கவிஞர் ஈரோடு தமிழன்பன்
மின்னலைப் பிடித்து
வைக்கவா சட்டி பானை? “
என்று எதுகை மோனையுடன் எழுதுவதை, எதுகை மோனையுடன் கிண்டல் செய்பவரைத் தெரியுமா? கிட்டத்தட்ட 120 வருடங்கள் பழமையான கவிதை வடிவமாக இருந்தாலும் இன்னமும் புதுக் கவிதை என்ற பெயருடன் உலா வரும் கவிதை வடிவமாக இருந்தாலும் , ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழின் பெருமையெனக் கருதப்படும் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் சரி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழில் புகழுடன் விளங்கும் ஹைக்கூ எனப்படும் கவிதை வடிவமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவராக விளங்கும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர், முனைவர், திரு. ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கவிதைதான் அது. இதனை எழுதிய திரு. தமிழன்பன், மினசோட்டா தமிழ்ச் சங்கத்துடன் கூடிய தமிழ்ப் பள்ளிக்கு அண்மையில் வருகை தந்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 21 ஆம் திகதி) ஹாப்கின்ஸ் நகரில் மினசோட்டா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் வழக்கமான வார இறுதிப் பள்ளி நேரம் முடிந்த பிறகு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மினியாபோலிஸ் நகரில் தமிழ்ப் பள்ளி ஒன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்ற கவிஞர் ஐயா, அதன் நிர்வாகிகள் அழைத்த மறுநிமிடம் விழாவிற்கு வந்து சிறப்பிக்க இசைந்தார்.
ஏற்றுக் கொண்டதற்கு இணங்க, நேரம் தவறாமையுடன் விழா தொடங்குவதற்கு முன்பாகவே வந்து விட்டார் திரு. தமிழன்பன் அவர்கள். சுற்றி இருந்த அனைவரிடமும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நட்புடன் பேசத் தொடங்கினார். அனைவரின் பெயர் மற்றும் விவரங்களைக் கேட்டறிந்து மனதில் நிறுத்திக் கொண்ட அவர், தான் கேட்ட விவரங்களைத் தனது பேச்சில் குறிப்பிட்டுக் காட்டவும் தவறவில்லை. அனைவருடனும் சகஜமாக உரையாடுகையில், தன் குடும்பம் பற்றியும், தனது ஆர்வம் மற்றும் நம்பிக்கைகள் குறித்துத் தெளிவாகவும் சகஜமாகவும் பகிர்ந்து கொண்டார்.
பள்ளி மற்றும் சங்கத்தின் சார்பில் இந்தக் கூட்டம் இருபெறும் நிகழ்வுகளை அறிமுகப் படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதற்காரணம் மினியாபோலிஸ் நகரில் ஒரு தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை உருவாக்குவது – அன்றைய தினம் இதன் தொடக்க விழாவாக அமைந்தது, இரண்டாவது நோக்கம் பெரியவர்கள் படித்துப் பயனுற பல தமிழ்ப் புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஒன்றைத் திறந்து வைப்பது. இலக்கிய ஆர்வமும், ஆழமான படைப்பாற்றலும் கொண்ட கவிஞர் ஐயா இவை இரண்டையும் தொடங்கி வைத்தது மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.
இலக்கிய ஆர்வலர்களை ஒன்று கூட்டி, அவர்களின் ஆர்வத்திற்கேற்ப தமிழ் இலக்கிய நூல்களையும் படைப்புகளையும் விவாதித்து ஒவ்வொருவரின் கருத்துக்களையும், புரிந்துணர்தல்களையும் பங்கிட்டுக் கொள்வதே இந்த இலக்கிய வட்டத்தின் நோக்கம் என அமைப்பாளர் தன் உரையில் விளக்கினார். மேலும், இந்த இலக்கிய வட்டம் ஒன்று கூட இருக்கும் நாட்களும், அந்த நாட்களில் விவாதிக்க இருக்கும் தலைப்புகளும் விவரிக்கப் பட்டன. முதல் கூட்டமாக பாரதியாரின் பாஞ்சாலி சபதம் குறித்துப் பேச இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
நூலகத்தைப் பற்றிய குறிப்பில், இது முழுக்க முழக்க தன்னார்வத் தொண்டர்கள் தாமாக மனமுவந்து தந்த புத்தகங்களின் தொகுப்பு என அமைப்பாளர் குறிப்பிட்டது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய செய்தி. முதல் நாளிலேயே இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேர்ந்திருப்பதாகத் தரப்பட்ட தகவல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைப் படிக்கும் வாசகர்கள் தங்களின் புத்தகங்களை வழங்கி உதவ நினைத்தாலோ அல்லது இருக்கும் புத்தகங்களைப் படித்துப் பயனுற எண்ணினாலோ பனிப்பூக்களின் வாசகர் சேவை மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம். அந்தக் கோரிக்கைகளை நூலக அமைப்பாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பனிப்பூக்கள் பெருமை கொள்கிறது.
இன்னும் சில அமைப்பாளர்களும், தொகுப்பாளர்களும் தங்களுக்குத் தரப்பட்ட தலைப்புகளில் பேசி முடித்தனர். கூடியிருந்த கூட்டம் முழுவதும் கலையாமல் ஐயாவின் சிறப்புரைக்காகக் காத்திருக்க, கடைசியாக தமிழன்பன் ஐயா பேசுவதற்கு மேடைக்கு வந்தார். அமைப்பாளர்கள் அன்புடன் ஐயாவை உட்கார்ந்து வேண்டுமானால் பேசலாமல் எனக் கேட்டுக் கொள்ள, “இல்லை, இல்லை, நின்று கொண்டுதான் பேசுவேன்” எனப் புன்னகையுடன் கூறிக் கொண்டே ஒலிப் பெருக்கியை எடுத்துக் கொண்டு தயாரானார்.
முதிர்ச்சியுடன் கூடிய காட்டாற்று வெள்ளமெனப் பேச்சு. ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காத சரளமான பேச்சு. ஆனால் ‘ஆங்கிலமே கலக்காமல் தமிழில் பேசித்தான் ஆக வேண்டும் என்று ஒன்றுமில்லை” என்ற எதார்த்தமான கருத்தையும் ஆணித்தரமாய் எடுத்துரைத்தார். தமிழ்தான் சிறந்த மொழி என்று கூற வேண்டுமென்றால், தமிழ்க் கலாச்சாரம் உயர்வானது என்று கூற வேண்டுமென்றால், வேறு சில மொழிகளையும் கலாச்சாரங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்கொப்ப, உலகில் பல மூலைகளைப் பற்றியும், அவற்றின் அரசியல் பற்றியும், அவற்றின் மொழியியல் மற்றும் மொழிப் பற்று பற்றியும், பண்பாடு கலாச்சாரம் பற்றியும் சரளமாகக் கவிஞர் எடுத்தியம்ப இவரின் அறிதலின் அகலம் நம்மை அதிசயிக்க வைத்தது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்தி, அவளின் கணவன் கோவலன் எனக் குறிப்பிட்ட அழகை, நகைச்சுவையுடன் கூடி, கவிதைகளை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார். அதற்கு முன் புறநானூறு குறித்துப் பேசிய சிறுமி அத்விகாவின் பேச்சில் குறிப்பிடப்பட்ட ஆணாதிக்க சமூகம் என்பதை மீறி இளங்கோவடிகள் எவ்வாறு முற்போக்காக எழுதியிருக்கிறார் என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்திணைகளையும், அவற்றைச் சுற்றி அமைந்த வாழ்க்கை முறைகளையும் தமிழன் எவ்வாறு வெவ்வேறு இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளான் என்பதைக் கவி நயத்துடனும், சிறு சிறு நடைமுறை உதாரணங்களுடனும் விரிவாக விளக்கினார் கவிஞர். இந்த வரைமுறைக்குத் தொடர்பேதுமில்லாத அரபு நாட்டில் நடக்கும் நபிகள் நாயகத்தின் கதையைக் கூறும் உமறுப்புலவரும், தமிழில் கூறுவதால் பாலை நி்லத்தை ஒட்டிய கவிகள் அமைத்திருப்பதை நயம்பட உரைத்தார் கவிஞர்.
சோவியத் யூனியன் குறித்த குறிப்புக்கள் இவரின் பேச்சில் அதிகமாக தொனித்தது. ஐயாவின் இளமைக் காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாகவும், உலகின் வல்லரசுகளில் ஒன்றாகவும் திகழ்ந்த சோவியத் யூனியனின்பால் அவர் சிறந்த அறிதலும் புரிதலும் கொண்டிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. சோவியத் யூனியன் உடைந்ததற்கு முழுமுதற் காரணமாக அவர் குறிப்பிட்டது ரஷ்ய மொழியை வலுக்கட்டாயகப் புகுத்தியது என்ற கருத்தாகும். ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவரவர்களின் தாய் மொழி எவ்வளவு உணர்வு பூர்வமானது என்பதை அழகாக் குறிப்பிட்ட கவிஞர், தனது “அஜர்பெய்ஜான் நெருப்பு” கவிதை எப்படி விஷமிகளால் திரிக்கப் பட்டது என்பதையும் ஒரு சிறு குறிப்பாகச் சொல்லிப் புன்னகைத்தார்.
டாகெஸ்தான் என்றொரு நாட்டை நாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை. அந்த நாட்டில் பேசப்படும் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவார் என்ற மிகவும் பிரபலமான மொழியைப் பற்றியும் நாம் அறிந்ததில்லை. இந்த மொழியில் நம் பாரதியைப் போலப் புகழுடைய கவிஞர் ரசூல் கம்சடோவ் (Rasul Gamzatov) என்று ஒருவர் இருந்ததாக நமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. கவிஞர் இவரைப் பற்றி மணிக்கணக்கில் பேசுமளவுக்கு விடயம் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது நமக்கு. “இந்த அவார் மொழி நாளை இறந்து விடுமென்றால் இன்றே நான் இறந்து விடுவேன்” என்று குறிப்பிட்டானாம் இந்தக் கவிஞன், இது பாரதிதாசனின்
”இன்பத் தமிழென்னின் என்னுயிர்ப் பொருளாம்
குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்”
என்ற கவிதைக்கு ஈடாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரசூல் கம்சடோவ் இத்தாலி நகரில் ஒரு டாகெஸ்தான் பிரஜை ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் சந்திப்புக் குறித்து டாகெஸ்தான் சென்றபொழுது அந்தப் பிரஜையின் அன்னையிடம் தெரிவிக்கையில், அன்னை முதலாய்க் கேட்ட கேள்வி “என் மகன் அவார் மொழியில் பேசினானா?” என்பதாம். ”இல்லையம்மா, அவர் ஃப்ரென்ச் மொழியில் பேசினார், அதற்கான காரணம்தான் விளங்கவில்லை” என்று இவர் விடையளித்ததைக் கேட்டது, அன்னை தான் போட்டிருந்த துணியை எடுத்துத் தலையில் அணிந்து கொண்டாராம். அந்த கலாச்சாரத்தின் வழக்கத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலையில் துணியை அணிந்து கொள்வார்களாம். அதாவது, அந்த அன்னை தன் மகன் தனது மொழியில் பேசவில்லை என்றதும் அவனை இறந்தவனாகக் கருதினாளாம். அந்த தாய்க்கு தன் மொழிமேல் எவ்வளவு பற்று இருந்திருக்க வேண்டும். என்பதைக் கவிஞர் விளக்கக் கேட்ட நமக்கு மயிர்க் கூச்செறிந்தது.
மினசோட்டா மாகாணத்திற்கு அருகிலுள்ள விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தைச் (Wisconsin University) சேர்ந்த மொழியியலாளர் நாம் சாம்ஸ்கி (Noam Chomsky) அவர்களின் சமீபத்திய இந்திய விஜயம் பற்றிக் (2001 ஆம் ஆண்டு) குறிப்பிட்ட கவிஞர், அவரின் சென்னையில் நடைபெற்ற உரை பற்றியும் அதன்பிறகு கொல்கத்தா நகருக்குச் சென்று அவர் உரையாற்றியதைப் பற்றியும் குறிப்பிட்டார். கொல்கத்தாவில் பத்திரிகை நிருபர்கள் மொழியியல் வல்லுனரான சாம்ஸ்கியிடம் ஆயிரக்கணக்கான வருடங்களாக இலக்கணமும், கட்டமைப்பும் மாறாத மொழி இருப்பதாகத் தாங்கள் அறிவீர்களா என்ற கேள்விக்கு, “ஆம், தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ் மொழி” என்று குறிப்பிட்டார் என்று தமிழன்பன் கூறி முடிக்க, கூட்டத்தினரின் கரவொலி நிற்பதற்கு பல வினாடிகள் ஆயின. மேலும் சாம்ஸ்கி ”ஒருவேளை தமிழுக்கு இணையாகத் தொன்மையுடன் கூடிய ஒரு மொழி இருக்குமாயின், ஆஃப்ரிக்காவில் பேசப் படக்கூடிய ஸ்வாஹிலி (Swahili) மொழியாக இருக்கக் கூடும்” எனக் குறிப்பிட்டாராம். இதைக் கூறிய தமிழன்பன். ஸ்வாஹிலி மொழி இப்போது வழக்கிலில்லை என்பதையும் முத்தாய்ப்பாய்க் குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் தமிழ்க் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொண்ட மலையாளக் கவிஞர் ஐயப்ப பணிக்கர் சூழல் சேர்ந்த கவிதைகள் (Ecological Poetry) தமிழ் மொழி போல வேறெந்த மொழிகளிலும் எழுதப்படவில்லை என்று எழுதியதைக் குறிப்பிட்டார் கவிஞர். மேலும் மிகப் பிரபலமான செம்மீன் மலையாளத் திரைப்படக் கதாசிரியர் தகழி சிவசங்கரம் பிள்ளையிடம் மாஸ்கோவில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம் – உங்களின் பழமைமிக்க படைப்புகளுக்கு ஆதாரமாகக் காட்டப்படுபவையெல்லாம் வடமொழி நூல்களாக மட்டுமே உள்ளனவே, உங்களுக்கென்று தனித்தன்மையாகக் காட்டப்படும் இலக்கணங்கள் ஏதேனும் உள்ளனவா என்று. இதற்கு தகழி அளித்த பதில், “ஏன் இல்லை, எங்களின் சங்க இலக்கியங்களை விஞ்சும் பழமையும், தனித்தன்மை பெற்ற இலக்கியங்களும் உலகில் உள்ளனவா” என்பதாம் என்று குறிப்பிட்ட கவிஞர், மலையாளக் கவிஞர் தமிழைத் தன்மொழியாகக் கொண்டாடியதைக் கோடிட்டுக் காட்டினார்.
சாகித்ய அகாடமியில் பொறுப்பாளராக உள்ள மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், தனது ஆதி கவிகள் யாரெனக் குறிப்பிடுகையில் மலையாளக் கவிஞர்கள் எவரையும் குறிப்பிடாமல், “கபிலர், பரணர், ஔவையார்” எனத் தமிழ்க் கவிஞர்களைக் குறிப்பிட்டதையும் மிகவும் சிறப்பாகச் சொன்னார் தமிழன்பன் அவர்கள்.
ஹீப்ரு மொழி மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பேசப்படும் சில பழமையான மொழிகள் என மிகச் சிலவற்றைத் தமிழுக்கு ஒப்பான கால அளவைகள் கொண்ட மொழிகள் எனக் குறிப்பிடலாம் என்று கூறிய கவிஞர் அந்த மொழிகளை அதன் மக்கள் எவ்வாறு நேசிக்கின்றனர் என்பது பற்றியும் விரிவாக உதாரணங்களுடன் மேலும் சிறப்பாக விளக்கினார். அவர் பேச்சைக் கேட்க, நம்மினம் மட்டும் அவ்வளவாக மொழிப்பற்றுடன் இல்லையே என எண்ணி ஏங்கலானோம் நாம். குறைந்தபட்சம் தமிழ்த் தெரிந்த இன்னொருவரிடம் பேசுகையில் தமிழில் பேசலாமே என அவர் கேட்க, “யா, இட்ஸ் அப்சொலூட்லி ரைட்” என அருகிலிருந்த நண்பனிடம் ஆங்கிலத்தில் கூறி நாக்கைக் கடித்து நானே வெட்கிக் கொண்டேன்.
பல மொழிகளிலிருந்து பல கவிஞர்களை மேற்கோள் காட்டிப் பேசிய கவிஞர் தமிழன்பன். தன் மூத்த மகனுக்கு சிலே (Chile) நாட்டைச் சார்ந்த ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda) அவர்களின் பெயரைச் சூட்டியிருப்பதாகவும் இளைய மகனுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெயரை வைத்திருப்பதாகவும் போகிற போக்கில் சிறு குறிப்பாகக் கூறினார். இரு மகன்களும் மருத்துவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அவர் குறிப்பிட்ட சில கவிஞர்களில் சிலரின் பெயரை நாம் இதற்குமுன் கேள்விப் பட்டது கூட இல்லை. இன்னும் சொல்லப் போனால், கவிஞர் ஐயா குறிப்பிட்ட சில மொழிகளைப் பற்றிக் கூட நாம் இதுவரை கேள்விப் பட்டதில்லை.
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எல்லா திசைகளிலும் கூர்மையான கவனம் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு சுவையான குறிப்பு. தற்செயலாகச் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை ஒருவர் பார்க்க, “கவலைப் படாதீர்கள், இன்னும் பத்து நிமிடங்களில் முடித்து விடுகிறேன்” எனப் புன்னகை ததும்பச் சொல்ல அரங்கமே அழகாய்ச் சிரித்து ஓய்ந்தது.
தானெழுதிய சில கவிதைகளைக் கூட்டத்தில் படித்துக் காட்டலாமா என அனுமதி கேட்க, மொத்தக் கூட்டமும் எங்களின் பாக்கியம் ஐயா என பதிலியம்பின. தனது கவிதைகள் சிலவற்றைப் படிக்கலானார். அவற்றின் கருத்துச் செறிவு தமிழ் நெஞ்சங்களுக்குத் தேனாய் இனித்திருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமுமில்லை. ஏனென்றால், அவற்றை அவரின் வாய்வழிக் கேட்க நாம் நம்பாத சொர்க்கபுரிக்குச் சென்றிருந்தோம்.
கவிஞர் அவர்களின் பேச்சிலே மினசோட்டா பெருமைப்படும்படியாக அமைந்த கருத்து மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மற்றும் அமெரிக்க தமிழ்க் கழகத்துடன் இணைந்த பள்ளிகளைக் குறித்து அவர் குறிப்பிட்ட ஒரு நிதர்சனமான உண்மை. இவர்கள் தயார் செய்த தமிழ்ப் பள்ளிக்கான புத்தகங்களைத் தான் படித்துப் பார்த்ததாகவும், அதன் உயரிய தரம் கண்கூடாகத் தெரிந்ததாகவும் குறிப்பிட்ட கவிஞர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இந்தப் புத்தகங்களைத் தயாரித்தவர்களைத் தமிழ்நாட்டுப் பாடநூல் தயாரிப்பதற்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது மினசோட்டா தமிழ்ச் சங்கப் பள்ளியின் தொண்டர்களின் மகுடத்திற்கு அணி சேர்த்தது போலிருந்தது.
திரைப்பட நடிகைகளையும், நாடக நடிகர்களையும் அழைத்து வந்து பெருந்திரளாகக் கூட்டத்தைக் கூட்டிப் பெருமை கொள்ளும் பல தமிழச் சங்கங்களுக்கு இடையிலே, உண்மையாகத் தமிழுக்குத் தொண்டாற்றி, தமிழில் பல நல்ல படைப்புகளைத் தந்து, தமிழின் மீது மாறாத பற்றுக் கொண்டிருக்கும் தமிழன்பன் ஐயா போன்றவர்களை அழைத்து வந்து அவர்களின் பேச்சுகளை கேட்க ஏற்பாடு செய்யும் மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் அதனுடன் கூடிய பள்ளி ஆகியவற்றின் சேவை அளப்பரியது. அந்த அமைப்புகளைப் பாராட்டுவதுடன் அவர்களின் பணி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்!!!
வெ. மதுசூதனன்.
I was not able to attend this event, thank you for posting it!
ஆஹா மெய் சிலிர்க்கிறது.. எனது குழந்தை மின்னிசோடா தமிழ் பள்ளி மாணவி என்பதில் எனக்கும் பெருமை..
வணக்கம். எனது ஞானதந்தையின் சில துளிகளை மட்டுமே உணர்ந்துள்ளீர்கள்…அவரின் எழுத்துக்களை வாசிக்காமல் எனக்கு விடிவதுமில்லை -முடிவதுமில்லை பொழுதுகள்…உங்கள் மண் அவரின் 80ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தருணத்தை பெற்றிருந்தே…நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்…
பெருகும் அன்புடன் ஆக்க விழைவுகளுடன்
அகன்
இன்னும் எவ்வளவோ இருக்கிறது