கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் – தீஞ்சுவை தரும் தத்துவ நன்முத்தா? தேனமுதூறும் தெவிட்டாத காதலா?
இந்தியத் தேசத்தில் திரைப்படங்கள் தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைய இருக்கின்றது. இந்த நூறு ஆண்டுகளில், திரைப்படங்கள் பல பரிமாணங்களைக் கடந்து பயணித்துள்ளது என்பது நாமறிந்ததே. இந்தப் பயணத்தில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்த திரைப்பட உலகம், ஒரு சராசரி இந்தியனின் முழுநேர வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக ஆட்கொண்டு விட்டது என்றே கூறலாம். நல்லதோ, கெட்டதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, பாடலை, நகைச்சுவையை மேற்கோள் காட்டாத ஒரு இந்தியனே இல்லையெனக் கூறி விடலாம். அந்த அளவுக்கு ஒரு சராசரி இந்தியனின் வாழ்வை ஆட்கொண்ட திரையுலகம், அதனையும் மீறி அரசியலிலும் உள் புகுந்து கோலோச்சியதென்பது நாமனைவரும் அறிந்ததே. சில முதலமைச்சர்களையும், பல அமைச்சர்களையும் உருவாக்கிய இந்தியச் சினிமா, ஒப்பாரும் மிக்காரும் இல்லாதப் பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமே தங்களின் வாழ்வின் முழுமுதல் நோக்கம் என ஒலிப்பெருக்கியின் முன்னே சரளமாகப் புளுகி, பணத்திற்காகவும், புகழுக்காகவும் மட்டுமே பாடுபடும் பல்லாயிரக்கணக்கான உழைப்பாளிகளின் மத்தியிலே சமுதாயச் சிந்தனையுடனும் ஈடுபட்ட, விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகளும் இந்தத் துறையிலிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகில், பணம் சம்பாதிக்கும் முயற்சியையும் மீறி, தன்னையும் அறியாமல் பொங்கி வரும் கவித்துவத்தின் மூலம் மனிதகுலம் எழுச்சியுற, ஞானமுற பல அரிய தத்துவப் பாடல்களை எழுதிய கவியரசு கண்ணதாசனையும் அவரின் ஒப்பிலா பாடல்களையும் குறித்து விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
காவியம்பல படைக்கும் காதலையும், காவியுடை தரிக்கச் செய்யும் தத்துவங்களையும் கணக்கின்றி எழுதிய கிண்ணதாசன் கண்ணதாசனின் படைப்புகளைப் பாரபட்சமின்றி விளங்கும் தராசுத் தட்டில் ஏற்றி வைக்கும் முயற்சி இது. கண்ணதாசனின் கவித்துவத்தை, கைபிடித்த காதலிக்கு நிகராய்க் காதலிக்கும் இருவரின் கருத்துப் பரிமாற்றமிது. கவித்துவத்தைக் காதலிக்கும் அனைவருக்கும் இந்தப் பரிமாற்றம் கருத்துக்கினியதாய் அமையும் என நம்புகிறோம். தவறாமல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும்.
தத்துவத்தின் தாக்கம்
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் – அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் – அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
ஆதி சங்கரர், ரமண மகரிஷி மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதி உள்ளடங்கிய நூற்றுக்கணக்கான தழிழில் கவிதையெழுதி ஞானம் பரப்பிய கவிஞர்களெல்லாம் தொட நினைத்து, தெளிவாய்ச் சாதாரண மனிதனுக்கு எடுத்துக் கூற இயலாத ஞானத்தை ஒரு சாதாரணச் சினிமா பாடலின் எடுத்துத் தந்தவன் நாமறிந்த கண்ணதாசன். இளநீரின் முழுதும் மூடிய ஓட்டுக்குள் தண்ணீரை வைத்தவன் யார்? கோழிக்குள் முட்டையை வைத்தவன் யார்? அங்கே வெளிவந்த அதே முட்டைக்குள் கோழியை வைத்தவன் யார்? வாழைக்குக் கன்றை வைத்தவன் எவன்? பூஜ்ஜியமாய் இருக்கும் ஒரு உலகினுள் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருப்பவந்தான் இவையனைத்தையும் செய்தவனா? கேள்விகள் பல கேட்டு, கேட்கும் கேள்விகளாலேயே விடைகளையும் அளித்தவனவல்லவா அந்த விதேக முக்தியில் துரிய நிலையடைந்த கவியரசு?!?
சாதரணமானத் தமிழில் அசாதாரணமான தத்துவத்தைக் கூறிய கண்ணதாசன் பாமர மொழியுலும் பரமனை விளக்கத் தவறியதில்லை. “திருவிளையாடல்” திரைப்படத்தில் ஒரு விறகு வெட்டி போல் வந்து பஜகோவிந்தம் கூறிடும் த்வைத போதத்தை அட்சரம் பிசகாமல் மூன்று நிமிடப் பாடலில் எழுதி முடிக்க எங்கள் கவியரசை விட்டால் யாரால் முடியும்?
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
கேட்டா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டாக் கரியும் மிஞ்சுமா!!
கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா
நீட்டிக் கட்டையிலே படுத்து விட்டாக்
காசுக்காகுமா!!
வட்டமிடும் காளையைப்பார் வாட்டஞ்சாட்டமா
கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த
ஆட்டம்போடுமா!!
யாக்கை நிலையாமைத் தத்துவத்தை இதைவிட எளிமையாய் இன்னொருவரால் தமிழில் பகன்றிட இயலுமா என்பது சந்தேகமே. பெருமளவில் படிப்பறிவில்லாத கவியரசு, ஒற்றைக் கால் கட்டை விரலில் நின்று, நாட்கணக்காக பாம்புப் புற்று வைத்ததுமறியாமல் தவமிருந்தால் மட்டுமே கிடைக்குமெனக் கூறப்பட்ட முக்தியைப் பெறும் ஞானத்தை ஒரு மூன்று பத்தியில் அழகாய்க் குறிப்பிட்ட கண்ணதாசனை ஞானகுரு என்று கூறினால் மிகையாகுமோ?
கண்ணதாசனின் பாடல்களில் காதல் சுவை
வாழ்வியல் வடிவமைப்பின் படி, பிறந்து, வளர்ந்து பதின் பருவத்தில் தொடங்கி அவர்கள் மரணிக்கும் வரை வாழ்நாளில் பெரும்பகுதி மனிதர்களை இயக்குவிக்கும் சக்தி காதல். மற்றக் கலைகளையெல்லாம் ஒருவர் சொல்லித் தர கற்கையில், குருவென்றொருவர் இல்லாமல் தோன்றும் உணர்வினை எப்படித் தெரிந்து கொள்வது? கண்ணதாசனுக்கும் இக்கேள்வி தோன்றியது போலும். பாடல் முழுவதையும் கேள்விக் கணைகளால் அமைத்துள்ளார்.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
காதல் இயற்கையானது என்பதை இதைவிட எளிமையாக யாரும் விளக்க முடியுமா? இறுதியில் இந்த உணர்வை என்னவென்று சொல்வதெனப் பெரிய கேள்வியை முன்வைத்து நம்மையே முடிவெடுக்க வைத்துள்ளார்.
‘கோடிட்ட இடங்களை’ நிரப்பவும் பாணியில் காதலை வேறொரு பாடலில் விளக்கியுள்ளதைப் பாருங்கள்.
காற்று வந்தால் தலை சாயும் …..
நாணல்
காதல் வந்தால் தலை சாயும் ……
நாணம்
ஒருவர் மட்டும் படிப்பது தான் ……
வேதம்
இருவராகப் படிக்கச் சொல்லும் …….
காதல்
அடுத்த பாடலைப் பாருங்கள் காதலின்றி, வாலிபம் இல்லை என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாரென்று.
தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா (பனியில்லாத மார்கழியா .. படையில்லாத மன்னவரா)
பல திரைப்படங்களில் இரண்டு மூன்று மணி நேரம் கதை சொல்லிப் புரியவைக்க முயலும் புனித உறவை நான்கே வரிகளில் விளக்கியுள்ள கவிஞரின் கற்பனைக்கும், சொல் வளத்துக்கும் ஈடு இணையுண்டோ?
காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது
வேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே (பாலிருக்கும்.. பழமிருக்கும்..)
சாதி, மதம் இவை எதுவும் தடையிருக்க முடியாது என்றவர் காதல் உருவம் மறைவது போல் மறையாது என்கிறார். மரணம் கடந்து நிலைப்பது என்று இந்தப் பாடலில் சொன்னவர் இன்னொரு பாடலில் இதை எப்படித் தொடர்கிறார் என்று பாருங்கள்.
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்துவந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன். (ஞாயிறு என்பது கண்ணாக ..)
ஒவ்வொரு மனிதரும் கடந்து வந்த பருவத்தை, பருவத்தில் தோன்றிய மென்மையான காதலை எப்படியெல்லாம் உவமிக்கிறார் கவிஞர். மனித மனம் கொண்டிருக்கும் பல உணர்வுகளில் தத்துவமும் காதலும் விளக்கிச் சொல்ல முடியாதவை. அவை அனுபவத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ளக் கூடியவை. அவைகளில் முதன்மையானதாம் காதலையே மிகச் சிறப்பாக உரைத்துள்ளார் கண்ணதாசன். அவரது பாடல்களின் காதல் சுவையைத் தொடர்ந்து வரும் இதழ்களில் சுவைப்போம்.
– மதுசூதனன் மற்றும் ரவிக்குமார்.
Excellent write up
Very nice fantastic