வீரமாமுனிவர்
தை/மாசி (பிப்ரவரி) மாதத்தில் நினைவு கூற வேண்டிய மற்றுமொரு மாமனிதர் “வீரமாமுனிவர்”. ”தமிழ் உரைநடையின் தந்தை” என்று போற்றப்படுபவர், இத்தாலி நாட்டில் பிறந்த இவரின் தமிழ்ப்பற்று அளப்பரியது.
பெசுகி (Beschi)என்ற தம் பெயரை ‘தைரியநாதர்’ என்று மாற்றி கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே ‘வீர மாமுனிவர்’ எனப் பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத்தொடங்கினார்.
1680 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிறந்த இவரின் முழு இயற்பெயர் Constantine Joseph Beschi. தன்னுடைய 30ஆவது வயதில் இத்தாலியிலிருந்து லிசுபன் வழியாக 1710ல் கோவா வந்து சேர்ந்தார். முதலில் மதுரை வந்த அவர் முதல் 6 ஆண்டுகள் திருச்சி அருகில் ஏலாக்குறிச்சி எனும் சிற்றூரில் மதபோதனையில் ஈடுபட்டு வந்தார். உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளத் தஞ்சை/மதுரை போன்ற இடங்களுக்குப் பயணித்தார். அடுத்த 18 ஆண்டுகள் தஞ்சை பகுதியில் மதபோதனையுடன் தமிழ்மொழிக்கும் எண்ணற்ற நூல்களை இயற்றினார். பின்னர்த் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்தார், பிப்ரவரி 4 – 1746ல் மறைந்தார்.
இவரைப்பற்றிய சிறுகுறிப்புகள்:
1728-இல் புதுவையில் இவரின் “பரமார்த்தக் குருவின் கதை” என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் பதினாறாம் நூற்றாண்டில் பிரான்சில் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததைப் பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஏ’ ‘ஓ’ போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் ‘எ’ ‘ஒ’ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.
எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. ‘தேம்பாவணி’ என்னும் பெருங்காப்பியமும், ‘திருக்காவலூர் கலம்பகம்’ முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.
தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண ‘நிகண்டு’களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த ‘சதுரகராதி’ முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.
திருக்குறளைத் தமிழைப் போல உலகச்சொம்மொழிகளில் ஒன்றான இலத்தீன் மொழியில் பெயர்த்து வெளியிட்டார். இது தவிர, ‘தமிழ் – இலத்தீன் அகராதி’, போர்த்துகீசியம் – தமிழ் – இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் – இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் – தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வெளிநாட்டவரின் தமிழ்ப்படைப்புகளும் தமிழ்ப்பணியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. நம் மொழியைக் காக்க நம்மால் இயன்ற அனைத்தையும் நடைமுறைப் படுத்துவோம். தமிழரிடையே தமிழில் பேசுவது மட்டுமன்றி, தமிழரிடையே தமிழிலேயே மின்னஞ்சல் பகிர்வோம்.
– மா. சிவானந்தம்
வீரமாமுனிவர் நினைவுடன் – இந்த இதழ் மலர்ந்தது அருமை. சதுரகராதி, தேம்பவனி, மற்றமொழி பெயர்புகள் என படைப்புகளை அழகாக பட்டியலிட்டது சிரப்பு.
An excellent article on Veeramamunivar in view of the literary month of February. Mr. Sachidanandan beautifully brought out that Veeramamunivar is an versatile author in Tamil literature though his mother tongue is Italy.His article is a great homage to the great poet Veeramamunivar on his death anniversary Feb 4.Congratulations to Mr.Sachidanandan.
Sorry ,I mentioned Mr.Sachidanandam instead of Mr.Sivanandam.The credit goes to Mr.Sivanandam. Congratulations to you.