விமானப் பயணம்
விமான நிலையத்தில், கடைசிக் கதவு வரை சென்று, கண்ணாடி வழியாகப் பயணம் செல்லவிருக்கும் நண்பர்கள் விமானத்தின் உள்ளே ஏறி அமர்ந்து விட்டனரா எனப் பார்த்து, வழியனுப்பிய நாட்கள் நினைவிருக்கிறதா? வயதான பெற்றோர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், விமானத்தின் உள்வரை சென்று அமர்த்திய அனுபவம் கூட ஒரு சில முறை ஏற்பட்டதுண்டு. ஏதோ இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளல்ல இவையெல்லாம், சரியாக ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்பொழுது விமான நிலைய அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை நினைத்து அன்றுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்ட திகைப்பால் உண்டான கட்டுரையிது.
நம்முடைய சமீபத்திய வணிகத் தொடர்பான பயணம் ஒன்றை சற்று நகைச்சுவை உணர்வுடன் ஒரு மீள்பார்வை செய்வோம். நகைச்சுவை உணர்வு இல்லாவிடில் இந்தக் கட்டுரையை எழுதும் அனுபவமும், படிக்கும் அனுபவமும், விமானப் பயணத்தைவிட அதிக அளவு நெருக்கடி மிகுந்த அனுபவமாக மாறிவிடும் என்ற பயத்திலேயே நகைச்சுவை உணர்வு வேண்டும் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறோம்.
அலுவலகத்தில் நம் மேலதிகாரிகளுக்கு என்னதான் தொல்லையோ தெரியவில்லை, நாம் வேலை நிமித்தமாகச் செய்ய வேண்டிய பயணத்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர்தான் முடிவெடுப்பார்கள், அதற்கு முன்னதாக முடிவெடுத்தால், அது ஒரு அவசரமில்லாத சாவதானமான செயலாகிவிடும், அதனால் முதலாளிகளின் பார்வையில் பெரிதும் முக்கியத்துவமில்லாத ஒரு செயலாகி விடும் என்ற காரணமோ என்னவோ.
இந்த சித்து வேலையெல்லாம் எதுவும் தெரியாத நம் சகதர்மிணி, “என்ன, ஞாயித்துக் கெழம ஊருக்குப் போணும்னு வியாழக்கெழம ராத்திரி சொன்னா என்ன அர்த்தம்? நானே எப்படி குழந்தேளை காத்தால கொண்டுவிட்டு, சாயுங்காலமும் பிக்கப் பண்ணிக்கிறது? என் ஆஃபிஸுல எப்டி ஒத்துப்பா? அதுவுமில்லாம பெரியவளுக்கு மண்டே ஸ்விம் லெசன் இருக்கு, ட்யுஸ் டே கூமோன், வெட்ன்ஸ் டே பாட்டுக் க்ளாஸ்… இது எல்லாத்துக்கும் அந்த சின்னவ ராட்சசியை வேறக் கூடக் கூட்டிண்டு எப்டிப் போறது.. இவ பண்ற சேஷ்டைல அங்க எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பாப்பா.. ஒரே எம்பேரஸிங்கா இருக்கும்.. அடுத்த வாரம் ஸ்பிரிங்க் ப்ரேக் வர்ரதே, அதுல போனா ஆகாதா?” என ப்ரேக்கே இல்லாமல் ஒரு பிடி பிடித்து விட்டாள்.
இது என் மாமனார் நடத்தும் சொந்தக் கம்பெனியல்ல, நான் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு, என்பதைச் சொல்லாமல் சொல்லி புரிய வைக்கப் படாத பாடு படுவோம். ”எப்டியோ போங்கோ, என்னக்கு நான் சொல்றதக் கேட்டிருக்கேள். அவாளே ஒ.கே.ன்னாலும் நீங்க கேக்க மாட்டேள், என்னவோ ஆஃபிஸே உங்க தலையில ஓடறதா நெனப்பு…. எல்லா க்ளாஸையும் கேன்சல் பண்றேன், நீங்க வந்தப்புரமா பாக்கலாம்” எனக் கோபமாய் எகிறி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுவாள் என் ஆசை மனைவி. அதனையே நானும் பர்மிஷனாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இவளுக்கு நம்மை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டுமென்பதைவிட குழந்தைகளுக்கு டிரைவர் இல்லையே என்ற குறையே அதிகம் போலும் என எண்ணிக் கொள்வோம்.
குழந்தைகளை சகலகலா வல்லவர்கள் ஆக்க வேண்டுமென்ற ஆசையுடன் நூற்றுக் கணக்கான டாலர்கள் அழுது ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு வகுப்புகளுக்கு அனுப்பும் சராசரித் தந்தையான நாம், ஒரு வார வகுப்புகள் வீணாவதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் மனதிற்குள் மருகினோம். அதே சமயம் எறிந்து விழும் மனைவியிடம் அதனை எடுத்துச் சொல்லத் துணிவும் இல்லாமல் இருதலைக் கொள்ளி எறும்பானோம். அதற்கும் மேலாக, ஒரு வாரம் பள்ளிக்கு மட்டம் போட்ட பின்னர் மறு வாரம் அந்தக் கூமோன் டீச்சர் மரியாவை சந்திப்பதை நினைத்தால் இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. மிகவும் ஸ்டிரிக்டான ஆசிரியை. மாணவர்களைவிட பெற்றோரிடம் தான் அதிக ஸ்டிரிக்டாக இருப்பாள். ஒரு காலத்தில், மிகவும் கண்டிப்பான ஆசிரியரான நம் தந்தையின் முன்னால் நடுநடுங்கிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விட்ட சாபம் நம்மை விடாது துரத்தி வந்து இப்பொழுது மரியா உருவில் வடிவெடுத்துள்ளது என அவ்வப்போது நினைத்துக் கொள்வோம்.
பயணத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் இருப்பதனால், டிக்கெட் யானை விலை குதிரை விலைக்குப் போகிறது. ஏதோ இரண்டு நாள்களுக்கு முன்னர் புக் செய்தால் நமக்காகவே ஒரு புதிய விமானம் நிர்மாணித்து அதில் நம்மை விசேஷமாக அழைத்துச் செல்வதைப் போல் பேசுவார்கள். கம்பெனிதான் பணம் தரப்போகிறது என்றாலும், நம்முடைய பிறவிக் குணம், இந்த ஆஃப் சீசன்ல இவ்வளவு விலையதிகமா என்ற நினைப்பில், நமக்காக டிக்கெட் புக் செய்யும் ஜேனைப் பாடாய்ப் படுத்தும். நான் வாங்குற சம்பளம் இவனுக்கு டிக்கெட் புக் பண்றதுக்கே சரியாப் போயிடும் என அவள் மனதுக்குள் புலம்புவது நமக்கு மிகவும் தெளிவாய்க் கேட்கும். அந்தக் கோபத்தில், இருப்பதிலேயே விலை குறைவான ஒன்றைத் தேடிப் பிடிப்பாள். நான்கு மணி நேரத்தில் சென்று அடைய வேண்டிய ஊர், இப்பொழுது கிட்டத்தட்ட பத்து மணி நேரப் பயணமாக மாறிவிட்டிருக்கும். அது மட்டுமல்ல, எடுத்துச் செல்லும் பெட்டி படுக்கைக்கு தனியாகக் கட்டணம், உணவுக்குத் தனியாகக் கட்டணம் எனக் கிட்டத்தட்ட பாத்ரூம் உபயோகப் படுத்துவது தவிர மற்ற அனைத்திற்கும் பணம் வசூலித்து விடுவர்.
பயண தினமும் வந்தது. மாலை ஐந்தரை மணிக்கு முதல் விமானம் புறப்பட இருக்கிறது. உள்ளூர் விமானப் பயணமெனில் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே விமான தளத்தில் இருக்க வேண்டும். மூன்றரை மணிக்கு விமான தளத்தில் இருக்க வேண்டுமெனில், மூன்று மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். மூன்று மணிக்கு புறப்பட வேண்டுமென்றால், குளித்து ரெடியாவதில் தொடங்கி, துணிமணிகளை அயர்ன் செய்து பேக் செய்வது என்று தொடர்ந்தால், கிட்டத்தட்ட ஒரு பனிரெண்டு மணியிலிருந்து தயாராக வேண்டும். ஞாயிற்றுக் கிழமையாதலால் சற்று தாமதமாக எழுந்து ரெடியாகிப் புறப்படுவதற்குத்தான் நேரம் சரியாக இருந்தது.
எல்லோரையும் அவசரப் படுத்தி, மனைவியுடன் சில முறை வாக்கு வாதங்கள் புரிந்து, ஒரு வழியாக பதினைந்து நிமிடங்கள் தாமதமாய் வீட்டை விட்டுப் புறப்பட்டாகி விட்டது. செல்லும் வழியெல்லாம், “டைம் ஆச்சு, டைம் ஆச்சு” எனப் புலம்பிக் கொண்டே செல்ல, நம்மில் பாதி, “வேணுங்கற அளவு டைம் இருக்கு, இப்போ என்னத்துக்கு டென்ஷன்” என அன்பாய் அதட்டினாள். அது சரி, அவளுக்கு என்ன தெரியும் நம்ம பொட்டியைத் தூக்கிக்கிட்டு ஓடுற கஷ்டம் என நினைத்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் காரை ஓட்டிக் கொண்டு ஏர்போர்ட் நோக்கிச் சென்றோம்.
“பார்க்கிங்க் போக வேண்டியதில்லை, டிபார்ச்சர் கர்ப்ல இறங்கிக்கிறேன்” எனச் சொல்ல, பெரியவள் “நோ, ஐ வாண்ட் டு கம் இன்ஸைட் அண்ட் ஹக் யு குட் பை” என அழ ஆரம்பிக்கிறாள். “கண்ணா, இது ஜஸ்ட் ரெண்டு நாளு ட்ரிப்பும்மா, மாசக் கணக்காவா போறேன்” என அவளை சமாதானம் செய்ய முயல, அவள் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. அழும் அக்காளை அழுவதென்றால் என்னவென்றே தெரியாதது போல சின்னவள் வேடிக்கை பார்ப்பது அவ்வளவு க்யூட்டாக இருந்தது. இப்பொழுதும் மனையாளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. நம்மை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய பிரிவுத் துயரைத்தான் இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பது நமக்கு மட்டுமே புரியும் நிதர்சனம். “உடம்பைப் பாத்துக்கோங்க, நன்னா வேளாவேளாக்கி சாப்டுங்கோ, சும்மா மீட்டிங்க் மீட்டிங்க்னு சாப்பாட்டை ஸ்கிப் பண்ணாதேங்கோ.. டைம் கிடைக்கும்போது ஃபேஸ் டைம் பண்ணுங்கோ, கொழந்தேள் ஏங்கிப் போய்டுவா..” என அட்வைஸ் தொடர, ”ஏங்குறது கொழந்தேளா, நீயாடி” எனக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் நம் ரொமான்ஸை அவிழ்த்து விட்டோம். “ஆனாலும், ரொம்பதான்” என சிணுங்கினாள் நம் பார்யாள்.
விமான நிலைய டிபார்ச்சர் கர்ப் வந்து சேர்ந்ததும் வண்டி நின்றது. “போய்ட்டு வரேன், ஆத்த நன்னா பாத்துக்கோ, செக்யுரிட்டியை ஆன் பண்ணிட்டுத் தூங்கு, கொழந்தேளத் திட்டாத”.. இது நாம் அட்வைஸ் பண்ணும் நேரம். நடப்பதைப் புரிந்திருந்த பெரியவளின் அழுகை தொடர்ந்தது. தான் காரை விட்டு இறங்கப் போவதில்லை, தந்தை மட்டும் போகிறான் என்று அப்பொழுதுதான் உணர்ந்த சிறியவளின் கதறல் தொடங்கியது. இதற்கு மத்தியில், நம்மை ஆரத் தழுவி ஏதோ பாகிஸ்தானுடன் போருக்குச் செல்லும் இந்தியச் சிப்பாயை வழியனுப்புவது போல் கண்களின் ஓரத்தில் நீருடன் வழியனுப்புகிறாள் நம் அன்பு மனைவி.
செக்யூரிடி லைன் எவ்வளவு பெருசோ, இன்னும் ஒண்ணரை மணி நேரந்தான் இருக்கு, அதுக்குள்ள போயிட முடியுமோ இல்லையோ என்ற பயம் மட்டுமே நம் மனதில். இரண்டே நாளில் திரும்பி வந்துவிடப் போகும் நமக்கு எதற்கு இவ்வளவு பெரிய பிரியா விடை என்ற எண்ணம் நம்மைச் சுற்றி வர, இவர்களின் மனதைப் புண்படுத்த மனமில்லாமல் எதுவும் சொல்லாமல் நடந்தோம்.
செக்யூரிடி செக் செய்வதற்கான வரிசை நம்மூரில் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நிற்கும் கும்பலைவிட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இன்னொரு நான்கைந்து கதவுகளைத் திறந்தாலோ அல்லது இன்னொரு சில பல செக்யூரிடி ஆஃபிஸர்களை வேலைக்கு நியமித்தாலோ இந்தக் கும்பல் குறைந்து விடாதோவென நாம் நினைத்துக் கொண்டே நம்முடன் பயணம் செய்ய வேண்டிய க்ளாரா வந்துவிட்டாளா எனத் தேடத் தொடங்கினோம். சுற்று முற்றும் பார்த்தாலும் க்ளாரா எங்கும் தென்படவில்லை. வழக்கம்போலத் தாமதமாத்தான் வரப் போகிறாள் என்று உணர்கிறோம். அவளின் செல்ஃபோனுக்கு ஃபோன் செய்கிறோம், ஃபோனை எடுத்து, “ஐ அம் ஆன் மை வே, ஷுட் பி தேர் இன் டென் மினுட்ஸ்” ஏற்கனவே தான் வரவேண்டிய நேரத்தைவிட இருபது நிமிடம் தாமதம் என்றும், இன்னும் பத்து நிமிடம் என்பது மொத்தமாய் அரை மணி நேரத் தாமத்தைக் குறிக்கிறது என்பதைச் சட்டை செய்யாமல் பதிலளிக்கிறாள்.
ஒரு வழியாய் பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் வந்து சேர்ந்த க்ளாராவை அழைத்துக் கொண்டு, வரிசையில் நிற்கத் தொடங்கினோம். இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கிறது, இந்த வரிசை இப்பொழுது குறைவதாய்க் காணோம், உள்ளே கேட் எவ்வளவு தூரமோ, எவ்வளவு நடக்க வேண்டுமோ என்று எண்ணிக் கொண்டே வரிசையில் இன்ச் இன்சாய் முன்னேறத் தொடங்கினோம். எவரிடமாவது கேட்டுக் கொண்டு முன் செல்லலாமா என்றால், எல்லோருமே ஒரு வித அவசரத்தில் இருப்பதாகத்தான் தெரிந்தது, தவிர, எத்தனை பேரிடந்தான் நமது அவசரத்தை விளக்குவது என நினைத்து அந்த எண்ணத்தைக் கை விட்டோம். தாமதமாக வந்த க்ளாராவோ இதைப் பற்றிக் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. இன்னும் தனது ஆடை அணிகலன்கள் சரியாக உள்ளனவா எனப் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்தாள்.
ஒரு இருபது முப்பது நிமிடமாக இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்து செக்யூரிடி ஆஃபிஸரை நெருங்கியாகி விட்டது. அவரும் சம்பிரதாயமான கேள்விகள் அனைத்தையும் கேட்டு விட்டு, நாம் அளித்த அடையாள அட்டையையும், போர்டிங்க் பாஸ்’ஸையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். நம் பெயரில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் சரி பார்த்து அதுதான் போர்டிங்க் பாஸில் அச்சடிக்கப்பட்டுள்ளதா என அவர் பார்த்து முடிப்பதற்குள் இன்னுமொரு ஐந்து நிமிடங்கள் உருண்டோடியிருந்தன. “ஆமாண்டா, ஃப்ளைட்டைக் கடத்துறவனையெல்லாம் விட்டிருங்க, என்ன மாதிரி அப்பாவிங்களைத் துருவித் துருவி எடுங்க” என மனசுக்குள் கூறிக் கொண்டாலும், வெளியில் எதுவும் சொல்லாமல் பவ்யமாய் அவரின் ஒப்புதலுக்காக நின்று கொண்டிருந்தோம். அவரும் நம் முகத்தையும் அடையாள அட்டையையும் சில முறை மாறி மாறிப் பார்த்து விட்டு, ஒரு கிறுக்கலான கையொப்பமொன்றை இட்டு “போ, போ” என அனுமதி அளித்தார்.
அதன் பின்னர், நாம் கொண்டு வந்த பெட்டியை எக்ஸ்ரே ஸ்கேனரில் போட்டு விட்டு, நம் ஷூ, பெல்ட் என்று ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தோம். பேண்ட் பாக்கெட், ஷர்ட் பாக்கெட் என்று ஒவ்வொன்றாய்க் கைவிட்டு அவற்றில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் டிரேக்குள் போட ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் உரிந்து மானத்தைக் காக்கும் உடைகளை மட்டும் அணிந்து கொண்டு ஒரு எக்ஸ்ரே இயந்திரம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
ஒரு கண்ணாடிக் கூட்டிற்குள் சென்று நின்று கொண்டு, கைகள் இரண்டையும் மேல் நோக்கி குவித்துக் கொண்டு இந்த இயந்திரத்திடம் சரணாகதி அடைய வேண்டுமாம். அந்த இயந்திரம் நமது உடலின் கோடுகளையெல்லாம் துல்லியமாய்ப் படமெடுத்து ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என, நம்மைத் திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் செக்யூரிடி ஆஃபிஸருக்குக் காட்டுமாம். என்ன கண்ணறாவியோ, யார் யாருக்கெல்லாம் எதை எதையெல்லாம் காட்ட வேண்டுமோ என எண்ணிக் கொண்டே அந்த இயந்திரத்தின் நடுவே நின்று கொண்டிருந்தோம். இதுபோல நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணம் புரிந்தாலும், நம் போல் பொது ஜனங்கள் மட்டுமே இதற்கு ஆளாவதையும், பாதகச் செயல்கள் புரியும் அரக்கர்கள் இவற்றில் இருந்து எப்படியோ தப்பித்துத் தங்களின் நாச வேலைகளைத் தொடர்வதையும் நினைக்கையிலே நமக்குச் சற்று உதிரம் கொதிக்க ஆரம்பித்தது என்பது உண்மையே.
ஒரு வழியாய் பாதுகாப்புச் சோதனைகள் முடிவுற்ற நிலையில், ஸ்கேனர் மெஷினிலிருந்து வெளிவந்த நம் பெட்டி மற்றும் இரண்டு பிளாஸ்டிக் டிரே முழுவதுமான நம் உடைமைகளைப் பெற்றுக் கொண்டோம். பெல்ட், ஷூ என அனைத்தையும் அணிந்து கொண்டு மீண்டும் மரியாதைக்குரிய மனிதனாக மாற இன்னும் சில நிமிடங்கள் பிடித்தது. இப்பொழுது நம் கைக் கடிகாரத்தைப் பார்க்க, இன்னும் விமானம் புறப்பட இருபது நிமிடங்கள் மட்டுமே பாக்கி இருந்தது. திரும்பிப் பார்த்தால், க்ளாரா எதைப் பற்றியும் கவலை கொள்ளாது லேசாகக் கலைந்த லிப்ஸ்டிக்கைச் சரி செய்து கொண்டிருந்தாள். நமக்கிருந்த டென்ஷனுக்கு ஓங்கி ஒரு அறை விடலாமெனத் தோன்றியது. “கம் ஆன், லெட்ஸ் கோ” என அவசரப் படுத்தி விமானத்தை நோக்கி ஓடலானோம்.
நாம் தாமதமாக வருவோம் என்பதை உணர்ந்தே விமானத்தின் கேட் நிர்ணயிக்கப் படும் என நினைக்கிறேன். விமான தளத்தின் கடைக் கோடியில் இருந்தது நாம் செல்ல வேண்டிய E54 கேட். சாதாரணமாக நடந்து சென்றால் ஒரு இரண்டு மைல் இருக்குமென நினைக்கிறேன். இருக்கும் பதினைந்து நிமிடங்களில் அங்கே சென்றடைய வேண்டுமெனில் ஓடித்தான் போக வேண்டும். நம் பெட்டியை பின்னால் இழுத்துக் கொண்டே வேகமாக ஓட, க்ளாரா பல அடிகள் பின்னால் மெதுவாக ஓடி வந்து கொண்டிருக்கிறாள். அவளும் தன்னிலை உணராது ஒரு பெரிய ஷோல்டர் பேக் கொண்டு வந்திருந்தாள். அதனைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வர, அதனைக் கையில் வாங்கிக் கொண்டாலாவது ஒரு வேளை வேகமாக வருவாளோ எனக் கழுதைபோல் அவளின் பொதி சுமக்க ஆரம்பித்தோம்.
அடித்துப் பிடித்து, சுமைதாங்கி, எதிர் வந்தவர்களின் மீது மோதி மன்னிப்புக் கேட்டு, ஒரு வழியாக E54 கேட்டை அடைந்தோம். நம் கைக்கடிகாரம் 5.25 என்று மணி காட்ட, ஸ்ஸப்பா.. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கிறது என எண்ணிக் கொண்டே சந்தோஷத்துடன் கேட் ஏஜண்டை நெருங்குகிறோம். அதற்கு முன்னரே அந்த இடம் சற்று விநோதமாய்த் தென்படத் தொடங்குகிறது. கேட் மூடப் பட்டுள்ளது, கேட்டைச் சுற்றி மனிதர்கள் அரவம் மிகவும் குறைவாக உள்ளது, கேட்டிற்கு மேலுள்ள பெரிய டிஸ்ப்ளேயில் எந்த அறிவிப்பும் இல்லை.இந்த விநோதம் நம்மைப் பயமுறுத்த, கேட் ஏஜண்டை நெருங்கி “எக்ஸ்க்யூஸ் மி” என நாமழைக்க, அவள் உலகில் இன்னொரு மனிதன் யாருமே வாழவில்லை என்ற நினைப்புடன் தலையைக் குனிந்து எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.
நெற்றி முழுக்க வியர்த்து வழிய, பொறுமையைப் பெருமளவு இழந்தவனாய், சற்று உரத்த குரலில் “எக்ஸ்க்யூஸ் மி” எனக் கூவினோம். ஒரு அற்பப் புழுவைப் பார்ப்பது போல் தலையுயர்த்தி என்ன வேண்டும் எனத் தலையசைவால் வினவுகிறாள். “ஹியர் ஃபார் தெ ஸோ அண்ட் ஸோ ஃப்ளைட்” எனக் கூற, “அவ்வளவு பெரிய முட்டாளாடா நீ” என்பது போல நம்மைப் பார்க்கிறாள். “த கேட் க்ளோஸஸ் ஹாஃப் அவர் பிஃபோர் த ஃபிளைட் லீவ்ஸ்” எனச் சாவதானமாய்ச் சொல்ல, கண்ணாடிச் சுவர்களின் வழியாகப் பார்த்தால் விமானம் இன்னும் நின்று கொண்டிருப்பது தெரிகிறது. ”ஐ ஸீ த ஃபிளைட், கான்ட் யு லெட் அஸ் இன்” எனப் பரிதாபமாய்க் கெஞ்ச ஆரம்பித்தோம். “சாரி, இட்ஸ் அ செக்யூரிடி ப்ரொஸீஜர். பிளீஸ் டேக் த நெக்ஸ்ட் ஃபிளைட் விச் லீவ்ஸ் இன் ஃபோர் அவர்ஸ்” என இரக்கமேயில்லாமல் சொல்லித் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“டூ ஐ ஹாவ் டைம் டு கோ அண்ட் ஃப்ரெஷன் அப்?” கேட்ட க்ளாராவை நெற்றிக்கண் காட்டி எரிக்கத் தயாரானோம்.!!
– வெ. மதுசூதனன்.
Very nice story Madhu. Narrated very well.
An excellent piece of action-comedy episode.
So interesting. It reminded me of the real experience during our travel from and back to India, except the problems with Clara.
Nice job, keep it up.
Balasubramanian
I like that Clara who made to write this(karpanaiyo! unmayo!)