தர்பார் – ஒரு பார்வை
தீபாவளி, பொங்கல் உட்பட எல்லா பண்டிகை நாட்களிலும் நயன்தாரா படம் நிச்சயமாக வந்துவிடுகிறது. நயன்தாராவுக்கு ஜோடியாக அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த் போன்றவர்கள் நடித்து விடுவதால் அவர்களுக்கும் ஒரு ஹிட் படம் அமைந்துவிடுகிறது. இந்த நடிகர்களின் வரிசையில் கமல்ஹாசன் இன்னும் சேரவில்லை. தலைவி பெரிய மனது வைத்து அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமும்கூட. கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புவோம்.
இப்படியாக, இந்த பொங்கலுக்கு லைக்கா நிறுவனம் தயாரிப்பில், எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளி வந்திருக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் படம் தர்பார். படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். எல்லா மாஸ் படங்களையும் போலவே, இந்தப் படத்திற்கும் நேரமின்மையால் மிக குறைந்த நாட்களே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன். குறைவான காட்சிகளே வருகிறார். மற்ற பெரும்பான்மையான காட்சிகளை ரஜினிகாந்தை வைத்து நிரப்பி இருக்கிறார்கள்.
சமூக விரோதிகளால் நாட்டுக்கும் தனக்கும் வரும் சிக்கல்களைக் கையாண்டு கடைசியாக அவர்களை எப்படி ஒழித்து கட்டுகிறார் ஒரு ஆண் காவலதிகாரி என்பதுதான் கதை. இந்தக் கதைக்கு எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார்..? அட.., ஜனங்க தியேட்டர்க்கு வர வேண்டாமா..!! கதை புதுசு இல்லைதான். இருந்தாலும் காட்சிகள், முதல் பாதியிலும் இரண்டாம் பாதியின் கொஞ்ச நேரம் வரையிலும் சுவாரசியமாக, ரசிக்கும்படி இருக்கின்றன. ஒரு கமர்ஷியல், மாஸ் ஹீரோ படத்துக்கான வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்திருக்கிறாரகள், பாட்டோடு சேர்ந்து வரும் சண்டை கட்சி உட்பட.
படத்தில் வில்லன் கதாபாத்திரம் போதை மருந்து கடத்தல், ஆள்கடத்தல், காவல் அதிகாரிகளை உயிரோடு எரித்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும், உலக நாடுகளின் வான்டெட் லிஸ்ட் இல் 27 ஆண்டுகளாக இருக்கும் இந்தியாவின் “பாப்லோ எஸ்கோபார்” என்று சொல்கிறாரகள். காட்டவில்லை, காட்டிய ஓரிரு காட்சிகளிலும் அழுத்தம் இல்லை. இந்த விஷயத்தை அந்த வில்லன் நடிகரிடம் கூட சொன்னார்களா என்றும் தெரியவில்லை. வயதான, பணக்கார, சர்வதேசக் குற்றவாளி, ஏதோ கோவாவிற்கு சுற்றுலா போன கல்லூரி மாணவன் போல ஒரு சட்டையை போட்டு கொண்டு, மேலே இரண்டு பட்டனை திறந்துவிட்டு கொண்டு, திடீரென தோன்றிய “பாடி பில்டர்” ஆசையால், முதல் நாள் ஜிம்முக்கு சென்றவன் நடப்பதை போல தெனாவட்டாக நடக்கிறார். பார்ப்பதற்கு சின்ன புள்ளத்தனமா இருக்கு. வில்லன் கதாபாத்திரம் அழுத்தமாக இல்லையென்றால், ஹீரோ அவனை அழிப்பதும் சுவாரசியம் இல்லாமல் இருக்கும் தானே.? இதனாலேயே ஹீரோவையும் வில்லனையும் மட்டுமே மையமாக வைத்து நகரும் படத்தின் கடைசி 45 நிமிடங்கள் “தேமே” என்று இருக்கிறது.
சரி.., வழக்கமான கதை, சரியாக காட்சிப்படுத்தப்படாத வில்லன் கதாபாத்திரம் அதனால் தொய்வடையும் கிளைமாக்ஸை நோக்கிய கதை நகர்வு, இதெல்லாம் தாண்டி இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான விடை “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்“.
சென்ற படத்தைக் காட்டிலும் 5 வயது குறைந்திருக்கிறார். ஸ்டைல், நடிப்பு நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். இந்தப் படத்தின் ஓப்பனிங் சாங்கைத் தோற்கடிக்க மற்ற மாஸ் ஹீரோக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். யோகி பாபு – ரஜினி கூட்டணியில் வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம். நிவேதா தாமஸின் பாசமான தந்தையாக கரிசனம் காட்டுகிறார். காதல் காட்சிகள் இல்லாததால் நயன்தாராவைக் கொஞ்ச நேரம் ஸ்டாக் (Stalk) செய்கிறார். “ உன் வயசுக்கு நீ இதெல்லாம் பண்ணலாமா..?” என கேட்கும் நயனின் அண்ணனிடம் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார். அட.!! வில்லன்களை பார்வையாலே மிரட்டுகிறார், தவறு செய்யும் சக காவலதிகாரிகளிடம் கர்ஜிக்கிறார். நயன்தாராவிடம் வழிகிறார். யோகிபாபு இவரைக் கிண்டலடிக்கும் போது நகைச்சுவையாக ரியாக்ட் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். மனநிலை தடுமாறிய, வெறியேறிய ரஜினியாக பயமுறுத்துகிறார். இப்படி திரையில் எங்கும் ரஜினி..,! ரஜினி..!! ரஜினி…!!! இத்தனை நாளாக காணாமல் போயிருந்த அந்த பழைய ரஜினி இந்தப் படத்தின் மூலம் அவரின் ரசிகர்களுக்கு விருந்து வைத்து, இன்னும் ரெண்டாயிரம் வருஷத்துக்குத் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
இதற்கிடையில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவங்க தவறி ஃபிரேமுக்குள்ள வந்த மாதிரி நயன்தாரா அப்பப்போ வந்து போறாங்க. ஆனால் அத்தனையும் அழகு.!! அப்புறம் “எதுக்கு ஆரம்பத்துல இவ்ளோ பில்ட்அப்..” என்கிறீர்களா.? இது போல ஒரு மாஸ் ஹீரோ படத்துல ஹீரோயினுக்கும் சமமா முக்கியத்துவம் குடுத்து படம் எடுத்தால் அந்த படம் வேறொரு தளத்தில் இருக்கும் என்பது என் எண்ணம். படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தால் கண்டிப்பாக இன்னும் நல்ல கதையம் அதற்கேற்ற கட்சிகளும் யோசிக்க வேண்டிய கட்டாயம் எழும். ஹீரோவுக்கென்று யோசித்த மசாலா காட்சிகள் முடிந்த பின் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கவேண்டி இருக்காது.நம் ஊரில் நல்ல நடிகைகளுக்கா பஞ்சம்.?! இன்னும் எத்தனை நாள்தான் ஆண்களின் சாகசத்தையே திரையில் பார்த்துக்கொண்டிருப்பது. அப்படியான அதிசயத்தக்க மாற்றம் ஏதேனும் நடந்தால் அதன் பிறகு, நான் முதல் இரண்டு பத்தியில் எழுதியது போல் விமர்சனம் எழுதவேண்டி வரலாம். அதுக்காகத்தான் அந்த கற்பனை..
ரஜினிக்கு மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், “சூப்பர்ஸ்டார்க்கு மகளென ஒரேயடியாக பொங்கி சொதப்பாமல்“, கதையின் தேவைக்கு ஏற்ப அளவாக, அதே சமயம் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். மொத்தத்தில் “இதுபோல ஒரு ரஜினி படம் பார்த்து”, அல்லது “படத்தில் ரஜினியை இதுபோல் பார்த்து” ரொம்ப நாள் ஆயிற்று என நினைக்கும் வகையில் படம், அசல் ரஜினி படமாக, கலக்கலாக வந்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டமாக பார்க்கலாம்.
– மனோ அழகன்
ஜாலியான விமர்சனம்.