\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்

Unnikrisnan_1_620x620தேனினும் இனிய பாவம். திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் ஊறிப்போய் பாரம்பர்ய சங்கீதத்தின் முழு அம்சங்களும் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரல். திரைத்துறையில் நுழைந்தாலேயே பெருமளவு மதிப்புத் தராத சபாக்கள் அனைத்தும் வரிசையில் நின்று தேதி கேட்கும் அளவு திறமையும் புகழும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சில பாடகர்களில் ஒருவர திரு. உன்னி கிருஷ்ணன்.

சமீபத்தில் திரு. உன்னிகிருஷ்ணன் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் முகமாக மினியாபோலீஸ் வந்திருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் தினம் இரவு, வி.ஐ.பி. டிக்கெட் வாங்கியவர்களுடன் ஒரு பிரத்யேகச் சந்திப்பு இடைனா (Edina) நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்திலுள்ள அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரு. உன்னிகிருஷ்ணனைப் பேட்டி எடுக்கும் அரிய வாய்ப்பு பனிப்பூக்கள் குழுவினருக்கும் கிடைத்தது. அவர்களுடைய கேள்விகள் மற்றும் குழுமியிருந்த அனைவரின் கேள்விகள் மற்றும் அவற்றிற்கு உன்னிகிருஷ்ணன் அவர்களின் பதில் ஆகியவற்றின் சுருக்கத்தைக் கீழே காணலாம். எங்களின் கேள்விகளுக்கு, பொறுமையாகவும், விரிவாகவும், தெளிவாகவும் விடையளித்த உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு வாசகர்கள் மற்றும் பனிப்பூக்கள் நிர்வாகக் குழுவின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்.

Unnikrisnan_2_620x620கேள்வி பதிலின் சுருக்கம்:

கேள்வி: உங்களின் கர்நாடக சங்கீதத்தின் குருநாதர் யார்? கர்நாடக சங்கீத ஈடுபாட்டுக்கான காரணகர்த்தா என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

பதில்: எனக்கு முதலில் கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை. சினிமா சார்ந்த மெல்லிசையில் மட்டுமே ஈடுபாடு இருந்தது. தவிர கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் அதிகம்.

அம்மாவிற்கு கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம். கல்லூரிப் பருவத்திலேயே கர்நாடக சங்கீதத்தின் மீது நாட்டம் வரத்துவங்கியது. நண்பர்களெல்லாம் சேர்ந்து “கர்நாடக சங்கீத இளைஞர்கள் குழு” (Youth Association for Classical Music) என்று ஒன்றை அமைத்தனர். நண்பர்களின் உந்துதலின் பேரில் கர்நாடக சங்கீத நாட்டம் பெரிதாய் வளர்ந்தது.

முதல் குரு பி.எல். சேஷாத்ரி அவர்கள். அவர் மிகவும் பொறுமைசாலி, அவர் எனது வீட்டிற்கே வருவார், நீண்ட நேரம் காத்திருப்பார், நான் என் போக்கிற்கு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பேன். எனது தாயார் காஃபி, டிஃபன் கொடுக்க அவரும் பொறுமையாய் எனக்காகக் காத்திருந்து, எனக்கு இசைப்பாடம் பயிற்றுவிப்பார். டாக்டர் எஸ். ராமநாதன், திரு. கல்கத்தா கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திருமதி. டி. பிருந்தா, திரு. டி. விஷ்வா மற்றும் திரு. டி.எஸ். நாராயணசாமி என்று பலரும் எனது இசை நாட்டத்திற்குக் காரணமாக விளங்கினர். ஒரு நிலைக்குப் பிறகு, திரு. சேஷாத்ரி அவர்களின் பரிந்துரைக்கேற்ப, நான் இப்பொழுதும் தொடர்பிலிருக்கும் திரு. எஸ். ஆர். ஜானகி ராமன் அவர்களிடம் மாணாக்கனானேன்.

கேள்வி: கர்நாடக சங்கீதத்திற்கும் திரையிசைக்கும் பல வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறோம். நீங்கள் அவையிரண்டிற்கும் ஏதேனும் வித்தியாசமான முறைகளைக் கையாளுவீர்களா?

பதில்: சங்கீதம் பயிலும் அனைவரைக்கும் நான் கூறிக் கொள்வதெல்லாம் எல்லாவிதமான இசைகளையும் பழகுங்கள் என்பதே. முறையாகக் கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள் மற்ற விதமான இசையைப் பழகுகையில் இசையின்மீது ஒரு பாண்டித்யம் வரும். எனது முதன்மையான துறை கர்நாடக சங்கீதமே, ஆயினும் எனக்குத் திரைப்படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தது. திரு. ஜேசுதாஸ் அவர்களே எனது இசையார்வத்திற்கு மிகப்பெரிய உத்வேகம். பல மலையாளத் திரைப்படப் பாடல்களைக் கேட்டு நான் வளர்ந்தேன். மேற்கத்திய இசைகளையும் பெருமளவு விரும்பிக் கேட்பேன். இந்துஸ்தானி மற்றும் கஜல் மீதும் ஆர்வம் அதிகமாக இருந்தது. கர்நாடக சங்கீதத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டு பயிற்சி செய்யத் தொடங்கியதும், அதிலேயே முழுவதும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

பல வகை இசைகளையும் சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்ததால், ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்றுவது என்பது எனக்கு அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை.

Unnikrisnan_3_620x384கேள்வி: உங்களுக்கு மிகவும் பிடித்த நீங்கள் பாடிய பாடல் எது?

பதில்: எனது முதல் திரைப்படப் பாடலான ”என்னவளே, அடி என்னவளே..” மற்றும் “உயிரும் நீயே..” பாடல்கள் என் நெஞ்சில் நிலைத்து நிற்பவை. இவையிரண்டும் எனக்குப் பெருமளவு பேரும் புகழும் பெற்றுத் தந்தவை. இன்னும் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களின் இசையில் உதித்த பல பாடல்களும் எனக்குப் பிடித்தமானவையே.

எனது முதல்பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். விருது கிடைத்துப் பலவருடங்களுக்குப் பிறகே, தமிழில் பாடி தேசிய விருது பெரும் முதல் ஆண்பாடகன் நான் என்பதை அறிந்தேன். எனது பூர்விகம் கேரளா, எனினும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடு என்பதால், தமிழ்ப்பாடல் பாடி தேசிய விருது பெற்ற முதல் ஆண்பாடகன் என்பது இன்னும் அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கேள்வி: உங்களின் குடும்பத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: எனது தாத்தா ஓங்கோலில் வாழ்ந்தவர், அங்கிருந்து தமிழகத்திற்கு குடி பெயர்ந்தவர். அவர் தொடங்கிய குடும்பத் தொழில் ஆயுர்வேத மருத்துவம். என் தந்தை, தாய் இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். நான் அவர்களுக்கு ஒரே வாரிசு. எனது மனைவி கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரைச் சேர்ந்தவர். என் மகன் வாசுதேவ கிருஷ்ணன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான், மகள் உத்தரா ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள்.

கேள்வி: மகள் உத்தரா சமீபத்தில் திரைப்படத்தில் பாடியது குறித்து? அவள் பாடியதன் பிறகும் இன்னமும் “என்னவளே, என்னவளே” பாடல்தான் பிடிக்குமா, அல்லது தந்தையாக அவள் பாடிய பாடல் அதிகம் பிடிக்குமா?

பதில்:  ஆமாம், தந்தையாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. என்ன சொல்வது, இது அவளின் முதல் பாடல். அவளைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய மைல்கல். நன்றாகவே பாடியுள்ளாள், ஆனாலும் இன்னமும் நிறைய பயிற்சி செய்ய வேண்டும். இயக்குநர் விஜய் அவர்களுக்கும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் பெருமளவு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம், நாங்களாகப் பெரிய அளவில் தேடிச்சென்று முயற்சி செய்யவில்லை. அவர்கள் இருவரும் அந்த வாய்ப்பை அளித்ததோடு மட்டுமல்லாமல், மிகப் பிரபலமாக்கினர்.

கேள்வி: ஒரு பாடகராக வர என்ன விதமான பயிற்சிகள் செய்ய வேண்டும்?

பதில்: மிக விரிவாக விளக்க வேண்டிய விஷயம். நிறையக் கேட்க வேண்டும். ஸ்வரஸ்தானம் என்பது மிகவும் இன்றியமையாதது.

கேள்வி: உங்களுக்கு சபைக்கூச்சம் இருந்ததுண்டா? சிறிய வயதில் உங்கள் அம்மா திடீரென மேடையில் பாட அழைத்தாராமே?

பதில்: நிச்சயமாக. தொடங்கிய புதிதில் மிகவும் பயப்படுவேன். தொடர்ந்து மேடையேறி நிகழ்ச்சிகள் நடத்த நடத்த அந்தப் பயம் தானாகவே விலகியது.

ஒருமுறை மேடை நிகழ்ச்சி நடைபெறும் வேளையில் எனது குருவுக்கு   உடல்நிலை குறைவு ஏற்பட்டபோது, நான் மேடையேற்றப்பட்டேன். அதுவும் சங்கராபரணம் பாடவேண்டிய நிலை. மிகவும் பதட்டமான சூழ்நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்தது.

கேள்வி: உங்களுக்கு மிகவும் பிடித்த ராகம் எது?

பதில்: ஒரு ராகமென்று எடுத்துக் கூறுவது மிகவும் கடினமான விஷயம். ஒவ்வொரு மனநிலையிலும் ஒவ்வொரு ராகம் பிடித்தமானதாக மாறும்.

கேள்வி: அதே கேள்வியைச் சற்று மாற்றி, உங்களுக்கு மிகவும் சவாலான ராகம் எது என்று கேட்டால்?

பதில்: (நீண்ட யோசனைக்குப் பிறகு) எல்லா ராகங்களுமே முதலில் பாடத் துவங்குகையில் சற்று சவாலாகத்தான் இருக்கும். சற்றுத் தொடர்ந்து ஒரு நிலையை அடைந்த பின்னர் சுகமான அனுபவமாக மாறும். பொதுவாக எல்லா ராகங்களிலும் கமக்கம் (nuance) சற்று சவாலாக அமையும் எனக் கூறலாம்.

கேள்வி: நீங்கள் இந்திய மொழிகள் தவிர வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதுண்டா?

பதில்: இல்லை. இந்திய மொழிகளில் தமிழிலும் தெலுங்கிலும் அதிக அளவு பாடியுள்ளேன்.  மலையாளத்தில் சில பாடல்கள் பாடியுள்ளேன். மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஹிந்தித் திரைப்படங்களில் ஓரிரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். அவைதவிர வேறெந்த மொழியிலும் பாடியதில்லை.

நான் பாடிய தமிழ்ப் பாடல் சமீபத்திய மில்லியன் டாலர் ஆர்ம்” ஹாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்றது. இதுபோன்ற விஷயங்கள் “ஏ.ஆர். ரஹ்மானால் மட்டுமே சாத்தியம்.  (சிரித்துக் கொண்டே) இந்தப் படத்தில் பாடியது இமிக்ரேஷன் அதிகாரிகளிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

கேள்வி: தெலுங்கு கீர்த்தனைகள் தவிர, தமிழ்ப் பாடல்களைக் கர்நாடக சங்கீதமாகப் பாடுவது குறித்து தங்கள் கருத்து என்ன? அவற்றில் பலர் பாடுவது மகாகவி பாரதியார் பாடல்களே, அவை தவிர்த்து மற்றவர்களின் பாடல்களைப் பாடுவதுண்டா?  தமிழ்ப் பாடல்களைப் பாடும்பொழுது வித்தியாசம் உணர்கிறீர்களா?

பதில்: பாரதியார் தனது பாடல்களுக்குத் தானே இசையமைத்திருக்கிறார். அவர் தவிர பல தமிழ்ப் புலவர்கள் இசையமைப்பாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கோபாலகிருஷ்ண பாரதி, நீலகண்ட சிவன், அருணாசலக் கவி, ஆனையா மற்றும் பலர்…  மாணிக்க வாசகரின் திருவாசகம். இவையெல்லாவற்றையும் படித்து அறிய ஒருஜென்மம் போதாது.

தமிழ்ப் பாடல்களைப் பாடும்பொழுது தெலுங்குக் கீர்த்தனைகளைவிட வித்தியாசமாய் உணர்கிறேன் என்று சொல்ல முடியாது. மொழியின் தேவை உள்ளது என்றாலும், இசைக்கு ஒரே மொழிதான். சில சமயங்களில், சில பாடல்களைப் பாடும்பொழுது… உதாரணத்திற்கு, பாரதியார் பாடல்களை எடுத்துக் கொண்டால் அவர் மனதில் ஓடும் ஒரு எண்ணத்தைப் பொறுத்து அதற்கு ஒரு ராகமைத்திருப்பார். அதே உணர்வுகளை வேறொரு ராகத்தில் பாடும்பொழுது கொண்டுவர இயலுமா என்பது கேள்விக் குறியே.

கேள்வி: எஸ்.பி.பி மற்றும் மனோ போல சினிமாவில் நடிக்கும் ஆசையிருக்கிறதா?

பதில்: இல்லை. சில வாய்ப்புகள் வந்தன. கர்நாடக சங்கீதக் கலைஞனாக இருப்பதற்கு மிகவும் அதிக அளவு பயிற்சி தேவை. மூன்று மணி நேரம் மேடைக் கச்சேரிக்குப் பல மணி நேரப் பயிற்சி தேவை. அதிலேயே முழுவதும் நேரம் செலவாகிவிடும்.

கேள்வி: எந்தப் பின்னணிப் பாடகர் உங்களை மிகவும் கவர்ந்தவர்?

பதில்: ஜேசுதாஸ் அவர்கள் என்னைச் சிறு வயதிலிருந்தே மிகவும் கவர்ந்தவர். எஸ்.பி.பி சார், பி.பி.எஸ் சார், ஹரிஹரன் இன்னும் பலர்.

கேள்வி: கர்நாடக இசையைக் கற்பதற்கு வயது வரம்பு உள்ளதா? நீங்கள் இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

பதில்: ஆம், நான் இப்பொழுதும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வேறு விஷயம். கர்நாடக இசையை மிகவும் சிறு வயதிலிருந்து – ஐந்து வயதிலிருந்து – கற்றுக் கொள்ளத் தொடங்குவது மிகவும் நன்று.

கேள்வி: பெற்றோர்களே அவர்கள் குழந்தைகளுக்கு இசை பயிற்றுவித்தல் சரியா? நாம் ஓரளவுக்கு இசை கற்றுக் கொண்டிருந்தால், சிறு வயது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் தவறேதும் உண்டா?

பதில்: பெற்றோர்களின் இசைத் திறனைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை சிறிய வயதில் மிகவும் ஆழமாகவும் நன்றாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக அவசியம். அந்த வயதில் கற்றுக் கொள்வது அடித்தளத்தை பலமாகப் போடுவதோடு, மனதில் ஆழமாகப் பதியும் என்பதால், நன்கு தேர்ச்சி பெற்ற ஆசான் சிறு வயதில் இருக்க வேண்டியது அவசியம்.

கேள்வி: குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி கொடுப்பது எவ்வாறு? பெரும்பாலும் சினிமாப் பாடல்களில் ஆர்வம் இருக்கும் இக்காலத்து குழந்தைகளுக்கு கர்நாடக இசையில் நாட்டம் வரவழைப்பது எவ்வாறு?

பதில்: நிறையக் கேட்கச் சொல்லுங்கள். அதிகமாகப் பாடல்களைக் கேட்டால் அதிகமான ஆர்வம் வளரும். செமி க்ளாஸிகல் பாடல்களை முதலில் கேட்கச் சொல்லுங்கள், மெல்லிசையைக் கேட்பதும் உதவிகரமாக இருக்கும்.

கேள்வி: நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியதுண்டா? நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதற்கு கர்நாடக சங்கீத ஞானம் உதவிகரமாக இருக்குமா?

பதில்: நாட்டுப்புறப் பாடல்கள் சில திரைப்படத்தில் பாடியிருக்கிறேன். இது மிக வித்தியாசமான ஒன்று. கர்நாடக சங்கீதம் தெரிந்திருந்தால் பாட இயலும் என்பது முற்றிலும் தவறு. புஷ்பவனம் குப்புசாமி போல் சிலர் மிகவும் அருமையாகப் பாடுகிறார்கள். அது மிகவும் கடினமான பாடல் வகை, அதிக அளவு பயிற்சி தேவை.

கேள்வி: நீங்கள் 1994 ஆம் ஆண்டு திரைப்படங்களில் பாடத்துவங்கினீர்கள். இருபது வருடங்களைக் கடந்தும் குரலை அதேபோல் வைத்திருப்பதன் ரகசியம் என்ன?

பதில்: அதேபோல் குரலை வைத்திருப்பது என்பதே உண்மையல்ல. மிகவும் மாறியிருக்கிறது. இது இயற்கை. வயது ஏற ஏற, உச்சஸ்தாயில் பாடுவது என்பது குறையத் தொடங்கும். பல பயிற்சிகளின் மூலம் ஓரளவுக்கு இதனைக் கட்டுப்படுத்த முடியும். மேற்கத்திய இசைப் பயிற்சி முறைகளில் பல உக்திகள் விளக்கப்படுகின்றன. முக்கியமாக, இடைவிடாமல் பாடிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வாரம் பாடவில்லையெனினும், குரல் கரகரத்து விடும்.

கேள்விகள்: பிரபு ராவ்

தொகுப்பு: வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Krishnamurthy says:

    Superb interview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad