\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம்

StPatricksDay_1_520x371நம் ஊரில் ரோஸ் நிற உடையணிந்து எவரேனும் சென்றால், ‘இப்படியா கண்ணைப் பறிக்கிற மாதிரி உடையணிவாய்’ என்று கிண்டலடிப்போம். ஆனால் ஊரில் முக்கால்வாசி மனிதர்கள்  ‘பச்சை கலரு ஜிங்குச்சான்னு’ உடை மட்டுமல்லாது தொப்பி, கண்ணாடி, கழுத்து மாலை, செருப்பு என அனைத்தும் பச்சை நிறத்தில் அணிந்து வந்தால்?

அமெரிக்கா வந்த புதிதில் இதைப் பார்த்துவிட்டு, எனக்கு ஒரு நாற்பத்தியிரண்டு நாள் முன்னர் அமெரிக்கா வந்த நண்பன் கதிரிடம் கேட்க

‘செயிண்ட் பாட்ரிக்ஸ் அப்படின்ற வெள்ளைக்கார தொர நடத்தற அரசியல் கட்சிக்கு பச்சை கலர் தான் சிம்பலு. நம்ம ஊரு மாதிரி கரை வேஷ்டி கட்ட முடியாதில்ல? அதான் இந்த மனுசங்க பச்சை கலர் கோட்டும்,பேண்ட்டும் போட்டுக்கறாங்க’ என்றான்.

‘அட, அரசியல்னு வந்தா அமிஞ்சிக்கரையும் அமெரிக்காவும் ஒன்னுதான் போலருக்குன்னு’ தோன்ற, அமெரிக்கா எனும் பதட்டம் மெதுவே விலகியது.

StPatricksDay_2_520x371பல மாதங்கள் கழித்து ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம் என்று தெரிய வந்தது. அன்றுமுதல் என் இனிய நண்பன் கதிரை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நான்காம்  நூற்றாண்டில் வாழ்ந்த, ரோமில் பிறந்த, செயிண்ட் பாட்ரிக்ஸ் எனும் பாதிரியார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி அயர்லாந்து நாட்டுக்கு சென்றவர். கத்தோலிக்க திரித்துவத்தை விளக்க அவர் ‘ஷாம்ராக்’ எனும் கிளாவர் வடிவ இலையைப் பயன்படுத்தினார். மதக்கோட்பாடுகள் பரவலாகப் பரவத் தொடங்கிய பின்பு, ஷாம்ராக் இலையும் அதன் பச்சை நிறமும் அயர்லாந்து கத்தோலிக்க கிறித்தவர்களின் சின்னமாகிப் போனது.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைக்கான போராட்டம் நடைபெற்ற போது பச்சை நிற உடையணிந்து போராடியவிடுதலைப் போராளிகள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அயர்லாந்தில் பச்சை நிற உடை தடைசெய்யப்பட்டது. அயர்லாந்தின் விடுதலையில் பெரும் பங்கு வகித்த இந்த பச்சை நிறம் இறுதியில் அவர்களின்அடையாளமாகிப் போனது.

StPatricksDay_4_520x372செழிப்பான பசுமைக் காடுகள் நிறைந்திருந்ததால், அயர்லாந்துக்கு ‘மரகதத் (பச்சை) தீவுகள்’ என்ற பெயரும் இருந்தது.இதனால் பச்சை நிறம் அயர்லாந்தின் நிறமாக உருவாகி அந்நாட்டு கொடியிலும் இடம் பிடித்தது.

இதைத் தவிர பச்சை உடை அணியாதவர்களை, அயர்லாந்து விசித்திரக் கதைகளில் வரும் குறும்புத்தனம் நிறைந்த, குள்ள உருவம் கொண்ட லெப்ரகான் எனும் உயிரினம் கிள்ளி விடும் என்ற நம்பிக்கையின் காரணமாகப் பச்சை உடைஅணிந்தவர்களும் உண்டு.

1903ஆம் ஆண்டு ,செயிண்ட் பாட்ரிக்ஸ் இறந்த மார்ச் 17ம் நாளை அவரது நினைவைக் கொண்டாடும் வகையில்மட்டுமல்லாமல், ஐரிஷ் மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு தினமாக அறிவித்தது அயர்லாந்து அரசு.

அதன் பின்னர், புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அயர்லாந்து நாட்டினரால் அமெரிக்காவிலும் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் பிரபலமாகி விட்டது. இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, மலேசியா போன்ற நாடுகளிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

எது எப்படியோ, பனிமழை, கடுங்குளிர் என இந்த வருடம் இயற்கை போர்க்கொடி தூக்கிய போதிலும் மினசோட்டாவின் தலைநகர் செயிண்ட் பாலில், செயிண்ட் பாட்ரிக்ஸ் தின கொண்டாட்ட ஊர்வலம் இனிதே நடந்தது.

StPatricksDay_3_520x371சகதி, குளிர் எனும் இன்னல்களைப் பொருட்படுத்தாது மார்ச் 17ம் தேதி மதியம் நடந்த இந்த ஊர்வலத்தில் பலர் கலந்துக்கொண்டனர். சிறுவர், பெரியவர் வேறுபாடின்றி அனைவரும் பச்சை உடையோடு, ஹோலி விழாவினைப் போன்று, முகம்மற்றும் தலையெங்கும் பச்சை நிறம் பூசி தங்களது கலாச்சாரப் பற்றினை வெளிப்படுத்தினர்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆங்காங்கே தோப்பி ( அதாங்க ‘பியர்’! ) மற்றும் மதுவகை பானங்கள் ஆறாக ஓட, அயர்லாந்தின் பாரம்பரிய இசையான ஃபிடில், புல்லாங்குழல், மேளங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

சிகாகோ, நியுயார்க் போன்ற நகரங்களில் ஆறுகளில் பச்சை வண்ணத்தைக் கொட்டி செயிண்ட் பாட்ரிக்ஸ் தினத்தை சிறப்பிப்பார்கள் என்றும் அறிந்தேன்.

மாலை நேரத்து இருள் கவிழ செயிண்ட் பாலிலும் சில கட்டிடங்கள் பச்சை விளக்கில் குளித்தன. உணவகங்களிலும், மது அருந்தகங்களிலும் ஐரிஷ் இசையொலி வழிந்து, ஐரிஷ் நடனமான ஸ்டெப் டான்சும், செய்லியும் உற்சாகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தன.

இவ்வளவு சிறப்புகளுடன் இருக்கும் தினத்தை, மற்ற விழாக்களைப் போல ஏன் வார இறுதியில் கொண்டாடக் கூடாது என்றுதோன்றியது. வார நாள் என்பதாலேயே பலரால் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல முடிவதில்லை.

என் மனதை அறிந்தது போல ஒரு கடைக்காரர் ‘நாலு வருஷம் முன்னாடி அப்படித்தான் கொண்டாடிப் பாத்தாங்க… எல்லாபக்கத்திலேயிருந்தும் பயங்கர எதிர்ப்பு …உங்க வசதிக்காக புனித வெள்ளியை சனிக்கிழமை கொண்டாடுவீங்களான்னு கேட்டாங்க .. எதுக்குடா வம்புன்னு நகராட்சியும் மார்ச் 17ம் தேதி என்ன கிழமையா இருந்தாலும் சரி அன்னைக்கே கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. . ஆங்.. நீங்க எத்தன பியர் கேட்டிங்க?’ என்றார்.

-ரவிக்குமார்

படப்பிடிப்பு – இராஜேஷ் கோவிந்தராஜ்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Rajesh Pillai says:

    Good one.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad