ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1
இரண்டு வாரங்கள் ஓடியது. ராஜீவ் மற்றுமொரு ஹை ஃப்ரொபைல் வழக்கைப் பார்த்து கொண்டிருந்தாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், சுந்தர் வழக்கில் தனது விசாரணையைத் தொடர்ந்தார். குருசாமி விசாரித்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். சுந்தரின் அலுவலகத்துக்குச் சென்று அவனது நண்பர்கள், அவனது மூத்த அதிகாரிகள் என்று ஒருவரைக் கூட விடாமல் விசாரித்தார். ராஜேந்திரன் அந்த ஏரியாவில் உள்ள ரவுடி, மற்றும் சில சந்தேகப் பேர்வழிகளிடமும் விசாரணை நடத்தினார்..ஒரு விஷயமும் புலப்படவில்லை. சுந்தர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்.. சேமிப்பு கணக்குப் புத்தகத்தில், கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஒரு வருட வரவு செலவுகளைப் பார்த்தபொழுது சந்தேகப்படும் படியாக எந்தப் பரிவர்த்தனையும் இல்லை.
ராஜீவ் சுந்தரது அப்பாவை தனது அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.
கதவைத் தட்டிவிட்டு ராஜேந்திரனும் மணிமாறனும் உள்ளே வந்தனர் . மிகவும் தளர்ந்து போயிருந்தார். வரட்டு தாடி, கண்களில் சோகம், எடை குறைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.
“வணக்கம் சார். நீங்க வரச் சொன்னீர்கள் என்று இன்ஸ்பெக்டர் சொன்னாரு”
“வாங்க சார் உட்காருங்க. உங்களை ஒரு மாசத்துல கூப்பிட்டு பேசுறேன்னு சொன்னேன் இல்ல”
“ரொம்ப நன்றி சார்! இந்த விசாரணையில் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் “
“பரவாயில்லை. கடந்த சில வாரமா, நான் விசாரிச்சதுல எந்த ஒரு தடயமும் கிடைக்கல. உங்க குடும்ப சைடுல ஏதாவது சொத்து விஷயம் கொடுக்கல்-வாங்கல், மாதிரி பிரச்சினை எதாவது இருக்கா?”
“அது மாதிரி எதுவுமே கிடையாது சார். எனக்கு சொந்த காரங்க ரொம்ப கம்மி. பெரிய சொத்து எல்லாம் கிடையாது. என் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனை அவன்தான் பாத்துக்கிட்டான்.”
“ஒவ்வொரு மாசமும், அவன் சம்பளத்திலிருந்து, கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் போறதைப் பார்த்தேன். விசாரிச்சதுல கல்யாணக் கடன் என்று கேள்விப்பட்டேன்.” என்றார் ராஜேந்திரன்.
“நகைக்காக, பணத்துக்காக இல்ல, பையன் சம்மந்தப்பட்ட விஷயத்துக்காக கொலை செய்த மாதிரி தெரியல. மணிமாறன் சார், நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். இந்த கேஸை தீர்க்க ரெண்டு இல்ல மூணு மாசம் கூட ஆகலாம், ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம். சாரி”
“சார் , நீங்கள் இந்த கேஸை பார்த்துகிட்டதே பெரிய விஷயம். அப்ப நான் கிளம்புறேன். ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க ” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மணிமாறன்.
அவர் சென்றவுடன், ராஜீவ் ராஜேந்திரனைப் பார்த்து “எனக்கு என்னமோ அவங்க ஆபீஸ் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என மனசுல படுது “
” எப்படி சார் இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க”
“கதவை திறந்து உள்ளே வந்து இருக்கான். ஐபோன், லேப்டாப் , நகை ஒரு பெரிய விஷயம் கிடையாது.போன் கிட்டத்தட்ட 1 மணி வரைக்கும் ஆக்டிவா இருந்து இருக்கு. அவங்க ஆபீஸ்ல விசாரிச்சப்ப லேப்டாப்பை டிராக் பண்ண முடியல. அந்த பையனோட கேரக்டர் ரொம்ப கிளியரா இருக்கு. பொண்ணு விஷயமோ, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை எதுவும் இல்லை. வாங்க, அவன் ஆபீஸ்ல போய் இன்னொரு முறை விசாரிச்சுட்டு வரலாம்”
ராஜேந்திரனும் ராஜீவும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம், மீண்டும் பல ஊழியர்களை விசாரித்தனர். பெரிதாக ஒரு விஷயமும் கிடைக்கவில்லை மிகுந்த வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.
அன்று திங்கட்கிழமை காலை. வேலைக்குப் போகும் மும்முரத்தில் இருந்தார் ராஜீவ் . அங்கே வந்த நிகிதா அவளது ரிப்போர்ட் கார்டை நீட்டினாள்.
“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஆபிஸுக்குப் போற சமயத்துல ஸ்கூல் ரிப்போர்ட் கார்டுல கையெழுத்து வாங்காதே என்று”
“நல்ல மார்க்கு தான் டாடி, எப்ப கையெழுத்து வாங்கினால் என்ன?” என்றாள் நிகிதா.
“அதுக்காக பார்க்காம கையெழுத்து போடணுமா என்ன?” என்று கேட்டுக்கொண்டே, அவர் அருகில் வந்து அமர்ந்தாள் மீனா.
“என்னடி நல்ல மார்க் என்று சொன்னே. எல்லாம் அறுபது எழுபது ன்னு இருக்கு”
“இங்க கொடுங்க டாடி. நான் பார்க்கிறேன்”
“ஓ மை காட்! இந்த டீச்சர் கிட்ட எத்தனைத் தடவை சொல்றது. நிக்கிதா ராஜேஷ் ரிப்போர்ட்டை எங்கிட்ட கொடுத்துட்டாங்க “
“அதானே பார்த்தேன்.. என் பொண்ணாவது, இப்படி மார்க் வாங்குறதாவது” என்றார் ராஜீவ் .
“ஆமா உங்க பொண்ண, ஏன்தான் இப்படி தலையில தூக்கி வச்சு ஆடுறீங்களோ.. நீ ஏண்டி ரிப்போர்ட் கார்டைப் பார்க்காம வாங்கினே ன்னு கேட்க வேண்டியதானே”
” கடைசி பீரியட் அம்மா. கிளம்புகிறப்ப கொடுத்தாங்க”
” ஏதாவது சொல்லிச் சமாளி” என்றாள் மீனா.
” நாளைக்கு சரியான ரிப்போர்ட் கார்டை கொண்டு வா” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
கிட்டத்தட்ட பதினோரு மணி. அவரது உதவியாளர் ஒருவர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார்
“சார், உங்களை சுந்தர் கேஸ் விஷயமா ஒரு பையன் பார்க்க வந்து இருக்கான் “
“அப்படியா உடனே அந்த பையனையும், ராஜேந்திரனையும் உள்ளே அனுப்புங்க”
கிட்டத்தட்ட 28 வயது உள்ள ஒரு வாலிபன் உள்ளே வந்தான். சற்று பெருத்த உடம்பு. அந்த சிறிய வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடிகள். சற்று தூக்கி விட்டார் போல ஹேர்ஸ்டைல். தடிமனான கண்ணாடி. ஒரு வாரம் சேவ் பண்ணாத முகம்.
” தம்பி, நீ யாரு?”
“சார், என் பெயர் ரகுவரன், ரகு என்று கூப்பிடுவாங்க . சுந்தர் கேஸ் சம்பந்தமா கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க ஆபீஸ்ல வந்து விசாரிச்சீங்களே?”
“பார்த்த மாதிரி இருக்கு. என்ன விஷயம் சொல்லு”
” சார், நான் சொல்லப் போற விஷயம், ரொம்ப பெரிய விஷயம் இல்லை “
“சில சமயம் ஒரு விஷயம் உனக்கு பெரிசா படாம இருக்கலாம், ஆனா எங்களுக்கு அது ஒரு பெரிய விஷயமா இருக்கும். சொல்லு” என்றார் ராஜேந்திரன்.
“நான் சுந்தரை, அவன் செத்துப்போன நைட் கால் பண்ணேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல ஏதோ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, என்னைத் தொந்தரவு செய்யாதே என்று சொன்னான். என்ன மீட்டிங் என்று நான் கேட்டப்ப, அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது, டைம் இல்லைன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டான்”
“அவனுக்குத்தான் தினமும் இரவு 10 மணிக்கு யூ.ஸ்.ல இருக்கிற டீமோட கால் இருக்குன்னு விசாரணை ரிப்போர்ட்ல இருக்கே. நீ ஏன் இதை பெரிய விஷயமா நினைக்கிறே” எனக் கேட்டார் ராஜீவ்.
” இல்ல சார். அவன் சொல்றப்ப, அவனது குரலில் ஒரு ஆர்வம் தெரிஞ்சது. எங்க மீட்டிங்க்கு வர மாட்டேன்னு சொல்லிட்டான். அப்படி என்ன மீட்டிங் என்று கண்டுபிடிக்கணும்னு எனக்கு ஆர்வம் வந்துச்சு. எனக்கு மட்டும் அவன் மீட்டிங் காலண்டர் பார்க்க அனுமதி இருக்கு . அவனுக்கு கம்பெனி தலைமையதிகாரி (ப்ரெசிடெண்ட்) கிட்ட இருந்து ஒரு மீட்டிங் வந்திருந்தது. சுந்தர் கம்பெனியில நல்ல நிலைமையில் இருந்தாலும், தலைமையதிகாரி கிட்டயிருந்து மீட்டிங் வர்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆள் இல்லை. “
“இன்ட்ரஸ்டிங். இந்த விஷயத்தை நீ ஏன் அன்றைக்கு என்கிட்ட சொல்லல. முதல்ல விசாரிச்ச குருசாமிகிட்டேயும் சொல்லல .” எனக் கேட்டார் ராஜேந்திரன்.
“இல்ல சார், மத்தவங்க விஷயத்தைத் தோண்டிப் பார்க்கிறதை, அவர் தப்பா புரிஞ்சிகிட்டு எனக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று பயம் வந்தது. அந்த இன்ஸ்பெக்டர் என் கிட்டேயும் , மற்ற நண்பர்கள் கிட்டேயும் கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டாரு. உங்களைப் பத்தி நிறைய நல்லவிதமாக கேள்விப்பட்டேன். “
“தம்பி ரகு, நீ சொன்ன விஷயம் எவ்வளவு உபயோகமானது என்று தெரியாது. ஆனா புறக்கணிக்க மாட்டோம்” என்றார் ராஜீவ்.
” சார், என் பெயர் வெளியில வராம பாத்துக்குங்க சார். என் போன் நம்பர் பதிவேடுல இருக்கு “
“சரி நீ கிளம்பு” என்று சொல்லும் பொழுதே, நிகிதா சரியான ரிப்போர்ட் கார்டை வாங்கிக் கொண்டதாக வாட்ஸாப்பில் அவருக்கு ஒரு செய்தி வந்தது.
ரகு கதவைத் திறந்து வெளியே செல்லும் சமயத்தில், அவருக்கு பொறித் தட்டியது.
“ரகு, சுந்தர் மணிமாறன் என்ற பெயரில உங்க ஆபீஸ்ல வேற யாராவது இருக்காங்களா?”
ரகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ” ஆமா சார், இவனோட பேரிலேயே சுந்தர் குமார் மணிமாறன், ஐ.டி. டிபார்ட்மென்ட் தலைவர் ஒருத்தர் இருக்காரு. எஸ்ட்ராவா குமார் என்ற பெயர் இருக்கும் “
“சரி நீ கிளம்பு. நீ என் கிட்ட பேசினது பத்தி யார்கிட்டயும் சொல்லாதே “
ரகு அந்த இடத்தை விட்டு சென்ற பின் ராஜேந்திரன் அவரைப் பார்த்து
“சார், இந்த நீங்கள் வழக்கைத் தீர்த்து விட்டீர்கள் போலிருக்கு. உங்க முகத்தில ஒரு பிரகாசத்தைப் பார்த்தேன்”
“நல்ல அப்சர்வேஷன் ராஜேந்திரன்” என்று சொல்லிவிட்டு தனது வீட்டில் நடந்த ரிப்போர்ட் கார்டு சம்பந்தப்பட்ட நிகழ்வைப் பற்றி விவரித்தார்.
” ரகு ப்ரெசிடெண்ட் கிட்ட இருந்து ஒரு மீட்டிங் இன்வைட் வர அளவுக்கு பெரிய ஆள் இல்லைன்னு சொன்னான் . எனக்கு அப்ப பெரிய விஷயமா படவில்லை. திடீர்ன்னு என் பொண்ணு கிட்ட இருந்து வந்த மெசேஜ்னால, இரண்டு விஷயங்களையும் ஒண்ணா சேர்க்க முடிஞ்சது..”
” சூப்பர் சார். ஏதோ தெரியக்கூடாத விஷயத்தை இந்தப் பையன் தெரிந்து கொண்டதால், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா”
“நான் கோடு போட்டா, நீங்க ரோடு போட்டுடீங்க. சூப்பர் ராஜேந்திரன்!! ஆனா இதை நிரூபிக்கிறது, மிகவும் கஷ்டம். ஆனா நமக்கு கிடைச்ச ஒரே பிடி இதுதான். இதை விடக்கூடாது.”
(தொடரும்)
— மருங்கர்
Excellent story. Very excited. Good job
Good job.very nice story. Congratulations
Very interesting .