எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்
மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்
பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்
கண் போன்று முதுமையில் காத்திட
நன் மக்கள் ஒன்றிரண்டு அவசியம்
பண் பாடி உலகம் வணங்கிட
தன் நலம் துறத்தல் அவசியம்
விண் நோக்கி ஒருநாள் பயணிக்க
ஊன் விடுத்து உயிரறிதல் அவசியம் !!!
– வெ. மதுசூதனன்
மண்ணில் மனையில் சிறைப்பட வேண்டாம் !
பொன்னில் விலங்கினைப் பூண்டிட வேண்டாம் !
பெண்ணின் பெருமையில் சிறுத்திட வேண்டாம்
பின்னில் நிழலில் தொலைந்திட வேண்டாம்!
செந்நிற உதிரஞ்சுட சினந்திட வேண்டாம் !
திண்ணிய பகைப்போர் புனைந்திட வேண்டாம் !
வெண்ணிற நரைகண்டு முடங்கிட வேண்டாம்!
கண்ணிய உணர்வுதனை குலைத்திட வேண்டாம் !
பண்ணில் பறையில் உழன்றிட வேண்டாம் !
விண்ணில் வாழ்வுண்டு மறந்திட வேண்டாம்!
உன்னில் திறனுண்டு வீழ்ந்திட வேண்டாம் !
என்னில் பிழையுண்டு வெறுத்திட வேண்டாம் !
– ரவிக்குமார்
அன்புக் காதலியின் கமழ்மணம் சொல்ல
அமுதின் இனிய தமிழ் அவசியம்
ஆன்மிகம் பகிரவும் அன்பைச் சொல்லவும்
ஆதார சுருதி ஏழு அவசியம்
இன்பத்தில் துள்ளாமல் துன்பத்தில் துவளாமல்
இயல்பாய் இருக்க அனுபவம் அவசியம்
ஈடில்லா இறைவனின் இன்னருள் பெற
ஈரமான கொடை நெஞ்சம் அவசியம்!
– பாண்டி
உன்கவி படித்து உண்மை உணர்ந்திட
உலகம் போற்றிடும் உள்ளறிவு அவசியம்
ஊன்வலி மறந்து உள்ளவலி புரிதல்
ஊருலகு போற்றும் சிறப்புற அவசியம்
எண்பது ஆண்டுகள் முடிவில் இறப்பினும்
என்றும் நிலைக்க தியாகம் அவசியம்
ஏன் எதற்கென எதையும் கேட்பது
ஏளனம் இல்லா வாழ்வுக்கு அவசியம்!!!