\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வேர்களை வெறுக்காதீர்!

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2022 1 Comment

 

காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய்  உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான  உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள்.

 

அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது.

 

எடுத்தாள்.

 

“மேடம்… கோதை அரை நாள் லீவு சொல்லி இருக்காங்க. அவங்க சித்தப்பாவுக்கு ஏதோ உடம்பு முடியலையாம். உங்ககிட்ட சொல்லச்  சொன்னாங்க”

 

“ம்ம்”  என்று மட்டும் சொல்லிவிட்டு துண்டித்தாள்.

 

கோமதி – பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர். வயது நாற்பத்தி மூன்று. கணவன் தனியார் கல்லூரி பேராசிரியர். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

 

தன் எதிரே மேசையில் கிடந்த பென்சிலை எடுத்து இரண்டு கை விரல்களாலும் உருட்டிக் கொண்டே அண்ணாந்து தளத்தைப் பார்த்தாள்.  பார்வைதான் அங்கு இருந்ததே தவிர, அவள் நினைவுகள் மெட்ரோ வேகத்தில் பின்னோக்கி நகர்ந்து, அவளது சிறுவயதில் போய் சிக்கிக்கொண்டு நின்றது.

 

சற்றுமுன் தொலைபேசியில் கேட்ட அந்த ஒற்றை சொல் தான் அதற்கு காரணம்.

 

‘ சித்தப்பா’

 

முரளி.  பெயர் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால், முகம் உருவம் எல்லாம் அவள் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படித்தபோது பார்த்ததுதான். அதற்குப் பிறகு ஏறத்தாழ இந்த முப்பது வருடத்தில் ஒரு முறை கூட அவரை கோமதி பார்த்ததே இல்லை. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். அதில் ஒருவர், தான் பிறப்பதற்கு முன்பு இறந்து விட்ட நிலையில், முரளி சித்தப்பா மட்டும் தன் பள்ளிப் பருவத்தில், தன் வீட்டில் தங்கி இருந்தது அவள் நினைவில் பசைபோல் ஒட்டிக் கொண்டு நின்றது.

 

அப்போதெல்லாம் முரளிக்குத் திருமணமாகவில்லை. அண்ணன்,  அண்ணி, கோமதி, பாலு என்று வீட்டில் இருந்த நான்கு  பேர் மீதும் கட்டற்று  பாசம் வைத்திருந்த முரளியை, கோமதிக்கு கொஞ்சம் கூடுதலாகவே பிடிக்கும்.

 

சில நாட்கள், பள்ளியிலிருந்து கோமதியையும் பாலுவையும்  அழைத்துவர தாமதமாக வரும் முரளி, ‘கோமதி… நான் லேட்டா வந்தத, அப்பா கிட்ட போட்டு விடக்கூடாது… ப்ளீஸ்!. நான் கடலை மிட்டாய் வாங்கித் தரேன்’  என்று  கொஞ்சலாக கெஞ்சும் காட்சி கோமதியின் கண்முன் வந்த போது அவளையும் அறியாமல் நீர்த்திவலைகள் கன்னங்களில் உருண்டோடியது. 

 

கோமதி கண்களை துடைத்துக் கொண்டாள். 

 

அலுவலக வருகை பதிவேடுகளை கொண்டுவந்து அவள் மேசையின் இடது ஓரத்தில் அடுக்கிய  அலமேலு, “ஏன் மேடம் ஒரு மாதிரி இருக்கீங்க ? உடம்புக்கு முடியலையா?” என்று விசாரித்தாள்.

 

இயந்திரத்தனமான உலகில் இப்படி உண்மையாய் விசாரிக்கும் பண்பு கூட மனிதர்களிடமிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஓடும் தொடரியை, பேருந்தைப் பிடிக்க அவசர அவசரமாய் ஓடும் மனிதர்களுக்கு… மன்னிக்கவும், ஓடும் இயந்திரங்களுக்கு அடுத்தவரின் அழுகையை, துக்கத்தைப் பற்றி விசாரிக்க துளியும் நேரமோ எண்ணமோ இருப்பதில்லை.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அலமேலு. திடீர்னு என் சித்தப்பா ஞாபகம் வந்துடுச்சு.”

 

“என்னாச்சு அவருக்கு?”

 

கோமதி பெருமூச்சுவிட்டு, “யாருக்குத் தெரியும்? அவர் எங்க இருக்காருன்னே  தெரியலையே!”

 

அலமேலுவிற்கு  ஒன்றும் புரியவில்லை. வெறிக்கப் பார்த்தாள்.

 

“உட்காரு அலமேலு.”

 

“வேண்டாம்மா!”

 

“அட! உட்காரு… நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். மரியாதை எல்லாம் மனசுல  இருந்தா போதும்ன்னு.”

 

அலமேலு, அந்த அலுவலகத்தில் தினக்கூலி ஊழியர். ஒரு அதிகாரியின் முன் அமர்வதில் கீழ்நிலை ஊழியர்களுக்கு இச்சமூகத்தால் கட்டமைத்து தரப்பட்டிருக்கிற   சங்கடங்கள், அலமேலுவிற்கும் இருந்தது. ஆனால் கோமதி அதைப் பொருட்படுத்தமாட்டாள். 

 

அன்பு ஒருபோதும் மரியாதையை எதிர்பார்ப்பது கிடையாது.

 

ஆரோக்கியமான உறவுகளின் அடித்தளம் அன்பொன்றே! உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள எந்த சிரத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அன்பு மட்டும் இருந்தால் போதும். 

 

“நான் ஏழாவது படிக்கும்போது எங்க சித்தப்பா, வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டாரு, என்ன பிரச்சினைன்னு  அப்போ எனக்குத்  தெரியாது. ஆனா…’ எனக்கு இருந்த ஒரு தம்பியும் செத்துப்போயிட்டான். அவனை தலைமுழுவிட்டேன். இனிமே யாராவது அவன, அங்கே பார்த்தேன்…இங்க பார்த்தேன்னு  பேசிட்டு கீசிட்டு வந்தீங்க… அப்றம் என்னை நீங்க… உயிரோடவே பார்க்க முடியாதுன்னு’ எங்க அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருந்தது மட்டும் இன்னும் காதுக்குள்ள லேசா கேட்டுகிட்டே இருக்கு. 

 

எனக்கு கருத்து தெரிஞ்சதுக்கப்புறம், எங்க அம்மா சொன்னாங்க… சித்தப்பா யாரோ ஒரு பொண்ண காதலிச்சு, அவங்களோட ஊற விட்டே  ஓடிட்டதா.

 

“இன்னை வரைக்கும், நீங்க உங்க சித்தப்பாவைப் பத்தி எந்தச் செய்தியும் கேள்விப்படவே இல்லீங்களா மேடம்?”

 

“இல்ல. எங்க அப்பாவோட  சாவுக்கு வருவார்ன்னு மனசு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே  இருந்தது. அந்த துக்கத்துலேயும்  கண்கள் அவரைத் தேடிட்டு இருந்தது. ஆனா.. வரல. அதுக்கு அப்புறம் அவர பார்ப்போம்ங்கிற நம்பிக்கையும் போயிருச்சு. ஆனா, என் தம்பி பாலு ஒரு தடவை சொன்னான்.  முரளி  சித்தப்பா மாதிரி ஒருத்தர பார்த்தேன்னு. அத நம்பறதுக்கில்ல. ஏன்னா.. அவர அவன் பார்க்கும்போது, என்ன விட சின்ன பையனா இருந்தான். 

 

“சரி…  இத்தன வருஷமா இல்லாம, இப்ப என்னத்துக்கு  மேடம்  திடீர்னு அவுரு ஞாபகம்.?”

 

“அதான் அலமேலு எனக்கும் தெரியல.இப்போ…கொஞ்ச நாளாவே மனித உறவுகள் பத்தி  அதிகம் யோசிக்கிட்டு இருக்கேன். எனக்கு வயசு ஆகறதால அப்படி தோணுதோ என்னவோ? உறவுகள் இல்லாம இருக்கிறது, ஊனமா இருக்கிறது சமம்ன்னு  நினைக்கிறவ நானு. நமக்கு ரெண்டு கைகளும் துவண்டு விழும்போதெல்லாம் சிறகுகள் கொடுத்து பறக்கச்செய்யற ஆற்றல் நம்ம நட்புக்கும் உறவுக்கும்தான் இருக்கு. 

 

நாகரீகங்கிற பேர்ல கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைச் சிதைத்தழிச்சிட்டு, தீவு வாழ்க்கை வாழப்பழகிக்கிட்ட  நாம, குறைந்தபட்சம் எல்லா  உறவுகளோடவும்  மெல்லிய தொடர்பிலாவது இருக்க முயற்சிக்கணும். அற்பக் காரணங்கள் சொல்லி, உறவுக்கறாங்க விழாக்களுக்கு, போகாம இருக்கறதும், அப்படியே போனாலும், குடும்பதோட போகாம,  தனியா  போய்ட்டு  வர்றதும் ரொம்ப தப்பு.

 

நான், இன்னும் அம்மாவோட சொந்தக்காரங்க எல்லாரையும் போய் அப்பப்போ  பார்க்கிறேன். நலம்  விசாரிக்கிறேன். ஆனா… இந்த சித்தப்பா தான்…”

 

தொலைபேசி அலறியது.

 

கோமதி எடுத்து மறுமுனையில் இருந்து வந்த குரலுக்குப் பதிலாக,”ஆமாம். இங்கதான்  இருக்காங்க. தோ.. அனுப்பிவைக்கிறேன்” என்று கூறிவிட்டு, ‘அலமேலு.. உன்ன ‘டிடி’ கூப்பிடுறாரு. சரி நீ போய் வேலைய பாரு’ என்று அனுப்பி வைத்தாள்.

 

மறுபடியும் அலறிய தொலைபேசியை  எடுத்து, ‘அனுப்பிவச்சுட்டேன் சார்!’  என்றபோது,

 

“மேடம்… நான் கேட் செக்கூயுரிட்டி  பேசுறேன். உங்கள பாக்க பத்மநாபன்னு  ஒருத்தரு வந்திருக்காரு. அனுப்பட்டுமா மேடம்?” என்றார்.

 

“ம்ம்” என்று சொல்லித் துண்டித்துவிட்டு, அவள் மேசைகளின் மீதிருந்து கோப்புகளில் ஒன்றைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

 

“எக்ஸ்கியூஸ் மீ மேடம்!” 

 

நிமிர்ந்து பார்த்த கோமதிக்கு  அதிர்ச்சியாயிருந்தது. முரளி சித்தப்பாவின் ஜாடையில் முப்பத்தைந்து வயது ஆண்.

 

‘அடச்சே! சித்தப்பாவை பத்தி நினைச்சு நினைச்சு, பாக்குறவங்க எல்லாம் அவரை மாதிரியே தெரிய ஆரம்பிசுட்டுதே!’ என்று  தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, 

 

“வாங்க… உங்களுக்கு என்ன வேண்டும் மிஸ்டர் பத்மநாபன் ?”

 

“அக்..  அது வந்து… மேடம்…”

 

வந்தவன் எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தயங்கி தயங்கி கழுத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமாய் திருப்பிக் கொண்டிருந்தான். கோமதியின் கண்களை ஊடுருவி கொண்டு பார்த்தவனுக்கு, முகம் சிவக்க தொடங்கியது. உதடு துடித்தது. வியர்த்து கொட்டியது. 

 

“சொல்லுங்க… ஏதாவது ட்ரான்ஸ்பர் மேட்டரா?”

 

“இல்லைங்க மேடம். ஒரு உதவி. நான் உங்க சித்தப்பா முரளியோட  ஒரே மகன். அப்பா.. பிளட் கேன்சர் பேஷன்ட்டா  அவஸ்தைப்பட்டுகிட்டு  கிடக்கிறார். சாகுறதுக்குள்ள உங்கள நேர்ல ஒருதடவ பார்க்கணும்னு அடம்பிடிக்கிறார். கோமதி கிட்ட கூட்டிட்டு போன்னு  கொஞ்ச நாளா அடம்பிடிச்கிக்கிட்டு இருந்தவரு, ஒரு ரெண்டு மூணு நாளா ஜாஸ்தியா பண்றார். அவர…இவ்வளவு தூரம் கூட்டிட்டு வர்றது சிரமம்னுதான்… நான்… உங்களை வீட்டுக்கு வரச் சொல்லி….”  வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான்.

 

சடாரென்று நாற்காலியை விட்டு எழுந்து வந்த கோமதி, “சித்தப்பா மகனா  நீ? ஐயோ… சித்தப்பா… என்ன பார்க்கணும்னு கேட்டுக்கிட்டு இருக்காரா? நான் சித்தப்பாவை ஒடனே பார்க்கணுமே! ” பத்மநாபன்  கைகளைப் பற்றிக் கொண்டு, கண்ணீர் சிந்தினாள்.

 

***    ***   ***   ***

 

   டுத்த நாள் போகாமல், அதற்கடுத்த நாள்  தன் மகன் வருணை  அழைத்துக்கொண்டு, பத்மநாபன் கொடுத்துவிட்டுப் போன முகவரிக்கு புறப்பட்டாள். அவள்  ஒருநாள் தாமதமாக போவதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஏற்கனவே தான் வருவதாக சொல்லி இருந்ததால், காலையிலிருந்து இரண்டு முறை செல்பேசியில் அழைத்து இருந்தான், பத்மநாபன். 

 

ஏறக்குறைய இரண்டரை மணி நேர பயணம். அன்று வந்திருந்தபோது, பத்பநாபன் சொன்ன விஷயங்கள் கோமதிக்குள் மீண்டும் வரிசையாய் ஓடியது. பத்து வருடத்திற்கு முன், தன் தாயைப் பறிகொடுத்தது, திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையில் குழந்தையில்லை என்கிற காரணத்திற்ககாக அவனது மனைவி சமீபத்தில் அவனை பிரிந்து  தாய்வீட்டோடு  சென்று விட்டது,  அதற்கு பதிலாக,   ‘ நாளை மறுநாள் வந்து சித்தப்பாவை  முதலில் பார்க்கிறேன். அடுத்த வாரமே, உன் மனைவியை அழைத்து நான் பேசுகிறேன். நீ கவலைப்படாதே!, என் கிளாஸ்மேட்.. ஒரு லீடிங் கைனக்காலஜிஸ்ட். அவகிட்ட நானே அழைச்சுக்கிட்டு போறேன்’  என்றிவள் சொன்னது என்று கோர்வையாய் அவளுக்குள் ஓடியது.

 

அதன் தொடர்ச்சியாய், வழி நெடுக உறவுகளையும் அதன் உன்னதங்களையும் பற்றி சிந்தித்துக் கொண்டே போனாள், கோமதி. இணையம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் வழியாக  அறிமுகமில்லாத யார் யாரிடமும் பேசவும் சிரிக்கவும் தயாராக இருக்கிற இன்றைய தலைமுறை, ரத்த  உறவுகளுக்கு முக்கியத்துவம் தரத் தயங்குவது ஏன் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. வேர்களை வேண்டாம் என்று புறம் தள்ளிவிட்டு துளிர்க்க நினைக்கிற கிளைகளை என்னவென்று சொல்வது என்று சிந்தித்தாள், அவள்.

 

உறவுகளின் உன்னதம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமலிருப்பதையும், நிகழ்காலச்  சூழலில், தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு மிக முக்கியக் காரணம், பலர் , உறவுகளற்று தனித்து நிற்பதுதான் என்பதையும்  கோமதி உறுதியாக நம்பினாள். . உறவுகள் வலுப்பெறும்போது, எத்தகைய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனத்துணிவு கிடைக்கும் , எதையும் எதிர் நின்று போராடும் திடமான எண்ணம் பிறக்கும் என்கிற உண்மையையும் அவள் தெரிந்துவைத்திருந்தாள்.  

 

உண்மையிலேயே, உறவுகளை உலகம் மதிக்கவில்லை என்று கோமதி கவலைப்படுகிறாளா ? அல்லது அவள் அளவிற்கு அவளது கணவனே உறவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், உதாசீனப்படுத்துவதாய் எண்ணி வருந்துகிறாளா? என்று தெரியவில்லை.  எந்த உறவாக இருந்தாலும்  அதை பேணுவதில் ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. ஆழ் மனதில் அப்படியொரு பிடிப்பு இல்லாத காரணத்தினாலேயே, முப்பது ஆண்டுகள் கழித்து தன் சித்தப்பாவைப் பார்க்கப்போகும் கோமதியோடு அவளது கணவனால் போகமுடியவில்லை.  கல்லூரியில் ஏதோ மிக  முக்கியமான கலந்தாய்வுக்கூட்டம், தன் தலைமையில் நடக்க  இருப்பதாகச் சொல்லி, தட்டிக்கழித்துவிட்டார். அவர் வரவில்லை, அவளும் வருணும் தான் வருகிறார்கள் என்று ஏற்கனவே பத்பநாபனிடம் சொல்லிவிட்டிருந்ததால், சித்தப்பா எதிர்பார்க்கமாட்டார். ஆனால் …விரைவில் தன்  கணவனையம் சித்தப்பாவிடம் அழைத்துவரவேண்டும் என்றும் தனக்குள்ளே  தீர்மானம் இயற்றிக்கொண்டாள்.

 

“கோமதிம்மா …” காரைவிட்டு இறங்குவதற்குள், கோமதியின் கைகளை   பிடித்துக் கொண்டு அழுதார், முரளி.

 

“தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு!” வருணிடம்  சொன்னதும், “வணக்கம் தாத்தா!” என்றான்  வருண். அவனை வாஞ்சையோடு வாரி அணைத்துக் கொண்டு  குலுங்கி குலுங்கி அழுதார்.

 

தன்  சித்தப்பாவின் கைகளை இறுக்கமாய்  பிடித்த கோமதி, இன்னும் கைகளை விலகிக்கொள்லாமல் பிடித்தபடியே இருந்தாள். கட்டுப்பாடுகளற்று கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.  

 

“சித்தப்பா… எத்தனை நாள் நான் உங்கள பாக்கறதுக்காக ஏங்கி இருக்கேன் தெரியுமா? ” அழுகையில் குரல் நசிந்துபோய் வந்தது. 

 

“நான் தப்பு பண்ணிட்டேனம்மா.  உறவுகளோட  முக்கியத்துவம் தெரியாம வயசுல, அவசரப்பட்டுட்டேன்.  இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, நான் கல்யாணமே வேண்டாம்னு, என், அண்ணன், அண்ணி, அண்ணன் பிள்ளைன்னு உங்க கூடவே இருந்திருப்பேம்மா. உறவுகள் தான் ஒருத்தனோட பலம். உறவுகளோட அன்பு அமிர்தம் மாதிரி. அது ஆயுள் நீட்டிக்கும்.  தோ ..பாரு… என்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்காக அவுங்க வீட்ல இருக்கிற எல்லோரையும் எதிர்த்துக்கிட்டு வந்தவ… அவங்களோட அன்புக்கு ஏங்கி ஏங்கி அற்ப ஆயுசுலேயே என்ன தனியா விட்டுட்டு  போயிட்டா. எவ்வளவு பணம் இருந்தும் என்ன புண்ணியம்? கோடீஸ்வரனா இருந்தாலும் சொந்த பந்தம் ஏதும் இல்லனா, அவன் அனாதை தான். நான் இத்தனை நாளா அனாதையா வாழ்ந்துட்டேன்.”

 

பத்மநாபன், தேநீர் தயாரித்து கொண்டு வந்து கொடுத்தான்.

 

“இது உன்னோட இன்னொரு மாமா. ஜெர்மனியில  இருக்கிற பாலு மாமா மாதிரியே… இவர் ‘பத்து மாமா’… பத்மநாபன் மாமா.” மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கோமதி.

 

“அம்மா பாலு கூடதான் இருக்கிறாங்களா ?” 

 

“ஆமா சித்தப்பா”.

 

“அண்ணன்  செத்த செய்தி கூட  மூணு மாசம் கழிச்சு தான் எனக்கு தெரிய வந்தது  கோமதி.  நான் சீரியஸா வேலூர் சிஎம்சி ஆஸ்ப்பிட்டல் ஐ.சி.யு -ல இருந்த நேரம். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, நியூஸ் பேப்பர்ல, ஆசிரியர் தின விழா போட்டோவுல உன்ன பார்த்தேன். புண்ணியவான்…இந்த ஊர் எடிஷன்ல போட்டு இருந்தான்.  அதுல உன் பேரு பதவிய பார்த்ததும், ஒரே பெருமிதம்  எனக்கு. உன்ன ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் வந்ததெல்லாம் மனசுல ஓட ஆரம்பிச்சது. சாகுறதுக்குள்ள… ஒரு தடவையாவது உன்ன பார்த்துடனும்னு தான்… இவன நச்சரிச்சு …   பத்து வந்து கூப்பிட்டதும் ..நீ ஓடோடி வந்ததுக்கு ரொம்போ நன்றி கோமதி. சித்தப்பா மேல உனக்கு இன்னும் கோவம் இருந்து, எங்க நீ வந்து என்ன பார்க்காம விட்டுடுவியோன்னு பயந்தேன். நான் போய்ட்டா… இந்த பையன் யாருமில்லாத அனாதையா நிப்பானானேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கிடந்தேன். இன்னிக்கி நீ நேர்ல வந்து…. என் கவலையெல்லாம் போக்கிட்ட . சின்னவளா இருந்தாலும் உன்ன கையெடுத்து கும்பிடணும்போல தோணுதுமா !”

 

“சித்தப்பா…இப்படியெல்லாம் பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சொல்வாங்க. இந்த பழமொழியை நூறு சதவிகிதம் நம்பறவ  நானு. உண்மையில உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்ல. ஆனா… அப்பா இறந்த போது எப்படியும் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். வராதது வருத்தம்தான். ஆனா…உங்க சூழல்…  அதேபோல பத்பநாபன நெனச்சி நீங்க ஒன்னும் கவலைப்படவேண்டாம். இனி.. அவன் அனாதையில்ல அவனோட அக்காவா நானிருந்து, அவன, அவன் பொண்டாட்டியோட  சேர்த்துவச்சி ,நான், வாழவைக்கிறேன்.

 

“ஐயோ… கடவுளே! இதுக்குமேல எனக்கு என்ன வேணும் ? மனசுக்கு நிறைவா இருக்கு கோமதி. இப்போவே  இந்த உயிர் போய்ட்டாக்கூட தேவல.  நிம்மதியா சந்தோஷமா போகும்.”  தன்னைப்  பிடித்து வாட்டிக்கொண்டிருக்கிற ரத்தப்புற்றுநோயிலிருந்தே விடுதலை கிடைத்துவிட்டதுபோல   லேசாக உணர்ந்தார், முரளி.  

 

“சித்தப்பா… அதெல்லாம் போகக்கூடாது. என் பையன் டாக்டராகி உங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வரைக்கும் …ஏன் அவன் கல்யாணத்தையும் நீங்கதான் முன்னிருந்து நடத்தி வைக்கப் போறீங்க.”  நம்பிக்கையோடும், ஒரு உறவு புதுப்பிக்கப்பட்ட கர்வத்தோடும் பேசினாள், கோமதி. 

 

“தம்பி.. இப்படி வந்து அப்பாக்கூட  நில்லுங்க.”

 

ஏதும் கேட்காமல் ஓடிவந்து நின்றான், பத்மநாபன்.  

“சித்தப்பா..  இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள். இரண்டு பேருமா  சேர்ந்து எம்பையன  ஆசிர்வாதம் பண்ணுங்க…”

 

“வருண்  காலில் விழுந்து எழுந்ததும், பத்மநாபன் அவனை நெற்றியில் முத்தமிட்டு ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா ‘ என்றான்.

 

முரளியும், அவன் நெற்றி, கன்னம் என முத்த மழை பொழிந்தார். 

 

வருணிடம் , ” இந்த பர்த்டேக்கு அம்மாவோட கிப்ட்… இந்த தாத்தாவும் மாமாவும் தான்” என்றாள், கோமதி.

 

” சூப்பர் கிப்ட்மா.. எனக்கு இவுங்கள ரொம்ப பிடிச்சி இருக்கும்மா ” 

 

கோமதிக்குள் இனங்கண்டுக்கொள்ளமுடியாத உணர்வுகள் துளிர்க்கத்தொடங்கியது.

 

  • புதுவைப் பிரபா

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. AGauriSankar says:

    மிகவும் அருமையான கதை. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad