\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மகாத்மா

gandhi_620x868இலர் பலராகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதவர்

–    திருவள்ளுவர்

உலகில், நோம்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் கூற்று. சாப்பாட்டைக் குறைத்து, ஏதோவொரு கடவுளின் பெயரை நாள் முழுதும் சொல்லிக் கொண்டிருப்பதல்ல வள்ளுவன் கூறும் நோம்பு. செயல் திருத்தம் என்பதே நோம்பு எனும் தமிழ் வார்த்தையின் சிறப்புப் பொருள் மற்றும் தத்துவார்த்தமான விளக்கம். தான் செய்யும் தவறுகளை உணர்ந்து, செய்யும் செயல்களைத் திருத்திக் கொண்டு நல்வழிப் படுவது என்பது நோம்பாகும். அதுபோல் நல்வழிப் படுபவரின் எண்ணிக்கை குறைவதே, பொருளில்லை, புகழில்லை, மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை எனப் பலவகையானவை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் விளக்கம்.

தவறு செய்வதென்பது மனிதனின் இயல்பு. தவறு என்றுணர்ந்த பிறகு அதனை ஒப்புக் கொள்ளும் பக்குவமும், திருத்திக் கொள்ளும் மனப் பாங்கும் அனைவருக்கும் இருப்பதில்லை. அதிலும் உலகம் முழுவதும் போற்றும் உயர் நிலையை அடைந்த பிறகு, கடந்த காலத்தில் செய்த தவறுகளை அனைவரும் அறியும் வண்ணம் கூவிக் கூறுபவர்கள் மிகவும் சொற்பமே. அந்தச் சொற்பத்தின் முதன்மையாகத் திகழ்ந்தவர் நம் மகாத்மா என்றால் அது மிகையாகாது.

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள் எனப் பலரும் அறிந்த பொதுக் கருத்துக்களை எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமன்று. அதுபோன்ற கருத்துக்களை ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் படித்தறியலாம் என்பது நாமறிந்ததே. பல்லாயிரக்கணக்கான மனிதர்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மகாத்மா மேலும் சில ஆயிரக்கணக்கான மனிதர்களால் வசைபாடப்படுவதையும் கேள்விப்படுகிறோம். அவர் வாழ்ந்த காலங்களில் அவரின் சித்தாந்தங்களை லட்சக்கணக்கானவர்கள் பின்பற்ற நினைத்தபோது அதனை முட்டாள்தனமென விமர்சனம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர் இறந்து கிட்டத்தட்ட அறுபத்து ஐந்து வருடங்கள் ஆனபிறகும் அவரின் கொள்கைகளைக் குறைகூறுபவர் இன்றும் உளர். மகாத்மா இதனைச் செய்யாமல் அதனைச் செய்திருந்தால் இந்தியா இன்றொரு வல்லரசாய்த் திகழும் எனத் தெருவுக்குத் தெரு வம்பு பேசும் வீணர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் சொல்லும் கருத்துகள் என்ன, அவற்றில் எந்த அளவு உண்மையும் தெளிவும் உள்ளது என ஒரு நடுநிலையிலிருந்து ஆராய்ந்து எழுதுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அவரின் சிறு வயதிலிருந்து செய்த சிறு பிழையிலிருந்து தொடங்கி, பலரின் விதியை மாற்றும் அரசியல் முடிவுகள் வரை அனைத்துத் துறைகளையும் கவரும் வண்ணம் ஒரு சில உதாரணங்களைக் கொண்டு விளக்குவதே நமது நோக்கம்.

இதில் முடிவு எதுவும் வழங்கும் நோக்கம் நமக்கு இல்லை, மகாத்மாவை விமரிசிக்கவோ, ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு பெருமைப் படுத்தவோ, தகுதியுற்றவர் நாம் என்ற எண்ணம் என்றும் நமக்கில்லை. மிகத் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவனின் பாவமும், வேடிக்கை பார்த்த விடயங்களை அவனுக்கே உரிய சிறுமையுடன் ஆராய்ச்சி செய்து கருத்துத் தெரிவிப்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். மகாத்மாவின் தவறுகளாகச் சிலவற்றைக் குறிப்பிட்டாலும், அவை இன்றைய நிலையிலிருந்து பார்க்கும்பொழுது (hind-sight) ஒரு தவறுதலான தீர்மானமாகத் தோன்றலாமே ஒழிய, அவரின் நோக்கத்திலோ அல்லது வழிமுறையிலோ தவறு காணுமாறு எதுவும் நமக்குத் தோன்றவில்லை என்பது ஒரு முன்னுரையாக அளிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

தனது சத்திய சோதனையில், தான் சிறு வயதில் செய்த தவறுகளையும், அவற்றை உணர்ந்து திருந்தியது குறித்தும் அவை எதற்காகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று எழுதியது அனைவரும் அறிந்ததே. அவற்றைத் தவிர்த்து சில அரிய சம்பவங்களில் தனது புரிதல்களை வெளிப்படுத்தியதன் மூலம், காந்தியடிகள் அகமுணர்ந்த (self-realized) ஞானி என்பதை உணர முடியும்.

மகாத்மாவின் நான்கு புதல்வர்களில் மூத்தவரான ஹரிலால் காந்தி, தனது இளமைக் காலத்தில், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் பல கண்டனங்களுக்குள்ளான செயல்களில் ஈடுப்பட்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானார், சிறிது காலம் மத மாற்றம் செய்து கொண்டார், தந்தையை மிகவும் கடுமையாக எதிர்க்கலானார் – இவை அனைத்தையும் குறித்த விளக்கமாக மகாத்மா குறிப்பிட்டது தனது இளமைக் காலத்தில், மகனைச் சூலுரும் பருவத்தில், தன்னிடம் இல்லாத மனக் கட்டுப்பாடின்மை என்பதே. அதாவது மிக நுணுக்கமான மரபியல் சார்ந்த அறிவியல் (Genetic Engineering) உணர்ந்ததன் வெளிப்பாடு அது. தவிர, இதனையே நம் முன்னோர்கள் செயல் விளைவு (Cause and Effect) தத்துவமென விளக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாற்றிற்கும் மேலாக, இன்னொருவரின் குறைக்கும் தன் செயல்கள் காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கும் பரந்த மனத்தை நம்போன்ற சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

”காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” என்பது என் கிராமத்தில் மிகவும் பிரபலமான பழமொழி. அதற்கொப்ப, உலகத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் என்ற புகழுக்குரிய மகாத்மா காந்தியைக் குறித்த சர்ச்சைக்குரிய விமரிசனங்கள் பல கூறப்படுவது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்று. அஹிம்சை என்பது எவ்வளவு பலமான ஆயுதம் என்பதை உலகம் முழுவதும் உணர வைத்தவர் மகாத்மா காந்தி ஆவார். ஆனால் அஹிம்சையை இயலாமையின் வெளிப்பாடு என விமரிசனம் செய்த பலர் உண்டு. அஹிம்சை என்பது குற்றம் புரிபவர்களுக்குக் கூறப்படவேண்டுமே தவிர, குற்றத்தினால் பாதிக்கப் படுபவர்களுக்கு அல்ல என்ற பொதுவானக் குற்றச்சாட்டு மேலோட்டமாகப் பார்க்கையில் சரியானதாகத் தோன்றினாலும், ஆழமாய் ஆராய்ந்து பார்த்தால் அண்ணலின் கூற்றிற்கான காரணம் விளங்கும்.

ஹிம்சை – அதாவது பிற உயிர்களுக்குத் தீங்கிழைப்பதென்பது மிகவும் ஆழமான காயங்களைத் தோற்றுவிக்கும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டுமென்பது அண்ணலின் திண்மையான கருத்து. திருவள்ளுவரின்,

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளுக்கு ஒப்பப் பிறரின் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதால் வரும் பாவப் பதிவுகள் உயிரணுவில் சென்று பதிவதால், அவை வழி வழியாக, சந்ததி சந்ததியாகத் தொடரும் என்பதும், அதனால் உடனே சுட்டெறிக்கும் தீயினை விட தீமையைக் கண்டு அதிகமாய்ப் பயப்பட வேண்டுமென்பதும் காந்தியின் புரிதலாகும்.

அவர் அஹிம்சையைப் பயன்படுத்தி இந்திய சுதந்திரப் போரைத் தொடர்ந்ததற்குப் பல காரணங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அவரின் விமர்சகர்கள் அவரின் அஹிம்சை குறித்துச் சொல்லும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களில் முக்கியமானது, அஹிம்சை என்பது கொடுஞ்செயல் புரிபவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய அறிவுரையே தவிர, அந்தக் கொடுஞ்செயலால் பாதிக்கப் பட்டவருக்கல்ல என்பதாகும். இந்த விமரிசனம். மேம்போக்காகப் பார்த்தால் சரியானது போலத் தோன்றினாலும், செயல் விளைவு தத்துவத்தின் முழு அர்த்தம் புரிகையில், ஹிம்சையினால் வரும் பாவப்பதிவுகளை ஆழமாக நம்பிய, உணர்ந்த மகாத்மா அந்த அஹிம்சைத் தத்துவத்தை இருசாரார்க்குமே போதித்தார் என்பதை உணர முடியும்.

1948 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் 21ஆம் திகதி – அதாவது காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஒன்பது தினங்களுக்கு முன்னர்… காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் வழக்கம்போல் அண்ணலின் உரையொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் அண்ணலின் உரையில் மகுடிக் கட்டுப்பட்ட பாம்புகளென ஆடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ அந்த இடிபோன்ற சத்தம்… கூடியிருந்த ஒருசில போலிஸாருக்கு அது ஒரு வெடிகுண்டு என்று தெளிவாகப் புரிந்தது. ஆனால் அண்ணல் எந்தவிதச் சலனமும் இன்றி உரையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது அண்ணலின் உயிரைக் குறிவைத்த குண்டு என போலீஸார் அறிகின்றனர், அண்ணலைப் பொறுத்தவரை அருகிலுள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் நடைபெறும் பயிற்சித் துப்பாக்கிச் சூட்டின் சத்தமென நினைக்கிறார். இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான மதன்லால் என்பவன் கைது செய்யப்படுகின்றான். அவனைக் கடுமையாக விசாரணை செய்ததில், அவன் ஒரு தனி மனிதன் அல்ல என்பதும் அவனுடன் கூடிய ஒரு பெரும் குழு மகாத்மாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளது என்பதும் விளங்குகிறது. உலகமே வியந்து நிற்கும் உத்தமத் தலைவன்மீது வெறி கொண்டு தாக்க ஒரு கூட்டம் மும்முரமாகச் செயல்படுகிறது.

நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயமிது. காசுக்குக் கொலை செய்யும் கூலிப்படை என்பது அவ்வளவாகப் பிரபலமாகாத காலமது. மத துவேஷங்கள் காரணமோ என்று பார்த்தால், ஒன்பது நாட்களுக்கு முன்னர் முயற்சி செய்த மதன்லாலும் சரி, கடைசியில் வெற்றிகரமாக முடித்த நாதுராம் விநாயக் கோட்ஸேயும் சரி வேற்று மதத்தவர் அன்று. சிறு வயதில் கவர்ந்து செல்லப்பட்டு முளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படும் முயற்சி என்பதும் அப்போதைக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பின்னர் எதுதான் காரணமாக இருந்திருக்க இயலும்? இங்குதான் நாம் விருப்பு வெறுப்புகளை மறந்து நடுநிலையுடன் ஒரு சிறிய ஆராய்ச்சி நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

ஒரு அரசியல் தலைவர் ஒரு முடிவெடுக்கிறார் என்றால் அந்த முடிவு பல லட்சக்கணக்கான சாதாரண மக்களைப் பெருமளவு பாதிக்கிறது என்பது நிதர்சனம். அந்தத் தலைவர் தன்னலமில்லா மகாத்மாவாக இருந்தாலும் சில முடிவுகள் பல சாதாரண மனிதர்களுக்கு எதிர்மறை விளைவுகளையும் தர இயலும் என்பதே நிதர்சனம். இந்திய எல்லைப் பிரிவுக்கு – தனது சொந்த விருப்பு வெறுப்புக்கு மாறாக இருந்தாலும் – ஒப்புக் கொண்டது எத்தனை ஆயிரம் சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையை ரணகளமாக்கியது என்பது சரித்திரத்தைப் படித்தால் உணர முடியும். சரித்திரத்தின் அத்தனை பக்கங்களும் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு, துரதிரிஷ்டவசமாக உலகின் மிகச்சிறந்த அஹிம்சாவாதி மகாத்மாவின் சரித்திரமும் விதிவிலக்கல்ல.

மகாத்மாவைக் குறித்த நாம் மதிக்கும் சில மாசு மறுவற்ற தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக நாம் கருதுகிறோம். தன்னலமற்ற தலைவர் பா. ஜீவானந்தம் தனது நேரடி உரையாடலில் மகாத்மாவின் வருணாஸ்ரம தர்ம நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது கேட்பதற்குச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மகாத்மா தான் வாழ்ந்த சூழ்நிலை மற்றும் கால கட்டத்திற்கொப்ப சில விஷயங்களை மிகவும் உறுதியாக நம்பினார் என்றே தோன்றுகிறது. வருணாஸ்ரம தர்மம் என்பது பலரால் பெரிதாகப் புரிதல் இல்லாமல் இகழப்படும் ஒரு அமைப்பு என்று இன்று இருந்தாலும், அதனைப் பற்றி மிகவும் பெரிய அளவிலான புரிதல் உள்ள மகாத்மாவும், ஜீவா அவர்களும் பொருதிக் கொண்டது உண்மையில் ஆராயப் பட வேண்டிய சந்திப்பு, சம்பாஷணை. ஒருவர் இன்னார் என்றும் அவரின் மகனாய்/மகளாய்ப் பிறந்ததாலேயே இன்னொருவர் அதே வர்ணத்தைக் கொண்டவராகவும் கருதப் படுவது வர்ணாஸ்ரம தர்மமாகும், அண்ணலுக்கும், ஜீவாவுக்கும் நடந்த சில விவாதங்களைப் படிக்கையில் அண்ணல் வர்ணாஸ்ரம தர்மத்தைப் பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. அவரின் சூழல் அந்தத் தளைகளை விட்டு வெளிவராத அளவுக்கு அவரைப் பாதித்திருக்கலாம் என்பது நமக்குப் புரிகிறது. ஆனால், அந்த விளக்கங்களில் மூழ்கி மனிதரை விலக்கும் எந்தச் செயலையும் அண்ணல் புரிந்தாரில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாழ்த்தப்பட்டவர்களுக்கு, தீண்டத்தகாதவர்கள் என்று அன்று கருதப்பட்டவர்களுக்கு ஆண்டவனின் மக்கள் (ஹரிஜன்) என்று பெயர் வைத்ததுடன் அவர்களின் சமூக விடுதலைக்காக, மகிழ்ச்சிக்காகத் தன் வாழ்நாள் முழுதும் போராடிய மிக உன்னதத் தலைவர் நம் தேசப் பிதா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.

அண்ணல் கொண்டிருந்த மற்றொரு கருத்து பல நூறு ஆண்டு காலமாகச் சந்ததி சந்ததியாய் நம்பப் பட்டு வந்த ஒன்று. ஒரு சிலர் அதனைத் தவிர்த்துப் புரட்சிகரமாகச் செயல்பட்டனர் என்பது உண்மையாயினும், மிகப் பெரும்பான்மையினர் பெரிதும் நம்பிய நிஜம் விதவைப் பெண்டிர் மறுமணம் செய்தல் ஆகாது என்பதே. இந்த நூற்றாண்டில் வாழும் நம்மால் மிகவும் எளிதாகப் பிற்போக்கான கருத்தென்று கூற இயலும் ஒன்று. ஆனால் எல்லாவற்றையும் அதன் காலகட்டத்துடனும், பின்னணியுடனும் பார்க்கும் பொழுது வேறு அர்த்தங்கள் விளங்குமோ என்பது நம் கணிப்பு. மகாத்மாவின் தமக்கை ஒருவர் கணவனை இழந்த கைம்பெண். மகாத்மா அவருக்காகப் பல உதவிகளைச் செய்து, அவர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று தன் வாழ்நாள் முழுவதும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், அவரின் மறுமணத்திற்கு மட்டும் மனம் ஒப்பாதவராகத்தான் இருந்தார் என்பதுதான் உண்மை.

மகாகவி சுப்பிரமணிய பாரதி, சுதேசமித்ரன் பத்திரிக்கையில் ஒருமுறை “ஸ்ரீமான் காந்தி” என்ற தலைப்பில் மகாத்மாவை எதிர்த்து மிகவும் சூடாக ஒரு கருத்தை எழுதுகிறார். மகாகவி மகாத்மாவின்பால் எவ்வளவு அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்வது இந்த சமயத்தில் மிகவும் அவசியமாகும்.

வாழ்க நீ எம்மான் இந்த

வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி

விடுதலை தவறி, கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர்

பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி

மகாத்மா நீ வாழ்க வாழ்கவே!!

என்று எழுதியவர் பாரதி. அந்த அளவுக்கு காந்தியின் மீது அளவில்லாத பாசமும் பக்தியும் கொண்டவர் பாரதி. ஆனால் இந்த ஒரு கருத்திலே மிகவும் மாறுபட்டவராகத் திகழ்ந்தார்கள் இவ்விருவரும். விதவைகள் மறுமணம் குறித்த ஒரு கேள்வி மகாத்மாவிடம் கேட்கப் படுகிறது. கேள்வி இதுதான் “விதவைகளான பெண்களை, மனைவியிழந்த ஆண்களுக்கு மணமுடித்து வைக்கலாமே” அதற்கு திருவாளர் காந்தி, மனைவியிழந்த கணவர்களும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கருத்துக்கு உடன்படுவேனேயல்லாமல் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை எந்தச் சந்தர்ப்பத்திலும் என்மனம் ஒப்பாது என்பதே அவர் அளித்த பதில். ”பெண் விதவைகளின் மறு வாழ்விற்கு யோசனை கேட்டால் ஆண் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க யோசனை கூறுகிறார் ஸ்ரீமான் காந்தி” என்று சாடினார் மகாகவி.

இறுதியாக, மகாத்மாவின்மீது எந்தவிதத்திலும் பொருத்தமேயில்லாத, எவராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வகையில் கூறப்படும் சில சாடல்களைக் குறித்து சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மகாத்மா தென்னாப்ரிக்காவில் அலுவல் நிமித்தமாக இருக்கையில், ஹெர்மன் கேலன்பாக் (Hermann Kallenbach) என்பவருடன் தங்கியிருந்ததாகவும், அவருக்கு இந்தியா திரும்பிய பின்னர் அண்ணல் எழுதிய கடிதங்களில் சில விவாதத்திற்கு உள்ளாவதாக இருப்பதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தக் கடிதங்களில் பலவற்றைக் கேலன்பாக் குடும்பத்தினர் சமீபத்தில் ஏலம் விடுகையில் இந்திய அரசாங்கம் அவற்றை வாங்கி, சிலவற்றைப் பொது மக்களின் பார்வைக்காகப்  புதுதில்லி அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதாகவும் செய்தியறிக்கைகள் கூறுகின்றன. அந்தக் கடிதங்களில் பலவற்றை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை என்பது சிலரின் குற்றச்சாட்டு. அவை வெளியிடப்பட்டால் மகாத்மாவுக்கும் கேலன்பாக்கிற்கும் இருந்த தகாத உறவு வெளிவரும் என்பது அவர்களின் கூற்று.

மனித வாழ்க்கையின் இறுதியறிந்து, ஞானம் பெற்ற ஒருவரைப் பற்றி என்னதான் குற்றம் சாட்டுவது என்ற வரையறேயேயில்லாத ஒரு தேசமிது. மெய்ஞானத்தின் மிக உயரிய படி முக்தி நிலை பெறுவதென்பதே. இந்த நிலை உலகியல் வாழ்வையோ, அதன் மூலம் வரும் சிற்றின்பங்களையோ நினைக்காமல், எதிர்பார்க்காமல், மீண்டும் பிறந்து வராதப் பேரின்பத்தை எய்துவது எப்படி என்பதை ஆராய்வது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வாழ்வது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வைக் கடைபிடித்து முற்றிலும் துறந்த துறவிபோல் வாழ்ந்த ஒரு புனிதரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவதூறு கூறலாம் என்று நினைத்து வாழும் சிலரைப் பார்க்கையில் நமக்கு பரிதாபமாக உள்ளது. அது சரி, ஆறு முழுவதும் நீரோடினாலும் நாய் நக்கித்தான் குடிக்குமாம், அதுபோலத் தங்களின் மனதின் நிலைக்கேற்றாற் போலத்தானே ஒருவரால் சிந்திக்க முடியும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை – நக்கிக் குடிக்கும் நாயினால் ஆற்றிற்கு எந்தக் குறைவும் வரப்போவது இல்லை!!!

–    வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Lokesh says:

    மிக அருமை.

    நக்கிக் குடிக்கும் நாயினால் ஆற்றிற்கு எந்தக் குறைவும் வரப்போவது இல்லை!!!

    அருமையோ அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad