தமிழ்ப் பாடல்
வள்ளுவன் என்றோர் வரகவி வந்து
வாழ்வியல் நெறிகளைத் தரமுடன் தந்து
துள்ளும் தமிழின் நடையதை உணர்ந்து
தூய்மை நிரம்பும் மொழியாய்ச் செய்தான்!!
இளங்கோ என்பவன் பின்வந்து உதித்து
ஈர்க்கும் சிலம்பெனும் காவியம் படைத்து
விளங்காப் பேதைக்கும் விவரமாய் உரைத்து
வீரமும் ஈரமும் தமிழ்கொண்டு இயம்பினான்!!
கம்பன் அவனின் கவித்திறன் புதிது
காசினி முழுதும் ருசித்திடும் அமுது
வம்பர் பலரும் வசைபாடியதை விடுத்து
வானுயர வாழ்த்த வால்மீகியை வரைந்தான்!!
ஔவை எனுமொரு அற்புத முத்து
ஆழிசூழ் உலகம் அனைத்தும் உணர்ந்து
அதியனின் நெல்லிக் கனிச்சுவை நுகர்ந்து
ஆன சாக்கில் அருந்தமிழ் பகர்ந்தாள்!!
பாரதி தந்தான் பாக்களில் விருந்து
பாரதம் முழுக்க அடிமையாய்க் கிடந்து
மக்கள் முழுதும் மாட்சிமை மறந்து
மாக்களாய் வாழ்வதைத் தமிழால் சாடினான்!!
பாவேந்தர், நாமக்கல் கவிஞர் தொடர்ந்து
பார்புகழ் கவியரசு பாவாறாய்ப் பொழிந்து
கல்யாண சுந்தரமும் பொதுவுடமை பதித்து
காலத்தைக் கடந்த கவிபல படைத்திட்டனர்!!
அடுத்துப் பலரும் அரியகவி புனைந்து
ஆழ்ந்த தமிழின் அற்புதம் வரைந்து
உலகின் தொன்மை மொழிகளில் இஃது
ஊன்றியது முதலிடம் என்று உணர்த்தினர்!!!
கன்னல் அமுதின் சுவையொத்த மொழியது
காலமாற்றம் என்றொரு காரணம் தந்து
பிறமொழி கலந்த பிதற்றலைக் கவியென்பது
திறமிகு தமிழர்க்குத் தீராத தலைக்குனிவு!!!
– மது வெங்கடராஜன்
தமிழை/தமிழ் இலக்கிய படைப்புகளை அழகாக அலஙகரித்தீர்!
ஔவையின் அருந்தமிழும், பாரதியின் சாடலும் பாங்காய் உரைத்தீர்!
செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!!!