\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பிள்ளைக் கனி அமுதே

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 1 Comment

pillaik_kani_amuthe_620x496பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள்.

மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?”

“சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?”

“ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.”

“சின்னப் பையன் அவன். பாவம் நாலு வயசு தான் ஆறது. அவனைப் போய் வாலுன்னு சொல்லாதே”.

“ஆஹா உன் நாலு வயசு சமத்து என்ன பண்ணினான் தெரியுமா?. இன்னிக்கு ஒன்பது மணிக்கு முக்கியமான மீட்டிங்க் இருக்கு. ஸ்கூல் வந்து அவனை விடும் போது இவன் ஒரே தகராறு.ஸ்கூல் போக மாட்டேன் ஒரே போர் ன்னு ஒரே அழுகை. எனக்கு இருந்த அவசரத்திலயும், பதட்டத்திலேயும் இப்ப இறங்குறியா இல்ல கால்ல கிள்ளட்டுமா ன்னு சொல்லி கொஞ்சம் பயமுறுத்தினேன். சரின்னு இறங்கிட்டு அவன் க்ளாஸ்க்குள்ள போன உடனே அவன் டீச்சர் கிட்ட போய், அவனோட அரை குறை இங்க்லீஷ் வெச்சுக்கிட்டு ,”My Mom tried to killing (கிள்ளிங் ) me”. ன்னு சொல்லிட்டான்.”

எதிர் முனையில் பெரிய குரலெடுத்து சிரிக்கத் தொடங்கினான் அர்விந்த்.

“இவன் ஒழுங்கா பின்ச் ன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. அவன் டீச்சர் மாட்டுக்கு ஏதாவது தப்பா அர்த்தம் பண்ணிப் போலீஸ் கூப்பிடுவாளோன்ணு பயமா இருக்கு.

“சரி தான் இப்பவே கம்பி எண்ணப் பழகிக்கோ. உங்க ஊரில கம்பி உண்டா?” என்று நக்கல் அடிக்கத் தொடங்கினான் அர்விந்த்.

“நீ வேற சும்மா இருடா .என்னோட மீட்டிங்க் முடிஞ்சு எனக்கு முக்கியமான ட்ரைனிங் வேற இருக்கு. கணேஷ் வேற SFO போயிருக்கார். நாளைக்குத் தான் வருவார். நான் சாயங்காலம் வந்து இவனைக் கூட்டிட்டு போற வரைக்கும் எதுவும் பிரச்னை வராம இருக்கணுமேன்னு பயமா இருக்கு. ஆமாம் அம்மா இல்லையா”.

“இரு தரேன்” என்று சிரித்தபடி அம்மாவிடம் தந்தான் அர்விந்த்.

அம்மாவிடம் ஒரு பாட்டம் புலம்பியபடி வண்டியை ஆபீஸ் பார்க்கிங் நிறுத்தினாள்.சௌமியாவின் அம்மா வழக்கம் போல குழந்தை வளர்ப்பு அட்வைஸ் எல்லாம் முடிக்கும் முன்பு ஆபீஸ் இடத்திற்கு வந்து வேலையைத் தொடங்கினாள்.

கண்கள் கணிப்பொறி திரையை நோக்கினாலும் மனம் என்னவோ குழந்தை இக்ஷ்வாக் தத்துப் பித்தென்று உளறியது எண்ணிப் பயந்து கொண்டு இருந்தது. சமீபத்தில் நார்வே தம்பதியர்க்குக் கிடைத்த தண்டனை வேறு நினைவில் வந்து வயிற்றைக் கலக்கியது. கணேஷ்க்கு ஃபோன் பண்ணலாமா? அவர் ஏதாவது ஐடியா கொடுப்பார் என்று யோசித்து மணி பார்த்தாள்.

காலை மணி 8.45. அவருக்கு இப்போது தான் 6.45 ஆகி இருக்கும். இன்னும் கண் விழித்திருக்க மாட்டார். அதை விட, “இதுக்குத் தான் தமிழ், இங்க்லீஷ் ரெண்டையும் சொல்லித் தந்து குழப்பாதேன்னு சொன்னேன்” என்று சொல்லி அவர் தன் பங்கிற்குத் திட்டுவார்.

இதையே யோசித்தபடி மீட்டிங்க்கு வேண்டியதைத் தயார் செய்தாள். வயிற்றில் விழுந்த முடிச்சு போல பயந்தபடி அரை குறையாக மீட்டிங்கில் மனம் செலுத்தினாள்.

கிளையண்ட் கொடுத்த சேஞ்சஸ்  எதுவும் புரியவில்லை. மீட்டிங்க் முடிந்தால் போதும் என்று வெளியில் வந்தாள். மணி அப்போது 11. சௌமியா வெளியில் வந்த பொழுது அலுவலகத்தின் அத்தனை பேரும்  அங்கங்கே கும்பலாகப் பேசியபடி இருந்தார்கள். “என்ன கொடுமை இது. பச்சைக் குழந்தைன்னு கூடவா தெரியாது. இவர்களுக்கு ஈவு இரக்கம் மனசாக்ஷியே கிடையாதா?” என்று அவர்கள் பேசியது காதில் விழுந்ததும்  சௌமியாவின் கலக்கம் அதிகம் ஆனது. “ஐயய்யோ போச்சு. இக்ஷ்வாக் டீச்சர் கிட்ட உளறியது அதுக்குள்ள நியூஸ் வரைக்கும் போய்டுத்தா?. நான் அவனைக் கிள்ளக் கூட இல்லையே. சும்மா வெறுமனே பயமுறுத்தினேன். அவளோ தான். இந்தக் காலத்தில குழந்தை வளர்க்கறது எவளோ கஷ்டமா இருக்கு. ஒண்ணு கூடக் கண்டிக்க முடியல.”

என்று மனம் நொந்தபடி நடந்து தான் இடத்திற்கு வந்தாள்.

பக்கத்து காபின் ஜென்னி வந்து,

“ஹே சௌமியா ந்யூஸ் பாரு. கனெக்ட்டிகட்ல ஒரு எலிமென்டரீ ஸ்கூல்ல ஷூட்டிங்க். எல்லாம் சின்ன குழந்தைகள் பாவம். நிறைய பேர் இறந்திட்டதா சந்தேகப் படறாங்க.”

ஜென்னி சொல்லி முடிக்கும் முன் CNN இல் நியூஸ் தேடினாள் சௌமியா. அதுவரை இருந்த பயம் முடிந்து போய் ஒரு  பெரிய பாறாங்கல் போல் பயம் வந்து மொத்த உடலையும் உலுக்கியது. அவள் இருப்பது கனெக்ட்டிகட்ல அல்ல என்றாலும் எதுவுமே புரியாத ஒரு பயம் கவ்வியது.

சின்னக் குழந்தைகளா? அடப் பாவிகளா? கைகள் நடுங்கியபடி சௌமியா ஃபோனை எடுத்து இக்ஷ்வாக் ஸ்கூல் எண்ணை அழுத்தினாள். அவனது டீச்சர் எதுவுமே பயப்படும் படி இல்லை.

எல்லாமே சாதாரணமாகத் தான் இருக்கிறது என்று பலமுறை கூறிக் கவலைப்படாது இருக்குமாறு கூறினாள். காலையில் நடந்த கூத்து எல்லாம் மறந்து போனாள் சௌமியா. இந்தப் பாழா போன ட்ரைனிங் முடிஞ்சா பரவாயில்லை. எப்படா இக்ஷ்வாக் பார்ப்போம்னு ஒரே திகில் சூழ்ந்தது.

மணி 4.30. அப்பாடி என்று ட்ரைனிங் முடிந்த அடுத்த நிமிடம் அவசரமாகக் கிளம்பினாள் சௌமியா. காரில் சி.டி இல் சிச்சுவேஷன் பாட்டு போல “பிள்ளைக் கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே” என்று உருக்கமாக ஒலிக்க, ஐயோ குழந்தையக் காத்தால கோவிச்சுட்டேனே என்றுப் பதைத்தது. “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்று தொடங்கும் முன் கண்ணில் கரை புரண்டது சௌமியாவிற்கு.

வண்டியை நிறுத்தி உள்ளே சென்றாள். அவளைப் பார்த்த உடனே காலையில் நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லாத இக்ஷ்வாக் ஓடி வந்து “அம்மா இங்க பாரு என்னோட ட்ராயிங்க்” என்று காட்டவே, அத்தனை கோபம், பயம் எல்லாம் அழுகையாய் மாறி அவனை ஆரத் தழுவினாள்.

காரில் ஏறியவுடன் “அம்மா, அப்பா இல்லை ஒரே போர். எனக்கு பிஸ்ஸா வாங்கித் தரியா? ” என்று அடம் பிடித்து அழவே, “சரி சரி சரி என்று சொல்லியபடி வண்டியைக் கிளப்பினாள் சௌமியா.

பி.கு- அந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புள்ளங்களைத் தொலைத்த குடும்பங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

– லக்ஷ்மி சுப்ரமணியன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    Nicely written! Of course all moms can relate to this situation very closely!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad