எசப்பாட்டு – காதல்
கனவில் நினைந்து
கண்ணில் மலர்ந்து
கருத்தில் கலந்து
கல்லறைவரை தொடர்ந்தது…
காதல்…
கன்னியை நினைந்து
கருத்துடன் மணந்து
கட்டிலில் இணைந்து
கருக்களாய் மலர்ந்தது…
காதல்
களவினில் மலர்ந்து
கவிபல புனைந்து
கண்ணியம் கலந்து
கல்யாணத்தில் முடிந்தது….
-வெ. மதுசூதனன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல்
கண்ணில் கனிந்து
கருத்தில் கனத்து
கானமாய் இசைந்து
கானலாய் கரைந்தது.
காதல்
கனவில் மலர்ந்து
காஞ்சனமாய் கவர்ந்து
காந்தமாய் இழுத்து
காலையில் மறைந்தது.
காதல்
காவியமாய் துளிர்த்து
காமத்தில் எரிந்து
காலமாகி பொய்த்து
காயமாக்கிப் போனது!.
– ரவிக்குமார்
Tags: love
அருமை. இரு வேறு காதல் அனுபவங்கள் . எப்படிப்பட்ட முடிவாக இருந்தாலும் காதல் அழகான ஒன்று .
காட்சி அல்லவே கானலாய் கரைந்திட
நிலவும் அல்லவே காலையில் மறைந்திட
பஞ்சும் அல்லவே காமத்தில் கருகிட
காலம் கடந்ததே உண்மைக் காதல்
நாளும் வரவில்லை கல்லறை காண
மகரந்தம் சேரவில்லை கருக்களும் மலர
சமூகம் ஏற்கவில்லை திருமணம் நிகழ
யாவிலும் சிறந்ததே புனிதக் காதல்
கானல் அதுவும் காட்சியாய் மலர்ந்திடும்
காலைப் பொழுதிலும் கருநிலாத் தோன்றிடும்
பஞ்சுப் பொதியும் செந்தீ பிழைத்திடும்
காதல் என்றொரு விந்தை உணர்வினால்!!!
கல்லறை வந்திட்ட நாளும் சொர்க்கமாம்
மகரந்தம் தந்திடா மலர்களும் இன்பமாம்
மறுத்திடும் சமூகம் மலர்த்தூவி வாழ்த்துமாம்
புனிதமாய்த் திகழ்ந்திட்ட புரையில்லாக் காதலையே!!!
காதல்
தன்னை மறந்து
தனிமை இழந்து
துடிப்பில் கலந்து
தன உயிராய் இணைந்து
காதல்
தாலியில் இணைந்து
தூக்கத்தை மறந்து
தேன்நிலவில் துளிர்ந்து
தொடில்லில் தவழ்ந்து
காதல்
காலம் கடத்தும்!
காயம் வருத்தும்!
காசினி முடக்கும்!
காலடியில் வீழ்த்தும்!
காதல்
கண்கள் உறங்கா
கவளம் இறங்கா
கட்டுக்குள் அடங்கா
கடும்பிணியே நீஅறி!
காதல்
கொட்டும் கடகம்!
கொத்தும் அரவம்!
கிஞ்சித்தும் தீண்டுமாயின்
கிறங்காது வெட்டிஎறி!
– சாருகேசி
காதலால்
காலம் பொன்னாகும்!
காயம் மாயமாகும்!
காசினி வசப்படும்!
காலடியில் உலகுவிழும்!!
காதலால்
கண்கள் பளிச்சிடும்!
கவளம் அனாவசியமாகும்!
கட்டுக்குள் காலமிருக்கும்!
கடும்பிணியே அண்டாதிருக்கும்!!
காதல்
கொட்டும் அருவியாகும்!
கொத்தும் கிளியாகும்!
கொஞ்சித் தீண்டாவிடின்
கொஞ்சமும் வாழ்வதெதற்கோ!!!
காதல்
மலர்வாடை முகர்ந்து
மணமேடையில் இணைந்து
மகிழ்ந்தாடி ஓய்ந்து
மனமேடையில் உடைவது!
காதல்
உருவமில்லா மூர்க்கம்
உவமையில்லா வருத்தம்
ஊனுருக்கும் பித்தம்
ஊடுருவி வீழ்த்தும்
சாருகேசி
மலரின் வாடையில் மயக்கமும் வரலாம்
திருமண மேடையில் இருமனம் சேரலாம்
பஞ்சடை மஞ்சத்தில் மலரும் கசங்கலாம்
மனமதை ஒட்டிடும் மருந்தே காதலாம்
மூர்க்கமே மிஞ்சிட கரங்களும் உடையலாம்
வருத்தமே வந்திட குழப்பமும் கூடலாம்
பித்தமே தலைக்க சித்தமே கலங்கலாம்
வாழ்வை சிறந்திட வைப்பதே காதலாம்
காதல்
நிலத்தை நீராக்கும்
நிலவை நெருப்பாக்கும்
நிழலை நிசமாக்கும்
நிதர்சனத்தை நிராகரிக்கும்
காதல்
நினைவை நீசமாக்கும்
நித்திரையை நிராசையாக்கும்
நிம்மதியை நிந்திக்கும்
நிலையாமையை நிலைநிறுத்தும்.
– சாருகேசி
காதல்
வறண்ட நிலத்திலும் நீராகும்,
இருண்ட நிலவிலும் சுடராகும்,
நினைவின் நிழலுக்கும் நிசமாகும்
நிதர்சனத்தின் சுழலுக்கும் வசமாகும் .
காதல்
நினைவைப் பூசிக்கும்,
நித்திரையை யோசிக்கும்,
நிம்மதியை யாசிக்கும்,
நிலைமையை நேசிக்கும்.