பெஃட்னா 2013 – ரொரோன்டோ தமிழ் விழாவில் மினசோட்டாவின் பங்களிப்பு
வட அமெரிக்காவில் தமிழ்ச் சமுதாயத்தின் செழிப்பும் அதன் தற்கால
பிரதிபலிப்பும் சென்ற July 5-6-7 களில் கனேடிய ரொரோன்டோ மாநகரில் நடைபெற்ற குதூகல விழாவில் நன்றாகவே தென்பட்டது.
தமிழ்தாயகங்களில் மேலை நாட்டு மோகம் ததும்பும் பொழுதும் தாயக தமிழ் மேதைகளும், வட அமெரிக்கத் தமிழன்பர்களும், தவ்வல்களும் கலாச்சார அடிப்படையில் ஒருங்கிணைந்து தத்தம் ஆற்றலை பகிர்ந்து கொண்டு தமிழ்த் தேன் மழையில் நனைய வைத்தார்கள்.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் பங்கேற்பு
இந்த விழாவில் குறிப்பாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தாரும்,
தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளும் பதினாறு மணித்தியாலம் சாலை வழிப் பயணம் செய்து பங்கு கொண்டார்கள். எமது மினசோட்டாத் தமிழ்க் குழந்தைகள் காலாகாலத்திற்கும் அப்பால் கரையாத வரலாறான தீரன் சின்னமலையின் கதையை வில்லுப்பாட்டாக படைத்துத் தந்தார்கள். வில்லுப்பாட்டில் தற்கால சினிமாப்பாடல் மெட்டுக்களின்
மூலம் குழந்தைகள் வாயினால் பண்டைய காலக்கதை சொல்லும் வித்தையை திரு சத்தானந்தம் அவர்கள் அற்புதமாக உருவாக்கியிருந்தார். . மினசோட்டா பன்முக தமிழ் வல்லுனர்கள் திருவாளர்கள் சச்சிதானந்தன், சுந்தரமூர்த்தி இருவரும் கவிதை போட்டியிலும், திரு வெங்கடசுப்பிரமணி, பெருமைக்குரிய பெண்பிள்ளை அத்விகா ஆகியோர் இலக்கிய வினாவிடையில் போட்டியிலும் பங்கு கொண்டனர்.
வடஅமெரிக்க 2013 தமிழ்விழா
பெஃட்னா தமிழ் விழாக்கள் கடந்த 25 வருடங்களாக அமெரிக்க நாட்டிலேயே நடைபெற்று வந்தது. கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் பேராதரவுடன், முதல் முறையாக இந்த மாபெரும் விழா ரொரோன்டோ சோனி மையத்தில் நடைபெற்றது. பெட்னா அமைப்பாளர்கள், பொதுவாக தமிழ் தாகத்தை தீர்க்கும் வண்ணம் இந்தியாவிலேயே
இரண்டாவது பிரமாண்டமான தென்னிந்திய திரைப்பட வர்த்தகப் பிரிவான கோலிவுட்டிலிருந்து நடிகர், நடிகைகள், பாடகர்,பாடகிகள், கவிஞர், இசையமைப்பாளர் என்று பலரையும் அழைத்துக் கௌவரவிப்பது வழக்கம்.
2013ம் ஆண்டு விழாவானது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின்
நூற்றாண்டுச் சிறப்பு விழாவாக அமைக்கப்பட்டது. இதையொட்டி தனிநாயக அடிகளாரின் தமிழ்ப்பணிகளை விளக்கும் வண்ணம் , நூல்கண்காட்சி, வரலாற்றுப் பேச்சுக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த இனிமையான மூன்று நாட்களை 300ற்கும் அதிகமான கனடா, அமெரிக்க மற்றும் பன்னாட்டுத் தமிழ்க்கலைஞரும், அறிஞரும் ஒன்று கூடித் சிறப்பித்தார்கள். இவ்விழாவில் பரதநாட்டியம் தொடங்கி, மெட்டிசை, துள்ளளிசை என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், அமெரிக்க புரோட்வே நிகழ்ச்சியை மிஞ்சும்படி, கல்கியின் சிவகாமியின் சபதம் எனும் நாட்டிய நாடகத்தை அற்புதமாகத் தந்து மக்களைக் கவர்ந்தனர் மதுரை முரளிதரன் குழுவினர்.
இசைக்குழுவுடன் பிரபல தென்னிந்தியப் பின்னணிப் பாடகர்கள் மனோ,
சத்தியப்பிரகாஷ், மற்றும் பிரகதி போன்றவர்கள் கனேடியப் பாடகர்களுடன் கானமழை பெய்து, மகிழ்வித்தனர்.
மாலை நிகழ்ச்சிகளாக ஈழத்து நாட்டுக்கூத்து மேலும் கனேடிய அக்னி
மேலும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ்த்தேனீ, இலக்கிய வினாவிடை, மாணவர்கள் போட்டிகளென பல்வேறு போட்டிகள் வட அமெரிக்க ரீதியில் நடைபெற்றன.
இவையாவற்றிலும் மினசோட்டா மாநிலத்தவர்கள் பங்கு பெற்றதும், வெற்றி பெற்றதும் எமக்குப் பெருமையே.
– யோகி அருமைநாயகம்.
எங்களின் பயணக் களைப்பை சல்லடையாய் சலித்தெடுத்தது யோகி அய்யா அளித்த ஈழத்து விருந்து. கனடா வாழ் தமிழர்களின் தமிழ்ப் பற்று எங்களை மெய் சிலிர்க்கச் செய்தது. அங்கே இருந்த இரு நாட்களும் தமிழர் வாழும் அல்ல தமிழர் ஆளும் நகரில் இருந்த உவகை கிடைத்தது.