முதுமை
காலையில் முன்னெழுந்து கடவுளரைத் துதிபாடி
கால்நடுங்க நடைநடந்தே கடைத்தெரு வந்தவரின்
காட்சியினை நான்காண கண்களது குளமாகும்
காரணம் தேடுகின்றேன், கணக்கெதுவும் விளங்கவில்லை!!
காலமெனும் சிற்பியவன் கைநடுங்கி வடித்ததனால்
காணுமுகம் எங்கெங்கும் கணக்கில்லாக் கோடுகள் !!
காத்திருந்து முதுமையினால் களையிழந்து, பஞ்சடைந்து
காணும்திறம் முழுதிழந்த கண்களெனும் இருகுழிகள் !!
காதுநிறை நரைமுடியும் கேட்பதற்குக் கருவியொன்றும்
கார்கமழும் நறுமணத்தைக் கவர்ந்தறியா நாசியொன்றும்
காலம்பல சென்றதனால் கன்னம்நிறைத் தாடியெங்கும்
காற்றிழந்த பையெனவே கன்னக்குழிசூழ் பொக்கைவாயும்
காதலிலே வெற்றிபெற்று கண்குளிர்த்த ஆணுருவம்
காளைப்பருவம் முடிந்தததனால் கட்டுடலும் அழிந்தொழிந்து
காணும்வகைப் பொலிவிழந்து கவனமதைத் தானிழந்து
காலமெலாம் போனபின்பு கலங்கிநிற்கும் முதுமைவடிவம்!!
காலையில் எழுந்ததுமே கடைத்தெரு வந்தவரின்
காட்சியாய் நான்காண கலக்கமாய் நானேதெரிந்தேன்
காளையாய் இன்றிருக்கும் களையான என்னுருவம்
காணாமற் போகுமென்றே கருதியதால் கண்ணீராமே!!
வெ. மதுசூதனன்.
”காற்றிழந்த பையெனவே”
காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா என்பதை நினைவுறுத்திய கவிதை அருமை
முதுமை வெல்லும் முறையறிந்து,
முகத்திநிடை அதை மறைத்து ,
முப்பொழுதும் முற்பதாய் வாழ வாழ்த்தும்,
புஷ்பா
முப்பது கடந்து மூவாயிரம் இரவுகள்
முடிந்தது அறிந்தும் மூலமாய் இருக்கும்
முகத்தினிடை மறைக்கும் முக்கியக் கலையை
முன்மொழிந்த அன்புக்கு முழுதான நன்றி!!!