இசையுலக இழப்புகள்
இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை.
எம்.கே. ஆத்மநாதன்
தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள்.
உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்)
தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்)
இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .. திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு (அமரதீபம்)
இவர் டி.கே. எஸ். நாடகங்களுக்கும், எஸ்.வி. சகஸ்ரநாமம் நாடகங்களுக்கும் இசை அமைத்தவர். நாலு வேலி நிலம், ரத்த பாசம் உட்பட 20 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
டி.கே. எஸ். மீது கொண்டிருந்த அன்பை அறிந்து, அவரது நூற்றாண்டு விழாவில் ஆத்மநாதனுக்கு பரிசு வழங்கிக் கெளரவித்தனர். கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். 88 வயதான அவர் ஜூலை 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
இவரது விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே (புதையல்) பாடலை மீண்டும் கேட்டுப் பாருங்கள்.
சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் கொள்ள உள்ளம் நாடுதே
என நாயகன் பாட,
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுவோம் வாழ்விலே
என நாயகி படும் நாகரீகமான வரிகள்.
தமிழ்த் திரைப்பாடல்கள் இனியும் காணுமோ இது போன்ற நாசூக்கான, நளின வரிகளை? அவருடைய பாணியிலேயே “இன்று போய் நாளை வாராய்” எனக் காத்திருப்போம்.
டி. எஸ். ரங்கராஜன் (வாலி)
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகில், பல தலைமுறையினருக்கும் பாடல் எழுதிய வாலி, வானில் மறைந்து விட்டார்.
ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்டவர். ஓவியத்தின் மேலிருந்த நாட்டம் காரணமாக, அந்நாளில் புகழ் பெற்ற ஓவியர் ‘மாலி’ மீதிருந்த பற்றினால் தானும் ஓவியராக விரும்பி தன் பெயரை ‘வாலி’ எனச் சூட்டிக் கொண்டார். சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர், மனம் மாறிப் பாடலாசிரியராவதென முடிவு செய்தார்.
1958 அழகர் மழைக் கள்ளன் எனும் படத்திற்குப் பாடல் எழுதி, பின்பு போதிய அளவு வரவேற்பு இல்லாததினால் ஊருக்குத் திரும்ப இருந்தவர், தனது நண்பரான பி.பி. ஸ்ரீனிவாஸை சந்திக்க அவர் அன்று பதிவுக்காகப் பாடி விட்டு வந்த “மயக்கமா கலக்கமா” பாடலைக் கேட்டு வாழ்ந்தால் இனிப் பாடலாசிரியனாகத் தான் வாழ்வேன் என்ற முடிவுக்கு வந்தார். பல இன்னல்களுக்குப் பிறகு , முக்தா ஸ்ரீனிவாசன் மூலம் மெல்லிசை மாமன்னர் திரு. எம். எஸ்.வி. அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
1963ம் ஆண்டு வெளியான அன்னை இல்லம் படத்தில் ஒரு பாட்டு “நடையா இது நடையா”. அதில் “இடை இல்லாதது போல் இருக்குது” என எழுதியிருந்தார் கவியரசர் கண்ணதாசன். அதே நாயகி நடித்து, அதே ஆண்டு வெளியான ”இதயத்தில் நீ” திரைப்படத்திற்குப் பாடல் எழுத வாய்ப்பு தந்தார் எம்.எஸ்.வி. “ஒடிவது போல் இடையிருக்கும்.. இருக்கட்டுமே” என்ற பாடலை எழுதினார் வாலி. அந்த நாயகி தேவிகா. அவரை பார்த்தால் இவர்கள் இருவரும் எவ்வளவு பொய்யர்கள் என்று தெரியும்.
பின்னர் வந்த “கற்பகம்” படத்தில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதும்படி இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனிடம் எம்.எஸ். வி. போராடி வாய்ப்பு பெற்றுத் தர, வாலி, தான் போலிக் கவிஞன் இல்லை எனும்படி எழுதினார்.
“மன்னவனே அழலாமா”
“பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்”
“அத்தை மடி மெத்தையடி”
“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு”
ஒவ்வொரு பாடலும் முத்தாக அமைந்தன. அதிலும் ”ஆயிரம் இரவுகள் வருவதுண்டு” என்ற பாடலுக்குப் புதுமையான முறையில் வாக்கியங்களை முடிக்காமல் எதுகை மோனை பாணியில் “வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது …. ” (தூக்கம் எனும் பொருளில் இசையும் நடிப்பும் இருக்கும்) “வந்ததம்மா மலர் கட்டில் இனி வீட்டினில் ஆடிடும் ….. ” (தொட்டில்) படைத்திருந்தனர். கே. எஸ். ஜி, கவியரசருடனான ஒரு பந்தயத்தில் அவரின் பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை வெற்றியடையச் செய்ய முடியும் என்று “கற்பகம்” பாடல்கள் மூலம் நிருபித்துக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து “படகோட்டி” படம் வெளிவர வாலி பெரும் உயரங்களுக்குப் போனார்.
நன்றி மறக்கும் திரையுலகில், தான் ஏறிய அரங்கெல்லாம் எம்.எஸ்.விக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் – “எம். எஸ். வி. அண்ணாவைப் பார்ப்பதற்கு முன் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்தேன் .. அவரைப் பார்த்த பின்பு சாப்பாட்டுக்கு நேரம் இல்லாமல் இருந்தேன்” என்று கூறி வந்தார் வாலி .
முதன் முதலாய் “தரை மேல் பிறக்க வைத்தான்” பாடலைத் தான் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும் போது கேட்ட கவியரசர், தனது காரோட்டியிடம் யார் அந்தப் பாடலை எழுதியது என்று கேட்டு நேராக வாலியின் வீட்டுக்குப் போகச் சொல்ல, காரோட்டி அங்கும் இங்கும் விசாரித்து வாலியின் குடிசைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வாலியைப் பார்த்துக் கட்டியணைத்த கவியரசர் தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டி வாலிக்கு அணிவித்துப் பாராட்டினாராம். அது முதல் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர்.
கண்ணதாசனுடனான பிணக்கால், எம்.ஜி.ஆர்., தனது படங்கள் அனைத்திலும் பாடலெழுத வாலிக்கு வாய்ப்புத் தந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட வாலி, தமிழ்த் திரையுலகில் சாகா வரம் பெற்ற பாடல்களை எழுதினார்.
“நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால்”
“கண் போன போக்கிலே கால் போகலாமா”
“நான் ஏன் பிறந்தேன்?”
“புதிய வானம் புதிய பூமி”
“ஏமாற்றாதே ஏமாறாதே…’
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”
“ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை”
“சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ”
“அழகிய தமிழ் மகள் இவள்”
“விழியே கதை எழுது”
போன்றவை மிகப் புகழ் பெற்றவை.
எங்கள் தங்கம் படத்தில் ’நான் செத்து பிழைச்சவண்டா’ என்று எம்.ஜி.ஆர் பிழைத்து வந்ததையும் பாடலாக எழுதினார்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்ததைப் போன்று “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு” பாடல் எம்.ஜி.ஆர். உடல் நலமில்லாதிருந்த போது, பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து, வாலிக்குப் பெரும் புகழை ஈட்டி தந்தது. அவரது அரசியல் வாழ்க்கைக்கு வழி வகுத்து, மக்களிடம் அவரையும் அவரது கொள்கைகளையும் கொண்டு சேர்த்தது வாலியின் பாடல்கள் என்றால் மிகையில்லை.
சிவாஜி கணேசனுக்காக இவர் எழுதிய
“அந்த நாள் ஞாபகம்”,
“வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில்”
“மாதவிப் பொன் மயிலாள்”
“இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு” போன்றவை.
இதில் “இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு” பாடலுக்காகத் தேசிய விருது தருவதாக முடிவு செய்து விருதுக் குழுவினர் வாலியிடமே அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்க, ” விருப்பம் இருந்தால் என் பாட்டுக்குக் கொடுங்கள். நான் யாரென்று தெரிந்து கொண்ட பின்பு தான் விருது என்றால் அந்த விருது வேண்டாம்” என்று மறுத்து விட்ட ரோஷக்காரர் வாலி.
கமலஹாசனின் திரைப்படங்களில் “கருவோடு வந்தது தெருவோடு போவது, மெய் என்று மேனியை யார் சொன்னது”, “கல்லை மட்டும் கண்டால்”, “உன்னை நெனச்சே பாட்டு படிச்சேன்” போன்ற பாடல்களும், ரஜினிகாந்தின் படங்களில் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே “, “ராஜ்யமா அல்லாத இமயமா” என்றும் எழுதியவர்.
பாலச்சந்தரின் பாணி தன் திரைப்படத்தின் கதை முழுவதையும் ஒரு பாட்டில் அடக்கி விட வேண்டுமென்பது. கண்ணதாசனுக்குப் பின், “சொல்லத்தான் நினைக்கிறேன்”, “கேளடி கண்மனி பாடகன் சங்கதி” போன்ற பாடல்களில் அதை நிறைவேற்றினார் வாலி.
பின்னர் வந்த படவுலகத்தினர் ‘வாலிபக் கவிஞர்’ எனும் ஒரு பொய்ப் பட்டத்தைக் கொடுத்து வியாபாரத்துக்காகப் பல கிளுகிளுப்பான பாடல்களை அவரிடம் இருந்து பெற்றனர். “சில்லறைக்காகப் பல கல்லறைப் பாடல்களை எழுத வேண்டியுள்ளது” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியது வாலியின் கவித்திறன்.
“கல்யாணத் தேன் நிலா .. காய்ச்சாத பால் நிலா ..
தென்பாண்டிக் கூடலா? தேவாரப் பாடலா? ” என்ற எதுகை, மோனையுடன் எழுதியவர் “முக்காலா முகாபுல்லா லைலா ” என்றும் எழுதினார்.
திரைப்பாடல்கள் தவிரப் பக்தி பாடல்கள் எழுதுவதிலும் சிறந்தவர் வாலி. “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் ” எனும் பாடல் இவர் டி. எம். எஸ்ஸுக்கு எழுதிய தனிப் பாடல்களில் ஒன்று. இறை நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தவர் நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார் வாலி.
“நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே
குடந்தை – அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு
அத்துணைத் தெய்வங்களுமா
உடந்தை”
என்று கும்பகோணத்தில் நடந்த பள்ளி விபத்தின் போது தெய்வங்களை நிந்திக்கவும் தவறவில்லை.
2008ல் இவருக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. ஐந்து முறை மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். 15000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
கண்ணதாசனுக்குப் பிறகு இவருக்கு அரசவைக் கவிஞர் கெளரவப் பதவி கிடைக்கும் என நினைத்திருந்தவர் பலர். இறப்பதற்கு முந்தைய மாதம் வரை பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். தமிழ்ச் சுரங்கமென நிரம்பிய அவரின் கவிநயத் திறமைகளைக் கடைசி வரை சுரண்டிய தமிழ்த் திரையுலகம், அவரை எந்தக் காலத்திலும் பெரிதாகக் கெளரவித்ததாகத் தெரியவில்லை. இது பற்றி அவரே “I don’t write for recognition; I write for remuneration ” எனத் தன் பாணியில் பதில் சொன்னவர்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை; தமிழுயிர் பிரிவதைப் பார்த்து நிற்கிறோம்!!!
– ரவிகுமார்.
நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள் இரவி
“நிலவு ஒரு பெண்ணாகி”, “சிரித்து வாழ வேண்டும்” போன்ற உலகம் சுற்றும் வாலிபன் படப் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் ஆத்மநாதன் அய்யாவையும் நினைவு கூர்ந்தது வணக்கதுக்குரியது