மினசோட்டா ஆமிஷ் சமூகம்
மினசோட்டா ஆமிஷ் சமூகம் (Amish Community in Minnesota)
மினசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கு மூலையில் மாநில நெடுஞ்சாலை 52 யில், பிரஸ்டன் (Preston) நகரத்துக்கும், புரொஸ்பர் (Prosper) நகரத்துக்கும் குதிரை வண்டிகளுக்கென அகன்ற பாதை அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இந்தப் பகுதியில் அமைதியான எளிமையான, இயற்கையான விவசாயக் கிராமிய வாழ்க்கையை ஒற்றி வாழ்கிறது ஐரோப்பியாவில் இருந்து குடியேறிய ஆமிஷ் சமூகம்.
ஹார்மனி (Harmony), மற்றும் காண்டன் (Canton) பகுதிகளில், ஆமிஷ் சமூகத்தை சேர்ந்த ஏறத்தாழ 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1970 துவக்கத்தில் பென்சில்வேனியா மாநிலத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்.
உலகில் முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வட அமெரிக்க நாடுகளான கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், முன்னேற்றம் என்னும் பேரில் நடைபெறும் போலிச் சமூக, பொருளாதார, ஆடம்பர சௌகரியங்களைப் புறக்கனிக்கும் ஆன்மீக நம்பிக்கை கொண்டது ஆமிஷ் சமூகம்.
உதாரணமாக ஆமிஷ் மக்கள் அவர்களைப் புகைப்படம் எடுப்பதையே பொதுவாக அனுமதிப்பதில்லை. கிறித்துவ மறை நூலான பைபிளில் இரண்டாவது கட்டளையின்படி அவர்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதியில்லை என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். “You shall not make for your self a graven image, or any likeness of anything that is in heaven above, or that is on the earth beneath, or that is in the water under earth”.
அவர்கள் “நாங்கள் இவ்வுலகத்தின் பயணிகள். இவ்வுலகம் எங்களுக்கு சொந்தமில்லை” எனும் கோட்பாட்டை பின்பற்றுகின்றனர். அவர்கள் பேசும் ஜெர்மானிய மொழியில் இதை ” “Leben in der Welt, aber nicht in der von der Welt” என்றும் ஆங்கிலத்தில் “Living in the world but not being of the world” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
வரலாறு
எளிமையான வாழ்க்கையை விரும்பிய ஆமென் எனும் கிறித்துவ மத போதகரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது ஆமிஷ் இனம். பின்னர் இவர்கள், ஐரோப்பிய மதச் சார்பான துன்புறுத்தல் காரணமாக படிப்படியாக அமெரிக்காவில் குடியேறினர்.
கிறித்துவ மதத்தின் மறை நூல் பிரசுரிக்கப்பட்டபோது, கடவுளின் கூற்றுக்கள் பலவாறாக, பலரால் திரிக்கப்படுகின்றன என நம்பிய மார்டின் லூதர் கத்தோலிக்க போதனைகளிலிருந்து விலகி புதிய ப்ரோடேஸ்டண்ட் போதனைகளை துவக்கிய 1570 களில் தொடங்கியதே ஆமிஷ் சமூகம். விரைவில் இக்கொள்கைகள், வாழ்க்கை முறைகள் வடஅமெரிக்காவிற்குப் பரவியது.
இச்சமூகத்தினர் மற்ற சமூகத்தாருடனோ, அண்டை ஊர்களில் வாழ்கின்றவருடனோ நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. மினசோட்டாவில் இவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் இவர்களைப் பற்றி, அநேகம் பேருக்கு தெரிந்திருக்காது. அவர்கள் நிலத்தை நம்பி மட்டுமே வாழ்கின்றனர். இன்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் மக்கள் எப்படி பைபிளில் சொல்லப்பட்டிருப்பது போல வாழ்ந்தார்களோ அப்படியே இந்த 21ஆம் நூற்றாண்டிலும் வாழ்கின்றனர்.
பைபிளின் Genesis, அதாவது தொடக்கம் என்னும் அத்தியாயத்தில் “மனிதன், இறைவனை அடையும் காலம் வரை, தனது காலத்தை ஈடன் பூங்காவில் செலவிடவேண்டும். மண்ணை உழுது, பயிர் செய்ய வேண்டும், உடன் பிறப்புக்களுடன் சேர்ந்து உழை உடல், உள்ளம், உணவு, உணர்வுகளையும் ஆகிய சகலதையும் பகிர்ந்து தம் சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும்” என்று சொல்லப்பட்டிருப்பதை வாழ்க்கையின் குறிக்கோளாக பின்பற்றுகின்றனர் இவர்கள்.
இவர்களுடன் உரையாடிய போது, “மனிதன் மண்ணில் உழைக்கும் போது மட்டுமே அவன் ஆண்டவன் அருகாமையில் இருக்கிறான்” என்று கூறினார்கள்.
பென்சில்வேனியா மாநிலத்தில் இருந்து இங்கு வந்த ஆமிஷ் பழமைவாதிகள் Old Order Amish Community. சமூகம் இன்றும் பிரதான மொழியாக ஜெர்மானிய மொழியை உபயோகிக்கின்றனர். மேலும் இவர்கள் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், வீடுகளில் ஜெர்மானிய மொழி, அல்லது பென்சில்வேனியா டச்சுமொழி மட்டுமே பேசுகிறார்கள். மத போதனைகளும், வேண்டுதல்களும் ஜெர்மானிய மொழியிலேயே படிக்கப்படுகின்றன.
இவர்கள் பல வருடங்களாக அமெரிக்க, கனேடிய நாடுகளில் வாழ்ந்தாலும், அந்தந்தந்த நாட்டின் பிரஜைகளான போது, விசுவாச உறுதிமொழியை “Pledge of Allegiance” தர மறுத்தவர்கள். கடவுளுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்போம் என்றும், மனித சமூகத்தை கொண்டாடும் உணர்வுக்கு அடி பணிய மாட்டோம் என்று கூறி விட்டனர். மேலும், இவர்கள் மனித சமூகத்தை கொண்டாடும் யாவற்றையும் துறந்தவர்கள்.
ஆமிஷ் மக்கள் உண்மையான கடவுள் அறிவுரையைப் பின்பற்றுபவர் அவர்கள் தாம் இவ்வுலகின் வழியே பயணம் செய்பவர்கள் என்றும், இவ்வுலகம் பெரும் துன்பம், இழவுகளும், கொடுமைகளும் நிரம்பியது என்றும் கருதுகிறார்கள்.
ஆமிச் மக்களின் கிறித்துவம்
கிறித்துவ மதம் தற்காலத்தில் பலவிதங்களாகப் பிரிந்தும் சேர்ந்தும்
காணப்படும் நேரத்தில் , அனாப்படிச்ட் (Anabaptist) எனப்படும் ஒரு பிரிவை கடைப்பிடிக்கின்றனர். Believers Baptism by free-will or voluntary acceptance of the Amish Church
இந்த வழிபாட்டு முறை பிரதான பண்டய ஐரோப்பிய கிறித்துவ ஆளுமைக்கு அப்பாற்பட்டு இருந்ததால் இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். ஏறத்தாழ 2000-3000 ஆமிஷ் இனத்தவர் பழைய ஏற்பாட்டிலிருந்து பிறழியதால் சமயத் தகர் எனும் ரீதியில் கொன்று எரிக்கப்பட்டனர்.
இவர்கள் சமாதானத்தை வேண்டுபவர்கள் என்பதால் கொடுவினைகளை ஏற்று தம்மை தியாகம் செய்தார்களே ஒழிய எதையும் எதிர்க்கவில்லை.
இந்தக் கொடுமை அனுபவங்கள் இன்றும் ஆமிஷ் சமூகத்தில் ஒரு அன்றாட அங்காலாய்ப்பாகக் காணப்படுகிறது. மற்ற சமூகங்கள் தம்மை எவ்வாறு பார்ப்பார்களோ என்ற கூச்ச மனப்பான்மையோடு சிறுபான்மைச் சமூகமாகவே வாழ்கிறார்கள்.
ஆமிஷ் வாழ்க்கை
ஒரு ஆமிஷசைப் பொறுத்தளவில், அன்றாட வாழ்க்கை சுயநலமற்று உடல் ரீதியில் கருமம் ஆற்றுவதேயாகும். அவர்கள் அன்றாட வாழ்க்கையை இயேசு நாதர் எவ்வாறு போதித்தாரோ அதைப் பின்பற்றி எளிமையைக் கடைப்பிடிக்கின்றனர் . அருகில் வாழும் ஆமிஷல்லாத ஆங்கிலம் பேசும் சாதாரண அமெரிக்கச் குடி மக்களின் வாழ்க்கையின் பால் இவர்கள் மோகம் கொள்வதில்லை. இவ்வுலக வாழ்க்கை முடிந்து இறைவனடி சேரும் வரை பணம், பொருள், சௌகரியங்களின் மோகத்திற்கு அடிமைப்படக் கூடாது எனும் எண்ணத்துடன் வாழ்கின்றனர்.
வாழ்க்கையைத் துணையை தெரிவு செய்தல்
ஆமிஷ் இளைஞர்களும், கன்னிப்பெண்களும் ஒரு கால கட்டத்தில் தாங்க்கள் இந்த எளிய வாழ்க்கை முறையைத் தொடரலாமா இல்லை சாதாரண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாமா என்ற முடிவினை மேற்கொள்வர்.
இத்தருணம் யுவன்.யுவதிகள் தமது சமூகத்தைவிட்டு வெளியே சென்று பொது உலக வாழ்க்கையைப் அனுபவித்துப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவர்.
சன சமூகமே சன்மார்க்கத்து வழி
ஆமிஷ் மக்கள் மற்றய கிறித்தவ பிரிவுகள் போன்று தேவாலயாங்கள் கட்டுவதில்லை. ஒன்று விட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் மாறிமாறி ஒவ்வொரு குடும்பத்தினர் வீடுகளிலும் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுவர். இது, ஒரு காலத்தில் இவர்கள் ஐரோப்பாவில் குகைகள், வீடுகளில் பயந்து மறைந்து பிரார்த்தனை செய்ததன் தாக்கமாகும் . மேலும் இது தங்கள் இனத்தவரோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளவும் , ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்க உதவுகின்றது எனவும் நினைக்கின்றனர்.
இச்சமூகத்தில் தனித்துவத்திற்கு இடம் கிடையாது. யாவும் ஒருவரையொருவர் சகோதரத்துவத்துடன் மதிக்கும் பகிரங்கமான வாழ்க்கையே. ஆமிஷ் சமூகத்தினர் தனித்துவம், சுய இயல்பாடு போன்றவற்றை ஒரு பலவீனமாகவே எடுத்துக்கொள்வர். மனிதன் ‘தான்’ என்ற அகங்காரத்தை விட்டு தன் சமூகத்திற்கு தன்னையே அர்ப்பணித்துப் பங்கு பெறுவதால் வரும் திடமே உறுதியானது எனக் கருதுபவர்கள் இம்மக்கள்.
வட அமெரிக்கக் கண்டத்தில் ஆமிஷ் 1740ல் முதல் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அப்போது இந்நாடு வந்த ஜெர்மானியக் குடிகள் யாவரும் ஏறத்தாழ ஒரேமாதிரியான விவசாய வாழ்க்கையையே பின்பற்றினர். எனினும் நாகரிகம் முன்னேற ஆமிஷ் மக்கள் தமது வழிமுறைகளை பேணிக்கொண்டார்கள். உதாரணமாக மணம் முடிக்காத ஆண்மகன் முக ரோமங்கள் இன்றி அகற்றிவிடுவர். மணமுடித்த ஆண்கள் தாடி வளர்ப்பினும் மீசை வைத்திருப்பதில்லை.
இதே போன்று பெண்களும் வீட்டில் உள்ள போது வெள்ளைத் குல்லாய் போன்ற தலை அங்கியை அணிவதும் , பிரார்த்தனைக்குப் போகும் போது கறுப்புத் தலை அங்கியை அணிவதும் வழக்கம். ஆண்கள்
வைக்கோல், புல், துணியினாலான ஆன தொப்பியை அணிவர்.
அமிச் சமூகத்தினர் ஆடம்பர கவர்ச்சிகரமான நிறங்களை
ஒரு போதும் உபயோகிப்பதில்லை. எளிமையான கருநீலம்,நாவல், செம்மண் நிறம் போன்ற நிறங்களிலேயே ஆடைகளை அணிவர்.
பெரும்பாலானோர் ஆடம்பர பொத்தான் இல்லாத உடுப்புகளையே அணிவர்.
சமூக அடையாளம்
ஆமிஷ் மக்களின் அடையாளம் எழுதிவைக்கப்படாத சமூக ஒழுக்க மரபு முறையைச்சார்ந்தது. இது அன்றாடம் மூத்தவர்களால் நடைமுறை வாழ்க்கையில் கற்பிக்கப்படும் அவர்கள் சமூக வாழ்க்கையில் உடுக்கும் ஆடை தொட்டு, விவசாய உழவு தொழிலில் உபயோகிக்கும் உபகரணங்கள், அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கும் தொழிநுட்பங்கள் வரை யாவற்றையும் தெளிவாக எடுத்துணர்த்தும்.
குறிப்பாக ஆமிஷ் சமூகம் திடகாத்திரமாக எந்தெந்த சீர்திருத்தமற்ற ஒழுக்கமுறைகளையும் வரவேற்று, கடைபிடிக்காது என்று திருச்சபை அங்கத்துவர் யாவருக்கும் தொடர்ந்தும் ஞாபகப்படுத்தப்படும். மேலும் எவ்வாறு இவ்வுலக பொருளாசைகளில் இருந்து விடுபடலாம் என்றும் அதே சமயம் எவ்வாறு இவ்வுலகத்துடன் ஒருங்கிணைந்திணைக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கப்படும்.
ஆமிஷ் கண்ணோட்டத்தில் நவினம் / புதுமை
தற்காலத்தில் அனைவரும் நவீனம், புதுமை போன்றவை முன்னேற்றத்தின் படிகள் என்று நினைத்திருக்கும் தருணத்தில் இது ஆமிஷ் சிந்தனைக்கு முரணானது.
இதை அறியாத பலர் ஆமிஷ் சமூகத்தினர் உயர்வற்ற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று நினைப்பர். வரலாற்று ரீதியில் பார்க்கும்போது நவீனம், புகுமை,சௌகரியம், ஆடம்பரம் முதன் முதலாக அமெரிக்க மண்ணில் சமூக வேறுபாட்டை உண்டு பண்ணியது.
தற்போது, உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்கள் அமெரிக்கா என்றால் சுதந்திர வாழ்க்கை என்றே நினைக்கிறார்கள் .
அதாவது ஒரு தனிமனிதன் சுயமாக எவ்வளவுக்கு காசு, பணம், பொருள் உரிமை பெறலாமோ அனைத்தையும் பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்பது ஒரு ஐதீகம். பொன்னும் பொருளும் புகழும் பெற்று அது பற்றிப் பறைசாற்றுவது தான் முன்னேற்றத்தின் அம்சங்கள் என்று கருதுகிறார்கள்.
இவையனைத்தும் ஆமிஷ் சமூகக் கொள்கைகளுக்கு நேர்முரண்பாடானவை. இச்சமூகத்தில் எளிமை, ஒற்றுமை, தன்னைத்தானே தன் சமூகத்திற்கு வரையறை இன்றித் தருதல், பெரியோரை, அனுபவசாலிகளை மதித்தல் போன்றவை இச்சமூகத்தின்
தலையான சிறப்பம்சங்கள் .
வராலாற்றுத் தொழிநுட்ப முன்னேற்றம், முரண்பாடுகள்
அமெரிக்க மண்ணில் முதன் முதலாக ஆமிஷ் சமூகத்திற்கும், ஆங்கிலச் சமூகத்திற்கும் பிரச்சனை உருவாக்கிய முதல் தொழில்நுட்பம் தொலைபேசியே. கிரகாம் பேல்லின் கண்டுபிடிப்பை பெரும்பான்மைச் சமூகம் போற்றுகையில் ஆமீஷ் சமூகம் அதன் பிரதி விளைவுகளை எண்ணிப் பயப்பட்டது. அதாவது சமூக ஒன்றியமே தமது பலம் என்று இருந்த ஆமிஷ் இனம் தொலைபேசிச் சாதனம் வந்தால் அது ஒவ்வொருவரின் நேரடி ஒன்றுகூடலை தடுத்து சமூகத்தை பிளக்க வழி செய்து விடும் என்று யோசித்தார்கள். இது தமது சமூகத்திற்கு நலனைத்தராது என்று சிந்தித்தார்கள்.
எனவே 1910 ஆண்டில் வீட்டில் தொலைபேசி உபயோகம் நிறுத்தப்பட்டது. ஆயினும் பொது இட public phone பாவனைக்கு, ஆமிஷ் இல்லாத சமூகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகன உரிமை கொள்ளலையும் சமூக பிரிவினை வராது பார்த்துக்கொள்வதற்காக 1920 களில் தவிர்க்கப்பட்டது.
அதேபோன்று பொதுமின்சாரக் கம்பி இணைப்பில் இருந்து மின்சாரம் வாங்குவதும் 1950 நிறுத்தப்பட்டது. மின்சாரத்தினால் வரும் வீட்டினுள்ளே வரும் சாதனங்கள் இவ்வுலகச் சௌகரியங்கள் எனக் கருதப்பட்டது.
ஒன்றிற்கு இரண்டு கைத்தொலைபேசி, கணினிகளைக் கொண்டிருக்கும் நவீன சமுதாயத்தில் ஆமிஷ் சமூகம் ஒவ்வொரு தொழிநுட்பத்தையும் ஆராய்ந்து அது தமது அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒப்பானதா என்று பார்த்து அணுகுகிறது.
தொழில் நுட்பம்அத்தியாவசியமானால் ஏற்றுக் கொள்கின்றனர். அது ஆடம்பரம் என்றால்அது தவிர்க்கப்படுகிறது.
வாழ்க்கை, இயற்கையை ஒட்டி எளிமையாக வாழ்வதற்கே. அதை விடுத்து வாழ்நாளில் பெரும் பகுதியை உலக லெளகீகங்களில் செலவிடுவது வாழ்வியலுக்கு அப்பாற்ப்பட்டது என்பதே இம்மக்களின் கோட்பாடு.
– யோகி அருமைநாயகம்
நன்றி திரு.யோகி
மிகச் சில விடயங்களே ஆமிஷ் சமூகத்தைப் பற்றி தெரிந்த எனக்கு இந்த பதிவு மேலும் தெரிந்து கொள்ள உதவியது.
இந்த சமூகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, நான் ரசித்த மிகச் சிறந்த படம் (Oscar winning actor’63 – Sidney Poitier) – LILIES OF THE FIELD – http://www.youtube.com/watch?v=bQXi3M8ZQSY
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி திரு.சுந்தரமூர்த்தி. நேரடியில் பேசியுள்ள சில அன்பர்கள் இதுபற்றிப் பாகம் 2 எழுதுமாறும் கேட்டுள்ளனர். தொடர்ந்தும் இது போன்ற மினசோட்டா மாநில சமூகங்கள் பற்றிய விடயங்களைத் தர முனைவோம்.