எசப்பாட்டு – நடிகன்
எவனோ கவியெழுத எவனோ இசையமைக்க
எவனோ பாடிவைக்க எவனோ ஆடவைக்க
எவனோ எழில்கொடுக்க எவனோ உடையமைக்க
எதையோ பூசிவந்து எதையோ வாயசைச்சு
எதையோ திட்டமிட்டு எதையோ வெளிக்காட்ட
எதையோ பாத்தசனம் எதையோ பாராட்ட
எதையோ நினைச்சுவந்து எதையெதையோ முடிச்சவன்!!
வெ. மதுசூதனன்.
அவதாரம்பல எடுப்பதால் அவன் விசுவனில்லை
அரிதாரம்தனை சூடுவதால் அவன் ஈசனுமில்லை
அநீதிகளைத் தடுப்பதால் அவன் அரசனில்லை
அளவின்றி கொடுப்பதால் அவன் கர்ணனுமில்லை!
உருவத்தின் வடிவத்தை முதலாக்கும் விற்பன்னன்!
உணர்வின் திண்மத்தை விலையாக்கும் வித்தகனவன்!
உறக்கத்தோடு தொலையும் கனவுக் கலைஞனவன்!
இவ்வுண்மையைத் தமிழுலகம் உணருவது எக்கணமோ?
ரவிக்குமார்.
கனவினைக் கண்முன்னே கொண்டுவருபவன்
காதலைக் கண்ணால் காட்டுபவன்
கடவுளே இவன்தானென எண்ணத்தூண்டுபவன்
கருத்தை இனிமையாகச் சொல்பவன்
கானத்திற்கு வடிவம் கொடுப்பவன்
கலைக்கு வாழ்வு தருபவன்
கட்சிகள் பலவற்றுக்குத் தலைவன்
கடல்போல் விசிறிகூட்டதிற்கு உரியவன்
அவனே நடிகன்!
கட்டிளங் காளையரைக் கனவிலே வீழ்த்துபவன்
கன்னியர் பின்னே கண்மூடி அலையச்செய்பவன்
கடவுளென்று நடிகையருக்குக் கோயிலமைக்கத் தூண்டுபவன்
கருத்து மறுத்து கலக்கத்திலே வாழவைப்பவன்
கருத்தான கானங்களைக் கணக்காய்ச் சுயவிளம்பரமாக்கியவன்
கலையென்று பேசி கசடுகளை அறிமுகப்படுத்தியவன்
கட்சிகள் பலவற்றையும் கண்ணியம் தவறச்செய்தவன்
கடல்போல் கூட்டங்களை கணக்கிட்டு ஏமாற்றுபவன்
அவனே நடிகன்!!!
காலைத் தரையில் பதிக்காமல் ஆடும் வல்லமை
கலை அறிவினால் அவன் சந்ததியினற்கும் பெருமை
கால் வயிறு சாப்பிட்டு உடற்கட்டுகோப்பில் சிறந்து
காசுபணம் இருந்தும் எழைகளுக்கு அவன் அருமருந்து
கரகம் தூக்க சாயத்துடன் வருகிறான்
கைத்துப்பாக்கி எடுக்க வீரத்தீரத்துடன் வருகிறான்
காதல் காட்ட காந்தக்கண்ணுடன் வருகிறான்
கதையைச் சொன்னால் கதாநாயகனாகவே வருகிறான்!
அவனே நடிகன்!!!
கல்லின் சுமையரியான் – மலையை குடைவானாம்
புள்ளில் தடுக்கிடுவான் – கூட்டத்தை புடைபானாம்
எச்சில் கையுதறான் – ஈகையில் வல்லவனாம்
அஞ்சியே குருகிடுவான் – அகிலத்து நாயகனாம்
மனையாள் மதியாதான் – காதல் மன்னவனாம்
தத்தாது பேசாதான் – கவிமாரி பொழிவானாம்
குழம்பிய மனத்தினன் – குறைகள் கலைவானாம்
பூனைமுன் எலியானான் – புலியாய் பாய்வானாம்
பாலில் குளிப்பானாம் – பஞ்சத்தை தீர்ப்பானாம்
பணத்தே மிதப்பானாம் – ஏழைக்கு உழைப்பானாம்
பல்லாக்கு தூக்கும் – பயித்தியங்கள் உள்ளமட்டும்
நேரில் பொதியாகி – நிழலில் பதியாய்மாறும்
அவனே நடிகன்!