அப்பா…
டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான்.
அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும்.
சண்டை என்றால், அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார். அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும்.
அவன் இன்டர்காமைத் தட்டி ரிசப்ஷனைக் கூப்பிட்டான்.
" மாலினி..இஸ் மை டேட் தேர்.?"
" யா..தட் ஜென்ட்டில் மேன் "
" ஒரு பத்து நிமிஷத்தில் டேபிளை ஒழிச்சுட்டு வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்லு
ப்ளீஸ் "
" ஷ்யூர் "
அப்பா எப்போதும் இப்படித்தான். தான் வந்து ரிசப்ஷனில் காத்திருக்கிற விஷயம் கூட யாரிடமும் சொல்லியனுப்ப மாட்டார். யாராவது தாங்களாகவே அவரைத் தெரிந்து கொண்டு " ரகுராம் ஃபாதர் தானே நீங்க ?" என்று கேட்டால் மட்டும் மெலிதாகப் புன்னகைத்து தலையசைப்பார். அப்பவும் கூட " ரகுவைக் கொஞ்சம் வரச் சொல்றீங்களா ப்ளீஸ்.." என்று ...