காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி
காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் பற்றி அறிவியல் பார்வையில் பல நூறு புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன. ஆனால், காலத்தைப் பற்றி இயந்திரங்கள் இல்லாமல் மனிதனாக அறிந்த விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டது மிகக் குறைவே. நாம் இந்த இதழில் அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.
இயந்திரங்கள் இல்லாத இடத்தில் காலத்தை எப்படிக் கணக்கிடமுடியும்? நேரம் நகர்கிறதா என எப்படி உணர முடியும்? நமது முன்னோர்கள் உவமைக்கு தண்ணீரை வெகுவாக உபயோகிப்பார்கள். தாமரை இலைமேல் நீர், வாழ்க்கையே அலை போலே, எனப் பல உதாரணங்கள் சொல்லலாம். அதே போல் நாமும் தண்ணீர் உதாரணம் எடுத்துக்கொள்வோம். ஒரு நீர் நிலையா அல்லது நீர் ஓட்டமா என எப்படி அறிவீர்கள்? அதன் மேல் இருக்கும் சலசலப்போ அல்லது அலையோ வைத்து அறிந்து கொள்ளலாம். அதே போல் நமக்கு நேரம் நகர்வதை உள்ளத்தில் உணர எண்ணம் வழி வகுக்கிறது அல்லவா? நதிக்குத் தண்ணீர் எப்படியோ அதேபோல் உள்ளத்துக்கு எண்ணம்.
ஒரு எண்ணம் முடிந்து இரண்டாம் எண்ணம் வரும் பொழுது மாற்றம் உணர்கிறோம். காலம் நகர்வதை அதன் மூலம் உணர்கிறோம். அதனால் தான் என்னவோ கடிகாரத்தில் சின்ன மணிக்கணக்கை “Second” [நொடி/இரண்டு] என்று கூறுகிறார்கள். எண்ணத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கண்ணதாசனின் பொன்னான வரிகள் நினைவுக்கு வருகின்றன:
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
அதனால் தான் நாம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கையில் பொழுது போவதே தெரிவதில்லையா?
மனதில் பல்லாயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பவர்கள், பொதுவாக அமைதியற்றுக் [Restless ] காணப்படுவார்கள். அவர்களின் உள்ளத்தில் காலம், கடிகாரத்தை விடப் பலமடங்கு வேகமாக நகர்கிறது என்று பொருள். அதனால் அவர்களுக்கு எந்தச் செயலை எடுத்துகொண்டாலும் நேரம் குறைவாக இருப்பது போன்றே தோன்றும். இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களின் ஓட்டத்தைச் சீர்படுத்துவது மிகவும் அவசியம்.. அப்பொழுதுதான் கடிகாரத்தில் காட்டும் காலமும் மனதால் உணரும் காலமும் ஓரளவுக்குச் சமமாக இருக்கும்.
நம் உள்ளக் கடிகாரத்தை எப்படிச் சரி செய்வது? இதற்கு தியானம் (Meditation ) ஒரு வழி எனப் பல ஞானிகளால் கூறப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி கண்மூடி பத்து நிமிடம் தியானித்தால் ஒரு புத்துணர்ச்சி வரும். அதற்குக் காரணம் உள்ளத்தில் ஓடும் காலச் சக்கரத்திற்கு ஓய்வு கிடைத்ததுதான். தியானம் செய்யும் பொழுது நமக்குப் பல சிந்தனைகளும் எண்ணங்களும் வரக்கூடாது. அப்பொழுது தான் மனதில் நிம்மதி பிறக்கும். இது ஒருநாளில் பயிலக்கூடிய வழி இல்லை. முதலில் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யும் பொழுது பல சிந்தனைகள் வந்து போகும். தொடர்ந்து பயிற்சி செய்தால் காலம் செல்லச் செல்ல, இதுபோன்று மனதை ஒருமுகப் படுத்தாமலிருக்கும் எண்ணங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். இந்த பயிற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செய்யவேண்டும். உடலுக்கு ஒருநாளில் எட்டு மணி நேரம் ஓய்வு கொடுக்கையில், உள்ளத்துக்கு அரைமணி நேரம் ஓய்வு கொடுக்கக் கூடாதா? இந்தத் தியான வழியை இப்பொழுது மருத்துவர்களும் பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர்.
காதலியுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடமாக மறைவதற்கும், ஆர்வம் இல்லாத வகுப்பறையில் ஒரு நிமிடம் ஒரு நாளாகத் தெரிவதற்கும் இப்பொழுது அர்த்தம் புரிகிறதல்லவா? ஞானிகள் மணிக்கணக்கில் தியானம் செய்து பல சக்திகளை அடைந்திருக்கிறார்கள். அவர்களை காலத்தை வென்றவர்கள் எனக் குறிப்பிடுவர். . நாமும் அவர்களைப் போல் காலத்தை வெல்லாவிட்டாலும், அதன் ஓட்டத்தைக் குறைத்து, மனநிம்மதி தேடுவோம். நமது மனம் அமைதிப்பட்டால், வீடு அமைதி பெரும். வீடு அமைதிப் பெற்றால், நாடு அமைதி பெரும். நாடு அமைதிப் பெற்றால் உலகம் அமைதி பெரும்.
-பிரபு
Excellent and very simple to understand. Request you to post more such articles Prabu. Thanks for Sharing it.
Wow! Wonderful article. I love the perspective and its simple fluid presentation.Keep it up!Karthick