காதலியே …
(என்னவளே அடி என்னவளே என்ற பாடல் மெட்டுக்கு எழுதியது)
காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?
வாசலில்லா என் இதயம் வந்து
பூ வாசமும் தந்து சென்றாய்!
வெறும் வார்த்தைகளால் உன் வடிவெழுத
ஒரு வாய்ப்பினைத் தந்து நின்றாய். (காரிகையே …)
வான்முகிலும் அதன் கார்நிறமும்
கருங்கூந்தலில் கரைந்ததடி!
வானவில்லும் அந்தப் பாண வில்லும்
வளைப்புருவத்தில் தெரியுதடி!
வெண்ணிலவும் அதன் குளிரொளியும்
உன் விழிகளில் வழியுமடி!
பெண்ணிலவே உன் வாய்மொழிக்கு
சிறு குயில்களும் சிலிர்க்குதடி!
நீ விரும்பினால், திரும்பினால் வாழ்ந்திடும் நெஞ்சமடி!
நான் மாள்வதும் இல்லை மீள்வதும்
உன் விடைதனில் உள்ளதடி! (காரிகையே …)
ஓவியமே எண்ணத் தூரிகையால்
உனை நெஞ்சத்தில் வரைந்துவைப்பேன்.
காவியமே என் கவிதைகளால்
உனை மஞ்சத்தில் மணந்திருப்பேன்.
ஏந்திழையே உன் எழிலுரைக்க
புதுப் பதங்களைப் படித்துவைப்பேன்.
சேர்ந்திடவே உனைச் சார்ந்திடவே
பல வருடங்கள் காத்துநிற்பேன்.
உனை மறப்பதால் மறுப்பதால் மரித்திடும் நெஞ்சமடி!
நான் வாழ்வதும் இல்லை வீழ்வதும்
விதி வசம் உள்ளதடி! (காரிகையே …)
– ரவிக்குமார்.
Tags: love
Sirapp Ravi sir…
Sirappu Miga Sirappu Ravi Sir…
அருமையான வரிகள். இதற்கு இசை வடிவம் தந்து பாடிப் பதிந்து பகிர்ந்தால் சிறப்பாய் இருக்கும் – ரசிகன்