\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

செங்குளம்

Filed in இலக்கியம், கதை by on January 15, 2014 1 Comment

senkulam_620x457சூரியன் மேற்கில் ஓடி மறைந்து கொண்டிருந்தது. நேரம் ஆறு ஆறரையைத் தாண்டியிருக்கும் என மனதில் நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன். பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் சத்தம் என் காதைப் பிளந்தது. அண்ணாந்து வானத்தைப் பாத்தேன். சிறு பறவைகள் கூட்டமாகப் பறப்பது போலவும்… காற்றில் உதிரும் இலவம் பஞ்சுக் கூட்டம் வானவெளியில் சல்லாபம் புரிவது போலவும் ஒன்றுடன் ஒட்டி உரசியபடி வானத்தில் இருந்து கொத்துக் கொத்தாக எண்ணுக்கணக்கற்ற துண்டுப் பிரசுரங்கள் தரையை நோக்கி வந்துகொண்டிருந்தன…

கடும் போருக்கு மத்தியில் பதுங்கிப் பதுங்கி வாழ்வதுதான் எமது சீவியமாகி விட்டது.

“ஜெயன்…ஜெயன்…”

என என் பெற்றோர்கள் என்னைக் கூப்பிடுவது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால்… சொந்தப் பெயரைச் சொன்னால் என்ன நடக்குமோ எனப் பயத்துடன் நொடிப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் பல இலட்சம் மக்களில் நானும் ஒருவன்.

யாழ் குடாநாட்டில் போர் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே மின்சாரமும் போயிருந்தது. சூரியனும் நிலவும் மட்டும் தான் எங்களின் மின்குமிழ்கள்… குருமிருட்டே எங்கள் வாழ்வு… பீரங்கி வெடிகளும் துப்பாக்கிச் சத்தங்களும் எங்களுக்கான வான வேடிக்கைகள்… நாங்கள் பறவைக்காக வான் பார்ப்பதை விட விமானம் பார்த்ததே அதிகம்…

இன்னொரு பக்கம் எதையும் சுயமாகச் சிந்திப்பதற்கு மற்றவர்கள் போலவே எனக்கும் அனுமதியில்லை… பள்ளிக்கூடம் போக… படிக்க… என் சகபாடிகளைச் சந்திக்க… எதற்கும் யாரோ ஒருவரின் கட்டளைக்காகக் காத்து இருக்க வேண்டியவனாக நான் இருந்தேன். பல நாட்கள் பசித்திருக்கப் பழகினேன்.எங்களுக்கான புதை குழிகளை நாங்களே வெட்டினோம்… எங்கள் பதுங்கு குழிகளே எங்களுக்கான புதை குழிகளாகவும் மாறிய சந்தர்ப்பங்கள் பல எங்கள் வாழ்வில் நடந்தேறியுள்ளன. யாரை நம்புவது… யாரை நம்பகக் கூடாது எதுவுமே விளங்கவில்லை. வெறும் பதினாறு வயதுக்கிடையில் நான் பட்ட… பார்த்த… துன்பங்கள் சொல்லில் அடங்காதவை.

இப்போது துண்டுப் பிரசுரங்கள் கீழே விழும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதில் என்னதான் உள்ளது என்ற ஆவலில் ஒன்றையாவது எடுக்கும் முயற்சியில் இறங்கினேன்…

பீரங்கி வெடிச் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. பொழுது சாயச்சாய வெடிச் சத்தம் கூடிக் கொண்டு போனது. “ஊரடங்குச் சட்டம்” அமுலுக்கு வந்து விட்டது என்பதை “செல்” அடித்துச் சொல்வதே ஆமிக்காரங்களின் வழமையான பாணி…

எங்களின் வளவுக்குள்ளையும் ஒன்றிரண்டு துண்டுப் பிரசுரங்கள் விழுவதைக் கண்டேன். மெதுவாகத் தவழ்ந்து… தவழ்ந்து அவற்றைப் பொறுக்கி எடுத்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவை அச்சடிக்கப் பட்டிருந்தன.

“நாளை விடிகாலையில் தேடுதல் வேட்டைக்காகப் படையினர் வீடுவீடாக வர இருப்பதால், அனைவரும் வீட்டுக் கதவுகளைத் திறந்தபடி விட்டு விட்டு, அருகில் உள்ள பாடசாலை, கோயில்,தேவாலயம் போன்றவற்றுக்குச் செல்ல வேண்டும்” எனக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது.

“கோதரி விழுவார் விடியக் காலமையும் இஞ்சை என்னத்துக்கு வாறாங்கள்… இவங்களுக்கு மட்டும் ஒரு இழவும் வரமாட்டெனெண்டுது…” பக்கத்து வீட்டுக் கிழவியின் குரல் சன்னமாய் ஒலித்தது.

இப்போது நான் பம்பரமானேன்…

“விடியுறத்துக்கு முன்னம் எனது பள்ளிக்கூடத்துக்கு போய்விடலாம்”

என என் புத்திக்குப் பட்டதும் என் பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். ஊரடங்குச் சட்டம் இரவு முழுக்க அமுலில் இருப்பதால் பெரிய வீதிகளைத் தவிர்த்து குச்சொளுங்கைகளூடாக மெல்ல மெல்லமாக நிலவு வெளிச்சத்தில் “செங்குளம்” கிறிஸ்தவப் பாடசாலைக்கு வந்து சேர்ந்தேன். இலங்கைப் படத்தை விரித்து வைத்து அதன் தலையில் ஒரு புள்ளியிட்டு “இதுதான் செங்குளம்” என்று சொல்லுமளவிற்கு பிரபலமில்லா விட்டாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான இடங்களில் செங்குளமும் ஒன்று.

ஆறு மாதங்களுக்கு முதல் சுற்றியிருந்த மலை வெப்ப மரங்களைக் காணவில்லை… காவலுக்கு போடப்பட்ட இரும்புப் படலை திறந்த படி கிடந்தது. சைக்கிளை பாடசாலையில் உள்ள தேவாலயப் பின் சுவரில் சாத்திவிட்டு பழைய பிம்றோஸ் ஹாலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இங்கு பாடசாலை நாட்களில் எங்களுக்கான வகுப்புகள் நடப்பதுண்டு. அதனால் அங்கு செல்வதில் எனக்கு ஒரு சிரமமும் இருக்கவில்லை. வழக்கமாகவே கதவுகள் திறந்து கிடக்கும் பிம்றோஸ் ஹாலில் நிறைய மர வாங்குகள் போடப்பட்டிருந்தன.

தூரத்தில் துப்பாக்கி வேட்டொலியும் பீரங்கிச் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன. வயிறு வேறு பசியில் அழத் தொடங்கியது. இவை அனைத்தையும் மீறித் தூக்கம்… ஒரு சிறு தூக்கம் தான்…. திடீரென ஆட்டிலறி செல்கள் பாடசாலைக்கு மேலாக காற்றைக் கிழித்தபடி கூவிக்கொண்டு போனது.

“ஜெயா… டேய் … ஜெயா…”

இந்தச் சத்தங்களுக்கு நடுவில் யாரோ என்னை கூப்பிடுவது போல் உணர்ந்தேன். கொஞ்சத் தூரத்தில் விக்ரரும் மாதவனும் நின்று கொண்டிருந்தார்கள். நிலவொளியில் அவர்கள் தான் என்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது. அவர்கள் என் ஆருயிர் நண்பர்கள். விக்ரர் கையில் ஒரு கிளுவையிலைப் பொட்டலம் வைத்திருந்தான்.

“டேய் மச்சான் சாப்பிட்டா… பசிச்சுப் போயிருப்பாய்….”

“என்னடா என்ன இது”

“பக்கத்துக் கோயில்லை வாங்கின சுண்டல் மச்சான்…”

“நீ சாப்பிட்டுடியாடா”

“ஓம் மச்சான் நானும் மாதவனும் கோயில்லை சாப்பிட்டிடோம்”

பசி வயித்தைக் குடைஞ்சு கொண்டிருந்தது ஒன்றும் சொல்லாமல் அப்படியே வாங்கிச் சாப்பிட்டேன். சுண்டலும் தேங்காயும் அப்போது எனக்கு அமிர்தம் போல் இருந்தது.

சாப்பிட்ட பின் தேவாலயக் கிணற்றில் வாளியை விட்டு மாதவன் தண்ணீரை அள்ளினான். நானும் விக்ரரும் கையில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தோம்.

“…………க்…..யி…ங்…….”

என்ற இரைச்சலுடன் பெரிய வெடிச் சத்தம் என்னால் எதையும் உணர முடியவில்லை. காதில் கேட்ட கடைசிச் சத்தம் அதுதான்… மூவரும் வெவ்வேறு திசைகளில் தூக்கி எறியப்பட்டோம். பீரங்கி வெடிகள் விழுந்து வெடித்துக் கொண்டே இருந்தன. விக்ரரின் வாய் அசைவது தெரிந்தது. அவன் என்ன சொன்னான் என்று விளங்கவில்லை.

“பள்ளிக்கூடம், தேவாலயத்தில போய் இருக்கச் சொல்லிவிட்டு இஞ்சையும் செல்லை அடிச்சால் இனி எங்கேதான் நாங்கள் போறது…”

என மனதில் எண்ணியவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் இயல்புக்குத் திரும்பிய நாங்கள் புழுதியை அள்ளி உரசல் காயங்களுக்கு அப்பிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தோம். இப்போது எனது காது கேட்கத் தொடங்கியிருந்தது.

“ஜெயா… அங்க பார் எதோ நெருப்பு புகை தெரியுது… பள்ளிக்கூடத்திலை கடலோரச் சனம் இருக்குது… என்ன நடந்ததோ தெரியாது” என்றான் விக்ரர்.

மூன்றுபேரும் தேவாலயத்தில் இருந்த அரிக்கன் லாம்பைக் கையில் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினோம்.

நிலவு வெளிச்சத்தில் நிலம் மினுமினுப்பாகத் தெரிந்தது. மழை பெய்யவில்லை தண்ணீருமில்லை… இரத்த வாடை.. எங்கும் ஒரே மரண ஓலம்… பல உடல்கள் அங்குமிங்கும் சிதைந்து காணப்பட்டன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் சிலர் உதவிக்கு வந்து சேர்ந்தனர். சிலரிடம் “பிளாஷ் லைட்” இருந்தது. யாரை முதலில் தூக்குவது யாருக்கு என்ன உதவி செய்வது என்று விளங்கவில்லை… ஆஸ்பத்திரியும் அருகில் இல்லை. அவசரத்துக்கு ஆரையும் கொண்டுபோக முடியாது ஆட்டிலறித் தாக்குதல் தொடர்ந்த வண்ணமிருந்தது.

இது போல பலவற்றை ஏற்கனவே கேட்டிருப்பினும் இதுவே எமக்கு முதல் நேரடி அனுபவம்.

“தம்பி இப்ப செத்தவையை விட்டிட்டு மற்றவையைப் பாருங்கோ”

என்றார் ஒரு முதியவர்.

“கடுங்காயம் இருக்கிறவைக்கு மட்டும் முதல்லை பாருங்கோ பிறகு மற்றவையைப் பார்க்கலாம்” என்றார் இன்னொருவர்.

“யாருக்கும் தண்ணீர் கொடுக்க கூடாது” என்பது எனக்குத் தெரியும் நாங்கள் மூவரும் இப்போது தனித் தனியாக பிரிந்து கட்டிடத்தின் எல்லாத் திக்கிலும் தேடினோம்.

கட்டிடத்துக்கு வெளியில் படுத்திருந்த பலர் உயிரிழந்திருந்தனர். மரண ஓலங்களுக்கு மத்தியில் சிறு முனகல் சத்தம்…

“மாதவன் லாம்பை இஞ்சை கொண்டுவா… இஞ்சை எதோ சத்தம் கேக்குது…”

“வாறன்…”

என்றபடி மாதவன் ஓடிவந்தான்.

ஒரு பச்சிளம் குழந்தை தாயின் மார்பில் பால் குடித்தபடி இருந்தது….

“அக்கா உங்களுக்கு ஒட்டுமில்லையே…:

…………………………………..

பதிலில்லை…………………………………………………

“அக்கா…”

“ம்..கூம்….” பதிலில்லை……………………………….

மாதவன் கத்தினான்.

“மச்சான் அவாவின்ரை பின்பக்கம் சிதைஞ்சு போச்சுதடா….”

எனக்கு தலை சுற்றியது. பிள்ளையை ஒரு கையில் வாரித் தூக்கினேன். இரத்தம் தோய்ந்திருந்தது. யாரோ சேலை தந்தார்கள். குழந்தையை அதில் சுற்றி இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு இன்னும் யார் காயங்களுடன் இருக்கிறார்கள் என்று தேடினோம் யாரும் இல்லை.

“தம்பி இந்தப் பிள்ளையைத் தூக்கு” என ஒரு அம்மாவின் குரல் சுழன்று தாவினேன்.

மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். என் பலத்தைத் திரட்டி அவளைத் தூக்கிக் கொண்டு பாடசாலைக் கட்டிடத்துக்கு வந்தேன்.

இதற்குள் மாதவனும் வந்துவிட்டான் அங்கிருந்த பெண்கள் மற்றும் முதியவர்களின் துணையுடன் இரத்தம் தோய்ந்த ஆடைகளுக்கு நடுவில் ஒருஅழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் நாக்கு வழித்து அதைத் தாயிடம் கொடுத்தாள் ஒரு வயதான பெண்.

இன்னும் நிறையத் தொண்டர்கள் அங்கு வந்து சேர்ந்தமையினால் நாங்கள் பிம்றோஸ் ஹாலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்…

– முனியப்பன்-

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. தியா says:

    முனியப்பன், கதை அருமை. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து இதுபோன்ற அனுபவக் கதைகளை எதிர் பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad