\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழ்ப் பயிற்சிப் பட்டறை

tamil-immersion_10_520x399வட அமெரிக்காவில் எண்ணற்ற சங்கங்களைப் பார்த்திருப்பீர்கள், பல தமிழ்ச் சங்கங்களாவும் இருக்கக் கூடும். பெரும்பாலான சங்கங்கள், ஜனரஞ்சகம் என்ற போர்வையில் திரைப்படம் சார்ந்த ஆட்டத்துக்கும், பாட்டுக்கும் மட்டுமே முதன்மையளித்து செயலாற்றுவதையும் கண்டிருப்பீர்கள். கேளிக்கை நடவடிக்கைகளிலும் நல்ல கருத்துக்களையும், கலைகளையும் கற்றுத் தரும் நோக்கமுள்ள அமைப்புகள் கிடைப்பது அரிதாக உள்ள இக்காலத்தில், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பான மினசோட்டாத் தமிழ்ச்சங்கப்  பள்ளி செய்து வரும் சேவையைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம்.

கடந்த ஜுன் மாதம் 22 மற்றும் 23 ஆம் தினங்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) மினியாபோலிஸின் வடக்குப் பகுதியிலுள்ள புறநகர் ஒன்றான வுட்பரி நகரிலுள்ள ஒரு அழகான பூங்காவில், தமிழ் மாணாக்கர்களின் பட்டறை மிக அழகாக நடந்தேறியது. முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழ்ப்பள்ளியின் இலச்சினை பொறித்த மேலங்கியை சீருடையாக அணிந்து கொண்டு பங்கேற்றதைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பலவிதமான, தமிழ்த் தொடர்பான கலை மற்றும் விளையாட்டுக்களை நம் வருங்கால சந்ததியினருக்குக் கற்றுத் தருவதே இந்தப் பட்டறையின் நோக்கமென்பது இரண்டு தினங்களில் இதனை அருகிருந்து பார்த்ததில் தெளிவாக விளங்கியது.

tamil-immersion_1_520x371இரு தினங்களும் முதல் நிகழ்ச்சியாக, யோகாசனப் பயிற்சிகளுடன் பொழுது புலர்ந்தது. இந்தியாவிலிருந்து கோடை விடுமுறையில் தம் பிள்ளைகளைப் பார்க்க வந்திருந்த திரு. குணசேகரன் ஐயா அவர்கள் மனமுவந்து நேரம் ஒதுக்கி இரு தினங்களும் வந்திருந்து குழந்தைகளுக்கு யோகப் பயிற்சி அளித்தார். அவர் வேதாத்ரி மகரிஷி அவர்களின் கூடத்தில் யோகா மற்றும் தியானப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. யோகப் பயிற்சியுடன் கூடி, மனதை ஒருநிலைப் படுத்துதல், நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழ்தல் மற்றும் பிறர் நலம் பேணுதல் எனப் பல நல்ல பண்பாடுகளையும் அவற்றின் பின்னணிகளையும் மிகவும் அழகாக விளக்கினார், குணசேகரன் ஐயா அவர்கள்.

அதனைத் தொடர்ந்து திருமதி. மமதாலக்‌ஷ்மி குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி அளித்தார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இயற்றி தமிழ்த் தாய் வாழ்த்தாய் அங்கீகரிக்கப்பட்ட “நீராரும் கடலுடுத்த..” பாடலை பரத நாட்டியம் மூலம் அபிநயம் செய்து காட்டியது காண்பதற்கு வியப்பாகவும், நடனத்தின் மூலம் வாழ்க்கை முறைகளையும், கதைகளையும் மற்றும் கவிதைகளையும் சித்தரித்த நம் முன்னோர்களின் கலைத் திறமையை உணர முடிந்தது.

tamil-immersion_4_520x292நூறாண்டுகளுக்குப் பிறகும் தமிழனத்தால் மறந்திட இயலாத வெட்டறிவாள் மீசைகொண்ட முண்டாசுக் கவிஞனின் “ஜெய பேரிகை கொட்டடா..” பாடலைச் சற்றும் வீரியம் குறையாமல் கணீர்க் குரலுடன் பாடி, அதே கணீர்க் குரல் குழந்தைகளிடமிருந்து வரும்வரை இடைவிடாது பயிற்சி அளித்த திருமதி. லக்‌ஷ்மி அவர்களின் சாரீரம் கேட்டுக் கிறுகிறுக்க வைத்ததென்றால் மிகையாகாது. பாரதியின் பாடலுடன் தானே இயற்றிய மினசோட்டாப் பள்ளி குறித்த பாடல் ஒன்றையும் அவர் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்தார். பாடல் ஊக்கமூட்டுவதாகவும், குழந்தைகளை மிகவும் ஈடுபடுத்துவதாகவும் அமைந்திருந்தது.

tamil-immersion_2_520x371வீணை, தம்பூரா, தபேலா முதற்கொண்டு தாரை தப்பட்டை வரையிலான தமிழர்களின் பழம்பெருமை பேசும் வாத்தியக் கருவிகளின் அணி வகுப்பு நெஞ்சை ஆட்கொண்டதில் வியப்பேதும் இல்லை. இவற்றை உபயோகப் படுத்துவது எப்படி என்பதை மிகவும் அழகுடனும் பொறுமையுடனும் கற்றுத் தந்த திரு. பத்மனாபன் அவர்களின் பணி போற்றுதற்குரியது. மேலும், பாரதியின் “பாருக்குள்ளே நல்ல நாடு..” பாடலை மிகவும் அழகாகப் பாடி, குழந்தைகளுக்கும் அதனைப் பாடுவதற்கு கற்றுக் கொடுத்தார். நம் பிஞ்சுகள் நம் தாத்தன் பாரதியின் வரிகளை இசையோடு கூடிப் பாடுவதைக் கேட்கையில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

tamil-immersion_5_520x292வீணை, தம்பூரா, தபேலா முதற்கொண்டு தாரை தப்பட்டை வரையிலான தமிழர்களின் பழம்பெருமை பேசும் வாத்தியக் கருவிகளின் அணி வகுப்பு நெஞ்சை ஆட்கொண்டதில் வியப்பேதும் இல்லை. இவற்றை உபயோகப் படுத்துவது எப்படி என்பதை மிகவும் அழகுடனும் பொறுமையுடனும் கற்றுத் தந்த திரு. பத்மனாபன் அவர்களின் பணி போற்றுதற்குரியது. மேலும், பாரதியின் “பாருக்குள்ளே நல்ல நாடு..” பாடலை மிகவும் அழகாகப் பாடி, குழந்தைகளுக்கும் அதனைப் பாடுவதற்கு கற்றுக் கொடுத்தார். நம் பிஞ்சுகள் நம் தாத்தன் பாரதியின் வரிகளை இசையோடு கூடிப் பாடுவதைக் கேட்கையில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

tamil-immersion_7_520x347நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டும்தானா என்ற கேள்வி எழுந்த நமக்கு, உடனடியாக விடையளிப்பது போல் மொத்தக் குழுக்களும் திறந்த வெளி நோக்கி நடக்கத் தொடங்கினர். கருப்புத் துணி போர்த்திய ஒரு நீளமான கட்டு ஒன்றைத் தோளில் சுமந்த வண்ணம் கூட்டத்தை வழிநடத்தி சென்றார் சிவானந்தம். ஒன்றும் விளங்காமல் பின்சென்ற நமக்கு சற்று நேரத்திற்கு பின் விளங்கியது தமிழரின் பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பப் பயிற்சி தொடங்கவிருக்கிறது என்பது. குழந்தைகள், குறிப்பாக, ஆண்பிள்ளைகள் மிகவும் ஆர்வமாய்க் கற்றுக் கொண்டனர். சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் ஒருங்கிணைந்த பயிற்சி என்பது நன்றாக விளங்கியது.

tamil-immersion_7_520x292

 

கபடி நம்மூர் விளையாட்டு. அடுத்த தலைமுறை பலருக்கு இப்படி ஒரு விளையாட்டு இருப்பதாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. விளையாட்டின் விதி முறைகளையும், நுணுக்கத்தையும் தனக்கே உள்ள ஈடுபாட்டுடன் குழந்தைகள் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் அழகாக விளக்கிக் கொண்டிருந்தார் சுந்தர மூர்த்தி. குழந்தைகளும் வழக்கம் போல் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஒரு பெரிய அளவில் போட்டியும் நடத்தி குழந்தைகளும் விளையாடி அசத்தி விட்டனர்.

பல உடலைக் களைப்பாக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் சில இளைப்பாறும் இடைவேளைகள் வழங்கப்பட்டன. வழக்கம் போல் நம் குழந்தைகள் மின்னணு இயந்திரங்களுக்கு அடிமையாகி தங்களுக்குள்ளேயே ஒரு தீவு வகுத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு தீர்வு வைத்திருந்தனர் தன்னார்வத் தொண்டர்கள். “இளைப்பாறும் விளையாட்டு” என்ற பெயரில் பல பழங்காலத் திண்ணை விளையாட்டுக்களை அறிமுகப் படுத்தினர். ஆடு புலி ஆட்டம், தாயக் கட்டம், பல்லாங்குழி என மூளைக்கு வேலை மற்றும் பொழுது போக்கு ஆட்டங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்பட்டன.

tamil-immersion_8_520x309

கிராமிய நடனங்களான மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற ஆட்டங்களும் முறைப்படிக் கற்றுவிக்கப் பட்டன. பெரிய அளவில் விதிமுறை மற்றும் இலக்கணம் இருக்காது என நம்பிக் கொண்டிருந்த நம்போன்றவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர் சுந்தரமூர்த்தி மற்றும் ராஜி. இந்த நடனங்களின் நெளிவு சுளிவுகளையும், காரண காரியங்களையும் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து ஆடிக்காட்டி அசத்தினர் இவர்களிருவரும்.

 ஒவ்வொரு பொழுதினிலும் அதற்கேற்ப பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப் பட்டன. கிட்டத்தட்ட நம்மூரில் நடப்பது போல் பந்தி முறை. வாழை இலை மட்டுமில்லை, மற்றெல்லாம் நம்மூரை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னார்வத் தொண்டர்கள் பரிமாற, குழந்தைகளனைவரும் நம்மூரில் சாப்பிடுவதுபோல் கையில் பிசைந்து ருசியை ரசித்து உண்டது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், அதே சமயத்தில் நம்மூரை நினைவு படுத்துவது போலவும் அமைந்தது.

 பட்டறை முடியும் தருவாயில் குழந்தைகள் அனைவரின் கருத்துக் கேட்கப்பட்டு, அந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த தமிழில் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பற்றித் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். அனைவரும் சற்றும் மாறாமல் தெரிவித்த கருத்து ஒன்றே ஒன்று “மீண்டும் அடுத்த வருடமும் இதேபோல் பட்டறை நடத்தப்பட வேண்டும்” என்பதே அது.

 

tamil-immersion_9_520x309பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நன்றி நவிலல்கள், பிரியா விடைகள் எல்லாம் தொடர்ந்தன. பட்டறை முடிந்து கிளம்ப வேண்டுமென்ற நிதர்சனம் விளங்கியதும் அனைவரின் முகத்திலும் ஒரு மெல்லிய வருத்தம் இழையோடியது. அந்த வருத்தத்தோடு கிளம்பும் குழந்தைகளைப் பார்க்கையில் இவர்களுக்காக எந்தத் தடங்கல்களையும், போராட்டங்களையும் சந்தித்தாலும் இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழ்ப்பள்ளி குழுவினர் முகத்தில் தெரிந்தது!!!

– ஆசிரியர் குழு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    நம் தமிழ் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்ட பயனுள்ள நிகழ்வை
    கட்டுரை வடிவில் நம் கண் முன்னே கொண்டு வந்தது மிக அருமை…

    நன்றிகள் பல பனிப்புக்கள் ஆசிரியர் குழுவிற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad