கடவுள்
கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ
கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ
கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ
கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ
கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ
கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ
கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ
கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ
கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ
கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ
கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ
கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ
கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ
கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் ஏற்பதுவோ
கருமம் பெரிதன்றோ கணக்காய்த் தெளிவோமோ
கடமை செய்வதுவே கடவுளாம் அறிவோமோ!!!
– மதுசூதனன். வெ.
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!