கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும்.
காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. நிஜ வாழ்வில் இவை வழக்கொழிந்து போனதால் சமகாலத் திரைப்படங்களிலும் இவற்றைக் காண முடிவதில்லை.
அதிர்ஷ்டவசமாக கண்ணதாசனின் காலத்தில் இவை வழக்கில் இருந்தன. இல்லையென்றால் பல அருமையான, காதல் ரசம் சொட்டும் பாடல்களை நாம் இழந்திருப்போம்.
காதலனைக் காணாமல் எங்கும் பெண்ணொருத்தி, அவனைத் தேடுவதானப் பாடல். இதை நாயகி வண்டு ஒன்றிடம் தன் ஏக்கங்களைச் சொல்லித் தூது விடுவதாக அமைத்திருந்தார் கவிஞர்.
இப்பாடல் வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். அவள் காதலனுக்காக எப்படிக் காத்திருக்கிறாள்? காதலன் வாங்கிக் கொடுத்த மலரையும், சேலையையும் அவன் நினைவாக அணிந்து, அழகு திருத்திக் கடவுளைக் காணும் ஏக்கத்துடன் காத்திருப்பதாகப் புனைந்துள்ளார் கவிஞர்.
வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார் வண்ணச்சேலை வாங்கிக் கொடுத்தார் கோலம் திருத்திக் காத்துக் கிடந்தேன் கோவில் வழியைப் பார்த்துக் கிடந்தேன் ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே ? உண்மை சொல்வாயடி எந்தன் கண்ணாளன் எங்கே? (பாடும் வண்டே பார்த்ததுண்டா ..)மற்றொரு பாடலில் நாயகியின் காதல் உறவைக் கண்டித்து, காதலனை அவளிடமிருந்து பிரித்து விட, ஏக்கத்தில் வாடும் அவள், தன் துயரை வெளிப்படுத்துகிறாள்..
‘மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ’ என்று பாரதியைத் தாக்கிய ஏக்கத்தினை, ஒரு படி மேலே சென்று இன்னமும் சுருக்கமாக ‘காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை’ என்று பாடுகிறார். அவனைப் பார்பதற்காகவே கண்களும், அவன் மீது சாயவே உடலும் வளர்ந்ததாகக் கூறும் பொழுது அப்படி நடக்கவில்லைஎன்றால் இரண்டும் இருந்து என்ன பயன் என்று கேட்பதாகவும் அமைந்துள்ளது.
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்ப் பெண்ணுறங்கவில்லை உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது ( நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை )ஏக்கத்துடன் கூடிய விரகம். கவிஞரின் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்? அவருடைய தயாரிப்பில் வெளியான படம் என்பதால், அவரே இந்தக் காட்சியை சிந்தித்திருக்க கூடும் என்பது என்னுடைய கருத்து :). காதல் ஏக்கத்தினால் உண்டாகும் நோய்க்குப் பசலை என்று பெயர். இந்நோய் தாக்கியவர்கள், சாப்பிடாமலும், தூங்காமலும் மெலிந்து , பித்தாகி விடுவார்கள் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கவிஞரின் வரிகளில் தான் இக்கருத்து எவ்வளவு எளிமையுடன் மிளிருகிறது?
முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே நூலாக இளைக்க வைத்தானே பாலாக வெளுக்க வைத்தானே .. தன்னாலே பேச வைத்தானே தண்ணீரைக் கொதிக்க வைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லோரும் சிரிக்க வைத்தானே (அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி)தற்காலத்தில் அலுவலகமும், வேலையும், நண்பர்களும் மட்டுமே கதியென்று இருக்கும் கணவர்கள் போன்று அந்தக் காலத்திலும் மன்னர்கள் இருந்திருப்பார்கள் போலும். அப்படிப்பட்ட மன்னரைப் பற்றி அவரது மனைவி ஏக்கம் கொண்டு, தோழியை தூது அனுப்பும் இந்தப் பாடல் வரிகளில் எவ்வளவு சூசகமாகவும், கண்ணியமாகவும் தன் விரகத்தை உணர்த்துவதாக சொல்லியிருக்கிறார்?
அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான் வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வழக்கை மனதிலும் நினையான் இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையைக் காக்க துணை வருவானோ நன்று ! தோழி நீ தூது செல்வாயோ நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ (என்னுயிர்)இதே கருத்தை ஒட்டி, தோழியை தூது அனுப்பும் மற்றொரு பாடல். இந்த ஒரு பாடல் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கலாம் போன்ற அளவு நுணுக்கமான கருத்துக்கள் பொதிந்தாய் உள்ளது.
தோழி தலைவியிடம் பன்னீர் போன்ற நதியில் குளித்து வந்தால் தலைவியுடைய மோகம் குறைந்து தூங்கலாம் எனக் கூற, தலைவி, தான் இறங்கியவுடன் பன்னீர் நதி வெந்நீர் நதியாகி விடுகிறதென விடையளிக்கிறாள்.
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்ற வள்ளலாரின் வரிகள் கண்ணதாசனின் காதலுக்கு எவ்வாறு வளைகிறது பாருங்கள்.
பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி? இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி? கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி? முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை மௌனத்தில் அறிந்தாள் தோழி காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி? (தூது செல்ல ஒரு தோழி ..)இந்தக் காட்சி சற்று வித்தியாசமானது. தன் காதலனை எண்ணி எங்கும் பெண்ணொருத்தி, தென்றலைத் தூது அனுப்பிப் பாடிக் கொண்டிருக்கும் போது அவளது அண்ணன் வந்து விடுகிறான். உடனே கத்தியைத் தூக்கிக் கொண்டு காதலை எதிர்க்காமல், அவளது நிலையை கேலி செய்து பாடுவதான காட்சி. கவிஞர் இரண்டையும் எப்படி இணைப்பார்? இதோ இப்படித்தான்!
நாயகி : வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள் இன்று அலை கடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ? நாயகி : நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்த பின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ? அண்ணன் : தன் கண்ணனை தேடுகிறாள் மனக் காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்து விட்டாள் என அதனையும் கூறாயோ?நாயகி தன் தலைவனுக்கு அனுப்பும் தூதில், தனது துயரங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது, அவளது அண்ணனும் சேர்ந்து, தலைவனுக்கு ‘நீ வந்த பின்பு என்னை என் தங்கை மறந்துவிட்டு, உன் நினைவாகவே இருக்கிறாள்’ என்று பின் குறிப்பு போல் சேர்த்திருப்பதை என்னவென்று சொல்ல?
உங்களோடு சேர்ந்து கடந்த சில மாதங்களாக கண்ணதாசனின் காதல் அலைகளில் நீந்தியதில், அவரின் கண்ணியமான, கவித்துவமான காதல் கற்பனைகளை அருந்தி இளமையாகி விட்டதைப் போல் உணர்கிறேன்!!
தெவிட்டாத தத்துவம்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தி இரண்டில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், தேவிகாவும் நடித்து வெளியான நகைச்சுவைத் திரைப்படம் பலே பாண்டியா. இந்தப் படத்தில், டி.எம். சௌந்தர ராஜனும் பி.சுசீலாவும் பாடிய அழகான காதல் பாடலொன்று…. “நிறுத்துங்கள், நிறுத்துங்கள், நீங்கள் தத்துவம் பற்றி எழுத வேண்டியவரல்லவா” என்று நீங்கள் உரக்கக் கேட்பது இங்கே எதிரொலிக்கிறது. அதுவும் கவியரசின் ஒப்பற்ற பெருமைகளில் ஒன்று எனக்கூறலாம். காதல் பாடலின் மத்தியிலே காணரும் தத்துவம் ஒன்றைத் தேனிடையூறிய செங்கனியாய் வழங்குவதே அந்த அரிய திறமை. கீழேயுள்ள இந்த வரிகளைக் கேளுங்கள்
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை திறந்தால் வாழலாம்!!! (வாழ நினைத்தால் வாழலாம்)என்ன சொல்கிறார் என்று புரிகிறதா? எதைப் பார்க்கத் தெரிய வேண்டும்? எதைப் பார்த்து நடந்தால் எந்தப் பயணம் தொடரும்? மிகவும் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டிய கருத்து இது. “பார்ப்பது எது” என்பதைப் பார்க்கத் தெரிந்தால் போக வேண்டிய பாதைத் தெளிவாகத் தெரியும் என்பதே அவர் கூறிய அரிய தத்துவம். அதனைப் பார்த்து நடப்பதால் தொடரும் பயணமானது பிறவின் பயனான கதவைத் திறந்து உட்காட்சியாய் அகமுணரச் செய்யும் என்பதையும், அகமுணர்ந்த ஞானிகளுக்குக் கவலையென்பது இல்லை என்பதையும் எளிமையாய் விளக்கும் பாடலிது.
சாதாரண சினிமாப் பாடலில், அதிலும் குறிப்பாய்க் காதலுக்காக எழுதப் பட்ட பாடலொன்றிலும், ஞானிகள் பலரும் விளக்கத் தயங்கும் உயரிய தத்துவமொன்றை அனாயாசமாய் விளக்கும் அரிய தமிழாழம் வேறெவருக்கும் சாத்தியமா என்பது சந்தேகமே.
மற்றொரு நடிகர் திலகத்தின் திரைப்படம் “அவன் தான் மனிதன்”. இந்தப் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் டி.எம். சௌந்தர ராஜனின் கம்பீரக் குரலில் இன்னொரு பாடல்;
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா?ஏதோ கடவுளைக் குறித்த பாடல் போலத் தோன்றும். கடவுளை வாழ்த்துவது என்பதற்கும் தத்துவம் உணர்வது என்பதற்கும் பல காத தூரம் என்பதை நன்குணர்ந்த ஞானியான கவியரசர், கண்ணன் அவரிடம் வந்து உனக்கு என்ன வேண்டுமென்றால் இவ்வாறு கேட்பாராம்;
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் – அந்தப் பார்த்தனும் உன்னிடத்தில் கீதை கேட்டான் நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!!!மேலும் மேலும் நன்மை செய்து, துன்பங்களை வாங்கிக் கொள்ளும் உள்ளத்தை வரமாகக் கேட்பாராம். மேலும் மேலும் நன்மை செய்து, தனது கணக்கில் நன்மைகளை விளைத்துக் கொண்டு, நம் கணக்கில் இதற்கு முன் செய்து வைக்கப்பட்ட பாவக் கணக்குகளைப் போக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்ற தத்துவத்தை எளிமையாய்க் குறிப்பிடுகிறார் கவியரசு.
அதே பாடலில் மேலும் கூறுகையில் துன்பங்களை விளங்கிக் கொள்ளும் யுக்தியாக இவ்வாறு எழுதுகிறார் கவிஞர்;
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளங்கும் கண்ணா!!என்ன ஆழமான பக்குவத்தை வலியுறுத்தும் அழகான கவிதை பாருங்கள்.
இன்னொரு பாடல். தெருவில் செல்லும் காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞனைப் பார்த்து, ஒரு வழிப் போக்கர் “உன்னுடைய ஊர் எந்த ஊர்” என்று ஒரு எளிதான கேள்வியைக் கேட்கிறார். அவருக்கு பதிலாக இயம்பும் வண்ணம் வாழ்வின் பல கட்டங்களைக் கவித்துவத்துடன் விளக்குகிறார் கவியரசர், கேளுங்கள்;
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடிபுகுந்தேன் மண்ணூரில் விழுந்துவிட்டேன்தாய் தந்தையரின் மூலம் கருத்தரித்து உலகில் பிறவியெடுக்கும் ஒரு உயிரினை நான்கே வரிகளில், நளினத்துடன் கூற இன்னொருவரால் இயலுமா என்பது சந்தேகமே. பெரிய அளவில் தத்துவம் என இதனைக் கூற இயலா விட்டாலும், பிறவியின் ஆதாரத்தை எளிதான வரிகளில் அழகாய் விளக்கியமைக்காக இந்த வரிசையில் சேர்த்திடலாம் என்று தோன்றியது.
சுமைதாங்கிப் படத்தில் P.B. ஸ்ரீனிவாசின் காந்தக் குரலில் ஒலித்த “மயக்கமா, கலக்கமா” பாடலைக் கேட்டுப் பாடி, தங்களது துயர காலத்தில் நிம்மதி தேடாத தமிழனே இருக்கமாட்டான் எனச் சொல்லி விடலாம். சோக இழையோடும் பாடலாக இருப்பினும், சோகப் படாமல் நிதானமாகத் துயரங்களைச் சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறும் வண்ணம் விளங்கும் வைர வரிகள். கேளுங்கள்;
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!!!துன்பம் வருவதை நிறுத்த இயலாது. மாறாக எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்துக் கொள்வது என்பது இயன்ற செயலாகும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், வந்த துன்பம் எதுவாயினும் ஓடி மறையும் என்ற வாழ்க்கைக்குப் பயன் பெறும் எளிதான அறிவுரை. அதனுடன் கூட, ”கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற பகவத் கீதையின் உபதேசத்திற்கு இணங்க, நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து விட்டு, இன்று நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேட வேண்டும் என்று தெளிவாக, கவிதை வடிவில் அறிவுறுத்துகிறார் கவியரசு.
ஏழை மனதை மாளிகை யாக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைப் பொழுதை இறைவனுக் களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!சிறுகூடல்பட்டி எனும் சிறு கிராமத்திலே பிறந்து, ஐம்பத்து நான்கு ஆண்டுகளே இந்த நிலவுலகில் வாழ்ந்து பெரிய அளவில் படிப்பறிவு ஏதுமில்லாமல் சுமார் முப்பத்தி ஏழு ஆண்டுகள் திரைப்படங்களுக்குப் பாடலெழுதி அதில் கோலோச்சியவர் கண்ணதாசன், அரசியல் வாழ்விலும் சொந்த வாழ்விலும் பல விதங்களில் விமரிசனத்திற்குள்ளான அவர், பிரவாகமாய் வந்து விழும் தமிழ் அருவிக்குச் சொந்தக்காரர் என்பதில் மட்டும் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்குக் கூட மாற்றுக் கருத்து இருந்திருக்க முடியாது.
அவரின் அள்ள அள்ளக் குறையாத தத்துவ முத்துக்களைக் கடந்த ஐந்து மாதங்களாய் எழுதும் வாய்ப்புக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து, அந்த வரகவியின் சுய விமர்சனத்துடனே இந்தக் கட்டுரையை முடிக்கிறோம்.
கோப்பையிலே என் குடியிருப்பு கோலமயில் என் துணையிருப்பு இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் படைப்பதனால் நானும் ஒரு இறைவன்!!!காலத்தால் அழியாத பல படைப்புகளைப் படைத்ததனால் தமிழுள்ளங்கள் அனைத்தும் அவரையும் எங்கும் இறைந்திருக்கும் இறைவனாய் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இனிதே முடிக்கிறோம்.
ரவிக்குமார். மற்றும் வெ. மதுசூதனன்.
நல்லதொரு ஆக்கத்தை நயமாகத் தந்த உங்களுக்கு எனது நன்றிகள்…
கண்ணதாசன் இன்றிருந்திருந்தால் காலத்திற்கேற்ப நல்ல நயமும் சுவையுமுள்ள காதல் பாடல்களைத் தந்திருப்பார் என்பது எனது தாழ்மையான எண்ணம். கண்ணதாசனின் காதல் பாடல்களுக்கோ தத்துவப் பாடல்களுக்கோ ஈடிணை இல்லை…
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவனினென்று போற்றிப் புகழவேண்டும்…” என்ற கண்ணதாசனின் வரிகளை அலுவலகத்தில் எழுதி வைக்க, வருவோரெல்லாம் அதன் அர்த்தத்தைக் கேட்டு வியந்து போகின்றனர்.
“வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை உலகிலே” என்ற கண்ணதாசனின் பாடல்களை வரி வரியாக வரைந்து அதன் அர்த்தமும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்