ஓய்வு
”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே
உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்”
தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும் தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் கொளுத்துகையில் எனத் தொடர்ந்தது.
கை ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருந்தாலும், மனது முழுவதும் சொல்லப்படும் மந்திரங்களிலும் அதன் உட்பொருளிலும் லயித்த வண்ணம் இருந்தது. வட மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராகையால் அட்சர சுத்தமாய் ஸ்லோகங்களை உச்சரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார் ஐயர். அவை மட்டுமல்லாமல் தமிழில் உள்ள பக்திப் பாடல்கள் பலவும் அவருக்கு அத்துபடி. அவற்றையும் பொருளறிந்து, சுவையறிந்து, லயித்துப் பாடுவார்.
அன்றைய தினம் அவரின் வாழ்வில் மறந்திட முடியாத ஒரு குறிப்பிடப் படவேண்டிய தினம். அவர் பணிக்குச் செல்லும் கடைசி நாள். ஆம், கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது வருடங்களாக ஆசிரியர் பணி செய்து ஓய்வு பெறும் நாள். அன்று மாலை அவரை வழியனுப்ப சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலையில் முழுவதுமாகத் தயாராகி, வழக்கம்போல் சட்னியுடன் கூடிய நான்கு இட்லிகளைச் சாப்பிட்டு முடித்து, மதிய உணவுக்கும் மனைவி சரஸ்வதி அம்மாள் கொடுத்த சிறிய டிஃபன் கேரியரை மிதி வண்டியின் முன்னிருந்த பாரில் வைத்திருந்த உலோகத்தாலான பிடியில் பொருத்திக் கொண்டு மிதி வண்டியில் ஏறி அமர்ந்து கடைசி நாளாகப் பள்ளி நோக்கிப் பயணிக்கத் துவங்கினார். பள்ளி நோக்கி மிதிவண்டி செல்ல, அவரின் மனம் பின்னோக்கி பயணம் செய்யத் துவங்கியது.
முப்பத்தியொன்பது வருடங்களுக்கு முன்பு…. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், செகண்டிரி கிரேடு பயிற்சியும் முடித்து ஆசிரியப் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் கோவிந்த ராஜன். அதே சமயத்தில் இந்தியன் வங்கியிலிருந்து குமாஸ்தா வேலையும் கிடைத்திருந்தது. சொற்பப் படிப்பிற்கே அதிக வேலைவாய்ப்புக் கிடைத்த காலமல்லவா அது.
குமாஸ்தா வேலைக்குப் பத்து ரூபாய் சம்பளம் அதிகம். அது மட்டுமல்ல, பல பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளும் அதிகம். கோவிந்த ராஜனின் அப்பாவின் நண்பர் செட்டியார், “தம்பி, பாங்கு வேலை கெடக்கிறது குதிரைக் கொம்புப்பா, புத்திசாலியா லச்சணமா அதுல சேந்து நல்ல நெலமக்கு வரப்பாரு.. வாத்யாரு வேலயுல பெருசாக் காசு எதுவும் பாக்க முடியாது..” வாழ்க்கையை வணிகமாய்ப் பார்ப்பவரின் வாழ்க்கைக்குப் பயனுள்ளதான அறிவுரை…. “உனக்குப் பிடித்த வேலையை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்” அந்தக் காலத்திலேயே முழு சுதந்திரமும் அளித்திருந்த கோவிந்த ராஜரின் தந்தை. இந்த அறிவுரைகளுக்கு மத்தியில் மனப் போராட்டம் எதுவுமின்றித் ஆசிரியர் வேலையை தேர்ந்தெடுத்திருந்தார்.
”தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
பிறர் வாடப் பலவினைகள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தும்”
வேடிக்கை மனிதராக இல்லாமல், வாழும் வாழ்விற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்ற நினைப்பு வலுவாய் அமையப் பெற்றவர் கோவிந்த ராஜன். படிப்பறிவால் ஒரு வீட்டையும், நாட்டையும் பல அடி முன்னேற்றலாம் என்ற கருத்தில் தீவிரமான நம்பிக்கை கொண்ட அவர், ஆசிரியர் என்பது ஒரு தொழிலல்ல, சேவை என்ற முழு நம்பிக்கையுடன் ஆசிரியர் ஆவதாக முடிவெடுத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை தான் அந்த முடிவு எடுத்தது குறித்த பெருமையுணர்வு அவரிடம் எப்போதும் காணப்படும்.
முதல் நாள் பள்ளிக்குப் பாடம் நடத்துவதற்காகச் செல்கிறார். அவரைச் சுற்றியிருந்த அனைத்து ஆசிரியர்களும், தெய்வ பக்தி மிகுந்தவர்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும், நேர்மையாளர்களாகவும், அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர். அன்றிருந்த அனைத்து ஆசிரியர்கள் மத்தியில், வயதிலும் அனுபவத்திலும் மிகவும் குறைந்தவர் கோவிந்த ராஜன். அந்தப் பணிவை எப்பொழுதும் மனதில் கொண்டு, தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த அனைவரிடமும் மரியாதையுடனும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில் கவனத்துடனும் இருந்தார் கோவிந்த ராஜன்.
பாடம் மற்றும் பொது அறிவு கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி, பண்பு, நல்லொழுக்கம், நேர்மை, உண்மை மற்றும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான உயரிய குணங்கள் அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது தங்களின் பணி என மனப்பூர்வமாக நம்பும் ஆசான்கள். அவர்களின் கையில் தங்களது குழந்தைகளை முழுமையாக ஒப்படைத்து அவர்களின் வழிகாட்டுதல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிரகாசமாக மாற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் பின்பற்றும் பெற்றோர். அது நிச்சயமாகவே ஒரு பொற்காலம்.
அதுபோன்ற ஒரு காலத்தில் பணியைத் தொடங்கி, அதே போன்ற நீண்ட கால கட்டத்தில் தனது பணியைத் தொடர்ந்த அவர், அதற்கு நேரெதிரான கால கட்டத்திலும் பணியாற்ற வேண்டிய நிலையிலிருந்தார். தனது கால்சட்டைப் பையில் வைத்திருக்கும் சிகரெட் பாக்கெட்டின் வடிவம் தெளிவாக வெளித்தெரிய, “என்னைப் பின்பற்றாதே, நான் சொல்வதை மட்டும் பின்பற்று” எனத் தத்துவம் பேசி, புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எனக் கடமைக்காக அறிவுரை சொல்லும் ஆசிரியப் பெருமக்கள் சக ஆசிரியர்களாக இருக்கும் கால கட்டத்திலும் பணி செய்ய வேண்டியிருந்தது. அது குறித்து அவருக்கு அவ்வளவாகப் பெருமையாக இல்லாவிடினும், தனது பணியைச் செவ்வனே தொடர்ந்தார். அனைத்து தர மனிதர்களும், வயது வேறுபாடின்றி, அவர் மீது மரியாதை காட்டுமளவுக்கு தனது செயல்களால் தன் மரியாதையைக் காத்துக் கொண்டவர் அவர்.
வாழ்க்கையின் மேம்போக்கான விடயங்களையும், பண வரவு செலவையும் என்றுமே பெரிதாக நினைத்தவரல்ல அவர். ”போகும்போது தலையில என்ன கட்டிண்டு போப்போறோம், கடசி காலத்தில போட்டுண்டிருக்கிற அங்கவஸ்திரத்தக்கூட உருவிண்டுதான் எரிப்பா” எனத் தத்துவார்த்தமாய்ச் சொன்னாலும், அதனை உண்மையாகவே நம்பி, தன் பிற்காலத்திற்கோ பிள்ளைகளுக்கென்றோ எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை அவர். அது குறித்த கவலை எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.
பல நிகழ்வுகள் அவர் மனதில் நிழலாடுகின்றன. வங்கி வேலையை வேண்டாமென்று உதறித் தள்ளியதும், அவருடன் படித்து அவரின் படிப்பில் பாதிக்கும் குறைவான சூட்டிகையுடன் இருந்த அவர் நண்பர் கனகவேல் வங்கியில் சேர்ந்து, மாநில அளவில் பொது மேலாளராக வளர்ந்து, கார் பங்களாக்களுடன் ஒரு சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றதும், நமது கதாநாயகனின் வாழ்நாளில் அவரைச் சுற்றியிருப்பவர் அவரிடம் தினம் பாடிக் கேலி செய்யும் பாடல். அது குறித்த எந்தவொரு கவலையும் அவரிடம் இருந்ததில்லை.
அந்த சிறிய ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் அவர் கவனத்திற்கு வந்தது சுற்றியிருந்த வெள்ளந்தியான மனிதர்கள். பெரும்பாலானவர்கள் தோற்றத்திலும் அமைப்பிலும் வெகுவும் எளிமையானவர்கள், படிப்பறிவு என்பது மருந்துக்கும் இல்லாதவர்கள், அதனால்தான் என்னவோ, பணிவு, கனிவு, பண்பு போன்ற உயரிய குணங்கள் கொண்டவர்களாக விளங்கினர். பார்த்த மாத்திரத்தில் அவர்களின் மேல் அன்பு மயமானார் நம் நாயகர். அவர்களும் ஐயரே என்றும் ஐயா என்றும் அவரை அழைத்து அவர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் செலுத்தத் தொடங்கினர்.
ரேஷன் கார்டு வாங்குவதற்கு ஃபார்ம் ஃபில்லப் செய்து கொடுத்து உதவி செய்வதில் தொடங்கி வீடுவீடாகச் சென்று பெற்றோர்களிடம் எடுத்துரைத்து குழந்தைகளைத் தனது சைக்கிளில் அழைத்துச் சென்று ஆரம்பப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பது வரை மற்றவர்களுக்காக வாழ்வது என்று தனது இளமைக் காலத்திலேயே முடிவெடுத்து அதனைத் தீவிரமாகச் செயலாற்றினார் ஐயர். பள்ளி முடிந்த மாலை நேரங்களில் மாணாக்கர்களுக்கு டியூஷன் நடத்தி பணம் சம்பாதிக்கும் பல ஆசிரியர்களுக்கிடையே ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து படிக்க வைப்பார் நம் நாயகர். இரவு நேரங்களில், முறை சாராக் கல்வி என்ற முறையில், கிராமப் புறங்களில் வாழும் படிப்பறிவில்லாத பெரியவர்களுக்கு அடிப்படைப் பாடங்களை நடத்துவதையும் தொழிலாகக் கொண்டிருந்தார்.
நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே பள்ளி வளாகத்திற்குள் சைக்கிளில் நுழைந்தார். சீருடை அணிந்த மாணவர்கள் முதல், பெற்றோர், ஆசிரியர் என எதிர்வரும் அனைவரும் தம்மையறியாமல் கைகூப்பி வணங்க அவற்றை அமைதியுடன் பெற்று பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டே மிதி வண்டியை நிறுத்தி இறங்கினார். கட்டிடத்தின் முதன்மையாக இருந்த விநாயகர் கோயில் சென்று தனது கடைசி நாள் வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, தலைமை ஆசிரியர் அறை சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு தனது வகுப்புக்குச் சென்றார். வழக்கம் போல பாடம் நடத்தத் தொடங்க, மாணாக்கர்கள் அனைவரின் கண்களில் ஒரு சோகம். நாளை முதல் இந்த நல்லாசிரியரை இழக்க இருக்கிறோம் என்ற எண்ணம் மனதிற்குள் மூட்டிய வருத்தத்தை சிறுவர்கள் வெளிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தேற்றுவதை விட, திட்டமிட்டபடி அன்றைய பாடங்களை முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த ஐயர் ஒரு சில நொடிகள் அவர்களை அமைதிப் படுத்தி விட்டு, பாடங்களைத் தொடரலானார்.
பள்ளி முடியும் சாயுங்கால நேரம் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் தொடங்கி பல ஆசிரியர்களும், சில மாணவர்களும் மேடையேறி ஐயரின் புகழ் பாடினர். அவை எவையும் ஐயரைப் பெரிய அளவில் பாதித்ததாகத் தெரியவில்லை. தன் கடமை முடிவுற்ற நிறைவு ஒன்றே அவரிடம் வெளிப்பட்டதுபோல் தோன்றியது. விழா முடிந்து மாலை மரியாதையுடன் பள்ளி முழுவதும் வழியனுப்ப வீடு நோக்கி மிதி வண்டிமிதிக்கத் தொடங்கினார்…
மறுநாள் காலை….
”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே
உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்”
வழக்கம்போல தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, வழக்கத்துக்கு மாறாய் கோவிந்த ராஜய்யர் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. கட்டிலருகில் வந்து அவரை அசைத்துப் பார்த்து எழுப்ப எத்தனித்த மனையாள் அவரின் சில்லிட்ட உடலைத் தொட்டுணர, சில விநாடிகளில் நிஜம் புரிந்து மூர்ச்சையானார்!!!
– மதுசூதனன். வெ.
**//அது நிச்சயமாகவே ஒரு பொற்காலம்.
ரேஷன் கார்டு வாங்குவதற்கு ஃபார்ம் ஃபில்லப் செய்து கொடுத்து உதவி //**
இந்த வரிகள் எல்லாம் மனதில் எதையோ தேடவைக்கிறது.
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி = சின்னஞ்சிறு கதைகள் பல பேசி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். கதை நன்று.
தம்பி லெட்சுமணா, தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். வாழ்க்கையின் முதல் வேலைக்கு (கவனிக்கவும்: “முதன்மையான” வேலையல்ல) சற்று அளவிற்கதிகமான கவனம் தேவைப்பட்டது.
கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி. மனதில் எதையோ தேட வைக்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சி.
“பல சின்னஞ்சிறு கதைகள்” என்பதே சரியான கவிதைப் பிரயோகம் என்று நினைக்கிறேன். என் புத்தக அறையில் பத்திரமாய் வைத்திருக்கும் “பாரதியார் கவிதைகள்” (ஏழாம் வகுப்புப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக அளிக்கப் பட்டது 🙂 புத்தகத்தையும் ஒரு முறைப் புரட்டிச் சரி பார்த்துக் கொண்டேன். மகாகவியின் வரிகளைக் குறித்த குழப்பம் கூடாது என்ற காரணத்தால் குறிப்பிடுகிறேன்.
நன்றி பல.
Excellent story. It touched my soul in many
Ways. Thanks for that.
ஆசிரியர் கொவிந்தராஜய்யர் கதாபாத்திரம் என்றும் நினைவில் இருக்கும்படியாக உள்ளது. ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் அவர்மாதிரி ஆசிரியர் பணியினை புனிதமாக கருதி சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை ஓய்வு சிறுகதை எடுத்துக்காட்டியது. கதை சொல்லும்விதம் எளிய இயல்பாக இருந்தது. கதாசிரியருக்கு பாராட்டுக்கள்
பூ. சுப்ராமனின், பள்ளிகரணை, சென்னை