உறைபனியில் ஒரு வசந்தம்
‘உன்னுடைய ரகசியங்களைக் காற்றிடம் சொல்!
ஆனால் அவற்றை மரங்களிடம் சொன்னதற்காகப்
பழிக்காதே!’
-கல்கி பிரான்
டிசம்பர் மாத இறுதி. அடுத்தவாரம் கிறிஸ்துமஸ். நகரமே வண்ண வண்ண விளக்கு ஒளியில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமான உறைபனிப் பொழிவு. கூடை நிறையக் காகிதத் துணுக்குகளை மேலேயிருந்து கொட்டுவது போல நிதானமாக விழுந்து கொண்டிருக்கிறது. அமைதியாக, நிதானமாக வீட்டின் கூரை, மரங்கள், செடிகள், புல்தரைகள் என்று வேறுபாடில்லாத பனிப் பொழிவு. இலையுதிர் காலத்தில் இலைகள் அத்தனையும் உதிர்ந்து போய் வேனிற் காலத்தில் பசுமையான இலைகளுடன் பூத்துக் குலுங்கிய செடி கொடிகள், மரங்கள் அனைத்தும் தனது பூக்கள் இலைகளை உதிர்த்துவிட்டு மொட்டையாகக் காட்சியளித்தன. அவை அனைத்தும் வெண்பனி மூடி விதவைக் கோலம் பூண்டிருந்தன.
வேனில் காலத்தில் தான் எத்தனை அழகு? சொல்லி வைத்தாற் போல விதவிதமான நிறங்களில் மலர்கள். காடுகளில், சாலை ஓரங்களில் கூட பசும்புற்களின் நடுவில் துளித்துளியாக மஞ்சள், வெள்ளை நிறங்களில் பூக்கள், புதற்களில் வெள்ளை, வெளிர்நீல கருநீலப்பூக்கள் என்று எத்தனை வகைகள்? நீலகிரி மலையில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைப் பாய் விரித்தது போல பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் போல நீல நிறப் பூக்களைத் தாங்கி நிற்கும் புதர் கூட்டங்கள்.
இங்கே வேனிற் காலத்தில் பூக்கும் விதவிதமான மலர்க்கூட்டங்களைக் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்! ஆனால் ஒவ்வொரு வகைப் பூக்களுக்கும் வாழ்வு அதிகபட்சம் பதினைந்து நாட்கள், அல்லது முப்பது நாட்கள் தான். அதையடுத்து வேறு நிற வகைப் பூக்கள். இவற்றுக்கெல்லாம் யார் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றுகிறார்கள்? நாமாகப் பயிரிட்டாலும் இவ்வளவு சீராக, ஒழுங்காகப் பயிரிட இயலாது. இவற்றின் வாழ்வு மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடுகிறது. அதன் பின்னர்?
பசுமை கொஞ்சும் மரங்களில் சிவப்பு, மஞ்சள் என்று கூட்டம் கூட்டமாக மரங்கள், புதர்களின் நிறங்கள் மாறுகின்றன. பின்னர் அவை அனைத்தும் உதிர்ந்து மொட்டையான பின்பு மரங்கள், புல் தரைகள், புதற்களின் மீது வெள்ளை வெளேரென பனிப்பொழிவுகள். ஏரியின் நீர் கூட உறைந்துபோகும் அளவுக்குப் பனிப் பொழிவுகள். எந்த வித யோகமும் தேவையில்லை நீரின் மீது நடக்கலாம், ஏன் காரைக் கூட நிறுத்தலாம். நீர் நிலை உறைபனியின் நடுவே ஓட்டைபோட்டு மீன் பிடிப்பது ஏரி மக்களின் பொழுதுபோக்கு. பகல் நேரம் மிகக்குறைவு. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இதே கதிதான்.
திடீரென்று கண்களை விழித்துப் பார்த்தேன். மணி ஆறு. வாரிச் சுருட்டிக்கொண்டு அவசரம் அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, நேற்று இரவு வாங்கி வைத்திருந்த ரொட்டித் துண்டுகளில் இரண்டை சாப்பிட்டுவிட்டு கருப்புக் காப்பியைக் குடித்துவிட்டு உடையணிந்து காரைக் கிளப்ப முயற்சித்தபோது மணி ஆறு முப்பது.
கார் ஷெட்டின் கதவைத் திறக்க முயற்சித்தபோது நேற்று இரவு பெய்த பனிப்பொழிவு இரண்டடி உயரத்திற்கு குவிந்து கிடந்தது. சே! என்று அலுத்துக் கொண்டு ‘ஸ்னோ ப்ளோரர்’ இயந்திரத்தை இயக்கி பனிப்பொழிவை சுத்தம் செய்ய முயற்சித்தேன். அது கொஞ்சம் உறுமி விட்டு நின்று போனபோதுதான் பெட்ரோல் காலி என்பது தெரிந்தது. நல்ல வேளையாக எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்துசாலன் பெட்ரோல் வாங்கி வைத்தது நினைவுக்கு வந்தது. பெட்ரோலை ஊற்றி அதை இயக்கி பனிப்பொழிவுகளைச் சுத்தம் செய்து முடித்தபோது மணி ஏழு.
பொழுது விடிய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்! இன்று ஒரு அவசரக்கூட்டம் இருப்பதால் ஏழுமணிக்கே அலுவலகத்தில் இருக்கவேண்டும். எப்படிப் புறப்பட்டும் நேரமாகிவிட்டது. ‘எடின்பரோ’ விலிருந்து ஈரிக்குப் போகக் குறைந்தது அரைமணிநேரமாவது பிடிக்கும். சாலைகளை நகராட்சிகாரர்கள் வந்து சுத்தம் செய்ய இன்னும் ஒரு மணிநேரமாவது பிடிக்கும். இராட்சச வாகனங்கள் வந்து பனிப்பொழிவுகளை அள்ளிக் கொண்டு போகும். அதன் பின்னர்தான் சாலைகளில் வண்டி ஓட்ட முடியும். நமது அவசரத்திற்கு அதெல்லாம் ஆகுமா? நிதானமாகத்தான் காரை ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் கார்கள் வழுக்கிக் கொண்டு தடம்மாறி, பின்னால் வரும் வண்டிகளுடன் மோத பின்னால் வந்து கொண்டிருக்கும் கார்கள், வாகனங்களுடன் மோத குறைந்தது ஐந்து வண்டிகளாவது பாதிக்கப்படும். அப்போதெல்லாம் 30 மைல் வேகத்தில் தான் போக முடியும்.
நான்கு மணிக்கே இருட்டிவிடும். இருட்டிலேயே கிளம்பி, இருட்டிலேயே திரும்பிவருவதை நினைக்கும்போது சே! இது என்ன பிழைப்பு என்று அலுப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறதே! இங்கிருப்பவர்களும் மனிதர்கள் தானே? அவர்களும் இப்படித்தானே வாழ்ந்து வருகின்றார்கள் என்று நினைத்து மனதை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
சென்னை ஐஐடி-யில் பி.இ முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தேன். மினசோட்டா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பதற்காக வங்கிகளில் கடன் வாங்கி வந்து படிப்பை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. உணவுவிடுதிகளிலும், கடைகளிலும் பகுதிநேர வேலை செய்து படிப்பை முடித்தேன். அதற்குள் எத்தனை சிறுமைகளை அனுபவிக்க வேண்டி வந்தது? முட்டையைக் கூட தொடாத நான் சாப்பிட்ட எச்சில் மாமிச வகைத் தட்டுக்களை சுமக்க வேண்டிய அவலம்! புண் இல்லாத போராட்டம் இல்லை.
இத்தனை போராட்டத்திற்குப் பின் ஜி.இ.டிரான்ஸ்போர்ட்டேசன் நிறுவனத்தில் இஞ்சினியராக உடனே வேலை கிடைத்தது. ரயில் இஞ்சின் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம். ஈரியில் உள்ள கிளையில் பணி நியமனம் கிடைத்தது.
ஒண்டாரியோ, பொன்ற உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளுடன் ஈரி ஏரியும் கலந்து தான் நூறு மைல் தூரத்திலுள்ள நயக்ரா நீர் வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. அந்த ஏரி இருக்குமிடம் என்பதால் ஊரின் பெயரும் ஈரி என்று வழங்குகிறது. மிக அதிகமான குளிர்ப்பிரதேசம். ஈரியிலிருந்து ஒரு மணி நேரத்தில் நயாக்ராவை அடையலாம். வேலையில் சேர்ந்து ஒரு வருடமாகிறது. கடுமையான உழைப்பினால் தான் நமது திறமையை நிலை நிறுத்த முடியும். எடின்பரோவில் ஒரு தற்காலிகக் குடியிருப்பில் தங்கியிருந்து கொண்டு தினமும் பதினெட்டுமைல் தூரம் காரில் பயணித்து தான் வேலை செய்யும் ஈரியை அடைய முடியும்.
பெருஞ்சாலை 79-ல் வட திசையை நோக்கி எனது கார் ஐம்பது மைல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. மனதில் பலவிதமான சிந்தனைகள், நேரமாகிவிட்டதே என்கிற கவலையில் காரின் வேகத்தைக் கவனிப்பதைத் தவறவிட்டேன். அதை உணர்ந்தபோது தான் அந்த விபத்து நிகழ்ந்தது. வேகத்தைக் குறைக்க முயன்றபோது வழுக்கிக் கொண்டு பாதையை விட்டு விலகி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ‘வீப்பிங் வில்லோ’ மரத்தில் மோதி நின்றது. முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பிரேக் பிடிக்க, அதிலிருந்து நான் தப்பிக்க ஒதுக்கி பிரேக்கைப் பிடிக்க எனது கார் திசை தடுமாறி மரத்தில் மோத, வீப்பிங் வில்லோ மரத்தில் மூடியிருந்த பனிப்பொழிவு என் கார் மீது அர்ச்சனை செய்வது போல விழுந்தது. நல்ல வேளையாக எனக்கு அடி எதுவும் ஏற்படவில்லை. காரின் முன்பகுதிக்குத் தான் சேதம்.
முன்னால் போய்க் கொண்டிருந்த காரின் கதி என்னவாயிற்று என்று பார்த்தபோது அது வழுக்கிக்கொண்டு நான்கு கரணங்கள் அடித்துக் கொண்டு சாலை ஓரமாக இருந்த மாஜி(?) புல்வெளியில் தலை கீழாகப் பனிப்பொழிவில் புதைந்து கிடந்தது.
நான் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு ஆமைபோலக் கவிழ்ந்து கிடக்கும் காரின் அருகில் சென்றபோது தான் அதை ஓட்டி வந்தவள் ஒரு பெண் என்பது தெரிந்தது. சுமார் இருபது இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். வெண்மையான அமெரிக்கப் பெண்போலக் காட்சியளித்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவள் நினைவிழந்து கிடந்தாள். தாமதிக்காமல் அவசரமாக 911ற்கு எனது கைப்பேசி வழியாகத் தகவல் கொடுத்துவிட்டு என்னால் ஏதாவது அவசர முதலுதவி செய்ய இயலுமா என்று பார்த்தபோது அவள் வலது கால் காரில் மாட்டிக் கொண்டு எடுக்க இயலாதபோது சிவப்பு, நீல நிற ஒளியை உமிழ்ந்துகொண்டு அவசர உதவி வாகனம் சாலை ஓரமாக நின்றது.
அந்தப் பெண்ணை அப்படியே விட்டுச் செல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அவசர உதவி வாகனம் 911 அருகில் இருந்த செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையை நோக்கி விரைந்தது. அவர்களுடன் நானும் சென்றேன்.
அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்துச் சென்றபின்பு தலையில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தித் துடைத்துவிட்ட போது தான் வலது கால் எலும்பு முறிந்தது தெரிந்தது. ஆறு மணிநேரம் கழித்துத்தான் அவளுக்கு நினைவு வந்தது.
அந்த நேரத்திற்குள் நான் அலுவலகம் வருவதற்குள் கூட்டம் முடிவடைந்துவிட்டது. மற்றய அவசரவேலைகளைச் செய்துவிட்டு விபத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தேன்.
காலில் பெரிய கட்டுப்போட்டிருந்தார்கள். முகம் சற்று வீங்கியிருந்தது. தலையில் போட்டிருந்த கட்டு அவளுடைய அடர்த்தியான பழுப்பு நிறக் கூந்தலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. அவளது நீல நிறக் கண்களால் என்னை விழித்துப் பார்த்தபோது அருகில் இருந்த நர்ஸ் என்னை அறிமுகம் செய்து வைத்து நான் தான் ஆம்புலன்ஸ் வண்டியில் உடன் வந்ததாகத் தெரிவித்தாள். களையான முகம். அவள் அழகை ஒரே வரியில் வர்ணிப்பதானால் சாண்டில்யனின் யவன ராணி கதைக்கு லதா வரைந்த படம் தான் நினைவுக்கு வந்தது. அவளது நீலமணிக் கண்களால் என்னை விழித்துப் பார்த்துவிட்டு மவுனமாக நன்றி சொன்னாள்.
மருத்துவமனையிலிருந்து அவளை அன்றே அனுப்பி விட்டாலும், அவள் முழுவதுமாகக் குணமடைந்து நடக்க ஆரம்பிக்க ஆறுமாதங்கள் பிடித்தன.
அவள் பெயர் ஷெல்லி கெர்ப்மென். அவள் ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜை. வோல்கா நதி டெல்டாப் பகுதியிலிருந்து கிழக்கே சில மைல்கள் தூரத்தில் காஸ்பியன் கடல் அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவள். பட்டப்படிப்பினை முடித்துவிட்டு மிக் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் வரைபடப் பொறியியலாளராகப் பணியாற்றி வந்தவள். திடீரென அந்த நிறுவனம் தயாரிப்பை நிறுத்திவிட்டதால் வேலை இழந்த பல ஆயிரம் பேர்களில் அவளும் ஒருத்தி. பின்னர் வயிற்றுப் பிழைப்பிற்காக மிகக் குறைந்த ஊதியத்தில் ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். அந்த ஊதியம் அவளுடைய வீட்டு வாடகையைக் கூடக் கொடுக்க இயலாததாக இருந்தது. பின்னர் அமெரிக்காவில் வசித்து வந்த அவளது உறவுப் பெண் நடாலியின் உதவியுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தாள். நடாலியா சிக்காகோவில் பணியாற்ற அவள் உதவியால் இவளுக்கும் ஒரு தனியார் இன்சியூரன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்து கடந்த ஒரு வருடமாக ஈரிக் கிளையில் பணியாற்றுகிறாள்.
பொறியியலாளராகப் பணியாற்றிப் பின்னர் குறைந்த ஊதியத்தில் மழலையர் பள்ளியில் எப்படிப் பணியாற்ற மனம் வந்தது? பொருளாதாரச் சிக்கல்களை எப்படிச் சமாளிக்க முடிந்தது? என்றபோது-
தயவுசெய்து என்னிடம் அந்தக் கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்! நான் அழுதுவிடுவேன் என்றால் ஷெல்லி. அவளுடைய காயத்;தின் ஆழம் எனக்குப் புரிந்தது. மேலும் கேள்விகள் கேட்டு அவளைத் துன்புறுத்தாமல் அது பற்றி விசாரிப்பதை நிறுத்தினேன். என்னைப் போலவே இளம் பருவத்தில் அவளும் துன்பங்களை அனுபவித்தவள் என்கிற ஒரு காரணமும் எங்கள் நட்பு இறுகக் காரணமாக இருந்தது. அந்த ஆறு மாதங்களில் அவ்வப்போது கடைக்குப் போவது, அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கிக் கொடுப்பது என்று உதவுவது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோது அவளை எடின்பரோவில் என் வீட்டிற்கே வரும்படி அழைத்தேன். அவ்வப்போது நடாலியா வந்து கவனித்துக்கொண்டிருந்தவள் எனது யோசனையை முழுமனதோடு ஆதரித்தாள். எனவே எனது தேவை அவளுக்கு அத்யாவசியமாகப் பட்டது. தன்னை ஷெல்லி என்று அழைப்பதையே அவள் விரும்பினாள். அவள் அம்மா இவள் பிறந்தபோதே காலமாகிவிட்டாள். தந்தை மறுமணம் செய்து கொண்டார். இவள் நிராதரவாகவிடப்பட்டவாள். ஒரே வீட்டில் நாங்கள் ஒன்றாகவே வசித்தாலும் அவளைத் தொடாத எனது கண்ணியம் அவளுக்குப் பிடித்திருந்தது.
உறைபனிக் காலம் முடிந்து மீண்டும் வசந்த காலம் ஆரம்பமானது. ஷெல்லி எழுந்து தனியாக நடமாட ஆரம்பித்தாள். பனி படர்ந்த மரங்களில் பனி உருகி மொட்டை மரங்கள், செடி கொடிகளில் பல நிறங்களில் பல நிறங்களில் இளந்துளிர்கள் வெடித்துக் கிளம்பின. இந்த நான்கு மாத காலங்களில் இவை எப்படி உயிருடன் இருந்தன? வசந்த காலத்தில் துளிர் விட்ட மரங்கள் போல எங்கள் இருவரின் மனத்தின் அடித்தளத்தில் இருந்த, உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் காதலாகப் பரிமளித்தது. பசுமையான மேப்பிள், பைன், ஓக், சைப்ரஸ், ஸ்ப்ரூஸ் மரங்கள் மரங்கொள்ளாத இலைகளுடன் காற்றில் ஆனந்தமாக அசைந்தாடின. வீப்பிங்வில்லோ மரம் வழக்கம் போல தனது தலையை விரித்துப்போட்டுக் கொண்டு நின்றன.
அதைத் தொடர்ந்து வந்த வேனிற்காலத்தில் எங்கள் திருமணம் மிக எளிமையாக இந்து முறைப்படி அரோரா ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் நடாலியாவின் முன்னிலையில் நடந்தேறியது. அதுதான் அவள் விருப்பமாக இருந்தது. திருமணம் இந்து முறைப்படி நடந்தாலும் ஷெல்லி என்கிற இயற்பெயரை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை காரணம் கவிஞர் ஷெல்லியின் கவிதைகளின் மீது எனக்கிருந்த காதல். எனவே அவள் ஷெல்லியாகவும், நான் நரெந்திரனுமாகவே இருந்தோம்.
சிக்காகோவில் இருந்தபோது அவளுக்கு சுவாமி விவேகானந்தர், அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைப் பற்றி அறிய நேர்ந்ததன் காரணமாக அவளுக்கு இந்து மதம், அவற்றின் பரந்தநோக்கு சகிப்புத் தன்மை இவைகளின் மீது மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பின்னர் பல ஆங்கில மொழிபெயர்ப்பு தத்துவ, வேதாந்த நூல்கள், இதிகாசங்களைப் படிக்க நேர்ந்தபின் இந்து மதத்தின் மீது ஒரு அலாதியான பிரேமையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இரண்டு தடவை இந்தியாவிற்கு வந்து மதுரை மீனாட்சி, இராமேஸ்வரம், தஞ்சைப் பெரியகோவில் போன்ற கலைச் செல்வங்களைப் பார்த்தபோது தன்னை மறந்து உணர்ச்சிவயப்பட்டாள். சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால் என்மீது அவளுக்கு தனியான ஒரு பிரேமை ஏற்படக் காரணமாக இருந்தது. ரமணர், இராமலிங்க அடிகள் போன்றோரைப் பற்றி அறிந்தபோதே ஒரு முழு இந்துவாகிவிட்டாள். யார் வைத்த கண்ணோ எங்கள் காதல் வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. தேவையில்லாமல் நான் செய்த ஒரு முட்டாள் தனம் தான் அதன் காரணமாக அமைந்தது.
ஷெல்லி தாய் தந்தையற்ற அனாதை என்று சொன்னபோது எனக்கும் யாரும் இல்லை என்று சொன்னது தான் காரணமாக அமைந்தது. ஷெல்லிக்குப் பொய் பேசுவது என்பது பிடிக்காத காரியம்.
‘இரண்டு இலக்குகளுக்கு இடைப்பட்டது தான் வாழ்க்கை அதை வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.’
வேனிற்காலத்தில் ஒரு புதன்கிழமை. நான் வழக்கம்போல ஒரு அவசரக் கூட்டம் என்று காலையில் ஆறுமணிக்கே அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டேன். அப்போதெல்லாம் பகல் பொழுது அதிகம் காலையில் நாலறை மணிக்கே விடிந்து விடும். இருட்ட இரவு ஒன்பது மணியாகிவிடும். அன்று அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததால் அலுவலகம் செல்லவில்லை என்றாள்.
காலையில் எட்டு மணிக்கு தொலைபேசி கிணுகிணுத்தது. இந்தியாவிலிருந்து நரேனுக்கு வந்த அழைப்பு அது.
தனது பெயர் இராமகிருஷ்ணன் என்றும் பாண்டிச்சேரி அன்னை முதியோர் காப்பகத்திலிருந்து பேசுவதாகச் சொல்லி நரென் இல்லையா.. மிகவும் அவசரமாகப் பேசவேண்டும் என்றார். உரையாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தது.
அவர் அலுவலகம் சென்றிருக்கிறார். மாலை ஏழுமணிக்குத்தான் வருவார்.
மிகவும் அவசரம் அவர் கைப்பேசி எண்ணைக் கொடுக்கமுடியுமா?
மன்னிக்கவும். அவர் கைப்பேசியை மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார். அவசரம் என்றால் என்னிடமே தெரிவிக்கலாம் நான் அவர் மனைவி தான்.
கொஞ்ச நேரம் பதில் ஏதும் இல்லை. பின்னர் ரொம்ப சவுகரியமா போச்சு, நரேனின் அம்மா மீனாட்சியம்மாளுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் சேர்த்திருக்கிறோம். சளி மார்பில் அதிகமாக இருப்பதால் நிமோனியாவாக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு ஐசியு-வில் அட்மிட் செய்து கவனிக்கிறார்கள். அதனால் தான் நரேனுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதால் தான் போன் செய்தேன். வயசான திரேகம் பாருங்கள்.
ஷெல்லிக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. நரேனுக்கு அம்மா இருக்கிறார்களா? அதுவும் முதியோர் காப்பகத்தில்? என்னிடம் இந்த உண்மையை ஏன் மறைத்தார்?
சமாளித்துக் கொண்டு மிக்க நன்றி! அவர் வந்தவுடன் தெரிவிக்கிறேன் என்றாள் ஷெல்லி.
மாலையில் வீடு திரும்பிய நரேன் ஷெல்லியின் முக மாற்றத்தைக் கவனித்தான். ஏன் டியர்? ஓய்வெடுத்தும் உடம்பு இன்னும் சரியாகவில்லையா? டாக்டரிடம் போகலாமா என்றான்.
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அணைக்கப் போன என்னை அவள் ஒதுக்கினாள். நான் விடவில்லை.
என்ன விஷயம்? எனக்குக் காரணம் தெரியவேண்டும்!
காரணம் சொல்ல நான் தயாராக இல்லை! எனக்குப் பொய் சொல்பவர்களைக் கண்டால் பிடிக்காது.
நான் என்ன பொய் சொன்னேன்?
மனச் சாட்சியைத் தட்டிக்கேளுங்கள் தெரியும்.
நான் குழம்பினேன். சாப்பிட்டேன் என்று பெயர் செய்து விட்டுப் படுத்தேன். அவளும் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து படுத்தவள். மீண்டும் எழுந்து கணிணியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். மணி பன்னிரண்டாகியும் கூட படுக்கைக்கு வரவில்லை. விட்டுப் பிடிக்கலாம் என்று நானும் பேசாமல் இருந்துவிட்டேன். தூக்கம் கண்களைச் சுழற்றியது.
மறுநாள்—
வழக்கம் போல நான் அலுவலகம் போகும்போதும் அப்படியே இருந்தாள், இன்னிக்கும் ஆபீஸ் போகவில்லையா?
இல்லை!
ஏன் உடம்பு இன்னும் சரியாகவில்லையா?
இல்லை! அதைவிட வேறு முக்கியமான வேலை இருக்கிறது.
என்ன கேட்டாலும் சரியான பதில் இல்லாததால் ஆபீசுக்குக் கிளம்பினேன். வழியனுப்பக்கூடக் கீழே வரவில்லை.
அவன் தலைமறந்ததும் உடனே உள்ளே வந்து துணிமணிகள் மற்றும் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சிறிய காகிதத்தில் நான் போகிறேன்! என்னைத் தேட முயற்சிக்க வேண்டாம். குட்பை! என்று எழுதிவைத்துவிட்டு கண்பார்வை படும் இடத்தில் வைத்து விட்டு காரில் கிளம்பினாள். கார் டெட்ராயிட்டை நோக்கிப் பறந்தது. டெட்ராயிட்டிலிருந்து சிக்காகோ செல்லும் விமானத்தில் பயணித்து சிக்காகோ அடையும்போது மாலை 4 மணி. நடாலியாவுடன் தொடர்பு கொண்டு பேசி விட்டு இரவு 10.30 மணிக்கு இந்தியா (சென்னை) செல்லும் லுப்தான்ஸா விமானத்தில் பயணித்தாள்.
எல்லாமே மிக விரைவாக நடந்தது. நேற்று இரவே ஏர்லைன்ஸ்காரர்களுடன் தொடர்புகொண்டு மிக அவசரம், சென்னை செல்லும் விமானத்தில் ஒரு டிக்கெட் கிடைக்குமா என்று கேட்டபோது நல்லவேளையாக ஒரு டிக்கெட் இருந்தது.
சென்னை வந்து உடனடியாக ஒரு டாக்சியைப் பிடித்து பாண்டிச்சேரியை அடையும்போது நாற்பது மணிநேரம் ஆகிவிட்டது. சென்னையை அடைந்ததும் இராமகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டு மீனாட்சியம்மாளின் உடல்நிலை பற்றி விசாரித்தபோது, கவலைப்பட இப்போது எதுவும் இல்லை. சாதாரண சளிதான் நிமோனியா இல்லை இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாக இராமகிருஷ்ணன் சொன்னார்.
அவரிடம் நரேன் அவசரமாக ஆஸ்திரேலியா சென்றிருப்பதாகவும், அவருக்குப் பதிலாகத்தான் வருவதாகவும், நேரடியாக ஆஸ்ரமத்திற்கே வருவதாகவும் பின்னர் இருவரும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று சொல்லிவிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து பாண்டிச்சேரிக்குக் கிளம்பினாள்.
அன்னை முதியோர் இல்லத்தில் காவியுடை, ஐந்தடி உயரம் முகத்தில் கண்ணாடி, குறுந்தாடி நல்ல சிவப்பு நிறம் இவற்றுடன் ஒரு சிரித்த முகத்துடன் ஷெல்லியை வரவேற்றார் இராமகிருஷ்ணன். நுழைவுவாயிலில் மாட்டியிருந்த அன்னையின் மிகப்பெரிய படம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. படத்தின் அடியில் சில மலர்கள். ஊதுபத்தி இவைகள் ஒரு தெய்வீகச் சூழலை ஏற்படுத்தியது. இராமகிருஷ்ணனிடம் ஆஸ்ரமத்திற்கு நன்கொடையாக ஆயிரம் டாலர் வழங்கிவிட்டு ஜிப்மெர் மருத்துவமனைக்கு அவருடன் கிளம்பினாள்.
இராமகிருஷ்ணன் மீனாட்சியம்மாளைப் பார்த்து கரம் குவித்து வணங்கியபோது, வாங்கோ! நீங்க எப்ப வருவேள்ன்னு காத்துண்டு இருந்தேன். இந்த ஆஸ்பத்திரி வாடையே எனக்குப் பிடிக்கலே! எப்போ ஆஸ்ரமத்துக்போகலாம்னு இருக்கு என்று மிகத் தெளிவாக மெல்லிய குரலில் பேசினார்கள்.
அவர் பின்னால் நின்று கொண்டிருந்த ஷெல்லியைப் பார்த்துவிட்டு யாரென்று புரியாமல் திகைத்தாள். அவளுடைய நிறம் கண்களைக் கூசியது. ஆஸ்பத்திரியை யாரோ பார்க்க வந்திருக்கிறார்கள், வெளிநாட்டவர் என்று நினைத்தாள்.
அண்ணா.. நரேன் கிட்டேயிருந்து ஏதாவது தகவல் வந்துதா? சாதாரண சளிதான் அவனுக்கு அவசரப்பட்டு சொல்லவேண்டாம்னேன். நீங்கதான் கேக்கலே!
அதுனால என்ன? நரேன் ஆஸ்திரேலியாவுக்குப் போயிருக்கானாம். அதுக்குப் பதிலா ஒங்களுக்கு சர்ப்பிரைசிங்கா ஒரு விலை மதிப்பில்லாத ஒண்ணை அனுப்பியிருக்கான்.
பாவம் குழந்தை இப்படி நாயா அலையறான். காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டா அவன்பாட்டுக்கு சந்தோஷமா அமெரிக்காவுலேயே இருப்பான். எங்கேயிருந்தாலும் கொழந்தை சந்தோஷமா இருந்தா சரி என்றாள். வார்தைக்கு வார்த்தை குழந்தை, குழந்தை என்று மாய்ந்து போனாள்.
இராமகிருஷ்ணனின் கண்களில் நீர் துளிர்த்தது. அதைப் பார்த்துவிட்டு ஷெல்லி என்னவென்று கேட்டாள். ஒருவரி பிசகாமல் அப்படியே அவருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். குழந்தை, குழந்தை என்கிற வார்த்தைக்கு உணர்ச்சிவயமாகப் பொருள் சொன்னார். ஷெல்லியின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
அப்போ எங்களோட கல்யாண விஷயம் அம்மாவுக்குத் தெரியாதா?
எனக்கே தெரியாது என்றார் இராமகிருஷ்ணன்.
இது என்ன கொடுமை? இவ்வளவு பாசமுள்ள தாய்க்கு ஒரு மகன் செய்யற நன்றி இதுதானா? என்றாள்.
கையில் இருந்த பழக்கூடையை மீனாட்சியம்மாளிடம் கொடுத்துவிட்டு மண்டியிட்டு நமது சம்பிரதாயப்படி நமஸ்கரித்தாள். அவள் கழுத்தில் தொங்கிய தாலியை மீனாட்சியம்மாள் கவனித்தாள்.
தேங்ஸ் என்று தனக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையைச் சொல்லிவிட்டு நன்னா இருடி கொழந்தே என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு இது யார் என்பது போல இராமகிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தாள்.
இராமகிருஷ்ணன் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு உங்களுக்கு நரேன் ஒரு பரிசு அனுப்பியிருக்கிறதாச் சொன்னேனே அது இதுதான் என்று சொல்லிவிட்டு நரேனுக்குக் கல்யாணம் ஆன விஷயம், ஷெல்லியைப் பற்றின விவரங்களைத் தெரிவித்தார்.
மீனாட்சியம்மாள் படுக்கையிலிருந்து இறங்கி நின்று ஷெல்லியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். எந்த நாடு, யாரா இருந்தா என்ன? எனக்கு எல்லாமே ஒண்ணுதான். அன்னை நம்ம நாட்டுக்காராளா? அவளைத் தெய்வமாகக் கொண்டாடலயா. எங்கே எப்படியிருந்தாலும் கொழந்தேள் சௌக்கியமாக இருக்கட்டும் என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள். இருவரும் அழுது ஓயட்டும் என்று இராமகிருஷ்ணன் காத்திருந்தார்.
சிக்காகோ!
ஆப்பிள் பி தெரு. வீட்டு எண் எஸ்4212. வீட்டுவாயிலில் இருந்த அழைப்பு மணிப்பொத்தானை அழுத்தினேன்.
கதவைத் திறந்து நடாலியா.
வாங்க நரேன்! ஏது இவ்வளவு தூரம் ஷெல்லி சவுக்கியமா?
விளையாடினது போதும்! ஷெல்லி இங்கே தானே இருக்கிறாள்?
ஓ! இவ்வளவு நாள் கழித்தாவது அவளோட ஞாபகம் வந்ததே! ரொம்ப சந்தோஷம்.
அவளை நான் எங்கெல்லாமோ தேடினேன். இன்று இல்லாவிட்டால் நாளை வருவாள் என்று காத்திருந்தேன். இரண்டு மூன்று தடைவ உங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவளைப் பற்றி எதுவும் தெரியாது என்றீர்கள். அவளைக் காணவில்லை என்று நான் சொன்னபோது இயல்பாக உங்களிடம் இருக்கவேண்டிய பதற்றம் இல்லை. மிகவும் சாதாரணமாகப் பேசியபோதே எனக்கு சந்தேகம் வந்தது. எனவேதான் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்தேன். இனிமேலும் மறைக்காமல் சொல்லுங்கள் ஷெல்லி எங்கே?
அதற்கு நடாலியா பதில் சொல்வதற்குள் ரஷ்யமொழியில் யாரோ உள்ளேயிருந்து அழைப்பது கேட்டது.
நடாலி ரஷ்யமொழியிலேயே பதில் சொன்னாள்.
அறையிலிருந்து ஷெல்லியின் முகம் மட்டும் தெரிந்தது. நரேனைப் பார்த்ததும் அறைக் கதவை உடனே சாத்திக் கொண்டாள்.
ஷெல்லி! டியர்! இது என்ன விளையாட்டு? என்னைத் தவிக்க விட்டுவிட்டு இங்கே என்ன செய்கிறாய்? என்று கதவைத் தட்டினான்.
உங்களைத் தவிக்க விட்டேனா? எத்தனை பொய் சொல்வீர்கள்? உங்களுக்கு அப்பா, அம்மா இல்லை என்பது பொய். பிறந்தது முதல் எனக்குக் கிடைக்காத தாய்ப்பாசத்தை வஞ்சனை இன்றி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இவர் இனி உங்கள் அம்மா இல்லை! என் அம்மா. நமது கல்யாணம் நடந்தது கூட அவர்களுக்குத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறீர்கள். எத்தனை பொய் சொல்வீர்கள். அதுவும் சூதுவாதில்லாத வஞ்சனை இல்லாத அவரிடமா இதை மறைப்பீர்கள்? ஒருவேளை ஒருநாள் என்னையும் பிடிக்காமல் போய்விட்டால் எனக்குக் கல்யாணமே ஆகவில்லை என்றுதானே சொல்வீர்கள்.
நரேனுக்கு அவள் கோபத்தின் காரணம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது.
ஷெல்லி தயவுசெய்து கதவைத்திற! விஷயம் முழுவதையும் உனக்கு நான் விவரமாகச் சொல்கிறேன். இது ஒரேவரியில் சொல்லக் கூடிய விசயம் இல்லை என்று மீண்டும் கதவைத் தட்டினான். அவள் அசைந்து கொடுக்கவில்லை.
ஷெல்லி! உனக்கு இந்தியர்களைப் பற்றித் தெரியாது! அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிற கொள்கையில் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் அரேஞ்டு மேரேஜில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக எதுவும் நடந்துவிட்டால் முகத்திலேயே விழிக்கமாட்டார்கள். அதுவுமில்லாமல் அம்மா பழமையில் ஊறிய வைதீக குடும்பபெண். கடவுள், பூஜை இவைகளில் நம்பிக்கை அதிகம். உன்மீது நான் வைத்திருக்கும் காதல் எவ்வளவு புனிதமானதோ, உண்மையானதோ அதேபோல அம்மாவின் மீது நான் வைத்திருக்கும் அன்பும் உண்மை. நீ வேற்று நாட்டுப் பெண், வேறு மதத்தவள், கொஞ்ச நாட்கள் ஆறப்போட்டுவிட்டு சந்தர்ப்பம் வரும்போது சொல்லலாம், சர்பிரைசிங்காக உன்னை அம்மா முன்பு கொண்டுபோய் நிறுத்தலாம் என்றிருந்தேன் என்றேன்.
அப்படி நினைப்பவர்தான் சர்பிரைசிங்காக அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்களா?
ஓமை காட்!! டியர், உனக்கு எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வரியில் சொல்லிப் புரியவைக்கும் விஷயம் இல்லை இது. உட்கார்ந்து உனக்கு எல்லாவற்றையும் உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடு! அதற்குப் பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஒப்புக்கொள்கிறேன் கதவைத்திற! ப்ளீஸ்! நான் படித்து முடித்ததே பெரிய காரியம். உணவு விடுதிகளில் கடைகளில் பகுதிநேர வேலை செய்து படிப்பை முடித்த நான் அம்மாவை உடனடியாக இங்கே எப்படி அழைத்து வரமுடியும்? அங்கும் அம்மாவைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்பதால் தான் பாதுகாப்பாக அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தேன். அதன் தலைவர் இராமகிருஷ்ணன் என் உயிர் நண்பனின் தந்தை. அதைவிட வேறு பாதுகாப்பான இடம் இல்லை என்பதால் தான் அங்கு சேர்த்தேன். இதுதான் உண்மை. இதை நம்புவதும் விடுவதும் உன் இஷ்டம்.
நடாலி! என்ன சத்தம்? கொழந்தை கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்னு விட்டா இப்படிக்கத்திக் கூச்சல் போடறாளே? யார் வந்திருக்கா?
கதவைத் திறந்துகொண்டு வந்த மீனாட்சியம்மாளைப் பார்த்ததும் திகைத்துப் போனான். அம்மாவா? இங்கே எப்படி? என்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தான்.
யாருடாது கொழந்தே நீயாடா? எப்ப வந்தே? நீ வரப்போறேன்னு ஷெல்லி எங்கிட்டச் சொல்லவே இல்லை!
அம்மா! என்று கதறியபடியே கட்டிக்கொண்டான் நரேன். அந்த அணைப்பில் இருவரது உள்ளங்களும் பல கதைகள் பேசின.
ஏண்டா கொழந்தே! நீ வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னாளே! அப்படி என்னடா வேலை? பாண்டிச்சேரியிலே அம்மா, அமெரிக்காவுல பெண்டாட்டி, ஆஸ்திரேலியால நீ இது என்னடா பொழப்பு?
என்னால் பேச முடியவில்லை விம்மி விம்மி அழுதேன்.
அழாதேடா கொழந்தே! நீ அழறதைப் பார்த்தா அவளும் அழுவா இப்ப இருக்கிற நெலமையிலே
மெல்லத் திறந்தது கதவு. தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துத் தைத்துக் கொண்டிருந்தாள். கை நிறையக் கண்ணாடி வளையல்கள். பட்டுப் புடவை சரசரக்க அழகுப்பதுமையாக வெளியில் வந்தாள் ஷெல்லி. என் கண்களையே நம்ப முடியவில்லை. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். வயிறு பூசினாற்போல இருந்தது. மல்லிகைப் பூ செயற்கையானது என்றாலும் அம்மாவின் ஆசை புரிந்தது.
போதும்டா பாத்தது! ஒன் கண்ணே பட்டுடும் போல இருக்கு! சாயந்தரம் சுத்திப் போடணும்.
சரி அம்மா! அவ பேசறது ஒனக்கு என்ன புரியிறது? நீ பேசறது அவளுக்கு என்ன புரிஞ்சது? ஊமையும் செவிடும் பேசிக்கிற மாதிரி!
நான் பேசறது அவளுக்கும் அவ பேசறது எனக்கும் புரியணும்னு என்னடா அவசியம்? ஆத்மார்த்மா ஆயிரம் பேசிப்போம். நல்லவேளை சீமந்தத்துக்கு முன்னாலேயே வந்துட்டியே. என் ஆசைக்கி இன்னிக்கி வளை அடுக்கினேன். பாண்டிச்சேரியிலிருந்து வரபோதே பட்டுப் புடவையும் வாங்கிண்டு வந்தேன். தங்க விக்ரகம் மாதிரி மாட்டுப்பொண்ணு வேற என்னடா வேணும்?
ஷெல்லி குறுக்கிட்டாள்! ஒரு நாளைக்கு நூறு தடவையாவது கொழந்தை, கொழந்தைன்னு கூப்பிடல்லேன்னா அம்மாவுக்கு தூக்கம் வராது. கொழந்தைங்கறதுக்கு என்ன அர்த்தம்னு இராமகிருஷ்ணன் சொல்லித்தான் புரிஞ்சுண்டேன். ஹௌ நைஸ் இட் ஈஸ் என்று மகிழ்ந்து போனாள்.
உங்கம்மாவுக்கு சாரி! நம்ப அம்மாவுக்குப் பாசத்தைக் கொட்டறதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா! எனக்கு கெடைக்க வேண்டிய வயசுல கெடைக்காத தாய்ப்பாசம் இப்பக் கிடச்சிருக்கு. அந்த ஒரு காரணத்துக்காகவும், வயத்துல வளர்ந்துவர வாரிசுனாலேயும் நான் எல்லாத்தையும் மறக்கத் தயாரா இருக்கேன் என்றாள் ஷெல்லி.
– ஜெயா வெங்கட்ராமன் –
Wanted to point a small issue with the Quote at the beginning of this story. This is a Tamil translation of the quote by the famous Persian Poet “Khalil Gibran” which goes like “If you reveal your secrets to the wind, you should not blame the wind for revealing them to the trees”.
Please correct if possible, as it reflects on the author as well.
Also it seems like the story has been cut unnecessarily at several places, loosing its flow.
Thanks