\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெற்றதும் இழந்ததும்

Filed in இலக்கியம், கவிதை by on November 3, 2013 3 Comments

petrathum_izhanthathum_620x386உயர் வடையவே உறவினை இழந்தேன்

உடமை பெறவே உரிமை இழந்தேன்

பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்

பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.

 

சுகம் பெறவே சுயம் இழந்தேன்

சீற்றம் கொண்டே சிறப்புகள் இழந்தேன்

நினைத்ததை யடைய நிம்மதி இழந்தேன்

நிதிநிறை வடைய நித்திரை இழந்தேன்

 

சுதந்திரம் பெற்றேன் சுதேசம் இழந்தேன்

சுபிட்சம் தொடரச் சுற்றம் துறந்தேன்

ஒப்புமைக் கற்றேன் ஒற்றுமை மறந்தேன்

ஒசந்தவைப் பெற்றேன் ஒழுக்கம் இழந்தேன்

 

நாணயம் சேர்க்க  நாணயம் தொலைத்தேன்!

நாநயம்  பெற்றே  நயவஞ்சகம் தேர்ந்தேன்!

மமதை பெற்றே  மரபுகள் மறைத்தேன்

மதங்கள் ஏற்றே மனிதம் மறந்தேன்!

சாதியம்  கற்றேன் சமத்துவம் இழந்தேன்!

சாதுர்யம் பெற்றேன் சத்தியம் தவிர்த்தேன்!

ஞாலம் உணரவே  நாலும் இழந்தேன்

ஞானம் பெறுமுன் நானும் இறப்பேனோ?

 

– ரவிக்குமார்

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. பாண்டி says:

    உணர்ந்தவன் இழப்பதில்லை ஏனெனில்
    இழப்பின் மதிப்பறிந்து மனந்திருந்துவான்
    இழந்தவன் உணர்வதில்லை ஏனெனில்
    உணர்வின் தன்மையை மறந்தவனாவான்!

    தெளிவாய்த் தேன்தரும் வார்த்தைகள் உரைத்து
    உணர்ந்தவன்நீ இருளில் வாழ்பவனை திசைமாற்று
    தேவைகளையும் தேடல்களையும் பகுத்து உணர்த்து
    உலகச்சுகங்களைவிட சேவையே சிறந்ததென பறைசாற்று!

  2. மதுசூதனன் வெ. says:

    கவிதை படிக்கையில் கருத்தை இழந்தேன்
    கருத்தை மறக்கையில் கலக்கம் இழந்தேன்
    கலக்கம் துறக்கையில் கவலை இழந்தேன்
    கவலை தவிர்க்கையில் கண்ணீர் இழந்தேன்

    கண்ணீர் தொலைகையில் களிப்பினை ஏற்றேன்
    களிப்பு வளர்கையில் கனிச்சுவை ஏற்றேன்
    கனிச்சுவை நுகர்கையில் கண்டதனைத்தும் ஏற்றேன்
    கண்டவை கொள்கையில் கவிக்கருத்து ஏற்றேன்!!!

  3. Mrs RaniRaj says:

    ரவி ,

    இழந்தவை இவையென,
    இனம்புரியத் தெரிந்திருந்தும்
    இடர்கள் இவையென,
    இனம் பிரிக்கத் தெரிந்திருந்தும்
    இகழ்ச்சியாய் நகைக்கும் -நம்
    இதயங்கள் தெரிந்திருந்தும்
    இதுதானே நம் நிலை!!!

    உம் வார்த்தைகள் உயிருள்ளவை.
    உறவுக்கும், மனிதத்திற்கும் மதிப்பளிக்கும் எவருக்கும் இப்பாடல் பொருந்தும் .

    நன்றி
    ராணிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad