\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நன்றி தெரிவிக்கும் திருநாள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 1 Comment

ThanksGiving_620x556பொதுவாக மேற்கத்தியவர்களைப் பற்றிய கிழக்கத்திய மக்களின் கருத்து அவ்வளவாக உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் என்பதே. தொலைவிலிருந்து பார்த்து இவர்களின் விவாகரத்து விகிதங்களையும், ஹாலிவுட்டில் காட்டப்படும் முகத்தில் சற்றும் சலனமில்லாமல் பஞ்ச மா பாதகங்கள் புரியும் சாதாரண மனிதர்களையும் மட்டுமே பார்க்கும் கீழை நாட்டினருக்கு அது போன்ற ஒரு அபிப்ராயம் தோன்றுவதில் வியப்பெதுவும் இல்லை. அருகிலிருந்து பார்த்து, இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும் கொடுக்கும் மரியாதையையும், பல உயர்வான எண்ணங்களுக்கு (values) கொடுக்கும் முக்கியத்துவத்தையும் நேரில் பார்க்கையில், இவர்களைக் குறித்த கீழை நாட்டினரின் பொதுவான கருத்தை மாற்றுவது அவசியம் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே.

மேலை நாட்டவரின் மேலான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான ஒரு பண்டிகை இந்த “நன்றி தெரிவிக்கும் திருநாள்” (Thanksgiving Day) என்றால் மிகையாகாது. இந்த விழாவின் காரணத்தை முதன்முறையாகக் கண்டறிகையில் நமக்கு மிகவும் வியப்பாக இருந்தது. கண்ணில் கண்ட உயிரினங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் கடவுள் என்று வழிபடும் நம் கலாச்சாரத்திலிருந்து பெரிய அளவு மாற்றமில்லை என்றே நமக்குத் தோன்றியது. வண்ணங்கள் வேறு, மானுடர் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு – ஆனால் உணர்வுகளில் பெருமளவு வேறுபாடு இல்லை என்பதற்கு இந்த விழா ஒரு உதாரணம் என்றே கூறலாம்.

நன்றி தெரிவிக்கும் விழா என்பதை அறுவடைத் திருநாள் எனவும் கூறலாம். நல்ல வளமான விளைச்சலைக் கொண்டாடும் விதமாக 1621 ஆம் ஆண்டு இன்றைய மாசாசூசெட்ஸ் (Massachusetts) மாகாணத்திலுள்ள பிளிமுத் (Plymouth) என்ற நகரத்தில் முதன் முதலாகத் தொடங்கியது இந்தக் கலாச்சாரம் என பரவலாக நம்பப்படுகிறது. இதனை நிருபீக்கும் அளவுக்கு சர்ச்சைக்கு மீறிய அளவில் ஆவணங்கள் எதுவுமில்லை என்பதும் உண்மையே. 1620 களிலும், 30 களிலும், ஐரோப்பாவிலிருந்து – குறிப்பாக இங்கிலாந்திலிருந்து – அமெரிக்காவுக்கு குடிபுகல் மிகவும் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அவ்வாறு குடிபுகுந்தவர்கள் இந்த அறுவடையைக் கொண்டாடும் வழக்கத்தையும் கொண்டு வந்தனர் என்பதே உண்மை.

இங்கிலாந்தின் அறுவடைக் காலத்திற்கு சம்மந்தமில்லாத நவம்பர் திங்களில் இந்த விழாக் கொண்டாடப்படத் துவங்கியது. குடி பெயர்ந்தவர்கள் அந்தக் கலாச்சாரத்தைக் கொண்டுவந்த பொழுது, தனது நாட்டின் அறுவடைக் காலத்தை ஒட்டி நடத்த வேண்டுமென்று நினைக்காமல் ஏதோவொரு காரணத்திற்காக நவம்பர் திங்களில் இதனைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் திருநாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்கள் நான்காவது வியாழக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ஆம் திகதியை நாடு தழுவிய “நன்றி தெரிவிக்கும் திருநாள்” என அறிவித்தார். உலகில் பெரிய கடவுள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பது என்பதே அவரின் அந்த தினத்தின் அறிவிப்பாகும்.

அமெரிக்கா தவிர இந்தத் திருநாள் கனடாவிலும் கொண்டாடப்படுகிறது. இங்கும் கிட்டத்தட்ட அதே அளவு உற்சாகத்துடனும், அதே காரணங்களுக்காகவும் இந்தத் திருநாள் கொண்டாடப் படுகிறது. கனடாவில் இந்தத் திருநாள் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் வேல்ஸ் அவர்கள் தனது உடல்நிலை குணமாகி வெளிவந்ததைக் கொண்டாடும் விதமாக இந்தத் திருநாள் முதல் முறையாக 1872 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 15 ஆம் திகதி கனடா நாட்டில் கொண்டாடப்பட்டதாம். இங்கிலாந்து மகாராணியை இன்றும் தலைவியாய் ஏற்றுள்ள இந்த நாட்டில், இங்கிலாந்தினால் தொடங்கப்பட்ட பாரம்பரியம் இன்னும் கொண்டாடப்படுகிறது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் இந்தத் திருநாள் நவம்பர் மாதம் ஆறாம் திகிதி கொண்டாடப் பட்டதாம். முதல் உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஆர்மிஸ்டிஸ் தினம் (Armistice Day) என்பதும் இதே வாரத்தில் கொண்டாடப்படத் துவங்கியபின்னர், இரண்டு விடுமுறைகள் ஒரே வாரத்தில் வருவதைத் தவிர்க்க எண்ணி, கனடா அரசாங்கம் நன்றி தெரிவிக்கும் திருநாளை அக்டோபர் திங்களுக்கு மாற்றி விட்டதாம்.

இந்தத் திருநாளின் மிக முக்கியமான வழக்குமுறை உறவினர் அனைவரும் ஒன்று கூடுவது என்பதே. கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு பெரிதும் அறிமுகமில்லாத இந்த நாட்டில், ஒரு திருநாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் பல மூலைகளிலிருந்து பயணம் செய்து ஏதேனும் ஒருவரின் இல்லத்தில் ஒன்று கூடுவதென்பது மிகவும் சுவாரசியம் மற்றும் முக்கியத்துவம் நிறைந்த சம்பவமாகும். உடன் பிறந்தவர்கள், அவர்களின் மனைவி மக்கள் மற்றும் பெற்றோர் எனப் பெரிய குடும்பம் முழுவதும் ஒன்று கூடி மகிழ்வது இதன் சிறப்பம்சமாகும். பொதுவாக வயதான பெற்றோர் உயிருடன் இருப்பின், அவர்கள் இருக்கும் இடம் நோக்கி கூட்டை நோக்கிப் பறக்கும் பறவைகள் போல அனைவரும் பயணிப்பர். அவ்வாறு யாரும் இல்லாவிடில், குடும்பத்தில் மூத்தவர் இருக்கும் ஊர் நோக்கி மற்றவர் பயணிப்பர். இது இல்லாமல் அவரவர்களின் வசதி குறித்து சில மாற்றங்களை ஏற்றுக் கொள்வது என்பதும் நடக்கக் கூடியதே. இந்தத் திருநாளை ஒட்டிய தினங்களே இந்த நாட்டில் மக்கள் அதிகமாகப் பயணிக்கும் தினங்கள் எனப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பொதுவாக இந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பது வழக்கமான ஒன்று. இந்தத் தினத்தன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இரவு உணவு உண்பது என்பது பொதுவான வழக்கம். இந்த உணவை பொதுவாக அனைத்து குடும்ப உறுப்பினரும் ஒன்றாய்ச் சேர்ந்து சமைப்பது என்பதும் இந்த பழக்க வழக்கங்களின் ஒன்றாகும். இந்த உணவில் வான்கோழி சமைப்பது என்பது எழுதப் படாத நியதி. வான்கோழியுடன் கூடி, சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு மற்றும் க்ரேன்பெர்ரி சமைப்பது என்பது வழக்கம். இந்தச் சமையல்களுக்கு முடிவில் பரங்கிக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு அல்லது ஆப்பிள் என ஏதாவது ஒன்றினால் செய்யப்பட்ட பை (pie) செய்து அதனை வெதுமானமாக (desert) உட்கொள்வது பெரும்பாலான குடும்பங்களின் பழக்கமாகும்.

இதில் சற்றே நகைப்புக்குரிய பழக்கமாகத் தொடர்வது அமெரிக்க ஜனாதிபதி பெற்றுக் கொள்ளும் ”மன்னிக்கப் படும் வான்கோழி” என்பது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதி தனக்களிக்கப்படும் வான்கோழி மற்றும் அதன் துணை வான்கோழி (alternate turkey) இரண்டையும் கொன்று உணவாய்ச் சமைக்காமல் உயிருடன் பண்ணையில் விடுவதற்குப் பெயர் மன்னிக்கப்படும் வான்கோழி (The Turkey Pardon) ஆகும்.

நம்மூரில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப் படுவதைப் போல, அமெரிக்காவில் இந்த நாளில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு அமெரிக்கன் கால் பந்து (American Foot Ball) விளையாட்டு நடை பெறும், அந்த விளையாட்டின் நேர்முக ஒளிபரப்பை மொத்த நாடும் வீட்டில் அமர்ந்து பார்த்து ரசிக்கும். இந்த விளையாட்டின் முன்னர் அனைவரும் அமர்ந்து பார்ப்பதற்கு மற்றொரு காரணம், இந்த நாளின் அனைத்துக் கடைகளும், பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் – திரையரங்கம் உட்பட – விடுமுறையில் இருப்பதுதான்.

நன்றி தெரிவிக்கும் நாளின் மிக முக்கிய கலாச்சாரப் பழக்கம் அதன் மறுநாள் நடைபெறும் கறுப்பு வெள்ளி (Black Friday) எனப்படும் வியாபாரத் திருநாள். உலகிலேயே மிகவும் அதிகமாக வியாபாரம் நடைபெறும் நாள் என இந்த நாளைக் குறிப்பிடலாமென நினைக்கிறேன். பல பொருள்கள் சிறப்பு விலையில் இந்த நாளில் கிடைக்கும். நம் உஸ்மான் ரோடு மற்றும் ரங்கநாதன் தெருவில் அட்சய திருதியையை ஒட்டி நடைபெறும் வியாபாரத்தை விஞ்சும் இந்த வியாபாரம். பல கடைகளும் பலவிதமான வியாபாரங்களையும் (Sale Offers) மலிவு விலை அறிவிப்புகளையும் (Offers) பல தினங்களுக்கு முன்னரே வெளியிடும். சில விலையுயர்ந்த பொருள்கள் – பெரும்பாலும் எலக்ட்ரானிக்ஸ் – பாதி விலைக்குக் கூட கிடைப்பதுண்டு. ஆனால் பொதுவாக இவை அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும். அதனால் இந்த அறிவிப்பு வந்தவுடன் மக்கள் பலர் வரிசையில் சென்று நிற்கத் தொடங்கி விடுவர்.

பொதுவாக இந்த விற்பனைக்காக கடைகள் காலையில் ஐந்து மணியளவில் திறக்கும். ஆனால் பல கடைகளின் – பொருள்களின் விலைக்கு ஏற்ப – மக்கள் முதல் தின இரவிலிருந்தே வரிசையில் நிற்கத் தொடங்கி விடுவர். அவர்கள் பொதுவாக இரவு முழுவதும் கடையின் வெளிப்புறத்தில் – கார்கள் நிறுத்துமிடத்தில் – வரிசையில் நிற்பர். இந்த நவம்பர் மாதமென்பது அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் உதிரத்தை உறைய வைக்கும் குளிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குளிரிக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டது பலர் வந்து வரிசையில் நிற்பார்களெனப் பார்க்கும்பொழுது நமக்கு ஆச்சரியாமாய் இருக்கும். திருப்பதியில் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்துக் கேலி செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனமெனத் தோன்றும். இவ்வாறு வரிசையில் நின்று தாங்கள் நினைத்த பொருளை வாங்குவது உண்மையாகவே ஒரு நல்ல லாபகரமான செயலாவென்று நாமறியோம். ஆனால் இதுபோல வரிசையில் தெரிந்த நண்பர்கள் பலருடன் நின்று கடை திறக்கும் வரைக் காத்திருந்ததால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த ஆண்டின் நன்றி செலுத்தும் திருநாள் நேற்றைய முன் தினம் நடந்து முடிந்தது. மேல்குறிப்பிட்ட அத்தனை வழக்கங்களயும் கொண்டு சிறப்பாக நடந்து முடிந்தது இந்தப் பண்டிகை. நம் பங்கிற்கு நாமும் ஒரு சில பொருள்களை வாங்கித் தீர்த்தோம் – கடைகளின் முன்னர் கொட்டும் பனியில் கொடும் குளிரில் வரிசையில் நின்று அல்ல, வசதியாக வீட்டிற்குள் அமர்ந்து கணினியில், இணைய தளத்தின் மூலமாய். பல மடங்கு குறைந்த விலையில் விற்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை ஆடர் செய்து விட்டு, அவை முழுமையாக வேலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் அவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும்…

–    வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    Can’t accept comparing guys standing in line to buy a product with devotees standing in line at Thirupathy. Second one is divine and first one is materialistic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad