\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …

நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் …

vanka-free-ya-pesalam_620x857போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ ன்னு சொல்லிட்ச்சி!

நாலாவது தான் படிக்குது …

‘கண்ணு … செல்ஃபோனை வெச்சிக்கினு நீ இன்னா பண்ண போற? இன்னியும் ஒரு ரெண்டு மூணு வர்ஷம் போட்டும் .. அப்பால வாங்கித் தரேன்’னு சொன்னேம்பா…

சரேல்னு எழுந்திக்கிச்சி .. ‘ஐ ஹேட் யூ’னு சொல்ட்டு ரூம்புக்குள்ளாற போயிட்டு கதவ டமால்னு அட்ச்சி மூடிட்ச்சி. அவ்ளோ தான் … நாலு நாளா ஒன்னியும் பேசல என்னாண்ட …

எனுக்கு எங்க நைனாவாண்ட ஒரு ஜியாமென்ட்ரி (அத தான் இப்போ இருக்கிற புள்ளிங்கோ இங்கிலீஸ்ல ஜியோமெட்ரினு சொல்துங்க .. குடாக்குங்க) பாக்ஸ் கேட்டது தான் கவனம் வந்திச்சி.. ஈஸிசேர்ல உக்காந்துக்கினு பேப்பர் படிச்சிகினு இர்ந்தாரு… ஒரு நாலடி எட்ட நின்னுகினு

‘நைனா … வாத்தியாரு ஒரு ஜியாமென்ட்ரி பாக்ஸ் கேட்டாரு ..’

‘ஏன் அவராண்ட இல்லியாமா?’

‘அவருக்கில்லை நைனா .. எனுக்கு..’

‘ஆமா .. இப்போ .. எத்தனாவது படிக்கிறே நீ?’

‘ஓம்பதாவது நைனா ..’
‘ஓம்பதாவதிலேயே இதெல்லாம் கேக்குறானுங்களா இப்ப .. உங்கண்ணனுக்கு பன்னெண்டாவது படிக்கும் போதோ … பதிமூனாவது படிக்கும் போதோ தானே வாங்கி குட்த்தேன்?’

‘அதெல்லாம் எப்பவோ மாறிட்ச்சி ..’

‘அவனுங்களா நெனச்சா மாத்திடறானுங்க .. சரி சரி … உங்கண்ணான்ட வாங்கினு போ!’

‘புதுசு வோணும் நைனா …’

‘புதுசா? அது என்னா ஒரு மட்டப் பலகை, ரெண்டு மூலப் பலகை ஒரு அர வட்டம்லாம் இருக்கும்.. அந்தப் பொட்டி தானே? அதுல என்னா மாறிட்ச்சினு புதுசு கேக்குறானுங்கோ?’

‘தெர்ல … வாத்தியாரு தான் புதுசு வாங்கியார சொன்னாரு ..’

‘எல்லாம் பழச எட்த்துகினு போ… ஒன்னும் சொல்ல மாட்டாரு ..’

‘புதுசு வாங்கிக் குடு நைனா ..’

‘புதுசு இன்னா சும்மா வந்துடும்னு நெனச்சியா? உங்கண்ணனுக்கு வாங்கும் போது சொளையா ஆறே முக்கால் ரூபா கொட்த்தேன் .. இப்ப எங்கியாச்சும் ஒம்பது பத்து ரூபா இருக்கும் .. எங்க போறது துட்டுக்கு?’

‘நைனா .. புதுசு வாங்கிக் குடு நைனா ..’

‘அடி செருப்பால … அப்போலேருந்து சொல்லிக்கினு இருக்கேன் .. புதுசு வேணுமாம் புதுசு … பழச எட்த்துகினு போயி படிக்கிறதுனா, படி .. இல்லேன்னா ஸ்கூலுக்கு போவ தேவல ..’

‘புள்ள படிக்கிறதுக்கு தானே கேக்குது .. வாங்கிக் குட்த்தா இன்னாவாம்?’ னு அம்மா சொல்லிச்சி ..

‘ஆமாண்டி .. இன்னிக்கு இந்த பொட்டி கேப்பான் .. நாளைக்கு வேறேதுனா பொட்டி கேப்பான் … எவன் காச அவுக்கிறது? எருமைக் கடா வயசாவுது இல்ல .. துட்டோட அருமை தெரிதாடி அவனுக்கு .. வளத்து வெச்சிக்கிறா பாரு… ரோட்டு வெளக்கில பட்ச்சி பெரியாளு ஆனவங்கள பத்தி கேள்விப்பட்டதில்ல நீ? அந்த மாரி படிக்கிற புள்ள பழய பொட்டி இர்ந்தாலும் படிக்கும் .. பொட்டியே இல்லனாலும் படிக்கும் .. படிக்கிறதா வேனாவான்னு அவனே முடிவு பண்ணிக்கட்டும் .. நீ சோத்த போடு.’

அப்படி அவரு சொன்ன பிற்பாடு பழய ஜியாமென்ட்ரி பாக்ஸ் எட்த்துகினு போயி தான் பட்ச்சேன் …இன்னா, வட்டம் போடும் போதெல்லாம் நம்ப காம்பஸு லைட்டா தொகுரும் .. வட்டம் கொஞ்சம் முட்ட மாரி வரும் .. அப்படி இப்படினு மூனு வர்சம் சமாள்ச்சுட்டேன்.. அப்புறம் இஞ்சினியரிங்கு படிக்க சொல்லோ நைனாக்கே தோணுச்சி போல.. ‘இத்தினி நாள் பைக்குள்ள பொட்டிய வெச்சி எடுத்துக்கினு போன … இப்போ பெரிய மேஸ்திரி கணக்கா இம்மாம் பெரிய மட்டப் பலகை எட்துகினு போற.. உள்ளார வைக்கிற மாரி புதுசு ஒன்னு வாங்கிக்கோன்னு’ பதினஞ்சு ரூபா குடுத்தாரு.
அஞ்சாவது நாளும் புள்ள பேசாம பூடவே கொஞ்சம் டர்ராயிட்ச்சி . . சர்தான் போவட்டும்னு ஒரு செல்ஃபோன வாங்கிக் குட்த்துட்டேன்…

‘பொண்ணு கேக்கங்காட்டியும் அப்டியே பாசம் பொத்துகினு வந்துட்ச்சா? இப்ப அந்த போனை வச்சிகினு அது இன்னான்னா பண்ணுது, யாரோட பேசுதுன்னு நாம ரோந்து வரணும்.. எங்கனா மூள இருக்குதா உனக்கு?’ ன்னு என் சம்சாரம் என்ன கேக்குது.

கேக்குது என்ன கேக்குது? திட்டுது.

vanka-free-ya-pesalam_2_620x816கூட வேல செய்யற தொரமாருங்க கிட்ட கேட்டா உங்கப்பன் செஞ்சது தான் ரைட்டுன்றானுங்கோ. இத்த படிக்கிறே நீயே சொல்லு ராசா … நான் ரைட்டா? எங்க நைனா ரைட்டா?

– பாலவாக்கம் பீட்டரு.

ஆலோசனை

பீட்டர் தொடக்கத்திலேயே தன் வயதினை மறைக்க முயன்று தோற்று இருக்கிறார். உண்மையிலேயே அவர் மகள் நாலாவது தான் படிக்கிராறா என்று தெரியவில்லை. இருப்பினும் மிக அருமையான ஒரு கேள்வியினைக் கேட்டிருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ தனது தந்தையுடனான ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு, தனது மகளுடனான நிகழ்வை ஒப்பிட முயன்றிருக்கிறார்.

எனக்கு பீட்டரின் மனைவியும், அலுவலகத்தாரும் சொல்வது சரியென்றே படுகிறது. தற்காலத்தில், ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருந்தாலும் தங்கள் பிள்ளையிடம் சொல்லத் தயங்கும் சொற்கள் – ‘இல்லை’, ‘முடியாது’, ‘கிடையாது’ போன்ற எதிர்மறைச் சொற்கள். இதற்கான காரணங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

முதல் காரணம் – பயம்.

முடியாது, இல்லை போன்றவை பிள்ளையின் மனதை புண்படுத்தும், பிள்ளை வருத்தப்படும் என்கிற பயம். இந்தப் பயத்தைக் காரணங்காட்டி பிள்ளைகள் தங்களுக்குச் சாதகமாகப் பல காரியங்களைச் சாதித்து கொள்கிறார்கள்.

அந்த பயம் பீட்டரின் தந்தைக்கு இல்லை. அதனால் அவருக்கு மகன் மேல் பாசம் இல்லாமல் போய்விடவில்லை. அதே தந்தை பின்னர் பீட்டருக்கு ஜியோமெட்ரி பெட்டி வாங்கிக் கொள்ள பதினைந்து ருபாய் கொடுத்துள்ளார். அங்கே பதினைந்து என்கிற எண்ணை விட அவரது கரிசனத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாம் காரணம் – வசதி

பீட்டரின் தந்தைக்கு உண்மையில் வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்.
பீட்டருக்கு வசதி இருப்பதால், பிள்ளைக்கு செய்யாமல் பணம் சேர்த்து என்ன பயன் என நினைக்கிறார். இதன் மூலம் ‘கேட்டது தந்தையின் வரவுக்குள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கிடைக்கும்’ என்ற மனோபாவத்தை பிள்ளைக்கு வளர்த்திருக்கிறார் பீட்டர். இது பிள்ளைகளுக்கு, ஏமாற்றம் என்ற வாழ்க்கையின் ஒரு பகுதியை அறிமுகமே ஆகாமல் செய்து விடுகிறது. இதனால் பிற்காலத்தில் உளவியல் ரீதியாக பிள்ளை பெரிதும் பாதிக்கப் படும் வாய்ப்புண்டு.

மூன்றாம் காரணம் – தேவை / அவசியம்

மனிதனின் தேவைகள் அதிகம் அவசியமானது மிகக் குறைவு.
எடுத்துக் காட்டாக தண்ணீர் – மனிதனுக்கு அவசியம்.
பாட்டிலில் அடைத்து குளிர்விக்கப்பட்ட தண்ணீர் – மனிதனின் தேவை.
இதை கற்றுக் கொடுக்கத் தவறியுள்ளார் பீட்டர்.

நான்காம் காரணம் – முன்னுதாரணம்
பீட்டரின் தந்தை முடியாது என்று சொல்லி அந்த முடிவில் நின்றார். பீட்டர் வலிந்து சென்று சமாதானம் செய்ய முயன்றுள்ளார். நாளை பிள்ளை வேறு ஏதாவது பொருளைக் கேட்கும் போது இதே முறையைக் கையாளக்கூடும்.
பீட்டரின் தந்தை படிப்பது மகனின் கடமை அதை அவன் எப்படியாவது செய்தாக வேண்டும் என நினைத்தார். ஒன்பதாவது படிக்கும் மாணவனிடம் அவனது தலையெழுத்தை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பை ஒப்படைத்தார்.

பீட்டர், மகள் படித்து தனக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்து என்ன பரிசு வேண்டும் எனத் தானாகவே கேட்டுள்ளார்.

ஐந்தாவது காரணம் – தலைமுறை இடைவெளி

பீட்டரின் பள்ளிப் பருவத்துக்கும், தற்போதைய காலத்துக்குமான இடைவெளியில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. பத்தாண்டுகளில் நூறாண்டுகளில் நடைபெறாத மாற்றத்தைக் கண்டிருக்கிறோம்.

இதற்குப் பீட்டரின் காலத்தில் இல்லாத ஊடகங்கள், விளம்பரங்கள், சூழ்நிலை நிர்பந்தம் என பல காரணங்களைச் சொல்லலாம். இக்காரணங்கள் பிள்ளைகள், பெரியவர்களென அனைவரையும் ஆட்டுவிக்கின்றன. மனிதன் எளிதில் தன்னை இழந்து அறிவியலின் அடிமைாகி வருகிறான். பிள்ளைகளுக்கு முன்னோர்களின் வாழ்வியலையும், அவர்கள் சுதந்திர தனிமனிதர்களாகச் சாதித்ததையும் எடுத்துரைக்க வேண்டும். இக் கருவிகள் இல்லாமலும் வாழ முடியும் என்ற புரிதலை பிள்ளைகளுக்குக் கொண்டு வருவது நல்லது.

பிள்ளைகள் கேட்டதை கேட்டவுடன் வாங்கித் தராமல், அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு நாளும், அன்றைய நாளில் அப்பொருள் இல்லாததால் அவர்களுக்கு என்ன இழப்பு நேர்ந்தது என எழுதச் சொல்லுங்கள். அப்பொருள் எவ்வளவு முக்கியமானது என ஒன்று முதல் பத்துப் புள்ளிகள் கொண்ட அளவீட்டைக் கொடுத்து ஒவ்வொரு நாளும் அந்த புள்ளியை குறித்து வரச் செய்யுங்கள். பிள்ளைகளுக்குக் கணநேரம் தோன்றி மறையும் ஆசைகள் ஒரு வாரத்தில் மறைந்து விடும். அதன் பிறகு அவர்கள் தங்கள் தேவை அளவைக் குறிக்கக் கூட மறந்து விடுவார்கள்.

சிலர் இது பிள்ளைகளை ஏமாற்றுவதாகக் கருதுவார்கள். ஆனால் பிற்காலத்தில் நிறைய ஏமாற்றங்களை இது தவிர்க்க உதவும்.

– சைக்காலஜி சந்தியா.

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Paandi says:

    Peteru appan sonnathu than sari..ah aan..

  2. பீட்டரு. says:

    ஸார் .. பாண்டி ஸார் ..

    நச்சுக்கான்னு சொல்லிக்கிற ஸார் .. சைக்காலஜி சந்தியாக்கே சைக்கிள் ஓட்ட சொல்லிக் குடுப்ப போலக்கீதே நீ .. சர்த்தான் அத்த உடு .. மெய்யாலுமே நம்ப புள்ளிங்களுக்கு எந்த வயசுல கண்ணு செல்போனு வாங்கிக் குடுக்கணும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad