\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பனி விழும் மலர்வனம்

வாரத்தில் 6 நாள் உழைத்து களைத்து சனிக்கிழமை முன்னிரவில் சனி நீராடும் நிகழ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் நான். சும்மா ரெண்டு பீர். அவ்வளவுதான். தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் எனக்கு இதுதான் வசதி. மற்றபடி நான் நல்ல பையன் தான்.நம்புங்கள். அழைப்பு மணி ஒலித்தது. சைடு டிஷ்ஷும், வறுத்த அரிசியும் அதான் ப்ரைடு ரைஸும் சொல்லியிருந்தேன் ஸோமோட்டோ-வில். அவனாகத்தான் இருக்கவேண்டும். கதவைத்திறந்தேன். சிலீர் என்று பனிப்புயல் என்னை தாக்கியது. அங்கே மெர்லின் நின்று கொண்டிருந்தாள். “இவள் ஏன் இங்கு இந்த நேரத்தில் வந்தாள் ? எப்படி என் விலாசம் கிடைத்தது ?” மண்டைக்குள் ஏகப்பட்ட கேள்விகள். சூழ்நிலை மறந்து போனது வினாடியில். “ஹே மெர்லின். இங்க என்ன பண்ற ? எப்படி என்னோட அட்ரஸ் கிடைச்சது ?” தொண்டைக்குள் கிச் கிச் வந்து விட்டது அதிர்ச்சியில். கேள்விக்கு எப்பொழுதும் அவளுக்கே உரிய புருவமுயர்த்திய ஸ்டைலில் “எனக்கு வீட்டுல கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. எனக்கு மாப்பிள்ளை பிடிக்கல. அதான் வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கல்ல. விடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறி என்னை இடித்துத் தள்ளி அறைக்குள் நுழைந்தாள் அந்த கிராதகி.

ஐயோ இது என்ன புது பிரச்சினை?” என்றிருந்தது எனக்கு. அவள் கூறியது போல் நான் முன்பொருமுறை கூறியது  உண்மைதான். ஆனால் அதற்கான காரணமும் சூழ்நிலையும் வேறு. இருவரும் ஒரே அலுவலத்தில் தான் பணிபுரிகிறோம். மெர்லின் எனும் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் மாடர்ன் டைப் பெண். துணிச்சல் அதிகம். எந்த ஆணிடத்திலும் அடங்கிப்போகாத திமிர் பிடித்தவள் என்பது பொதுவாய் அலுவலகத்தில் இவள் மேல் இருக்கும் கருத்து. ஆரம்பத்தில் இவளிடத்தில் சற்று ஒதுங்கித்தான் இருந்தேன். அனைவரிடத்திலும் காட்டும் அதே அடாவடியை என்னிடத்தில் காட்டிய போது  என் ஆண் கர்வம் தலை தூக்கியது. படிக்கும் காலத்தில் நான் இருந்த விதமே வேறு. வகுப்பை கட் அடித்து ஊர் சுற்றுவது, அடிதடியில் ஈடுபடுவது என்றெல்லாம்  இருந்தேன். ஒருமுறை கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் முதல் ஆளாய் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளின் செயினைக் கழற்றி சுற்ற, அந்நேரம் பார்த்து ரௌண்டஸ் வந்த கல்லூரி முதல்வர் என்னை அந்த கோலத்தில் கண்டு  பெற்றோரை அழைத்துவரச் சொல்லி விட்டார். நண்பனின் உதவியுடன் வாடகைக்கு  மூத்த தம்பதிகளை விஷயம் தெரிவித்து நடிக்க வரவழைக்க, அதிலும் என் கெட்ட நேரம் அவர்கள் ஏதோ தொலைக்காட்சி சீரியலில் நடித்தவர்களாம். அதை கல்லூரி முதல்வர் நினைவில் வைத்து கேள்வி கேட்கப்போக பட்டவர்த்தனமாய் என் குட்டு உடைந்து வீட்டுக்கு விஷயம் தெரிந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். ஏகப்பட்ட அரியர் இருந்து, கல்லூரி தேர்தலில் நின்று தோற்று, தோல்வியைச் சரிக் கட்ட வேண்டுமெண்றே ஸ்ட்ரைக் ஏற்பாடு செய்து என்று என் கலாட்டாக்கள் ஏகப்பட்டவை.

இப்படியெல்லாம் இருந்த நான் கல்லூரி முடித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு, அப்பாவுக்கு ரிட்டையர்மென்ட் என்றாகி வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று உணர்ந்து ஒரு வேளையில் அமர்ந்து ஒரு நிலைக்கு வரவே பல வருடங்கள் ஆகிவிட்டது. எல்லா வால்தனங்களையும் விட்டு விட்டு முழு கவனத்துடன் பணியில் இருக்கும் காலகட்டத்தில் ஒரு பெண் அதும் தான் அழகாய் இருக்கிறேன் என்ற எண்ணத்தில் என்னுடன் நேருக்கு நேர் நின்றதும் ஏதோ படையப்பா ரஜினிகாந்த், நீலாம்பரி ரேஞ்சுக்கு எங்களுக்குள் மோதல் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் நிலையை எண்ணி அமைதி காத்தேன். அவ்வளவுதான். மெர்லின் தலைக்கு மேல் ஏறி ஆட ஆரம்பித்துவிட்டாள். தாங்கமாட்டாமல் “ரொம்ப பந்தா பண்ணாதே. ஒரு அளவோட நடந்துக்கோ” என்று அவளை எச்சரித்தபோது “நீ ஒன்றும் என்னை திருமணம் செய்யத்தேவையில்லை. எனவே இந்த அறிவுரையெல்லாம் நீ எனக்கு சொல்லவேண்டியதில்லை” என்று திருப்பி பதிலடி தந்தாள் எனக்கு. அவமானமாகிவிட்டது எனக்கு. அடுத்து 2 வாரங்கள் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளுக்கே புரிந்தது போல. தானாக  என்னிடம் வந்து பேசினாள். நான் பிடி கொடுக்கவில்லை. சிறிது நாட்கள் சென்றது அதுபோல். ஊரிலிருந்த  சகோதரி மகனின் முதல் பிறந்தநாள் விழா புகைப்படங்களை சக அலுவலக நண்பர்களிடம் காட்டியபோது தானாக முன்வந்து என்னிடமிருந்து வாங்கி புரட்டிப்பார்த்தாள் மெர்லின். என் குடும்பத்தினரைப் பற்றி குறிப்பிட, அமைதியாய் கேட்டுவிட்டு “உன் அம்மா, அப்பாவை  என்னுடைய மாமியார், மாமனார் ஆக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா உனக்கு ? பிறகேன் நான் ஏதும் அவர்களைப்பற்றி கேட்காமல் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறாய் ?” என்று கேட்டாளே பார்ப்போம். ரத்தம் கொதித்தது அன்றைக்கு எனக்கு. “நான் யாருன்னு உனக்கு புரியவைக்கிறேண்டி” என்று எனக்குள் கங்கணம் கட்டிக்கொண்டேன் அன்று.

6 மாதம் கழித்து ஒருநாள் காலை அலுவலம் வந்தபோது ரோஸ் நிற பட்டுப்புடவையுடுத்தி, கை கழுத்து என்று நகைகளுடன் அளவாய் மேக்கப் அணிந்து என்றைக்கும் இல்லாத அளவாய் மிக அழகாய் இருப்பிடத்தில் அமர்ந்திருந்தாள் மெர்லின். ஊட்டி மலர்வனம் டிசம்பர் மாதப் பனி விரிப்பில் இன்னும் அழகாய் இருக்கும். அதுபோல் இருந்தாள் மெர்லின் அன்றைக்கு. உள்ளுக்குள் குதூகலித்தேன் நான். இன்றைக்குத்தான் என் தினம் என்று தோன்றியது எனக்கு. நேராய் அவள் இருப்பிடம் சென்று “மெர்லின். வா போலாம்” என்றேன். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு என் பேச்சு. “எங்க போகணும் ?” என்று கேட்டபடி கிளம்பத் தயாரானாள் அவள். “கல்யாணம் பண்ணிக்கலாம் வா” என்றேன் நான் அமைதியாய். முகம் வெளிறிப்போய் விட்டது அவளுக்கு. அதிர்ச்சியானது அப்பட்டமாய் தெரிந்தது அவளிடம். முன்பொருமுறை என் பெற்றோரைப் பற்றி குறிப்பிட்டுக் கேட்டதை நினைவில் கொண்டு இன்றைக்கு தன்னை பழி வாங்குகிறேன் என்று புரிந்துகொண்டாள். ஆனால் ஏதும் பேசமுடியவில்லை அவளால். அப்படி அமைதியாய் இருக்கும் பெண்ணும் இல்லை அவள். அனால் நான் அவளை அமைதியாய் இருக்கும்படி செய்திருந்தேன். “உனக்கு எல்லாமே விளையாட்டுதான்” என்று மட்டும் கூறினாள். “இல்ல மெர்லின். இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. ஏற்கனவே எங்க அம்மா, அப்பாவை உன்னோட மாமியார், மாமனார் ஆக்கணும்னு சொன்னியே. இன்னைக்கு செஞ்சுடலாம் வா” என்று விடாப்பிடியாய் பேசினேன் நான்.

தன் முன்னே இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்தபடி இருந்தாலே தவிர என்னை நேராய் பார்த்துப்பேச அந்த ஒரு நிமிடம் அவளுக்கு துணிச்சல் இல்லாமல் இருந்தது அவளுக்கு. “என்னோட ப்ரெண்டுக்கு கல்யாணம் இன்னைக்கு காலைல. அங்கேயிருந்து நேரா ஆபீஸ் வந்துட்டேன்.” ஏதேதோ பேசினாள் பேச்சை மாற்றும் விதமாய். “ஒன்னும் பிரச்சினையில்ல மெர்லின். நம்ம கல்யாண நாளும் உன் ப்ரெண்டோட கல்யாண நாளும் ஒண்ணா இருந்துட்டு போகட்டும். உன்னோட பேரண்ட்ஸ் பத்தி கவலைப்படாதே. கொஞ்ச நாள் கழிச்சி பேரப்பசங்களை பாத்தா சமாதானமாகிடுவாங்க” என்றேன் நான். உபயம் மௌன ராகம் கார்த்திக். “உன்னோட எடத்துக்குப்போ. அப்புறம் பேசலாம்” என்றாள் மெர்லின். நம்புங்கள். இந்த வார்தையைச் சொன்னபோது எப்போதும் பேசும் அந்த ராங்கி மெர்லின் இல்லை அவள். அமைதியான நளினமான ஒரு பெண்ணை அவளிடத்தில் அந்த நிமிடம் நான் கண்டேன். ஆனால் எனக்கு என் ஈகோ முக்கியமாயிற்றே. சும்மா இருந்தவனை இந்த அளவு பேசவைத்தவளே அவள்தான். அப்புறம் எப்படி நான் அமைதி காக்க முடியும். “ஒன்னும் பிரச்சினையில்லை. இன்னைக்கு சாயந்திரம் வரை உனக்கு டைம் இருக்கு. ஜஸ்ட் போயி கல்யாணம் செஞ்சுக்கலாம். கோயிலோ, சர்ச்சோ எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே” என்றேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் மெர்லின். அவள் கண்களில் “போதும். என்னை விட்டுவிடு” என்றொரு கெஞ்சல் தெரிந்தது. “யோசிச்சு சொல்லு மெர்லின்” என்று சொல்லித்திரும்பினேன் நான்.

பிறகுதான் இன்னொரு விஷயம் உரைத்தது எனக்கு. மொத்த அலுவலகம் வாயைப்பிளந்த படி என் பேச்சைக் கேட்டு திறந்த வாயை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  நினைவிருக்கட்டும். நான் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அலுவலகத்தில் கூறுகிறேன். அப்பெண் என்னைப் பற்றி ஹெச்ஆரிடம் புகார் அளித்தால் என் பணி  பறிபோகும். ஒருவேளை போலீஸிடம் ஒரு கம்பளைண்ட் கொடுத்தால்  என்னை தூக்கி உள்ளே வைத்து நொங்கெடுத்து விடுவார்கள். எனக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. பழிக்கு பழி என்பது ஒன்று மட்டும் தான் கண்முன்னே இருந்தது. அன்றைக்கு மதியம் மறுபடி அவள் இருக்கைக்கு சென்று பார்த்தேன். அரை நாள் விடுப்பில் சென்று விட்டாள் என்று கூறினார்கள் அருகிலிருந்தவர்கள். பயந்து போய் வீட்டுக்கே  போய்விட்டாள் போல என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர் என்னைப்பற்றி மெர்லின் ஹெச்ஆரிடம் புகார் எல்லாம் கொடுக்க வில்லை. அதைவிட முக்கியம் என்னிடத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்டாள். பின்னே. ஏதும் கூறினால் வா கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று சொல்லிவிடுவேன் என்று பயம் இருக்கும் இல்லையா ?

இது நடந்து முடிந்து பல மாதங்கள் சென்ற பின் “சரி. இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நினைத்திருந்த போது இப்படி தடாலடியாய் என் அறைக்கு தனியே வந்திருக்கிறாள். போதாகுறைக்கு திருமணம் செய்து கொள் என்று வேறு சொல்கிறாள். என்ன சொல்லி சமாளிக்க என்று புரியாமல் நின்றிருந்தேன் நான். அடி வயிறு கலங்கிப் போய்விட்டது எனக்கு. மறுபடி அழைப்பு மணி ஒலித்தது. மெர்லின் என்னைப்பார்த்து “என்னைத்தவிர வேறு யாரும் பொண்ண வரச்சொல்லியிருக்கியா ?” என்று அவளுக்குரிய தொனியில் கேட்டாள். கதவைத்திறந்தால் உணவுப்பொட்டலம் கொண்டு வந்த பையன். உள்ளுக்குள் அமர்ந்திருந்த மெர்லினைப் பார்த்து ஒரு நமட்டுச்சிரிப்பு சிரித்தபடி போய்விட்டான். “டேய் அரை வேக்காடு. என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு இந்த பிசாசு அங்க ஒக்காந்திருக்காடா. விஷயம் தெரியாம சிரிக்காதடா” என்று சொல்லவேண்டும் போல் இருந்தது எனக்கு. நேராய் என்னிடம் வந்து கையில் இருந்த பொட்டலத்தை வாங்கி அங்கேயே பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள் மெர்லின். “மத்தியானத்துல இருந்து சாப்பிடலை. வீட்டுல ஏகப்பட்ட பிரச்சினை கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி. சாயங்காலம் கொஞ்சம் அசந்த நேரமாப்பார்த்து எஸ்கேப் ஆயிட்டேன். முன்னாடி ஒருமுறை உன் ப்ரெண்டுக்கு போன்ல உன்னோட அட்ரஸ் சொல்லிட்டிருந்தே. அப்போ நோட் பண்ணி வெச்சிருந்தான் உன் அட்ட்ரஸ்ஸ. அதான் நேரா வந்துட்டேன். இங்க வரேன்னு சொன்ன நீ எங்கயாச்சும் ஓடிட்டா அப்புறம் நம்ம கல்யாணம் எப்படி நடக்கும் ?” என்றாள் மெர்லின் நிதானமாக. 

மெர்லின் என்னாச்சு. நீ பாட்டுக்கு இப்படி நைட்டு தனியா என்னோட ரூமுக்கு வந்திருக்க. கல்யாணம் பண்ணிக்க சொல்ற. விளையாடாதே”

ஹை. யாரு விளையாடுறா ? நீ தான் மொத்த ஆபீஸ் முன்னாடி என்ன கல்யாணம் பண்ணக்கூப்பிட்ட. அங்க இருந்த எல்லாரும் சாட்சி. இப்போ ஏன் மாத்திப் பேசறே ? “என்றாள். விளையாடுகிறாளா என்று தோன்றியது. ஆனால் இவ்வளவு தாமதமாகவாகவா ஒரு பெண் தனியே இருக்கும் இளைஞனைப் பார்க்க வருவாள் என்றும் தோன்றியது. ஒன்றும் பேச இயலாமல் நின்று அவளைப்பார்த்துக்கொண்டிருந்தேன் நான். முழு உணவையும் முடித்து கையைத்துடைத்து, “ஐஸ் கிரீம் ஏதும் இல்லையா ?”  என்றாள் அதே திமிர் பார்வையுடன். “எனக்குத்தெரியும் சிவா. நான் நடந்துக்கிட்ட விதமும் உன்னோட பேரண்ட்ஸ் பத்தி சொன்னதும் உன்னோட ஈகோவை கிளறி விட்டுடிச்சி. நீ யாருன்னு எனக்கு காமிக்கணும்னு தான் என்னைக்கல்யாணம் பண்ணக்கூப்பிட்டியே தவிர மத்தபடி உனக்கு என்மேல அப்படி ஒரு அபிப்பிராயம் எல்லாம் இல்லை. ஸோ நீ என்னை கல்யாணம் எல்லாம் பண்ணமாட்ட. ஏன்னா உன்னைப்பொறுத்தவரை நான் ஒரு திமிர் பிடிச்சவ. எங்க வீட்டுல என்னோட சொந்தக்கார பையனைக் கல்யாணம் பண்ணச்சொல்லி எனக்கு ஒரே பிரஷர். எவ்வளவோ சொல்லிப்பாத்துட்டேன். நான் இன்னும் மென்டல்லி கல்யாணத்துக்கு தயாராயில்லை. அதும் அந்தப்பையனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சுத்தமா இஷ்டமில்லைன்னு. ஆனா கேக்கமாட்டேங்கிறாங்க. வீட்டுல இருக்க முடியல. எங்கயாச்சும் நைட்டு கொஞ்சம் நிம்மதியா தூங்கிட்டு காலைல வீட்டுக்கு போயிடலாம்னு இங்கே வந்தேன். என்னோட கூடப்படிச்ச ப்ரண்ட்ஸ் வீட்டுக்குப் போகலாம்னா அங்க போன் பண்ணி இல்ல நேர்ல வந்து தொந்தரவு பண்ணுவாங்க. அதான் இங்கே வந்திட்டேன். எனக்குத்தெரியும். நீ எப்பயும் என்னை தப்பான கண்ணோட்டத்துல பாத்ததில்லை. உன் கூட நான் பாதுகாப்பா இருக்க முடியும். உன்னோட கற்புக்கு என்னால எந்த களங்கமும் வராது. ஸோ டோன்ட் ஒர்ரி” என்று கூறி முடித்து என் வயிற்றில் பால் வார்த்தாள் மெர்லின்.

மெர்லின். ஒருவேளை என்னோட அம்மா ஊருல இருந்து இந்நேரம் வந்து என்கூட தங்கியிருந்திருந்தா என்ன ஆகியிருக்கும் ? என்று கேட்டதற்குஎன்ன… வந்த கையோட அவங்க காலுல விழுந்து என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தைன்னு கேட்டிருப்பேன்”

என்று பதிலளித்துவிட்டு “தூங்கப்போறேன். உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணிக்கோ.” என்று கூறி என் பெட் ரூம் சென்றுவிட்டாள் அந்த சண்டாளி. ஒரு சனிக்கிழமை இரவு. பீர் பாட்டில் எனக்காக காத்திருக்கிறது. ஒரு அழகான பெண் என் பெட்ரூமில் இருக்கிறாள். ஆனால் பிரம்மச்சர்யம் காக்க வேண்டியது அவசியம்.  மறுபடி உணவை ஆர்டர் செய்து, உண்டு முன்னைறையில் மிகத்தாமதமாய் உறங்கிபோனேன். கனவில் யாரோ என் பெயர் சொல்லி அழைக்க பின்னர் தான் தெரிந்தது விடிந்தபின் மெர்லின் தான் என்னை வந்து எழுப்பியிருக்கிறாள் என்று. “நான் சர்ச்சுக்கு போகணும். குளிச்சு நான் ரெடி ஆயிடுவேன். என்ன உன்னோட பைக்ல ட்ராப் பண்ணு” என்றாள். தயாராய் மாற்றுத்துணியெல்லாம் கொண்டுவந்திருந்தாள் மெர்லின். முழு வெள்ளை நிற சுடிதாரில் சொன்னது போல் தயாராகி இருந்தாள் அடுத்த அரை மணி நேரத்தில். நானும் தயாராகி அவள் சொன்ன சர்ச்சுக்கு சென்ற போது “கொஞ்சம் வெயிட் பண்ணலாம் சிவா. என்னோட அம்மா, அப்பா எல்லாம் வருவாங்க. உன்ன இண்ட்ரடூயுஸ் பண்ணறேன்” என்றாள். எனக்கு அள்ளு இல்லை. எங்கயாச்சும் எந்த பெண்ணைப்பெற்ற அம்மாவும் அப்பாவும் இரவெல்லாம் உடன் தங்கிய ஆணை சும்மா விடுவார்களா என்ன ?

எங்கடி போயிருந்த. உன்னோட எல்லா பிரண்ட்ஸுக்கும் போன் பண்ணிக்கிட்டேன். யாரும் நீ வரலைன்னு சொல்லிட்டாங்க. இதுல காலைல சர்ச்சுல மீட் பண்றேன் ஒரு எஸ்எம்எஸ் மட்டும் பண்ணிட்டு போன் ஆப் பண்ணி வெச்சிட்டே. இங்க மட்டும் உன்னப்பாக்கலைன்னா போலீஸ்க்கு போயி கம்பளைண்ட் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருயிருந்தேன் என்று சர்வசாதாரணமாய் சொன்னார்கள் தலைக்கு முக்காடு அணிந்து கையில் பெரிய பைபிள் வைத்துக்கொண்டிருந்த மெர்லினின் தாய். “மம்மி. இவன் பேரு சிவா. என் கூட வேலை செய்றான். இவனோட ரூமுல தான் நைட்டு தங்கியிருந்தேன் ” என்றாள் மெர்லின். “அடிப்பாவி.  என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கே. மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா ?” நியாயமான கேள்வி கேட்டது மெர்லினின் அன்னை. “மம்மி. ஜீசஸ் மேல சத்தியம். நேத்து வீட்டுல இருந்து கிளம்புனா மாதிரிதான் இன்னமும் இருக்கேன் நான். என்ன நம்பு. இவன் ரொம்ப நல்லவன். என்னோட பிரச்சினைக்கு இவனுக்கு கெட்டப்பேரு கொடுக்காதே” என்றாள் மெர்லின். உடல் சிலிர்த்துவிட்டது எனக்கு. மெர்லினைப் பற்றிய பல்வேறு பனிப்படலங்கள்  மெல்ல விலகிக்கொண்டிருந்தது எனக்கு. முதல் முறையாய் அவளைப் பாவமான கண்ணோட்டத்தில் பார்த்தேன். ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் தான் அலுவலகத்தில் வலம் வந்திருக்கிறாள் இவள். அழகாய் இருப்பது வேறு கூடுதல் பிரச்சினை. ரோஜா தன்னைக் காத்துக்கொள்ள முட்களை உடன் வளர்க்கத்தானே செய்கிறது.

“நா உன்ன நம்பறேண்டி. மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன பண்றது ?”. 

எனக்கு வின்சென்ட்ட புடிக்கலம்மா. நான் உன் கிட்ட பலமுறை சொல்லிட்டேன்”. பேசிக்கொண்டே இருக்கும் போதே ஒரு அயோக்கியனுக்கான அனைத்து முக லட்சணமும் பொருந்திய ஒருவன் வந்தான். “ஹேய் மெர்லின். எங்க போயிருந்த நைட்டு ?” கேள்விக்கு மெர்லின் அவள் அன்னைக்கு அளித்த அதே பதிலைக் கொடுக்க, பளார் என்று அவள் கன்னத்தை அறைந்து அடுத்த வினாடியார்ரா நீ ? அவகூட நைட் எல்லாம் என்ன பண்ண ?” என்று கேட்டபடி கொத்தாய் என் சட்டையைப் பிடித்துத்தூக்கினான் அவன். ஒரு காலத்தில் கைகலப்பில் கைதேர்ந்திருந்த எனக்கு அவன் கைகளை தட்டி விட்டு முழங்கையைப் பிடித்து மடக்கி அவனை மண்டியிட வைக்க மொத்தம் 20 வினாடிகளே தேவைப்பட்டது. என் கண்ணெதிரே மெர்லினை அறைந்தது என்னை சினம் கொள்ளவைக்க போதுமானதாய் இருந்தது. கைமுஷ்டியை மடக்கி அவன் முகவாயை உடைக்கத் தயாராய் இருந்தேன் நான். ஒருவேளை மெர்லினின் அன்னை அவளை அறைந்திருந்தால் கூட என்னால் அமைதி காத்திருந்திருக்க  முடியும். சரியாய் அந்நேரம் என் ஆறாம் அறிவு விழித்துக்கொண்டது. இவ்வளவும் ஒரு புனித தேவாலயத்தை ஒட்டிய காம்பௌண்ட் அருகே நடந்து கொண்டிருந்தது. பலரும் தொலைவில் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தனர். “டேய்.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி பழங்கணும்னு உனக்கு யாருமே சொல்லித்தரலியா ? மெர்லின் மேல கைய வெச்சதுக்கு வேற இடமா இருந்திருந்தா ரெண்டு கையையும் ஒடைச்சி அடுத்த 6 மாசம் மாவுக்கட்டோட அலைய வெச்சிருப்பேன். சர்ச்சுக்கு பிரேயர் பண்ணத்தான் வரணும். அடிதடிக்கு இது இடமில்லை.  யாருன்னு தெரியாம மேல கை வெச்சிட்ட. இப்போ போ. என்னோட அட்ரஸ் தரேன். பொறுமையா என்ன வந்து பாரு. கணக்கை அங்க செட்டில் பண்ணிக்கலாம். ” என்றேன் நான். மெர்லின் விக்கித்திருந்தாள். மெர்லினின் அன்னை வாயைப்பொத்தியபடி நின்றிருந்தார். முழங்கையைப் பிடித்தபடி எழுந்து நின்றவன் கண்களில் கலக்கம் தெரிந்தது. என் பிடியில் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். நான் முன்னனுபவம் உள்ளவனென்று.ஆண்ட்டி. மெர்லின் மனசைப் புரிஞ்சு அவ இஷ்டப்பட்ட படி அவளுக்கு கல்யாணம் பண்ணிவையுங்க. கூறிவிட்டு திரும்பிய என்னிடம் “சிவா. நானும் உன்னோட வரேன். சாயங்காலம் என்னை வீட்டுல ட்ராப் பண்ணிடு” என்றாள் மெர்லின். நான் அமைதியாய் அவளின் அன்னையைத் திரும்பிப்பார்த்தேன். என்ன நினைத்தார்களோ “சீக்கிரமா அவளை பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுடுப்பா” என்றார்கள்.மெர்லின். சர்ச்சுக்கு போயி பிரேயர் பண்ணிட்டு வா. அப்புறம் நீ சொல்ற இடத்துக்கு நான் கூப்பிட்டு போறேன்” என்றேன் நான்

கடலலைகள் தொலைவில் தன் கடமையை செய்தபடி இருந்தது. அமைதியாய் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் மெர்லின். அருகில் நான் அமர்ந்திருக்க, இத்தனை வருடங்களில் இந்த மெர்லினுக்கு இப்படி ஒரு பின்கதை சுருக்கம் இருக்கும் என்று தெரியாது இருந்த என் முட்டாள் தனத்தை நொந்து கொண்டு அவள் பேசக்காத்துக்கொண்டிருந்தேன் நான். “வின்சென்ட் என்னோட மாமா பையன் சிவா. படிக்கலை. நிறைய சொத்து. எனக்கு அவனை எப்பயும் பிடிக்காது. என்னோட அம்மாதான் ரொம்ப பிடிவாதமா அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு குறியா இருந்தாங்க. ஆனா இன்னைக்கு பிரேயர் முடிச்சு கிளம்பும் போது, உன் இஷ்டம் போல நடக்கட்டும் மெர்லின். நான் எல்லார்கிட்டயும் பேசிக்கறேன் அப்படின்னு சொன்னாங்க சிவா” என்றாள் குரலில் எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி.

இவ்ளோ பிரச்சினையை வெச்சிக்கிட்டு ஏன் எல்லார் கிட்டயும் இப்படி ஏடாகூடமா நடந்துக்கிட்ட?”

எனக்கு பிரச்சினைன்னு யார்கிட்டயும் சொன்ன, சிம்பதி காட்டுற சாக்குல மேல கை வைக்கத்தான் நிறைய பேரு இருக்கானுங்க இங்க”. தெளிவாய் பேசினாள் மெர்லின்.

மெர்லின். அப்போ உன்னோட நிலைமை புரியாம ரொம்ப கேஷுவலா என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன். இப்போ உண்மையாவே கேட்கறேன். என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா ?” கேள்விக்கு என் கண்களை உள்நோக்கி, “சிவா. நீ நேர்மையானவன். பெண்கள் கிட்ட கண்ணியமா நடக்கத் தெரிஞ்சவன். உன்ன எப்பவும் எனக்கு பிடிக்கும். போன முறை என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டப்போ என்ன பழிக்குப் பழி வாங்கத்தான் கேட்ட. இப்போ என்மேல உள்ள அனுதாபத்துல கேக்குற. என்னைக்கு என் மேல உனக்கு உண்மையாவே லவ் அப்படிங்கறது தோணுதோ அப்போ என்ன ப்ரபோஸ் பண்ணு சிவா. எனக்கு யாரோட பணமும் வேண்டாம். பரிதாபமும் வேண்டாம். உண்மையான லவ் தான் தேவை. என் மேல உள்ள பரிதாபத்தை தூக்கிப்போட்டுட்டு எப்பவும் போல என்ன சரிக்கு சமமா பாத்து அப்பயும் உனக்கு என்னைப்  பிடிச்சா வந்து சொல்லு. அதுவரை நான் வெயிட் பண்றேன். இப்போ போகலாம். என்ன வீட்டுல ட்ராப் பண்ணிடு” என்றாள் மெர்லின்.

என்ன ஆயினும் கடலலைகள் தனது பணியைத்தொடரத்தான் செய்யும். என் முயற்சியும் அதுபோல் இருக்கப்போகிறது இவள் மேல் எனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்த. பனி படர்ந்திருந்தாலும் இல்லையென்றாலும் மலர்வனம் அழகுதானே. கூடிய சீக்கிரம் மெர்லினிடம் எனக்கு அவள்மேலுள்ள காதலை வெளிப்படுத்தி, அவள் சம்மதம் பெற்று, திருமண அழைப்பிதழை முதல் ஆளாய் உங்களுக்கு தருகிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்களேன்.

ஆரா

 

Comments (19)

Trackback URL | Comments RSS Feed

  1. Jagatha says:

    Superb, nice work. Good read

  2. Velmurugan says:

    Nice story…. Heart touching story

  3. Nandhitha says:

    Nice modern age story. Fun to read.

  4. Devi says:

    Good narrative serious comedy. Is really fantastic sema kalakal

  5. Rajan Subramanian says:

    பனி படர்ந்த மலர் போன்று கதையும் அழகு

  6. Joel francis says:

    Nice story fr Heart touching keep it up

  7. Anand says:

    Amazing story Aara.. sirantha narration and nalla mudivu. Thodara vazhthukkal!

  8. Thilagam says:

    I thoroughly enjoyed reading. Great narration. Best wishes

  9. Radha R says:

    Very well written Athma. Simple and flawless narration..very good story line.. Good…keep it up.. Wish you all the very best.

  10. Ramesh Babu says:

    Very good story.congrats

  11. yesu says:

    good story, superb!

  12. Thirumaran TS says:

    Awesome story…. Can’t wait for the next one. Keep going dude …

  13. Prabhu says:

    Kathai padikum bothu kathaikul nammai izhuthu sella vendum..apdi patta meliya unarvodu intha kathai ennai azhaithu sendrathu..

    Miga arumai..

  14. Vijayalakshmi says:

    Kathai yatharthama, ekkalathukku nam pesum mozhinadail iruppathu arumai. Story is nice. All the best to the Author and awaiting for his next story.

  15. Mullai Gowthaman says:

    Today only got time to read it peacefully. Actually I am sitting in the car at my sons soccer class. It is cold out here and kids are playing but nothing distracted me I thoroughly enjoyed the story. It’s kind of short manirathnam story. You itself called it out in one place as well, that’s ver clever play.
    I like the end as well the story was not ended forcefully with some note. You have ended it with gracefully with positive note. That’s your personal touch I believe.
    Keep writing and make others enjoy with your writing.

  16. Venkee says:

    Excellent short story.

  17. Radha Natarajan says:

    Beautiful title. பனிவிழும் மலர்வனம்.Awesome story and very good narration. Keep writing. Congrats .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad