தலையங்கம்
மினசோட்டாவில் கோடைக் காலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் துவங்கியது போலிருந்த கோடைக் காலம், கண் சிமிட்டி முடிப்பதற்குள் முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாய் அனைவரும் உணர்கின்றோம். வாழ்க்கைச் சக்கரம் மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது. பொய்யாமொழிப் புலவன் கூறியது இதுவே;
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
கண்ணுக்குத் தெரியாத காலம் என்பது ஒரு நாள் போலக் காட்டி உயிரினை அறுக்கும் வாளாகும், இதனை உணர்ந்து செயல்படுபவர்கள் அரிதானவர்கள் எனப் பொருள்படும் குறளிது. அதற்கொப்ப, காலம் குறைவாக உள்ளது என்பதுணர்ந்து வாழ்நாளில் செய்து முடிக்க வேண்டுமென்ற அரிய காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பதுவே அறிவுடையார் செயலாகும்.
அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு கொடை கொடுக்க வேண்டுமென நினைத்திருப்பீர், அதனைத் தாமதம் செய்யாமல் உடனடியாகச் செய்து முடிப்பது நல்லது. நல்ல காரியங்களை, பெரிய காரியங்களை உடனடியாகச் செய்து முடித்தல் சாலச் சிறந்ததாகும். மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பாத்திரத்தைக் குறித்து ஒரு சுவையான, சிறிய கதையொன்று சொல்வார்கள்;
கர்ணன் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தானாம். தங்கத்தால் ஆன கிண்ணத்தை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வரியவர் தானம் கேட்க வந்தாராம். சற்றும் தயங்காமல் இடது கையாலேயே தங்கக் கிண்ணத்தை வாரி வழங்கினானாம் கர்ணன். பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வலது கையால் கொடுத்திருக்கலாமேயென அங்கலாய்க்க, கர்ணன் அவர்களிடம், வலது கைக்கு மாற்றும் நேரத்தில் என் மனம் மாறிவிடக் கூடும், அல்லது உயிர் பிரிந்து விடக்கூடும்; அதனால்தான் இடக்கையாலேயே உடனடியாகக் கொடுத்து விட்டேன் என்றானாம்.
அதுபோல நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரின், வந்தவுடனேயே தாமதிக்காது செய்து முடிக்கவும். பனிப்பூக்கள் அச்சுப் பிரதியோ அல்லது இணைய தளத்தையோ படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் பிறகு பார்ப்போம் என எண்ணுவதைத் தவிர்த்து, உடனடியாகப் படித்து முடிக்கவும்.
என்ன, தலையங்கத்தைப் பொருத்தமாக முடித்தோமா?
நன்றி,
ஆசிரியர் குழு.
வணக்கம், யாழ்ப்பாணத்து உணவுகள் தொடர்பாக தெரிந்து கொள்ளும் ஆவலில் தேடு பொறியின் உதவியை நாடிய போது, பனிபூக்கம் பூத்தது. முதன்முறையாக இதழை வாசிக்க நேர்ந்தது. உங்கள் தலையங்கள் எளிமையான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்து, பல்வேறு நெருக்கடிக்ளுக்கும் இடையில், மொழியின் விரிவையும் ஆழத்தையும் நீங்கள் தேடி, பேணி வளர்த்து வருவது உணர்வுடன் பாராட்டத்தக்கது. பனிப்பூக்களின் அனைத்து மலர்வுகளும் சிறப்புடன் உள்ளன. இதழ் ஆசிரியர் மற்றும் குழுவினர், யாழ்ப்பாணத்தை மண்ணின் கலாசாரத்தை சுமந்து, ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர் என, எண்ணுகிறேன்.
யாழ் பண்பாடு மறறும் கலாசாரம் பாரம்பரியம் மிககது. இந்த பண்பாட்டின் அழுத்தத்தை சுமந்து, வேர்களை பிடிங்கி,மறுநடவில், ஐரோபப்பாவில் வாழும் தலைமுறை, பண்பாட்டு ரீிதியாக மாற்றம் சார்ந்த துடிப்புகள் எப்படி உள்ளன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். இது பற்றி கட்டுரைகள் ஏதாவது வெளியிட்டுள்ளீர்களா? தங்கள் மேலான பணி வளர்க.
அமுதன், சென்னை