல்லாக் கம்பீரத்தைக் காதலி!
தங்கமில்லாளை காதலி! தஞ்சம்தந்து காதலி!
தரிசில்லாளலை காதலி! தலையில்வைத்து காதலி!
தன்னலமில்லாளை காதலி! தடையறுத்து காதலி!
தந்திரமில்லாளை காதலி! தமிழுரைத்து காதலி!
கவிதையாய்க் காதலித்தவனும் காதலுக்காய் கவிபுனைவான்!
கண்டதும் காதலிப்பவனும் காதலித்துக் கரைகண்டவனாவான்!
கருப்பிலும் குருப்பழகு கண்டவன் காதலனாவான்!
கம்பீரத்திலும் கவர்ச்சி காண்பவன் காவியமாவான்!
நெற்றிப்பரப்பில் கூந்தல் முடிகள் கோலம்போடுவதாய்
சுற்றிப் பறக்கும் பரட்டையை வர்ணிப்பான்
தெற்றுப் பல்லது தெளிவாய்த் தெரிந்தும்
பற்றினால் முல்லையொன்று தள்ளியுள்ளதாய் முழங்குவான்
கூறிய குறைகள் அத்தனை இருந்தும்
சீரிய சிற்பம் அவளென்று கருதும்
வீரிய வாலிபக் காதலர் பலரும்
பாரினில் வாழும் யதார்த்தம் பகர்வேன்!!!
காதல் என்பது மருந்தோ மதுவோ
சாதல் இல்லா பளிங்கோ இரவியோ
காதல் உணர்வு கண்னிலா குருடோ
மாதை மதிக்கும் மட்டிலா மகிழ்வோ
காணுதல் இல்லா கன்னிய உணர்வை
காணும் அழகால் பிரிப்பது சரியோ?
காதலை மதிக்க தங்கத்தை அளப்பதோ?
காதல் கணக்கிட கணிதக் கலையோ?
கன்னியால் போர்பல இங்கே கண்டோம்!
காதலால் கவிப்போர் புரிந்தே திளைத்தோம்!
காதல் என்பது மதுவுக்கு மருந்து
காதல் இரவியில் மிளிரும் பளிங்கு
காதல் உணர்வு குருடற்குக் கண்கள்
காதல் உயர்வு மதித்திடும் பெண்கள்
காதல் ஒளியதில் தங்கம் மங்கும்
காதல் துல்லியத்தில் கணக்கும் பிணக்கும்
காதல் புரிந்த கவியின் அற்புதம்
காதல் இந்தத் தமிழின் சொற்பதம்!!!
பூவின் மணம் நுகர்ந்து ரசிப்பவருண்டு!
பூசியிருக்கும் நிறம் கண்டு களிப்பவருண்டு!
மண்பிள்ளையார் வேண்டும் எருக்கின் நிலையே
பெண்பிள்ளையர் பலரின் வாழ்வில் இன்று!
யதார்த்தம் பகலும் சித்தாந்த நண்பரே
பெற்றோர்நம் ஜாதகம் சாதகமன்று என்றனரே!
சுற்றார்தம் பந்தமென்று உரைத்திட, இப்பிறவியிலே
பிராப்தம் இல்லையென விலகுவோர் அனேகரே!
அழகும், அறிவும் குறையாத குன்றானால்
அன்பும், பரிவும் குன்றினால் குறையில்லை – நீ
இனித்திடும் இளையோர் என்றுரைத்த குருத்துகள்
இடித்திடும் நீயாநானாவில் எடுத்துரைத்த கருத்துகள்!
>> மது வெங்கடராஜன் says:
>> May 30, 2013 at 7:41 PM
>> சந்தர்ப்பம் முடித்தால் சாதலாகாது
>> வந்ததை வரிப்பது அல்லதாகாது!!!
கிட்டுமோ என எட்டிப் பார்த்து
கிட்டே வந்து உயிரெனப் புகழ்ந்துரைத்து
கிட்டாக் கனியென்றதும் புளிக்குமென விடுத்து
கிடைக்குமடுத்த கனியே உயிரென நினைத்து
கிடக்கும் காதலும் ஒரு காதலா?
காதல் என்பது கடவுளில்லை – அதுபோயின்
சாதல் என்பது சாமர்த்தியமில்லை
காலம் மாற்றாக் காயமுமில்லை – அதுபோயின்
ஞாலம் போற்றுமற்றொன்று விந்தையுமில்லை
சொல்ல நினைத்தது கனிச் சுவையில்லை
சொல்லி முடித்தது தனிப் பெருந்தன்மை
அற்றது செய்வதால் அழிவது உண்மை
மற்றொரு காதல் அற்றது இல்லை!!!
ஆதலினால் காதல் செய்வீர்
பனிப்பூக்களை